
சூரிய உதயத்துக்கு முன்பாக, விடியலில் எழுந்து உங்கள் யோகப் பயிற்சிகளுக்காக நேரம் ஒதுக்குவதற்கு நீங்கள் உண்மையில் விரும்புகிறீர்கள், ஆனால் அலாரம் ஒலிக்கும்போது அதை நிறுத்திவிட்டு மீண்டும் உறங்குகிறீர்கள் என்றால், உங்கள் உறக்கத்தை உதறி, அலாரம் இல்லாமல் நீங்களாகவே எழுந்து, உங்கள் கிரியா அல்லது தியானத்துக்கான பொருத்தமான நேரத்திலிருந்து பயனடைய 5 படிகள்...
சத்குரு: உங்கள் வாழ்க்கை என்பது, பிரபஞ்சம் என்று நாம் அழைக்கும் ஒரு பிரம்மிக்கத்தக்க நிகழ்வின் விளைவு. நாம் ஒரு தனிப்பட்ட இருப்பு அல்ல, ஆனால் இயற்கைக்குள் இருக்கும் இந்த ஒத்திசைவை நாம் இழந்துவிட்டோம். நம்மை நாமாக உருவாக்கும் இயற்கை சக்திகளுடன் எப்படி ஒத்திசைந்து இருப்பது என்னும் விழிப்புணர்வை இப்போது நாம் இழந்துவிட்டோம். இந்தக் காரணத்தினால்தான், இன்றைக்கு மனிதர்கள் பல நோய்கள் மற்றும் பிரச்சனைகளினால் துன்பம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அலார ஒலியால் விழித்து சட்டென்று எழத் தொடங்குவது சிறந்த வழி அல்ல. நீங்கள் இயற்கையுடன் ஒத்திசைந்து இருக்கும்போது, அலாரம் இல்லாமல் இயல்பாக எழுந்துவிடுவீர்கள்.
நீங்கள் ஒரு காட்டுக்குள் சென்று வாழமுடியாது, ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் வீட்டில் படுத்துறங்கும் இடத்தில் உங்களைச் சுற்றிலும் சில தாவரங்கள் இருக்கலாம். உங்களைச் சுற்றிலும் உயிரோட்டத்துடன் இருக்கும் எல்லாவற்றைக் குறித்தும் எப்போதும் நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். சாத்தியப்பட்டால், மேற்கூரை அல்லது சுவரின் பாதியைத் திறந்துவிடுங்கள், அதனால் சிறிது சூரியவெளிச்சம் உங்களுக்குள் வரும். அந்த இடத்தை எப்போதும் சலசலத்துக்கொண்டிருக்கும் குளிர்சாதனங்களுடன் முற்றிலும் அடைத்து வைத்திருக்கக்கூடாது. உங்களைச் சுற்றி இருக்கும் அப்படிப்பட்ட அதிர்வுகள் உடலுக்கு முழுவதுமாக அச்சமூட்டுகின்றது.
உணவு என்பது முக்கியமாக, உடலுக்கான எரிபொருளாக இருக்கிறது. நீங்கள் சரியான வகையான எரிபொருள் கொடுத்தால், உங்கள் உடலமைப்பு ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படும். தவறான வகையான எரிபொருள் கொடுத்தால், அது எப்படியோ ஒருவாறுதான் சமாளிக்கும். இதை நீங்கள் சோதித்துப் பாருங்கள். இன்றிரவு, சமைத்த உணவைச் சாப்பிடுவதற்கு பதில், பழங்களை மட்டும் சாப்பிடுங்கள். நாளைக் காலையில், அலாரம் ஒலிப்பதற்கு முன்பே நீங்கள் கண் விழிப்பதோடு அல்லாமல், உடனடியாக புத்துணர்வுடன் விழிப்புணர்வடைவீர்கள்.
உங்களுக்கு எவ்வளவு உறக்கம் தேவை என்பது உங்களுக்கு தெரியும் - 8 மணி நேரங்கள் உங்களுக்கு தேவை என்று வைத்துக்கொள்வோம். உங்களுக்கு எந்த அளவுக்குத் தூக்கம் தேவைப்பட்டாலும், போதிய அவகாசத்தில் தூங்கச் சென்றுவிடுங்கள், அதனால் நீங்கள் இயல்பாக கண்விழிக்க முடியும். ஒருவேளை, நீங்கள் குறித்த நேரத்தில் எழுந்துகொள்வீர்களா, இல்லையா என்பதில் சந்தேகம் இருந்தால், எழுந்துகொள்வதற்கு ஒரு குறிப்பிட்ட மந்திர உச்சாடணத்தை வைத்துக்கொள்ளலாம். வைராக்யா மந்திர உச்சாடணங்களில் ஒன்று உங்களுக்குள் ஒத்திசைவுடன் எதிரொலிப்பதாக அடையாளம் கண்டிருந்தால், அதை நீங்கள் பயன்படுத்தலாம்.
வாழ்வின் இலயத்துடன் யோகா உங்களை ஒத்திசைவுக்கு கொண்டுவருகிறது. நீங்கள் வாழ்க்கையுடன் ஒரே இலயத்தில் இருந்தால், அதிகாலை 3 மணியைக் கடந்த சற்று நேரத்திலேயே, நீங்கள் விழித்துக்கொள்வீர்கள். நீங்கள் விழிப்புணர்வாக இருந்தால், அந்த நேரத்தில் ஒருவிதமான உயிரோட்டத்தின் தீப்பொறி உங்களுக்குள் நிகழும். நீங்கள் ஆழமான உறக்கத்தில் இருந்தாலும், உங்களுக்கு விழிப்பு வரும். அது நிகழும்போது, நீங்கள் வாழ்வுடன் ஒத்திசைவுடன் இருப்பதாக அர்த்தம்.
இது 33 டிகிரி அட்சரேகை வரை மட்டும்தான் பொருந்துகிறது. அதிகாலை 3:40 மணிமுதல் 4:00 மணிவரை, பூமியுடன் தொடர்புடைய சூரியனின் கதிர்கள் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட விதமான விழிப்புணர்வு கொண்டிருந்தால், அந்த நேரம் எப்போது என்பதை நீங்கள் வெறுமனே அறிந்துகொள்வீர்கள். சரியான நேரத்துக்கு நீங்கள் உறங்கச் சென்றால், நீங்கள் மணி என்னவென்று பார்க்கத் தேவையில்லை. எப்போதும், நீங்கள் அந்த அதிகாலை 3:40 மணி எப்போது என்பதை அறிந்துகொள்வீர்கள், ஏனென்றால் உடல் வித்தியாசமானதொரு விதத்தில் நடந்துகொள்ளும்.
அந்த நேரத்தில், அது ஒரு சாத்தியமாக இருக்கும் வகையில் மனித அமைப்பு இயங்குகிறது. யோக முறையில், இந்த சாத்தியத்தைப் பயன்படுத்திக்கொள்வதில் எப்போதும் ஒரு விழிப்புணர்வு இருந்துவந்திருக்கிறது. ஆகவே நீங்கள் அந்த நேரத்தில் என்ன செய்யவேண்டும்? நீங்கள் தியானம் செய்யவேண்டுமா? கிரியா செய்யவேண்டுமா? அது என்ன என்பது முக்கியமல்ல - உங்களுக்கு தீட்சை வழங்கப்பட்டிருக்கும் ஒரு செயல்முறையை நீங்கள் செய்யவேண்டும். தீட்சை என்றால், உங்களுக்கு கற்பிக்கப்பட்டிருப்பது வெறும் ஒரு பயிற்சி அல்ல - அது உங்கள் உடலமைப்புக்கு அறிமுகம் செய்யப்பட்டது அல்லது பதிக்கப்பட்டது.
ஆகவே, உங்களுக்குள் உயிருள்ள ஒரு விதை இருந்து, நீங்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து, உங்களுக்கு தீட்சை வழங்கப்பட்டிருக்கும் எந்த ஒரு யோகப்பயிற்சியைச் செய்தாலும், அது அதிகபட்ச பலனை அளிக்கும். விதை முளைத்து, அதிக வேகத்துடன் வளர்வதற்கு மற்ற நேரங்களைக் காட்டிலும், அந்த நேரத்தில் அதற்குத் தேவையான உறுதுணை கிடைக்கும். இது தீட்சை பெற்றவர்களுக்கு மட்டும்தான். மற்றவர்களுக்கு, சந்தியா காலங்கள் மிகவும் முக்கியமானவை. சூரிய உதயத்துக்கு 20 நிமிடங்கள் முன்னரும், பின்னரும் மற்றும் சூரிய அஸ்தமனத்துக்கு 20 நிமிடங்கள் முன்னரும், பின்னரும் சந்தியா காலங்களாக உள்ளன. மதியம் உச்சிவேளையும், நடு இரவிலும் கூட சந்தியா காலங்கள் உள்ளன, ஆனால் அவைகள் வித்தியாசமான இயல்புடையவை.
தீட்சை பெறாதவர்களுக்கு, காலை, மாலை இரண்டு சந்தியா காலங்கள் சிறந்தவை. சக்திமிக்க தீட்சை பெற்றவர்களுக்கு, அதிகாலை 3:40 மணி சிறந்தது.