வருடத்தின் கடைசி வாரங்களில் பெரும்பாலான மக்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவார்கள். அது விடுமுறை, குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, தனிமையில் இருப்பதற்கு அல்லது ஆசிரமம் போவது என எது வேண்டுமானாலும் இருக்கலாம். பயணம் உடலில் பெரும் சோர்வை ஏற்படுத்தக்கூடும். ஜெட்லாக் மற்றும் பயணத்தினால் ஏற்படும் களைப்பை நீங்கள் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து சத்குரு வழங்கும் சில குறிப்புகளை இந்த கட்டுரையில் படித்து தெரிந்துகொள்ளலாம்.. விடுமுறையை சிறப்பாக கழிக்க இது உதவும்!

சத்குரு:

அதிவேகப் பயணம் என்பது இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. மனித உடல் அதன் இயல்பான திறன்களைத் தாண்டி வேறு ஒரு வேகத்தில் பயணிக்கும்போது, நுட்பமான சக்தி வடிவமும், அந்த சக்தியை சுற்றியுள்ள ஆராவும் சிதைவடைகின்றன. இந்த சிதைவு, உங்கள் பயணத்தின் முடிவில் உங்களை அதீத களைப்பில் ஆழ்த்தக்கூடும். குறிப்பாக நீங்கள் போகும் இடத்தில் கொஞ்ச நாட்களே தங்கப் போகிறீர்கள் என்றால், இது உங்கள் பயணத்தின் நோக்கத்தையே பெரிதும் பாதிக்கலாம்.

பயணம் மற்றும் ஜெட்லாக் காரணமாக உங்கள் சக்தி அமைப்புகள் சந்திக்கும் அழுத்தத்தையும் சிரமத்தையும் குறைப்பதற்கு, உங்கள் பயணத்தைத் துவங்குவதற்கு முன்னும், பயணத்தின் போதும், பயணத்திற்குப் பின்னும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய சில எளிய வழிமுறைகள் உள்ளன.

#1 பயணத்தின்போது நேராக உட்காருங்கள்

உடலை நேராக வைத்திருப்பது, Keeping the body erect

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எலும்புகளின் சௌகரியம், தசை சௌகரியம், உள் உறுப்புகளின் சௌகரியம் என்று சில விஷயங்கள் உள்ளன. நீங்கள் சாய்ந்து உட்காரும்போது, உங்கள் தசைகள் சௌகரியமாக உணரும், ஆனால் உங்கள் எலும்பு அமைப்பும் உள் உறுப்புகளும் அழுத்தத்திற்கு உள்ளாகும். ஏனென்றால் உடலின் உறுப்புகள் எந்தப் பிடிப்புகளாலும் இறுக்கமாகப் பொருத்தப்படவில்லை. அவை தளர்வாக, இணைப்புத் திசுக்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் சாய்ந்து உட்காரும்போது, அவற்றின் செயல்படும் திறன் பெருமளவு குறைந்துவிடுகிறது.

உடலை நேராக வைத்திருப்பது நமக்கு சௌகரியம் பிடிக்காது என்பதற்காக அல்ல, சௌகரியம் என்பதை நாம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் புரிந்துகொண்டு அனுபவிப்பதால்தான். முதுகுத்தண்டை நேராக வைத்தபடி சௌகரியமாக இருப்பதற்கு உங்கள் தசைகளுக்கு உங்களால் பயிற்சி கொடுக்க முடியும். ஆனால் வளைந்து கூன்போட்டு அமர்ந்திருக்கும்போது சௌகரியமாக இருக்குமாறு உங்கள் உள் உறுப்புகளுக்கு உங்களால் பயிற்சி கொடுக்க முடியாது. அதைச் செய்வதற்கு வேறு எந்த வழியும் இல்லை. அதனால் தான், இப்படி நிமிர்ந்து உட்காரும்போது நம்முடைய எலும்பு அமைப்பும் தசை அமைப்பும் சௌகரியமாக இருக்கும்படி உடலுக்கு பயிற்சியளிக்க முற்படுகிறோம்.

#2 பயணத்திற்கு முன் விழிப்புணர்வுடன் சாப்பிடுங்கள்

Fruit Juices, பழச் சாறுகள்

நம் உடல் என்பது நாம் உண்ணும் உணவின் கூட்டு வடிவம் தான். எனவே, நீங்கள் எதை சாப்பிடுகிறீர்கள் என்பதில் விழிப்புணர்வுடன் இருப்பது பயண அழுத்தத்தைக் குறைக்கும். பயணத்திற்கு முன்னும், பயணத்தின் போதும், பயணம் முடிந்த பின்னும் குறைந்தது 24 மணி நேரமாவது பழங்கள், காய்கறிகள் போன்ற அதிக நீர்ச்சத்து உள்ள உணவுகளையும், அதிகளவில் தூய்மையான நீரையும் எடுத்துக்கொள்ளுங்கள். போதைப்பொருட்கள், நரம்பைத் தூண்டும் பொருட்கள், செரிமானமாகாமல் வயிற்றில் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் தங்கியிருக்கும் உணவுகளான இறைச்சி, மாவுச்சத்து, கொழுப்பு நிறைந்த சிக்கலான உணவுக் கலவைகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள்.

#3 சூரிய சக்தியைப் பயன்படுத்துங்கள்!

உங்கள் முதுகுத்தண்டில் சூரிய ஒளி படுமாறு செய்தல், Exposing your spine to sunlight

சர்வதேசப் பயணங்களின் போது ஏற்படும் மிகப்பெரிய அழுத்தத்திற்கு காரணம் 'ஜெட்லாக்'. இது, நீங்கள் பயணித்துள்ள புதிய நேர மண்டலத்தினால் (Time zone) உங்கள் உடல் மற்றும் சக்தி அமைப்பில் ஏற்படும் ஒருவித குழப்பம். உங்கள் உடலின் உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் இந்தக் குழப்பத்தை, உங்கள் முதுகுத்தண்டில் சூரிய ஒளி படுமாறு செய்வதன் மூலம் சமநிலைப்படுத்த முடியும். நேரடியாகவோ அல்லது மெல்லிய ஆடையின் வழியாகவோ, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை, குறைந்தது 20 நிமிடங்களாவது சூரிய ஒளியில் உங்கள் முதுகுத்தண்டைக் காட்டுங்கள். இத்துடன் சேர்த்து 'உப-யோகா' பயிற்சிகளையும் செய்து வருவது, ஜெட்லாக் சோர்விலிருந்து நீங்கள் மிக விரைவில் மீண்டுவர உதவும்.

#4 நாடி சுத்தி

நாடி சுத்தி, Nadi Shuddhi

நாடி சுத்தி என்பது உங்கள் சுவாசத்தைப் பயன்படுத்தி, உங்கள் சக்திநிலையை நல்வாழ்வுக்கான ஒரு பாதுகாப்புக் கவசமாக ஒழுங்குபடுத்தும் எளிமையான யோகப் பயிற்சியாகும்.

இது உங்கள் சக்தி அமைப்பில் தேவையான சமநிலையைக் கொண்டுவர உதவுவதோடு, பயணத்தின் அழுத்தங்களை மிகக் குறைந்த பாதிப்புடன் கடந்து செல்ல உங்கள் உடலை சீரமைக்கிறது.

பயணத்திற்கு ஆயத்தமாகவும், பயணத்தின் போதும், அதற்குப் பின்னும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியை செய்யலாம். நீங்கள் போகும் இடத்தின் நேர வித்தியாசம் 6 முதல் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக இருந்தால், நீங்கள் அங்கு சென்றடைந்த பின் குறைந்தது 3 நாட்களுக்கு இந்த பயிற்சியை தொடர்வது மிகவும் நல்லது.

இது மிகவும் சீரமைக்கப்பட்ட ஓர் சக்தி அமைப்பின் பலன்களை உங்களுக்கு வழங்குகிறது, இது உங்கள் உடல் மற்றும் மன நிலைகளில் நேரடியான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

குறிப்பு:

இதுபோன்ற எளிமையான ஆனால் சக்திவாய்ந்த உப-யோகா பயிற்சிகளை தெரிந்துகொள்ள, isha.sadhguru.org இணையதளத்தைப் பார்வையிடுங்கள் அல்லது இலவச Sadhguru App-ஐ டவுன்லோடு செய்யுங்கள்.