சத்குரு எக்ஸ்குளூசிவ்

சுவேதகேது எப்படி ஞானம் பெற்றார்: உச்சநிலை அடைய அசாதாரண பாதை

மெய்ஞானம் உணர்வதற்காக ஒரு அறிவார்ந்த இளைஞன், தான் அறிந்திருந்த அனைத்தையும் எப்படி உதறவேண்டியிருந்தது என்பதை இந்த அபூர்வமான கதை விவரிக்கிறது.

சத்குரு: யோகப் பாரம்பரியத்தில், சுவேதகேது என்ற பெயர்கொண்ட ஒரு சிறுவனைப் பற்றி அற்புதமான கதை ஒன்று உண்டு. “சுவேதகேது” என்றால் “வெள்ளை வால்நட்சத்திரம்” என்பது பொருள். அவன் ஒரு பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தான். இன்றைக்கு, அது ஒரு சாதி என்ற அளவில் குறுக்கப்பட்டுவிட்டது, ஆனால் அடிப்படையில், ஒரு பிராமணன் என்றால், “மெய்ஞானத்துடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒருவன்” என்பது பொருள். பிறப்பால் பிராமணனாக இருப்பது எந்த அர்த்தமும் இல்லாதது. உங்களது விழிப்புணர்வினால் நீங்கள் ஒரு பிராமணனாக இருந்தால், அதுதான் முக்கியமானது. இந்தச் சிறுவன் 12 வயதை எட்டியபோது, ஒரு குருவிடம் கற்பதற்காக 12 வருடங்கள் அனுப்பி வைக்கப்பட்டான்.

ஒரு கற்றறிந்த முட்டாளாவதற்காக 12 வருடங்கள்

சுவேதகேது சூட்டிகையான சிறுவனாக இருந்து, எல்லாவற்றையும் நன்றாக கிரகித்துக்கொண்டான். வேதங்கள், உபநிஷதங்கள் மற்றும் பிரம்ம சூத்திரங்கள் என்பவை, ஒரு மனிதரைப் பற்றியும், அனைத்தையும் கடந்திருப்பதைப் பற்றியும் சொல்லக்கூடிய எல்லா விஷயங்களையும் கொண்டிருக்கின்றன; அதனால்தான் அவைகள் மிகவும் ஆபத்தானவை. பன்னிரண்டு வருட கற்றலுக்குப் பிறகு, குரு அவனிடம், “நீ கற்றுக்கொள்வதற்கு வேறு எதுவும் இல்லை. கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்தையும் நீ கற்றுவிட்டாய். நீ உன் வீட்டிற்கு செல்வது நல்லது என்று நினைக்கிறேன்,” என்றார். இளைஞனாக வளர்ந்துவிட்ட அவன் வீட்டிற்கு திரும்பிச் சென்றான். அவனைக் கண்ட அவனது தந்தை, “நீ ஒரு அறியாத முட்டாளாகத் திரும்பி வந்துள்ளாய்”, என்றார். இளைஞன், தான் எல்லா வேதங்களையும், உபநிஷதங்களையும் கற்றுக்கொண்டதாகவும், அவற்றைத் தலைகீழ் பாடமாக ஒப்பிக்கவும் முடியும் என்றும் பதிலளித்தான்.

தந்தை கூறினார், “கற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் நீ அறிந்திருக்கிறாய், ஆனால் கற்றுக்கொள்வது எதுவோ அதைப்பற்றி நீ ஒன்றும் கற்கவில்லை. இப்போது நீ மிக அதிகமாக அறிந்திருக்கிறாய் என்பதை நீ நடக்கும் நடையிலிருந்தே என்னால் காணமுடிகிறது, ஆனால் அறிவது எதுவோ அதனை நீ அறியவில்லை, ஆகவே நீ மிகுந்த அறியாமையில் இருக்கிறாய். நாம் உண்மையான பிராமணர்கள்; நாம் பிறப்பால் மட்டும் பிராமணர்கள் அல்ல. நீ இங்கு இருக்கவேண்டும் என்றால், அறிபவரை நீ அறிந்திருக்க வேண்டும், அறிந்துகொள்ளக்கூடியதை அல்ல. உன் குருவிடம் திரும்பிச் செல்”, என்றார். சுவேதகேது 12 வருடங்கள் படிக்க சென்றான், ஆனால் படித்து முடித்து இப்போது வீட்டிற்கு வந்தபோது அவனுக்கு ஒரு விருந்தினை அளிப்பார்கள் என்று எதிர்பார்த்திருப்பான், ஆனால் அவனுடைய தந்தை அவனை வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

அறிபவரை நீ அறிந்திருக்க வேண்டும், அறிந்துகொள்ளக் கூடியதை அல்ல.

குருவிடம் திரும்பிச் சென்ற இளைஞன், “என் தந்தை நான் அறியாதவன் என்று கூறுகிறார். எல்லா வேதங்களையும், உபநிஷதங்களையும் நான் அறிவேன். எனக்கு நீங்கள் கற்றுக்கொடுத்த அனைத்தையும் நான் உண்மையாகக் கற்றுள்ளேன், ஆனால் என் தந்தை என்னை அறியாதவன் என்கிறார். அறிபவரை நான் அறிந்திருக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்”, என்றான். ஆகவே குரு கூறினார், “ஓ அறிபவரை அறிந்துகொள்ள நீ விரும்புகிறாயா? அது நல்லது. இந்த 12 வருடங்களும், அறிந்துகொள்ளக்கூடியதில் மட்டும்தான் நீ ஆர்வமாக இருந்தாய், ஆகவே உலகத்தில் அறிந்துகொள்ளக்கூடிய அனைத்தையும் நான் உனக்குக் கற்றுக்கொடுத்தேன். எல்லாவற்றையும் நீ கற்றுக்கொண்டாய், ஆகவே உன்னைத் திருப்பி அனுப்பினேன். இப்போது அறிபவரை நீ அறிந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறாய். அதற்கு என்னசெய்வது என்று நான் பார்க்கிறேன்.” அங்கே 400 மாடுகள் இருந்தன. குரு கூறினார், “இந்த மந்தையை அழைத்துக்கொண்டு, காட்டுக்குச் செல். மாடுகளுடனேயே தங்கி இரு. அவை எண்ணிக்கையில் 1000 ஆனதும், நீ திரும்பி வா.” சுவேதகேதுவால் நம்ப முடியவில்லை. அவன் முழுமையான அளவில் கல்வி கற்றிருந்தான், ஆனால் இப்போது ஒரு மாடுமேய்ப்பவனாக இருக்குமாறு அவன் கூறப்படுகிறான்.

பசுக்களுடன் இருப்பது அவனுக்குக் கற்றுக்கொடுத்தது என்ன?

சுவேதகேது காட்டிற்கு சென்றான். ஆரம்பத்தில், அவனுக்குள் குழப்பமும், போராட்டமும் இருந்தது. “அனைவரும் என்னை நிராகரித்துவிட்டனர், என் குரு எனக்கு இந்த தண்டனையைக் கொடுத்துவிட்டார்”, என்று பலவாறாக அவன் நினைத்தான். சில வாரங்களுக்கு, மாதங்களுக்கு அவனது மனம் ஓடியவாறு இருந்தது. ஆனால் மனம் தொடர்ந்து ஓடுவதற்கு, நீங்கள் அதற்கு உள்ளீடு தரவேண்டும். காட்டில் எந்த உள்ளீடும் இல்லை, ஆகவே அவன் மெதுவாக, ஆசிரமத்திலும் வீட்டிலும் நிகழ்ந்தவற்றை மறந்துபோனான். இந்த எல்லா அறிவாற்றலும் உங்களைச் செவிமடுப்பதற்கு யாராவது இருந்தால்தான் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது; யாரிடமாவது அதை வெளிப்படுத்தவேண்டும். பசுக்கள் காதுகொடுக்காது. படிப்படியாக, பசுக்கள் புற்களைக் கடிக்கும் ஓசையும், அசைபோடுதலும் அவனுக்குள் இறங்கி மூழ்கியது. அவனது 12 வருட வேதபாடங்கள் அவனைவிட்டுப் பிரிந்தது.

கால ஓட்டத்தில், அவன் பசுக்களைப் போலாகிவிட்டான். அவனுக்குப் பசிக்கும்போது உண்டான்; இல்லையென்றால், அவன் அப்படியே உட்கார்ந்திருந்தான். அவனுடைய கண்களின் வடிவம் ஒரு பசுவினுடையதைப்போல மாறியதாகக் கூறுகின்றனர். அவன் ஒரு பசுவைப்போலவே ஆகிவிட்டான். அவன் அதற்குப் பிறகு மனதின் அடிமையாக இருக்கவில்லை. அவன் உட்காரும்போது, முழுமையாக உட்கார்ந்தான். அவன் ஒரு பசுவுடன் இருந்தபோது, ஒரு பசுவாக இருந்தான். அவன் ஒரு மரத்தைத் தொட்டபோது, ஒரு மரமாக இருந்தான். அவன் நிலத்தின் மீது உட்கார்ந்தபோது, நிலமாக ஆகிவிட்டான். ஏனென்றால், மனதிற்கு உள்ளீடு இல்லாத காரணத்தால், அவன் ஒரு முழுமையான இருப்பாக ஆகிவிட்டான். மொழி மறந்தான், எண்களை மறந்தான், வெறுமனே அவன் அங்கு இருந்தான்.

மனதிற்கு உள்ளீடு இல்லாத காரணத்தால், அவன் ஒரு முழுமையான இருப்பாக ஆகிவிட்டான்.

ஒருநாள், பசுக்கள் அவனிடத்தில் வந்து, அவை 1000 எண்ணிக்கையை எட்டிவிட்டதாகவும், குருவிடம் செல்லவேண்டும் என்றும் கூறின. ஆகவே அவன் பசுக்களுடன் ஆசிரமத்துக்கு திரும்பிச் சென்றான். ஆசிரமம் வளர்ச்சியடைந்து இருந்ததுடன், சீடர்களின் எண்ணிக்கையும் பெருகியிருந்தது. சுவேதகேது பசுக்களுடன் வெறுமனே நின்றான். ஆர்வம் பொங்க, மற்ற சீடர்கள் அங்கு வந்து, பசுக்களை எண்ணிப்பார்த்தனர். பிறகு அவர்கள் குருவிடம், “1000 பசுக்கள் உள்ளன”, என்றனர். குரு கூறினார், “இல்லை, 1001 உள்ளன,” ஏனென்றால் சுவேதகேது முற்றிலுமாக அவனது தனித்தன்மையை இழந்திருந்தான். அவன் முழுமையான இருப்பாக மாறியிருந்தான்.

உச்சபட்ச நிலைக்கான வழி

எல்லாவற்றையும் உங்கள் மனதிற்கான உள்ளீடாக எடுத்து, சேகரித்துக்கொண்டே இருக்காதீர்கள். பண்டைய காலங்களிலிருந்தே மனிதர்கள் சேகரித்துக்கொண்டே தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில், நாம் உணவைத்தான் சேகரித்தோம். பின்னர், சிறிதுசிறிதாக, கற்கள் மற்றும் உரோமங்கள் போன்ற விஷயங்களைச் சேகரித்தோம். இப்போது, சேகரிக்கும் நமது திறன் அபரிமிதமாகிவிட்டது. விரைவில் நாம் மற்ற கிரகங்களில் இருந்துகூட பொருட்களைச் சேகரிக்கத் தொடங்கிவிடக்கூடும். நீங்கள் எவ்வளவுதான் சேகரித்தாலும் அது ஒரு பொருட்டே அல்ல, நீங்கள் உச்சபட்ச நிலையை அறிந்துகொள்ள முடியாது. உங்களது சேகரிப்பை நீங்கள் உதறிவிட்டு, எதுவும் இல்லாமல் இங்கே இருக்கும்போது மட்டும்தான், அது நிகழும். எதுவும் இல்லாமல் இங்கே இருப்பது என்றால் ஏதோவொன்றை விட்டுவிடுதல் என்பது பொருளல்ல. அது என்னவென்றால், அறிவு மற்றும் அனைத்தின் வடிவிலும் நீங்கள் சேகரித்துள்ள பதிவுகள் அனைத்தையும் நீங்கள் ஒதுக்கிவைத்தால், அதன் பிறகு அறிதலின் அடிப்படையானது ஒரு முழுமை நிலையிலும், எல்லையற்ற வழியிலும் இருப்பதைக் காண்பீர்கள்.