நடப்புகள்

அளப்பரிய அர்ப்பணிப்பு, அருள் மற்றும் உறுதி அனைத்தையும் நிகழச்செய்யும் இடம்

நாகா பிரதிஷ்டையின் பின்புல நிகழ்வுகளை சற்று எட்டிப்பார்ப்போமா

மறைஞான செயல்முறையில் தங்களையே முழுவதுமாக மூழ்கடித்துக்கொண்ட பங்கேற்பாளர்களுடன் நிகழ்ந்த நாகப் பிரதிஷ்டை ஒரு பிரம்மாண்ட நிகழ்வு என்பதில் இரகசியம் ஏதுமில்லை. ஆயினும், அந்த நிகழ்வுக்கு உயிரோட்டமளிப்பதற்கு அயராத முழுமூச்சான முயற்சிகளின் பின்புலக் காட்சிகளைப் பற்றி சிறிதுதான் அறிந்திருக்க முடியும். நாகப் பிரதிஷ்டை மற்றும் அதன் முன்னேற்பாடுகள் குறித்து மற்றவர்கள் கவனத்துக்கு வந்திராத விஷயங்களை இந்தப் பதிவில் வழங்குகின்றோம்.


அழகின் அகண்ட பிரதேசத்தில் மையம் கொண்டது

சத்குரு அவரது ஆரம்பகால குழந்தைப் பருவத்தின் இரண்டு வருடங்களை, சிக்கபல்லபூரில் இருக்கும் அவரது தாத்தா பாட்டி வீட்டில் கழித்தார். அதற்குப் பின்னரும்கூட, அவரது 17 வயதுவரை ஒவ்வொரு கோடையிலும் அங்கு வந்து, அவர் வயதை ஒத்த நெருங்கிய உறவுப் பட்டாளத்துடன் உருண்டு, புரண்டு சுற்றிக் களித்தார். தொடர்ந்த வருடங்களில், சத்குருவின் பயணங்கள் அவரை, ஏறக்குறைய உலகின் அனைத்து மூலைக்கும் அழைத்துச் சென்றது. ஆனால் பிறகு, வாழ்வின் தன்னியல்பான போக்கில், சில வருடங்களுக்கு முன்பு, சிக்கபல்லபூரில் ஒரு சிறிய இடம் ஈஷாவுக்குக் கிடைத்தது. அங்கே ஈஷா லீடர்ஷிப் அகாடமி அமைக்கும் திட்டம் விவாதிக்கப்பட்டு வந்தது.

அந்த நேரத்தில், ஒரு முழு அளவிலான ஈஷா யோக மையத்தைக் கட்டமைப்பதற்கான தகுநிலையில் அந்த இடம் இருந்ததை ஒருவேளை சத்குரு மட்டும் அறிந்திருந்தார்போலும். ஆனால் இப்போது, நாகப் பிரதிஷ்டையின்பொழுது, நாகா, 112 அடி மார்பளவு ஆதியோகி மற்றும் யோகேஷ்வர லிங்கம் மட்டுமல்லாமல், ஆதியோகி ஆலயம், லிங்கபைரவி திருத்தலம், பிரம்மிப்பூட்டும் 8 நிகழ்ச்சிக் கூடங்கள் உள்ளிட்ட சில பெரிய அளவிலான திட்டங்களை சத்குரு அறிவித்தார்.

இப்போதுதான் பிறந்திருக்கும் நிலையில் மையம் இருந்தாலும், அதன் வளர்ச்சியை விரைவுபடுத்த உதவி செய்வதற்கும், அவர்களுக்கு அருகாமையில் தன்னிலை மாற்றத்துக்கான ஒரு புனிதவளாகத்தை உருவாக்கும் நிறைவை உணர்வதற்கும், குறிப்பாக பெங்களூரு தன்னார்வலர்களுக்கு உரிமையும், உறுதிப்பாடும் வாய்க்கப்பெறும். பிரம்மிக்கவைக்கும் அந்த இடத்தைக் காண்பதில், நாகப் பிரதிஷ்டையின் பங்கேற்பாளர்கள் முதன்மையாளர்களாக இருந்தனர்.

இயற்கை அன்னையின் கொடையாக, தெளிந்த நீலவானம், சிறிதும் பெரிதுமான பாறைகளுடன் மரங்களும், இலைச்செறிவான பசுமையுமாக நந்தி மலைகளின் வளைந்து நெளிந்து போகும் பாதையில் பயணிப்பது கண்களுக்கு உண்மையான விருந்து. மலைகளுக்கு இடையில் பசுமை போர்த்திய கிண்ணம் போன்ற பகுதியில், கண்களுக்கு எளிதில் புலப்படாத இடமாதலால், தொலைவிலிருந்து யோகா மையத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியாது. சட்டென்று, ஒற்றைக்கல்லில் வடிக்கப்பட்ட 9 - அடி நாகா சிலைவடிவத்தை பிரம்மாண்டமாக உங்கள் கண்கள் சந்திக்கும்போதுதான், நீங்கள் மையம் வந்தடைந்ததை உணர்கிறீர்கள்.

நாகா பிரதிஷ்டை - ஒரு வரலாற்று நிகழ்வு

அக். 9ம் நாளின் நாகப் பிரதிஷ்டை - கடந்த 800 வருடங்களில் இப்படிப்பட்ட நாகப் பிரதிஷ்டை செய்யப்படுவது - மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஒரு நெருக்கமான செயல்முறையாக இருக்கக்கூடிய ஒன்றை மறைஞானத்தின் சுவை அறியும் பேராவல்கொண்டவர்கள் யாவருக்கும் அதை சத்குரு திறந்து வைத்ததால், அனைவரையும் இணைத்துக்கொள்ளுதல் மற்றும் அளவிலும், பிரதிஷ்டை ஈடுஇணையற்றதாக இருந்தது.

பிரதிஷ்டையின்போது ஒருகட்டத்தில் சத்குருவின் உத்தரவு, “அடுத்த 3½ மணி நேரங்களுக்கு, என்ன நிகழ்ந்தாலும், நீங்கள் அமர்ந்திருங்கள்.” அதுதான் நிகழவிருப்பதை தெளிவாக வெளிப்படுத்தியது. இந்த பிரம்மாண்டமான நிகழ்வின் பாகமாக இருக்கும் பங்கேற்பாளர்களின் அசைக்க முடியாத உறுதியை, கொட்டித்தீர்த்த எந்த மழையாலும் குலைக்கமுடியவில்லை. பெரும்பாலானவர்கள் உச்சி முதல் பாதம் வரை மழைநீர் வழிந்தபடியே, கண்கள் மூடியவாறு, பிரதிஷ்டை செயல்முறையில் முற்றிலும் ஈர்க்கப்பட்ட நிலையில் அமர்ந்திருந்தனர். “சத்குருவின் மறைஞான பக்கத்தைக் காண்பது அவ்வளவு ஆற்றல் நிரம்பியதாகவும், தீவிரமாகவும் இருந்தது. இந்த பிரதிஷ்டைக்காக இங்கு இருப்பது வேறு எதையும்விட பெரும் பேறானது”, என்று ஒரு பங்கேற்பாளர் பகிர்ந்துகொண்டார்.

பெங்களூரு மையத்தில் ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட நாகா வசிக்கவேண்டும் என்று சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு, நெருங்கிய தன்னார்வலர் குழுவுடன் சத்குரு முதலிலேயே பகிர்ந்திருந்தார். அப்போது முதற்கொண்டு, பல்வேறு துறைகளின் தன்னார்வலர்கள், அந்த நிகழ்வை தங்குதடையின்றி நிறைவேற்றும்பொருட்டு, ஒவ்வொரு சிறிய நுட்பத்தையும் தயார்செய்வதற்காக தங்களை ஓய்வில்லாமல் ஈடுபடுத்திக்கொண்டனர்.

எல்லா மாபெரும் ஈஷா நிகழ்வுகளையும் போலவே, சத்குருவின் அருளுடனும், அனைத்து கரங்களும் ஒருசேர நீளும் அணுகுமுறையுடனும், நாகப் பிரதிஷ்டை ஒரு மகத்தான வெற்றியாகவே இருந்தது. இருப்பினும், திரைக்குப் பின்னால் நடைபெற்ற முன்னேற்பாடுகளையும், சிலிர்க்கவைக்கும் ஒரு இரவுக்கு ஒவ்வொருவரும் எப்படி பங்களித்தனர் என்பதும் பார்க்கத்தகுந்ததே.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

எண்ணிய நேரத்தில் எண்ணிய இலக்கு எய்திய பிரம்மாண்ட வெற்றி

நாகா வடிவத்தின் ஒற்றைக்கல், 9 அடி நீளம் 5 அடி அகலம் 4 அடி பருமனுடன், சுமார் 37 டன் எடை அளவுடையது. இத்துணை பிரம்மிப்பூட்டும் பரிமாணங்களைக்கொண்ட ஒரு கல்லை அடையாளம் காணுதல், உரிமை பெறுதல், வெட்டி எடுத்தல், இடமாற்றம் செய்தல் மற்றும் செதுக்குதல் ஆகிய பலவற்றையும் உள்ளடக்கிய இந்த செயல்பாடு பொதுவாக வரையறை கடந்த நேரத்துக்கு உட்பட்டது. ஆனால், இந்த அரிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு, ஈஷா அறக்கட்டளையின் கட்டமைப்புக் குழுவுக்கு மூன்று மாதகால அவகாசமே இருந்தது.

அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அருள்வசத்தினாலோ, திருப்பூரில் அவர்கள் சென்றிருந்த குவாரியில், தேவையான பரிமாணங்களில் வெட்டப்பட்ட கல் தயாராக இருக்க நேர்ந்தது. அவர்கள் அதை ஒரு புகைப்படம் எடுத்து சத்குருவுக்கு அனுப்பினர். அவர் ஒப்புதல் கொடுத்தவுடனேயே, கட்டமைப்புக் குழுவினர் அதை ஸ்தபதிகளிடம் கொண்டு சேர்த்தனர்.

கல்லை செதுக்குவதற்கு 18 சிற்பிகளும், 90 நாட்களும் தேவைப்பட்டது. சிற்பிகளுள் ஒருவர், “அது நிச்சயம் சவாலாக இருந்தது, ஆனால் நாங்கள் முழுமையாக ஈடுபட்டிருந்தோம். சத்குரு எங்களுக்கு அதை விளக்கியபொழுது, அதில் முற்றிலுமாக மூழ்கிவிட்டோம். நாங்கள் எங்களையே மறந்து, எதையுமே கடினமாக உணராமல் ஈடுபட்டோம்”, என்று பகிர்ந்துகொள்கிறார்.

கல் செதுக்கி முடிக்கப்பட்டவுடன், திருப்பூரில் இருந்து பெங்களூருக்கு ஒரு கனரக வாகனத்தில் எடுத்துச் செல்லப்படுவதற்கு முன்பு, அது ஒரு சிவப்புநிறத் துணியால் மூடப்பட்டு, மாலை சாற்றப்பட்டது. பெங்களூருவில் நாகாவை வரவேற்பதற்காக, ஆண்கள் மத்தளம் கொட்ட, கடந்து செல்பவர்கள் நடனமாட, பெண்கள் ஒரு பூஜை நடத்த என நாகாவை ஏந்திச் சென்ற பயணம் மிகவும் கொண்டாட்டமான முறையில் நிகழ்ந்தது.

களப்பணியாற்றுதல்

அவசர கவனம் தேவைப்பட்ட மற்றொரு அம்சம், நாகா சந்நிதியைச் சுற்றிலும் இருந்த இடப்பரப்பு. அது மேடுபள்ளத்துடன் இருந்தது. சந்நிதியின் விளிம்புகளில் சிறுகுன்றுகளின் இறக்கங்கள் சூழ்ந்திருந்ததால், வசதியாக அமர்வது சாத்தியமில்லாததாகத் தோன்றியது. மீண்டும் கட்டமைப்புக் குழுவினர் உதவிக்கு வந்தனர். 16,000க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள் அமர்வதற்கான தளம், அந்தக் குழுவினரால் சமன்செய்யப்பட்டது. யோக மையத்திற்கு எளிதில் வந்தடைவதற்கான கிழக்கு நுழைவாயிலுக்கான சாலையும்கூட ஒரே வாரத்திற்குள் அகலமாக்கப்பட்டு, சாலை அமைக்கப்பட்டது. ஒவ்வொரு சவாலையும் நேருக்கு நேராக சந்தித்த ஈஷா கட்டமைப்புக் குழுவினருக்கு, எந்தவொரு சாதனையும் கடும்முயற்சியாக தோன்றவில்லை.

Saudis and Expats Converge to Hear Sadhguru Speak about Save Soil (12 May)

Sadhguru received a very warm welcome in Riyadh. He addressed an enthusiastic and highly engaged public gathering organized by the Embassy of India, Riyadh, answering questions of all kinds, and of course – talking about Soil.

ஒரு சிட்டிகை நகைச்சுவை சேர்த்து சுவையான உணவு படைத்த சமையல்குழு

பிரதிஷ்டைக்கு இரண்டு மாதங்கள் முன்பாகவே, அந்த இடத்தில் இருந்த பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்காக, அக்ஷயா குழு (ஆசிரம சமையல் பிரிவு), ஒரு தற்காலிக சமையலறையை அமைத்தது. எல்லாமே சுமூகமாகச் சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றியது, ஆனால் பிறகு, பிரதிஷ்டைக்கு ஒரே வாரகாலம் இருக்கும்பொழுது, அக். 2ம் தேதியன்று சட்டென்று பொழிந்த மழையால், சமையல்பகுதி இருந்த இடத்தை தண்ணீர் சூழ்ந்துவிட்டது.

சுவாமி தேவபாஹூ, அக்ஷயா குழுவின் ஒருங்கிணைப்பாளர் அக். 4ம் தேதியன்று வந்து சேர்ந்தபோது, சில நாட்களுக்கு முன்னால் சமையலறையாக இருந்தது, இப்போது பாதி மூழ்கிப்போய் ஒரு சிறிய குட்டையாக இருந்தது. சிரித்தபடி, நினைவுகூர்கிறார் அவர், “நான் அந்த இடத்தைச் சென்றடைந்ததும், என் அக்ஷயாவை அங்கே காணவில்லை! அதிர்ஷ்டவசமாக, சிலரது தயாளகுணத்தினால், நாங்கள் எல்லாப் பொருட்களையும் சுமார் 4 கிமீ தொலைவிலிருந்த ஒரு திருமண மண்டபத்துக்கு இடமாற்றம் செய்தோம். ஆனால் அங்கேயும், மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லாமையால், உணவு தயாரிப்பது கடினமானது, தொலைவான ஒரு இடத்திலிருந்து நாங்கள் இயங்கிக்கொண்டு இருந்ததால், தினசரி வந்து சேரும் மக்களின் எண்ணிக்கையை கணக்கீடு செய்வதும் எங்களுக்குக் கடினமாக இருந்தது.”

அக்ஷயா குழுவினருக்கு செயல்கள் அபரிமிதமாக இருந்தாலும், பங்கேற்பாளர்களின் பசித்த வயிற்றை நன்றாக நிரப்புவதில் கருத்தாக இருந்தனர். நிகழ்ச்சி நடைபெற்ற நாளில், சமையல் பகுதி அதிவிரைவாக இயங்கியதில், அன்றைய உணவில் சாம்பார் சாதமும், சர்க்கரைப் பொங்கலும் அந்த இடத்தையே மணக்கவைத்தது.

“இடைவெளி இல்லாமல், காலையில் இருந்து மாலை வரை, நிகழ்வுக்காக அங்கு இருந்த, ஏறக்குறைய 18,000 பங்கேற்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உணவளிக்க நாங்கள் தொடர்ந்து சமைத்துக்கொண்டிருந்தோம். உணவு தீரத்தீர, நாங்கள் அடுத்தடுத்து அனுப்புவோம்,” ஒளிரும் மந்தகாசப் புன்னகையுடன் சுவாமி பகிர்கிறார். நாள் முழுவதும் உணவின் தேவை அதிகரித்தவாறு இருந்த நிலையில், அது அவ்வளவு சுவையுடன் இருந்ததே காரணம் என்பது பாதுகாப்பான ஒரு அனுமானம்! சமையல் பகுதியில் எந்தவிதமான சூழ்நிலை புதிதாக முளைத்தாலும், சுவாமி பொருத்தமான ஒரு தீர்வுடன் விரைந்து செயல்பட்டார்.

அந்த நாளைய தீவிர செயல்பாட்டுக்குப் பிறகு, இரவில் அக்ஷயா குழுவினர் சமையல் பகுதியில் அமர்ந்து, நகைச்சுவையாகப் பேசிக்கொண்டும், அன்றைய தினம் நிகழ்ந்த மகிழ்ச்சியானவற்றைப் பகிர்ந்துகொண்டும் இருந்தனர். அந்த சூழ்நிலையினை நினைவுகூரும் சுவாமி சிரிப்புடன் கூறுகிறார், “ஒருமுறை இரவோடு இரவாக மறைந்துவிட்ட சஞ்சீவினி கஞ்சி பாக்கெட்களை, சமைப்பவர்கள் அனைவரும் தேடுதல் வேட்டை செய்துகொண்டிருந்தனர். பிறகுதான் தெரிந்தது, சமைப்பவர்களில் ஒருவர், கூடுதல் மென்மைக்காக அவைகளைக்கொண்டு தற்காலிகமாக மெத்தென்று ஒரு படுக்கையை அமைத்திருந்தது.”

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: ஒவ்வொரு நுட்பமான விஷயமும் கவனத்தில் கொள்ளப்பட்டது

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு என்ற பெரிய குடையின் கீழ், 35 க்கும் அதிகமான தனிக்குழுக்கள் அமைந்தன. இந்த குழுக்கள், பதிவு செய்தல், நிகழ்விட முன்னேற்பாடு, அமர்விட அமைப்பு, வாகன நிறுத்தம், அடையாளக் குறியீடுகள் அமைத்தல், வருகைப்பதிவு, ஒலி அமைப்பு, LED ஒளி அமைப்பு, போக்குவரத்து, மற்றும் கழிவறை பராமரிப்பு உள்ளிட்ட செயல்பாடுகளை நிர்வகித்தனர்.

5 பகுதி குழுக்களுடன், 7 தனிக்குழுவாக, 600 - 700 தன்னார்வலர்களும் பிரிக்கப்பட்டனர். வாராந்திர சந்திப்புகள் நிகழ்த்தப்பட்டு, அனைவரும் ஒன்றிணைந்து வளர்ச்சி, கருத்துகள் மற்றும் பிரச்சனைகளை விவாதித்தனர். ஏறக்குறைய 350 தன்னார்வலர்கள், ஏற்பாடுகள் செய்வதற்கான 2 மாத காலமும், பெங்களூருவிலிருந்து வந்து, பயணநேரத்தைக் குறைப்பதற்காக கிராமத்தின் திருமணக்கூடங்களிலும், அருகாமை ஹோட்டல்களிலும் தங்கினர். நிகழ்ச்சி நாளன்று, 1200 தன்னார்வலர்கள் நிகழ்விடத்தில் இருந்தனர்.

நிகழ்ச்சி குழுவும், அர்ப்பணிப்பான தன்னார்வலர்களும், பிரதிஷ்டை நிகழ்வு சுமூகமாக ஈடேறுவதை உறுதி செய்வதற்கு முழு முனைப்புடன் செயல்பட்டனர். இருப்பினும், பொறுப்பேற்றிருந்த செயல்கள் சவால்களுடனே இருந்தன. சுவாமி ப்ரபோதா கூறுகிறார், “நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு என்பது எங்களுக்குப் புதிது அல்ல என்றாலும், அந்த நிலப்பகுதியை முதலில் நாங்கள் பார்த்தபோது, எங்களுக்குள் சலனமுற்றோம். ஒட்டுமொத்த நிலப்பரப்பும் மேடும் பள்ளமுமாக இருந்ததால், பங்கேற்பாளர்கள் எப்படி அமரமுடியும் என்பதில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது. சதா மழை பொழிந்துகொண்டிருந்ததும் கூட எங்களது சூழலுக்கு உதவவில்லை.”

நிலம் சமதளமாக்கப்பட்டதும், வாகன நடமாட்டம் மற்றும் காலடித் தடங்களைத் தவிர்ப்பதற்காக, பங்கேற்பாளர்கள் அமர்விடத்தை நிகழ்ச்சிக் குழுவினர் சீல் செய்துவிட்டனர். ஆனால் தொடர்மழை காரணமாக செம்மண் நிலம் புதைகுழிமண் போலாகி, வழுக்காமல் நடமாடுவதைக் கடினமாக்கிவிட்டது. “நாங்கள் தினமும் வானிலை முன்னறிவிப்புக்காக வானிலை ஆய்வுத்துறையை தொடர்புகொண்டிருந்தோம்”, என்று சுவாமி பகிர்ந்துகொள்கிறார்.

“மழையின் காரணத்தால், குறித்த நேரத்துக்கு எல்லா ஏற்பாடுகளையும் எங்களால் முடிக்கமுடியுமா என்பது தெரியாமல் இருந்தது. ஆனால் சத்குருவின் அருளினால், அனைத்தும் நன்றாக முடிவடைந்தது.” அவர் மேலும் கூறுகிறார், “சத்குருவின் ஆசிகள் எப்போதும் எங்களுடன் இருப்பதை நாங்கள் அறிந்திருந்தாலும், அதற்காக மெத்தனமாக இருக்கலாம் என்று இல்லை. தேவையானது எதுவென்றாலும் நாம் செய்யவேண்டும்.”

நிகழ்ச்சிக்குப் பின்னரும், செயல் முடிவதில்லை

கடைசி அமர்வு முடிவை நெருங்கியதும், சுமார் 16,000 பங்கேற்பாளர்களும் நாகா தரிசனத்தை நோக்கித் திரண்டெழுந்தனர். நிகழ்ச்சிக் குழுவினர் படுவேகமாக செயல்பட்டு, அவ்வளவு பெருங்கூட்டத்தின் பாதுகாப்பான, வரிசைக்கிரமமான நகர்வை உறுதிப்படுத்தும்பொருட்டு தடுப்புகளை அமைத்தனர். திடசித்தம் கொண்ட பக்தர்களின் நாகா தரிசனத்துக்கு, வழுக்கும் செம்மண்ணும்கூட தடையாக இல்லை. வெறும் 1½ மணி நேரத்தில், அனைவரும் நாகாவின் நெருக்கமான தரிசனத்துக்குப் பிறகு, அங்கிருந்து புறப்படத் தொடங்கினர்.

இதற்கிடையே, சில தன்னார்வலர்கள் மெத்தைகள், நாற்காலிகள், எழுதுபொருட்கள், மற்றும் பலவற்றையும் திரும்ப எடுத்து பாதுகாத்து வைத்தனர். மேலும் சில தன்னார்வலர்கள் இரவு உணவுப் பொட்டலங்களை விநியோகித்து, வாகன நிறுத்துமிடங்களில் உதவி செய்தனர். தொடர்ந்து பின்னிரவு வரை, ஒவ்வொருவரும் தங்களுக்குரிய தன்னார்வ செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகாரப்பூர்வ திறப்புக்கான தூய்மைப் பணிகள்

அக். 10ம் தேதியன்று, 5:30 மணி குருபூஜைக்குப் பிறகு, பொதுமக்களுக்காக சந்நிதி அதிகாரப்பூர்வமாக திறந்துவிடப்பட்டது. ஆனால் முதலில் பக்தர்கள் வருவதற்கு முன்பாக, ஒட்டுமொத்த கோவில் வளாகமும் தூய்மைப்படுத்தப்பட வேண்டியிருந்தது - குறிப்பாக பங்கேற்பாளர்கள் விட்டுச் சென்ற மண் படிந்த காலடித்தடங்கள். கோவில் குழுவும், பிரம்மச்சாரிகளும் அதை மேற்கொண்டனர். அந்த இடத்தில் தண்ணீர் இல்லாததால், அவர்கள் தண்ணீர் டிராக்டரை வரவழைத்து, சந்நிதிக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவைத்து, வாளிவாளியாக நீர் இறைத்து அவ்விடத்தை சுத்தம் செய்தனர்.

நாகா தரிசன நேரம் எப்போது

தற்போது, சந்நிதி காலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கிறது. ஆரத்தி நேரங்கள் காலை 6:20 மணி, மதியம் 12:20 மணி, மாலை 6:20 மணி. தினசரி காலையில் நாகாவுக்கு கையால் கோர்க்கப்பட்ட பூமாலை சாற்றப்படுகிறது. பக்தர்கள் நாகாவுக்கு, கனிகள், மலர்கள், இனிப்புகள், அகர்பத்தி, கற்பூரம் மற்றும் எண்ணெய் அர்ப்பணிக்க முடியும்.

அங்கு எப்படிச் செல்வது

நாகா சந்நிதியுடன் ஈஷா யோக மையம், பெங்களூருவில் நந்தி மலைகளுக்கு அருகில் சிக்கபல்லபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது, பெங்களூருக்கு 65 கிமீ வடக்கே, பெங்களூரு கெம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது. பெங்களூரு நகரத்திலிருந்து, சிக்கபல்லபூருக்கு பேருந்து மற்றும் வாடகைக் கார் வசதி உண்டு. சமீபத்தில் கர்நாடகா மாநில போக்குவரத்துக் கழகம், சிக்கபல்லபூர் ஈஷா ஜங்க்ஷன் (வார நாட்களில்)/ ஈஷா யோக மையத்திற்கும் (வார இறுதி நாட்களில்) இடையே, பேருந்து சேவையைத் தொடங்கியுள்ளது