
2022 சாதனபாதா பங்கேற்பாளர் மற்றும் புகழ்பெற்ற கற்பனை விளையாட்டு தளத்தின் முன்னாள் துணைத் தலைவர் பாத்திமா ரான்புரா, அவரது குழந்தைப் பருவத்திலிருந்து இப்போது வரைக்கும், ஒரு தேடுதலுடையவராக இருந்த அவரது பயணத்தைப் பற்றி மனம் திறக்கிறார்.
பாத்திமா, மும்பையில் போஹ்ரா இஸ்லாமிய பெற்றோருக்குப் பிறந்தார். நண்பர்களின் தேவை ஏற்படாத நிலையில், அவரது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியையும் தானாகவே கழித்தார். அவரது வயதை ஒத்த பெண்குழந்தைகள் பொம்மைகளுடன் விளையாட்டில் ஆழ்ந்திருப்பதைப் போன்ற விஷயங்களை அவர் “குழந்தைத்தனமானது” என்று ஒதுக்கிவிட்டார். அதற்கு பதிலாக, அவர் புத்தகங்களை வாசிப்பதும் பத்திரிக்கைகளில் எழுதுவதுமாக இருந்தார். பாத்திமாவின் குடும்பத்தில் ஒவ்வொருவரும், பல வழிகளிலும் வெளிப்பட்ட இயற்கையான படைப்புத்திறன், வடிவமைப்பு மற்றும் அழகியல் உணர்வுகொண்டவர்கள்.
“எனது கோடை விடுமுறைகள், பைகள், ஆடைகள், திரைச்சீலை, படுக்கை விரிப்புகள், உறைகள் போன்ற பொருட்களைச் செய்வதில் கழிந்தது. நாங்கள் ஆயத்த ஆடைகளை ஒருபோதும் வாங்கியதில்லை,” பாத்திமா நினைவுகூர்கிறார். சமீபத்தில்கூட, அவர் சாதனபாதாவுக்காக 7- மாதங்கள் ஈஷா யோக மையத்துக்கு வந்தபொழுது, அவரது தாய், ஒரு யோகா விரிப்பு, அதற்கான ஒரு பை மற்றும் கைப்பையை தைத்துக் கொடுத்தார்.
தீயாய் எரிந்த கேள்விகள்
பாத்திமாவின் பள்ளிப் பருவம் முழுவதும், படிப்பிலாகட்டும் அல்லது மாணவர் தலைமைப் பொறுப்பேற்பதாகட்டும், அவர் எப்போதும் சிறந்தவராகவே விளங்கினார். பல விஷயங்கள் குறித்து எப்போதும் ஆர்வத்துடன், மற்றபடி குழந்தைகளுக்கு அரிதாகவே தோன்றும் மரணம் எதைப் போன்றது? நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்யவேண்டியுள்ளது? என்ற கேள்விகளுடனே வளைய வந்தார். அவரது பெற்றோர் மதரீதியானவர்கள் அல்ல என்பதால், அவர்களது மகள் மீது நம்பிக்கைகள் மற்றும் கருத்தாக்கங்களைத் திணிக்காமல் இருப்பதில் கவனமாக இருந்தனர். அதன் விளைவாக, பள்ளிப்பருவம் முடிந்தபிறகும் இந்த அடிப்படையான கேள்விகள் பாத்திமாவுக்குள் உயிர்ப்பாக இருந்து, இளங்கலைப் படிப்பில் மனிதநேயம் பிரிவைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக அமைந்தது, ஏனென்றால் அந்தப் பிரிவில் அவருக்கு விருப்பமான தத்துவம் ஒரு பாடத்திட்டமாக இருந்தது.
ஆனால் தத்துவமும்கூட, அவரது ஆன்மீக தாகத்தைத் திருப்திப்படுத்தத் தவறிவிட்டது. ஆயினும், அவர் அந்தப் பிரிவை விரும்பியதால், இறுதியாக பயனர் அனுபவ (User Experience) வடிவமைப்பில் தொழில்படிப்பைத் தொடர முடிவெடுத்தார். அதற்குத் தேவையான வடிவமைப்பு, படைப்பூக்கம், மனித உளவியல் மற்றும் வியாபார நுண்புலன்களில் அவருக்கு இருந்த உள்ளார்ந்த இயல்பான ஆர்வத்துடன், அவைகுறித்த நல்ல புரிதலும் தேவைப்படுகிறது என்று பாத்திமா கூறுகிறார்.
தேசிய வடிவமைப்புக் கழகம், அகமதாபாத்தில், முதுகலை பட்டப்படிப்பு முடித்தபிறகு, அவர் UX வடிவமைப்பாளராக வளம்மிக்க தொழில்துறையாளராக இருந்தார். அதனைத் தொடர்ந்து, Dream11 என்ற கற்பனை விளையாட்டுத்தளத்தின் துணைத் தலைவர் பதவியில் அமர்ந்தார்.
சத்குரு
2014 ஆம் வருடம் பாத்திமா, கல்லூரியில் அவரது நெருங்கிய நட்பு வட்டத்தினருள் ஒருவரை தற்செயலாக சந்தித்தபோது, அவரிடத்தில் ஒரு மாற்றம் இருப்பதைக் கவனித்தார். “இந்த நண்பர் வகுப்பில் வழக்கமாக உரத்தகுரலில் பேசிக்கொண்டிருப்பது வழக்கம் - அவரையே அவரால் கட்டுப்படுத்த இயலாமல் இருப்பதாகத் தோன்றும். ஆனால் இப்போது, அவரது ஒட்டுமொத்த சக்தியும் மிக வித்தியாசமான ஒரு வடிவம் எடுத்திருந்தது,” என்று பாத்திமா பகிர்கிறார். பாத்திமா, அந்த நண்பரிடம் என்ன நிகழ்ந்தது என்று விசாரித்தபோது, நண்பர் பாத்திமாவிடம் இன்னர் இஞ்சினியரிங் சிற்றேடு ஒன்றைக் கொடுத்தார். சத்குரு மற்றும் ஈஷா பற்றி அவர் கேள்விப்பட்டது அப்போதுதான் என்றாலும், இரண்டாவது சிந்தனைக்கு இடமில்லாமல், சத்குருவிடமிருந்து தீட்சை பெறுவதற்காக மும்பையில் ஒரு இன்னர் இஞ்சினியரிங் வகுப்புக்கு உடனே பதிவுசெய்தார்.
மூன்று மாதங்கள் ஷாம்பவி மஹாமுத்ரா கிரியா பயிற்சி செய்தபிறகு, பாவ ஸ்பந்தனா வகுப்பிற்கு, பாத்திமா பதிவு செய்தார், ஆனால் அந்த செயல்முறைக்கு உண்மையில் அவர் தயாராக இருக்கவில்லை. “நான் மிகவும் பயந்துவிட்டேன். என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. அந்த அறையிலிருந்து வெளியேறிவிடவே விரும்பினேன்,” சிரித்தபடியே பாத்திமா பகிர்கிறார். மேம்போக்காகப் பார்த்தால், அவரது பாவ ஸ்பந்தனா அனுபவம் அவ்வளவு பெரிதாக இல்லை என்றாலும், அவரது கற்பனைக்கெட்டாத வழிகளில், வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வாய்ப்பைப் பற்றி அந்த வகுப்பின்போதுதான் அவர் கேள்விப்பட்டார்: ஈஷாங்கா 7%, உங்கள் வருமானத்தின் 7% அல்லது அதிகமாக, ஈஷாவின் பல்வேறு திட்டங்களுக்கு வழங்கி, நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் அருளின் கரங்களை உணர்வதற்கான, சத்குருவினால் வழங்கப்பட்ட ஒரு ஆழமான கூட்டாண்மை.
பாத்திமா செய்துவரும் அனைத்திலும் சிறப்பாக மிளிர்ந்தாலும் - அது கல்வி அல்லது தொழில் அல்லது தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவாக இருந்தாலும் - ஏதோ ஒன்று இல்லாதது போல் அல்லது அவர் போதுமானதாக தான் செயல்படாதது போலவே எப்போதும் உணர்ந்தார். “நான் செய்வது உண்மையிலேயே உலகத்துக்குப் பயனுள்ளதுதானா?” என்பதைப் போன்ற எண்ணங்கள் எப்போதும் அலைக்கழித்தன. 7% ஈஷாங்கா பங்குதாரராக இருப்பதற்கான அவரது வாதம் மிகவும் நேர்மையானது: “என்னால் எதுவும் செய்யமுடியவில்லை என்றால், குறைந்தபட்சம், ஏதோ ஒரு வழியில் சத்குருவுக்கு என்னால் வழங்கமுடியும். அதனால் அர்த்தமுள்ள ஏதாவது அதிலிருந்து விளையும்.” ஈஷாங்கா 7% குறித்த அவரது அனுபவம்? “அதை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை. அதற்குப் பிறகு, என் வாழ்க்கை வேறொரு வேகத்தில் நகரத்தொடங்கிவிட்டது. விஷயங்கள் எப்படித்தான் நிகழ்ந்தன என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. எல்லாமே முற்றிலும் கவனித்துக்கொள்ளப்படுவதுபோல் இருக்கிறது.”
2015 ல், ஈஷா அறக்கட்டளையின் இ-மீடியா துறையுடன் தொலைவிலிருந்து தன்னார்வத்தொண்டு செய்யத் தொடங்கினார் பாத்திமா. ஒவ்வொரு வார இறுதியிலும், அவரது பரபரப்பான பணிச்சூழலிலிருந்து விலகி வந்து, பல்வேறு ஈஷா திட்டங்களில் தன்னார்வலராக நேரம் செலவழித்தார். ஈஷாவுடன் ஈடுபாடு அதிகரித்ததால், கோவையிலிருக்கும் யோக மையத்துக்கு அவர் அடிக்கடி வருகை தந்தார். சில வருடங்களுக்கு முன் அவர் வந்திருந்தபோது, சத்குரு சாதனபாதா வாய்ப்பை அறிவித்தார். அப்போது முதலே, அவர் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்தார், ஆனால் வீட்டுக்கடன் மற்றும் பல சவால்கள் காரணமாக அவரது திட்டங்கள் சிறிது காலத்திற்கு பின்னுக்குத் தள்ளப்பட்டன.
இறுதியாக, 2022 சாதனபாதாவை உறுதிப்படுத்தும் செய்தி கிடைத்தபிறகு, உள்நிலை மாற்றத்துக்காக, வாழ்நாளில் ஒருமுறை கைக்கெட்டும் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள பாத்திமாவும் அவரது கணவரும் விரும்பினர். தனது துணைத் தலைவர் பதவியை பாத்திமா இராஜினாமா செய்தார்; நன்றாக செயல்பட்டுக்கொண்டிருந்த வியாபாரத்தை அவரது கணவர் கைவிட்டார்; தம்பதியர் அவர்களது வீட்டை விட்டு, அவர்களது செல்லப்பிராணி பூனையை உறவுக்காரரிடம் ஒப்படைத்துவிட்டு, ஒரு நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொண்டனர். இப்போது பாத்திமாவுக்கு பின்வாங்குதல் இல்லை என்பதுடன் அவரிடம் எதிர்காலத்துக்கான எந்தத் திட்டங்களும் இல்லை - ஆனால் அது எந்த விதத்திலும் அவரைத் தடை செய்வதாக இல்லை.
சாதனாவை விழிப்புணர்வுடன், தவறாமல் செய்வதும், சாதனபாதாவைப் பின்பற்றுவதும் அவருக்கு ஒரு வழி காண்பதற்கு உதவி செய்யும் என்பதை அவர் ஏற்றுக்கொள்கிறார். மேலும், ஏற்கனவே அவர் அதில் முன்னேறிச் செல்லத் தொடங்கிவிட்டார்! சாதனபாதா வகுப்பின் இரண்டாவது மாதத்தில், அவர் ஷக்தி சலன கிரியா கற்றுக்கொண்டு, ஷூன்ய தியானத்திற்கு தீட்சை பெற்றிருக்கும் நிலையில், உள்நிலையில் வேறொரு பரிமாணத்தை அடையச்செய்து, அவரது சக்தி நிலைகளையும் மேம்படுத்தியதால், அதனை "ஆட்டத்தையே மாற்றவல்லது” என்று வர்ணிக்கிறார். "தினமும் காலையில் என்னுடைய சாதனாவை முடித்துவிட்டு, தியானலிங்கத்திற்கு செல்கிறேன், அங்கிருந்து வெளிவரும் போது எல்லாவற்றையும் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் உணர்கிறேன். நான் விரும்பினாலும் என்னால் பேச இயலுவதில்லை" என்று பரவசத்துடன் பாத்திமா பகிர்ந்துகொள்கிறார்.
பாத்திமாவின் பெரும்பாலான வாழ்விலும் ‘இன்னும் அதிகம் வேண்டும்’ என்ற ஏக்கம் தொந்தரவு செய்துவந்திருந்தது. பெருவாரியான மக்களும் தேடுகின்ற - வெற்றிகரமான தொழில், ஒரு நல்ல துணை, ஆதரவான ஒரு குடும்பம் - அனைத்தும் வாய்த்திருந்தாலும், மனதின் ஆழத்தில் அவர் ஒருபோதும் மகிழ்ச்சியை உணரவில்லை. “ஏதோ ஒன்று குறைகிறது; மேலும் ஏதோ நிகழ தேவைப்படுகிறது,” என்ற பல்லவி அவர் மனதில் எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்தது. சாதனபாதா மூலமாக, அந்த “அதிகமான எதையோ” உணர்வதற்கு அவர் விரும்பினார். நல்லது, அவரது ஏக்கம் திருப்தியடைந்தது - ஆனால் அவர் எதிர்பார்த்திராத ஒரு வழியில் அது நிகழ்ந்தது.
சாதனபாதாவில் இணைந்தபிறகு, ஈஷா காட்டுப்பூ ஆங்கில இதழில், சுவாமி பதங்காவின் பகிர்தலை பாத்திமா தற்செயலாக படிக்க நேர்ந்தது. சுவாமி பதங்கா, ஈஷா யோகா வகுப்புகளை ஒருங்கிணைப்பதில் முழுமை குன்றியது போல் இருந்ததால், அவர் மனமுடைந்திருந்தபோது, சுவாமியிடம் சத்குரு கேட்டது: “எதுவும் நிகழவில்லை என்றாலும்கூட உங்களால் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதா என்ன?” சத்குருவின் வார்த்தைகள் பாத்திமாவின் மையத்தை அசைத்துவிட்டது. “அப்போதுதான், எல்லாமே நன்றாக இருப்பதை நான் உணர்ந்தேன். எதுவும் நிகழத் தேவையில்லை,” அவரது கண்களில் குளம் கட்டி நிற்க பாத்திமா பகிர்ந்துகொள்கிறார்.
தற்போது, அவர் இ-மீடியா துறையில் தொடர்ந்து தன்னார்வத்தொண்டு செய்துகொண்டு, ஆனந்தமான, விழிப்புணர்வான உலகத்துக்கான தனது பங்களிப்பின் நிறைவை, தினசரி அளவில் அனுபவித்து வருகிறார். கூடுதலாக, மேம்போக்காகப் பார்த்தால் சிறியதாகத் தோன்றும் ஈஷா யோக மையத்தின் அனைத்தும், அதாவது உள்ளெழுச்சிப் பாடலுடன் ஒவ்வொரு சந்திப்பையும் தொடங்குவது, சின்னச்சின்ன செயல்களையும் முழு ஈடுபாட்டுடன் செய்வது, மற்றும் பின்னூட்டம் (feedback) எதுவாயினும் அதனை மனதார ஏற்றுக்கொள்வது போன்றவை அவரை தொடர்ந்து நெகிழ்ச்சியாக உணர செய்கின்றன.
நமது வாசகர்களுக்கும், சாதனபாதா பங்கேற்பாளர்களுக்கும் ஏதாவது செய்தி இருக்கிறதா என்று பாத்திமாவிடம் கேட்டபோது, அவர் சட்டென்று அனுபவபூர்வமாகக் கூறினார்: “சாதனபாதா, நமக்குக் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான ஒரு வாய்ப்பு. திட்டமிடப்பட்ட அட்டவணையை மட்டும் நீங்கள் பின்பற்றவேண்டும். மாதாந்திர சந்திப்புகள் ஒன்றில், சுவாமி ஹர்ஷா கூறினார், இது ஒரு இரயில் போன்றது; நீங்கள் அதற்குள் ஏறிக்கொண்டால் போதுமானது, இது நீங்கள் சென்று சேரவேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் சென்றுவிடும். ஆகவே, உங்களுக்கான சாதனபாதா அட்டவணையைப் பின்பற்றுங்கள், நீங்கள் ஒரு தீர்வை அடைந்துவிடுவீர்கள்”.

