வாழ்க்கை கேள்விகள்

உங்கள் குழந்தைகள் உங்களுக்கு செவிசாய்க்காமல் இருப்பது ஏன்? அதனை எப்படிக் கையாள்வது?

உங்கள் குழந்தைகளின் நடத்தையினால் ஏமாற்றத்தில் இருக்கிறீர்களா, அவர்கள் உங்களை அலட்சியம் செய்வதாகத் தோன்றுகிறதா? உங்களுக்கு நெருக்கமான அன்புக்குரியவர்களுடன் உறவையும், தொடர்பையும் நீங்கள் எப்படி மாற்றியமைத்துக்கொள்ள முடியும் என்பதற்கு இதோ சத்குருவின் உரை...

கேள்வியாளர்: நான் அனைவரையும் என் குழந்தைகள், எனது கணவர் மற்றும் என்னுடைய குடும்பத்தினர் அடங்கலாக, அவர்களை சக உயிராக மதிப்பதால், மற்றவர்கள் என்ன செய்யவேண்டும் என்று யாருக்கும் அறிவுரை வழங்குவதை நான் விரும்புவதில்லை. ஆனால் நான் ஏதோவொன்றைச் சொன்னாலன்றி, அடிப்படையான விஷயங்கள்கூட, எதுவும் செய்யப்படுவதில்லை. ஆகவே, நான் என்ன செய்யவேண்டும்?

யாரும் முன்வந்து கேட்காமல் அறிவுரை வழங்குவதை நிறுத்துங்கள்

சத்குரு: சூழ்நிலைகளை நிர்வகிப்பது வாழ்க்கையின் ஒரு அம்சம். ஆனால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று யாராவது உங்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டே இருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும், நீங்கள் அவர்களால் சோர்வடைவீர்கள். அவர்கள் உங்களது பெற்றோராக இருக்கலாம்; அவர்கள் மீது உங்களுக்கு அன்பு, மரியாதை அனைத்தும் இருக்கலாம், ஆனால் அவர்கள் அறிவுரை கூறத் தொடங்கினால், நீங்கள் முகம் சுளிக்கிறீர்கள். உங்கள் குழந்தைகளும் கட்டாயம் அதையேதான் செய்வார்கள். நீங்கள் 14 முதல் 17 வயதுகளில் இருந்தபோது, சற்று நினைவுபடுத்திப் பாருங்கள் - உங்கள் பெற்றோரின் அறிவுரையை நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்? இன்றைக்கு உங்கள் குழந்தைகள் அதனை, அதேமுறையில்தான் உணர்வார்கள்.

அப்படியென்றால், யாரும், எதையும், ஒருவருக்கும் சொல்லக்கூடாது என்பது அர்த்தமா? இல்லை, நாம் உரையாடத் தொடங்கலாம். குடும்பம் என்பது, ஒரு சமூகத்தின் அடிப்படையான கட்டமைப்பு - முதல் கூட்டுறவு. அங்கிருந்து தொடங்கி, சமூகத்தில் ஒரு தேசத்தை உருவாக்கவும், உலகளாவிய ஒரு சூழலை உருவாக்கவும் நாம் பலவிதமான கூட்டுறவுகளை கட்டமைக்கிறோம். ஒவ்வொன்றும் வித்தியாசமான நிலையிலான ஒரு திருமணம். நாடுகள் மணம் புரிகின்றன; சமுதாயங்கள் திருமணம் செய்துகொள்கின்றன; வியாபாரங்களுக்கு திருமணமாகிறது.

நீங்கள் ஏற்றிருக்கும் பொறுப்பை மறுவரையறை செய்யுங்கள்

திருமணம் என்றால், இணைந்திருப்பது. ஆனால் தற்போது, நமது வாழ்க்கையில் திருமணத்தை நாம் வேறு ஏதோவொன்றாக உருவாக்கியுள்ளோம். இந்தச் சூழலில், உங்களுக்கு செவிகொடுப்பதற்கு ஒருவருக்கும் விருப்பமில்லை. உங்களுக்கு திருமணமாகிவிட்டால், அந்த ஆணுக்கு நீங்கள் ஒரு மனைவியாக இருக்கக்கூடாது - நீங்கள் அவருக்கு நல்ல தோழியாக மாறவேண்டும். நீங்கள் ஒரு தாயாகவும் இருக்கக்கூடாது. தாயும், தந்தையும் முதலாளிகள் போன்றவர்கள் - அவர்களை ஒருவரும் விரும்புவதில்லை.

உங்கள் குழந்தையின் நல்ல தோழியாக நீங்கள் ஆகிவிடவேண்டும். அதற்கான எல்லா வாய்ப்பும் உங்களுக்கு உண்டு. அவர்களது குழந்தைப் பருவத்திலிருந்து, உங்களைத்தான் அவர்கள் வியப்புடன் பார்த்துக்கொண்டுள்ளனர். அந்த நபரை உங்களால் நட்பாக்கிக்கொள்ள முடியவில்லை என்றால், வேறு யாரை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நட்பாக்கிக்கொள்ள முடியும்? ஒரு கட்டத்தில், அவர்களது அடிப்படையான பிழைத்திருத்தலுக்கே உங்களிடம் வரவேண்டிய ஒரு நபருடன் உங்களால் உண்மையான நட்பை வளர்க்கமுடியவில்லை என்றால், நீங்கள் அதை இழந்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு முதலாளி போல் செயல்பட முயற்சிப்பதால், அதை நீங்கள் இழந்துவிட்டீர்கள்.

அடக்கியாளும் ஒருவராக இருக்காதீர்கள்

உங்கள் குழந்தைகளுக்கு முதலாளியாக இருப்பதற்கு உங்களுக்கு இருக்கும் தகுதி என்ன? அவர்கள் வருவதற்கு சில வருடங்கள் முன்னதாக நீங்கள் இங்கே வந்திருப்பதுதான் ஒரே தகுதி. இந்தப் பண்பு எல்லா இடங்களிலும் உள்ளது. பள்ளியில், ஏதோ ஒரு முட்டாள் உங்களைக் கொடுமைப்படுத்த விரும்புவது ஏனென்றால், அவர் உங்களுக்கு ஒரு வருடம் முன்னதாக பள்ளியில் சேர்ந்துவிட்டார். ஆகவே, நீங்கள் ஒரு அடக்குமுறையாளராக இருக்காதீர்கள். பெரும்பாலான பெற்றோர்கள் அடக்கியாள்பவர்களாக இருக்கின்றனர் என்பதுடன் இதை பெற்றோர்கள் புரிந்துகொள்வதில்லை. ஏனென்றால், அவர்களது பெற்றோர்களை அவர்கள் அப்படித்தான் உணர்ந்திருந்தனர் - என்ன செய்வது என்று எப்போதும் அவர்களுக்குச் சொல்ல முயற்சி செய்துகொண்டே இருந்தனர்.

ஒரு மேலான பிணைப்பை உருவாக்குங்கள்

நீங்கள் ஒரு நட்புறவை உருவாக்கவேண்டும். நான் சொல்வதைக் கேட்டு, நீங்கள் செய்வதற்கு, உங்களுடன் எனக்கு அந்த விதமான உறவு இருக்கவேண்டும். அந்த நட்புறவு இல்லாமல், நான் மேலேயே உட்கார்ந்துகொண்டு, “நான் சொல்வதைக் கேள்!” என்று உங்களிடம் கூறினால், நான் அந்த இடத்தில் இருக்கும்பொழுது, நீங்கள் செய்வதாக பாவனை செய்வீர்கள். நான் அங்கிருந்து அகன்ற கணமே, நீங்கள் வேறு எதையோ செய்வீர்கள். பெரும்பாலான குழந்தைகள் செய்வது இதுதானே? பெற்றோர்கள் அருகில் இருக்கும்பொழுது, அவர்கள் ஒருவிதமாக நடந்துகொள்கிறார்கள். பெற்றோர்கள் சென்றகணமே, அவர்கள் வேறெதையோ செய்கின்றனர், ஏன்? ஏனென்றால் நீங்கள் ஒரு அடக்கியாள்பவர்போல் செயல்படுகிறீர்கள். அடக்கியாளும் ஒருவர் முன்னால், அனைவரும் கேட்பதுபோல் பாவனை செய்கின்றனர், ஏனென்றால் அவர்கள் “பெரியவர்கள்.”

இந்த உறவு நிலைகளை முழுமையானவைகளாக எடுத்துக்கொள்ளாதீர்கள், ஏனெனில் எந்த மனித உறவும் முழுமையடைந்த ஒன்றல்ல. நீங்கள் இடைவிடாமல் அதனை வளர்க்கவேண்டும். தினமும் அதைப் பராமரிக்கவேண்டும் - அப்போதுதான் ஒரு உறவு நிலைத்திருக்கிறது. இல்லையென்றால், உங்கள் கணவரோ அல்லது மனைவியோ உடலளவில் அங்கே உங்களுக்கு அருகில் இருக்கலாம், பல காரணங்களுக்காக அவர்கள் உங்களைச் சுற்றி வந்துகொண்டு இருக்கலாம், ஆனால் அவர்கள் உங்களுடன் இசைந்து இருக்கமாட்டார்கள். இதே விஷயம் உங்கள் குழந்தைகளுக்கும் பொருந்துகிறது. ஆகவே, கணவராக, மனைவியாக, தந்தையாக அல்லது தாயாக இருக்கும் இந்த உறவு நிலைகளை வகிக்காதீர்கள்.

அவர்களுக்கு சிறந்த நண்பராக மாறுங்கள்

உங்கள் குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் எந்த மாதிரியான நட்புடன் இருக்கவேண்டும் என்றால், குழந்தைகள் எதைச் சொல்ல விரும்பினாலும், உங்களிடம் முதலில் அதைக் கூறுவார்கள், ஏனென்றால் நீங்கள் சிறந்த நண்பராக இருக்கிறீர்கள். மேலும், அதைச் செய்வதற்கான எல்லா வாய்ப்பும் உங்களுக்கு உண்டு, ஏனென்றால் அவர்களின் 8 அல்லது 10 வயதுவரை நீங்கள் உங்களோடு பிணைத்து வைத்துள்ளீர்கள். ஒரு தந்தையாக அல்லது தாயாக செயல்படுவதற்கு பதில், ஒரு நட்புறவை நீங்கள் வளர்த்திருக்க வேண்டும். ஏனென்றால், நான் முன்பே கூறியதுபோல, உங்களுக்கு இருக்கும் ஒரே தகுதி என்னவென்றால், இங்கே நீங்கள் சில வருடங்களுக்கு முன்னால் வந்துவிட்டீர்கள்.

ஆகவே, அடக்கியாள்பவராக இருக்காதீர்கள். அவர்கள் உங்களுக்கு இளையவர்கள் என்பது சரிதான். ஆனால் மனிதத்தன்மையுடனும், நட்புணர்வுடனும் இருப்பது பெரிதும் உதவி செய்கிறது. உங்களைச் சுற்றிலும் இருக்கும் மக்களிடம் நீங்கள் நட்பை வளர்த்துக்கொண்டால், அது உங்கள் குடும்பத்தினராக அல்லது வேறு எவராகவும் இருக்கலாம், அவர்கள் மீது அக்கறையுடன் உங்களால் இயன்றளவுக்கு சிறப்பானதைச் செய்வதற்கு நீங்கள் எப்போதும் தயாராக இருக்கிறீர்கள் என்னும் அந்த உறவை வளர்த்துக்கொள்ளும் நிலையில், அவர்களைவிட நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பதை அவர்கள் கண்டால், ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர்கள் உங்களிடம் வருவார்கள். இல்லையென்றால், அவர்களுக்குரிய விஷயத்தை அவர்களே செய்துகொள்வார்கள்; அது பரவாயில்லை.

உங்களது யூகங்களை விட்டுவிடுங்கள்

அவர்களைவிட நீங்கள் புத்திசாலியானவரா அல்லது உங்களைவிட அவர்கள் புத்திசாலிகளா - இது அவர்களது தீர்மானம். நீங்கள் அதில் கவனம் செலுத்தாதீர்கள். வேறொருவரைவிட நீங்கள் புத்திசாலியாக இருப்பதாக நீங்கள் யூகித்துக்கொள்ள முடியாது. அது எந்த ஒரு உறவையும் முழுமையாக அழித்துவிடுகிறது. அவர்களைவிட நீங்கள் புத்திசாலியாக இருப்பதை அவர்கள் பார்த்தால், உங்களிடம் அவர்கள் வருவார்கள். ஆகவே, ஒவ்வொருவரும் உங்களுக்கு செவிசாய்க்க வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களுக்கு செவிகொடுக்கத் தகுதியாக உங்களை நீங்கள் உருவாக்கவேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும், உலகில் அனைவரும் உங்களுக்குக் காதுகொடுக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. நீங்கள் இரண்டே வார்த்தைகளைக்கூட அர்த்தமில்லாமல் பேசிவிட்டால், ஒருவரும் உங்களுக்கு செவிசாய்க்கமாட்டார்கள்.

எங்கிருந்து தொடங்குவது?

குறிப்பாக தினசரி அடிப்படையில் உங்களுக்கு எதிரில் இருப்பவர்கள் - உங்கள் கணவர், உங்கள் மனைவி, உங்கள் குழந்தைகள் - எல்லா நேரமும் உங்களை உற்று கவனித்துக்கொண்டு உள்ளனர். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் மற்றும் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதற்கு இடையிலான தொடர்பை அவர்கள் பார்க்கிறார்கள். குழந்தைகள் உங்களது பேச்சைக் கேட்பதே இல்லை, ஆனால் அவர்களது குழந்தைப்பருவம் முதல் உங்களை அவர்கள் உற்று கவனித்தவாறு இருக்கின்றனர். உங்களை நீங்களே அறிந்திருப்பதைக் காட்டிலும் மேலாக, நீங்கள் யார் என்று அவர்கள் அறிந்துள்ளனர், ஏனென்றால் ஒரு காலத்தில் அவர்கள் முழு கவனத்தையும் உங்கள் மீது செலுத்தியுள்ளனர். நீங்கள் எப்படி உட்காருகிறீர்கள் மற்றும் நிற்கிறீர்கள், எல்லாவற்றையும் எப்படிச் செய்கிறீர்கள், எப்படி நீங்கள் எரிச்சலடைகிறீர்கள் மற்றும் கோபப்படுகிறீர்கள் - ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்குத் தெரியும்.

உங்களுக்கே தெரியாமல் இருக்கலாம், உங்களது மனநலவியலாளர் அறியாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் குழந்தைகளுக்குத் தெரியும் உங்கள் பலவீனம் என்ன என்பது. அதனால்தான், அவர்களுக்கு வேண்டியபோதெல்லாம் அதை நோக்கித் தங்கள் விரலை சுட்டிக்காட்டுகின்றனர். ஏனென்றால் வேறு எவரையும்விட அவர்கள் உங்களை அதிக நெருக்கமாக கவனித்துள்ளனர். ஒரு கைக்குழந்தையாக, உங்கள் குழந்தை, நீங்களே எல்லாமுமாக இருப்பதுபோல் உங்களை எப்படிப் பார்த்தது என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர்கள் அந்த அளவுக்கான கவனத்தை உங்களுக்கு செலுத்தியுள்ளனர். உங்கள் அறிவுரையால் அவர்களை முட்டாளாக்க முயற்சிக்காதீர்கள். உங்களுக்கு உண்மையிலேயே விஷயங்கள் மாறவேண்டுமென்றால், உங்களில் என்ன மாறவேண்டும் என்று பார்த்து, அதை மாற்றுங்கள். அதுதான் ஆழமாக உணர்ந்து பாராட்டப்படும்.