பிரக்ஞானந்தாவின் கேள்வி: செஸ் போட்டியின் போது ஏற்படும் பதற்றத்தை தவிர்ப்பது எப்படி?
செஸ் விளையாட்டில் உலக அளவில் முன்னணி வீரர், இந்திய கிராண்ட் மாஸ்டர், தமிழகத்தின் இளம் செஸ் புயல் பிரக்ஞானந்தா சத்குருவுடன் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்றார். அப்போது, போட்டியில் பங்கேற்கும் போது என்ன மாதிரியான மனநிலை இருக்க வேண்டும், சவாலான சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கேட்க, சத்குரு வழங்கிய பதில் இங்கே கட்டுரையாக.

சில போட்டிகளில் விளையாடும்போது ஒரு முக்கியமான கட்டத்தில் எனக்கு பதற்றம் வந்துவிடுகிறது. ‘என் பொறுப்புக்கு எல்லை இல்லை’ என்பதைப் பற்றி நாம் பேசினோம். ஒருவேளை நான் விழிப்புணர்வோடு இருந்தால், என்னால் அதை தடுக்க முடியலாம். ஆனால் அவ்வப்போது விழிப்புணர்வு வருகிறது, போகிறது. அப்படி நான் விழிப்புணர்வாக இல்லாத நேரத்தில், எனக்கு பதற்றம் ஏற்பட்டால், அதிலிருந்து உடனடியாக வெளிவர ஏதேனும் வழி இருக்கிறதா?
சத்குரு:முதலில் டென்ஷன் என்றால் என்ன? என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அதை டென்ஷன் என்று சொல்லலாம், மனச்சோர்வு என்று சொல்லலாம், துன்பம் என்று சொல்லலாம், இல்லை அதை பைத்தியம் என்றுகூட சொல்லலாம். டென்ஷன் அல்லது மன அழுத்தம் என்றால் உண்மையில் ஒரு சிறிய அளவு பைத்தியம் தான்.
சவாலான சூழலில் ஏற்படும் டென்ஷன்
அதாவது, பைத்தியக்காரத்தனத்தின் ஒரு சின்ன சாம்பிளை நீங்கள் பார்க்கிறீர்கள். அடிப்படையாக, உங்களால் சமாளிக்க முடியாத அளவிற்கு உங்கள் எண்ணங்கள் உங்களை வேகமாக தாக்குகிறது. ஒருவேளை நீங்கள், ‘நான் இந்தியாவின் சார்பாக விளையாடுகிறேன்’ என்று நினைத்தால், அதிக டென்ஷன் வந்துவிடும். 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பு உங்கள் தலைக்குள் நுழைந்தால் அது உங்களை திணறடித்துவிடும். உங்கள் பெற்றோர் உங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை நினைத்துப் பார்த்தால் மூச்சு முட்டும். அதைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.
Subscribe
எல்லாப் போட்டியிலும் வெற்றிபெற வேண்டுமா?
நீங்கள் ஒரோயொரு நகர்வை மட்டும் தான் இப்போது சரியாக வைக்க வேண்டும். டென்ஷன் ஏன் வருகிறது என்றால், "நான் ஜெயித்துக் கொண்டிருக்கிறேனா? ஒருவேளை தோற்கப் போகிறேனோ? எனக்கு கோப்பை கிடைக்குமா, கிடைக்காதா? நான் திரும்பிப் போனால் எனக்கு என்ன ஆகும்?” இப்படி பலவும் உங்களுக்குள் சுழன்று கொண்டிருந்தால் உங்கள் முழுதிறனையும் உங்களால் முழுமையாக பயன்படுத்த முடியாது. விளையாடும்போது இந்த ஒரே ஒரு குற்றத்தை மட்டும் தான் உங்களால் செய்ய முடியும் - உங்கள் முழுதிறனுக்கு விளையாடாமல் இருப்பது. யார் நம்மைவிட நன்றாக விளையாடுகிறாரோ, அவர் வெற்றி பெறுவார், அது பரவாயில்லை. நம்மைவிட நன்றாக விளையாடி வெற்றி பெறுகிறார், அதை பற்றி நாம் என்ன செய்ய முடியும்? ஆனால் நாம் நம்முடைய முழுதிறனையும் வெளிப்படுத்தவில்லை என்றால் அதுதான் பெரும் குற்றம். நீங்கள் அந்த குற்றத்தை செய்யாத வரை பரவாயில்லை.
இப்படித்தான் உலகம் முழுவதிலும் பயிற்சி கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும் - எப்படி நம் பிரக்ஞானந்தா இந்த உலகத்தில் நடக்கும் எல்லா செஸ் போட்டியிலும் வெற்றிபெற விரும்புகிறார்? அப்படி செய்யாதீர்கள். உலகத்தில் நடக்கும் எல்லாப் போட்டியிலும் ஜெயிக்க முயற்சிக்காதீர்கள். இந்த ஒரு நகர்வு - அதை நீங்கள் சரியாக செய்ய வேண்டும், அவ்வளவுதான்.
உலகில் நடக்கும் எல்லாப் போட்டியிலும் நீங்கள் வெற்றிபெற முடியுமா? உங்கள் கனவில் வேண்டுமானால் அது நடக்கும். நிஜத்தில், உங்களால் சாமர்த்தியமாக ஒரே ஒரு காயை மட்டும்தான் நகர்த்த முடியும். ஒரே தடவையில் இரண்டு நகர்வுகளை செய்யக்கூட உங்களை அனுமதிப்பதில்லை. எப்போதுமே நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு நகர்வு மட்டும் தான். எனவே சாமர்த்தியமாக ஒரே ஒரு காயை நகர்த்துங்கள். அடுத்தடுத்த நகர்வுகளை நீங்கள் இப்போதே செய்ய தேவையில்லை.
போட்டியின்போது நீங்கள் செய்யக்கூடிய தவறு
உங்களுடன் விளையாடுபவரின் அடுத்தடுத்த நகர்வுகளை முன்கூட்டியே கணிக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். நீங்கள் ஓரளவுக்கு வேண்டுமானால் அதை கணிக்கலாம். ஆனால் அவர்கள் அதே நகர்வை செய்வார்களா என்று நமக்கு உறுதியாக தெரியாது. அவர் மிக புத்திசாலித்தனமான நகர்வை செய்வார் என்று நீங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் அவர் முட்டாள்தனமான ஒரு நகர்வை செய்துவிடுகிறார். அப்போதும் நீங்கள், அவர் உங்களை விட சாமர்த்தியசாலி, அதனால் அவரை விட சாமர்த்தியமாக விளையாட வேண்டும் என்றே நினைத்துக் கொண்டிருந்தால், அவர் செய்த முட்டாள்தனமான நகர்வை கவனிக்க தவறிவிடுவீர்கள். அதுதான் எல்லாவற்றையும்விட மிகப்பெரிய தவறாக போய்விடும்.
விழிப்புணர்வும் அடையாளங்களும்
இதற்காகத்தான் நீங்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று சொல்கிறோம். மனதின் இயல்பு இப்படித்தான் இருக்கிறது: ஒரு மனிதரின் மனம் ஏன் கட்டற்று தொடர்ந்து ஓடுகிறது என்றால் - கெட்டுப்போன உணவை சாப்பிட்டால் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை டாய்லெட்டுக்கு ஓட வேண்டியிருக்கும். கெட்டுப்போனதை சாப்பிட நேர்ந்தால், வயிறு உபாதையை நிறுத்த மாத்திரை எடுத்துக்கொள்வது ஒரு வழி, இதையோ அதையோ செய்து முதலில் உபாதையை நிறுத்த வேண்டும். ஒரு அவசர நிலையில் எதையாவது செய்தே ஆகவேண்டும். ஆனால் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், உங்களுக்கு உபாதையை ஏற்படுத்தும் அந்த கெட்ட உணவை சாப்பிடுவதை நிறுத்துவதுதான். இது அப்படியே உங்கள் மனதிற்கும் பொருந்தும்.
உங்கள் மனதிற்கு எது கெட்ட உணவு? நீங்கள் அல்லாத ஒன்றுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொள்வதுதான். நாம் ஈஷா யோகா பயிற்சிகளை செய்துவருகிறோம். இந்த உடல், மனம் அனைத்தும் நாம் சேகரித்துக்கொண்ட விஷயங்கள் தான் என்பது நமக்கு தெரியும். இப்போது நீங்கள் செஸ் வீரராக இருக்கிறீர்கள், இது நீங்கள் வளர வளர சேகரித்தது. நீங்கள் பிறக்கும்போதே செஸ் வீரராக பிறக்கவில்லை. எனவே நீங்கள் வெறுமே ஒரு உயிராக மட்டுமே இருந்து உங்களால் சிறப்பாக செய்யக்கூடியது எது என்று பாருங்கள். நம்மால் புரிந்துகொள்ளக் கூடியவற்றை புரிந்துகொள்ளலாம். புரியவில்லை என்றால் புரியவில்லை, அவ்வளவுதான். ஆனால் தேவையற்ற எண்ண ஓட்டங்கள் ஏற்படும் ஷணத்திலேயே, நம் புரிந்துகொள்ளும் திறமை மிகப்பெரிய அளவில் குறைந்துவிடுகிறது. அதனால் நீங்கள் ஒரே ஒரு காயை நகர்த்துவதை மட்டும் கையாளுங்கள் போதும்.
நீங்கள் பயிற்சியில் ஈடுபடும்போது எல்லா நகர்வுகளையும் பயிற்சி செய்யுங்கள். ஆனால் நீங்கள் விளையாடும்போது, ஒரே ஒரு நகர்வு மட்டும் தான்.
நீங்கள் செய்ய வேண்டிய ஒரே விஷயம்:
இந்த ஒரு நகர்வை நீங்கள் சரியாக செய்துவிட்டு, அவர் என்ன செய்வார் என்று காத்திருக்க வேண்டும். அவ்வளவுதானே நீங்கள் செய்யத் தேவை? அவரது நகர்வை அவர் செய்ததும், நீங்கள், “இவர் மிகப்பெரிய வீரர்” என்று அவரைப் பற்றிய எந்த முடிவோடும் இருக்கக்கூடாது. அவரது முகத்தை கூட நீங்கள் பார்க்காதீர்கள். “இவர் மிகப்பெரிய வீரர், இவர் ஒரு முட்டாள், இவர் அப்படி, இவர் இப்படி” என்று எதையும் நினைக்க வேண்டாம். வெறுமே காய்களை எங்கே நகர்த்துகிறார் என்பதை மட்டும் பாருங்கள். அது மட்டும் தான் முக்கியம்.
ஒரு போட்டியில் பங்கேற்பதற்கு முன் நீங்கள் வகுத்துள்ள திட்டங்களை விட, போட்டியின்போது நீங்கள் சமயோஜிதமாக செயல்படுவது தான் மிக முக்கியமானது. திட்டமிடுவதும், பயிற்சிகளை செய்வதும் உங்கள் மூளைக்கு வேலை கொடுத்து, விளையாட்டைப் பற்றி நன்கு புரிந்து கொள்வதற்காக தான். போட்டியில் பங்கேற்பதற்கு முன், செஸ் போர்டில் நடக்கக்கூடிய எல்லா சாத்தியங்களுக்கும் நீங்கள் தயாராவதற்குத் தான் இவை எல்லாமும். எத்தனை லட்சக்கணக்கான நகர்வுகளை அவர்களால் செய்ய முடியும் என்பதை போட்டிக்கு முன் உங்களால் முடிந்த வரை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறீர்கள். போட்டியில் உட்கார்ந்த பின், ஒரு நேரத்தில் ஒரே ஒரு காயை நகர்த்த மட்டுமே அனுமதிக்கிறார்கள். இதில் அவ்வளவுதான் இருக்கிறது.
உங்களுக்கு விளையாடவே தெரியாமல் அங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள் என்றால் அது வேறு விஷயம். உங்களுக்கு விளையாட தெரியும், இப்போது நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் என்ன நடக்கிறது என்பதை விழிப்போடு கவனிப்பது தான். இதற்கு உங்களுக்கு எந்த பெரிய திட்டங்களும் தேவையில்லை. உங்களுடன் விளையாடுபவருடைய இயற்கையான மனப்போக்கு என்ன, அவர் எப்படி மற்றவர்களுடன் விளையாடுகிறார், எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் ஏற்கனவே புரிந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதிலேயே கவனமாக இருக்காதீர்கள். அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுக்காதீர்கள். ஏனென்றால், எதிராளி உங்களை வியப்பில் ஆழ்த்தக்கூடும். மிக புத்திசாலித்தனமான ஒரு நகர்வை செய்தோ அல்லது முட்டாள்தனமான நகர்வை செய்தோ அவர் உங்களை வியப்படையச் செய்யலாம். இரண்டுமே நடக்கிறது தானே?
புத்திசாலித்தனமான நகர்வை எப்படி எதிர்கொள்வது? அது முன்னதாகவே யோசித்து தயாராக இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அவர் ஒரு முட்டாள்தனமான நகர்வை செய்தால், அதை நீங்கள் தவறவிட்டுவிட்டால், நாம் முட்டாளிடமே முட்டாளாகிவிடுவோம், அப்படித்தானே?
ஏனென்றால் எப்போது அந்த முட்டாள்தனமான நகர்வு வரும் என்றுதான் நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே மற்ற எதைப் பற்றியும் யோசிக்காதீர்கள். நீங்கள் வெறுமனே கவனத்தைச் செலுத்துங்கள், அவ்வளவுதான். மனிதர்களின் கூர்மையான கவனம் தான் மிகவும் முக்கியமானது, எண்ணம் அல்ல. கூர்மையான கவனமே. நீங்கள் ஒரு பந்தை அடிக்க விரும்பினாலும், காயை நகர்த்த விரும்பினாலும் உங்கள் கவனம் எவ்வளவு கூர்மையாக இருக்கிறது என்பது மட்டும் தான் முக்கியமானது. உங்களுக்குள் எவ்வளவு உயர்வான எண்ணங்களும் ஆசைகளும் இருக்கிறது என்பது இங்கே ஒரு பொருட்டே இல்லை. எனவே ஒருபோதும் சாம்பியன் ஆக முயற்சி செய்யாதீர்கள். பெரும் செஸ் வீரராக மட்டும் இருங்கள். மற்றவர்கள் உங்களை ஒரு சாம்பியன் என்று சொன்னால் அது அற்புதமாக இருக்கும். நாம் அதை பார்க்க விரும்புகிறோம். ஆனால் நீங்களே ‘நான் ஒரு சாம்பியன், சாம்பியன்’ என்று நினைத்துக்கொண்டால் அது முட்டாள்தனமாக தானே இருக்கும். எனவே மற்றவர்கள் நம்மை சாம்பியனாக ஏற்கும் வகையில் விளையாடுவோம்.


