வாழ்வின் புதிர்கள்

வாழ்க்கையில் உங்களது தாக்கத்தை அதிகபட்சமாக்குவதற்காக காலத்தின் சுழற்சியைப் புரிந்துகொள்ளல்

காலத்தின் இயக்கவியல், சுழற்சிகள், மற்றும் வாழ்க்கையின் நமது அனுபவங்களை சத்குரு தெளிவுபடுத்துகிறார். நமது வாழ்க்கையின் சுழற்சிகளில் அதிகபட்ச தாக்கத்திற்காக ஆற்றல் வாய்ந்த க்ஷணங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை சூறாவளியின் கவர்ந்திழுக்கும் ஒரு ஒப்புவமையின் வாயிலாக சுட்டிக்காட்டுகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. ஒருவரது செயல்கள் வெற்றிகரமாக இருப்பதற்கு, சரியான நேரத்தில் செயலாற்றுவதன் முக்கியத்துவத்தை நீங்கள் வலியுறுத்தியுள்ளீர்கள். மேலும், யோகப் பயிற்சிகள் சக்தி குறியீடுகளைப் போன்றவை என்பதையும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதற்கு சற்று விளக்கமளிக்க முடியுமா?

சத்குரு: பொதுவாகவே, வாழ்க்கையின் சுழற்சி செயல்முறைகளின் காரணமாகத்தான் நாம் காலம் குறித்து அறிந்துகொள்கிறோம். சந்திரன் பூமியைச் சுற்றும்போது, அதை ஒரு மாதம் என்று கூறுகிறோம். நமது கிரகம் சூரியனைச் சுற்றி வந்தால், அதை ஒரு வருடம் என்று நாம் கூறுகிறோம். காலம் குறித்த நமது புரிதல் இது: எப்போதும் இது சுழற்சிகளில் இருக்கிறது. அதை நாம் அமைக்கவில்லை – பௌதிகரீதியான ஒவ்வொன்றும் சுழற்சிகளில் நிகழ்கிறது. எல்லாமே காலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது அதன் பொருள். அணுக்களுக்கும், அணு உட்துகள்களுக்கும்கூட, அவைகளுக்கே உரிய சுழற்சிகள் உள்ளன. கோள்களின் அமைப்புக்கு சுழற்சிகள் உண்டு, மற்றும் பிரபஞ்சமும் அதற்கான சுழற்சியைக் கொண்டிருக்கிறது. காலத்துக்குக் கட்டுப்பட்ட அனைத்தும் இந்த விதமாகத்தான் நகர்கிறது.

காலம் குறித்த நமது புரிதல் நம்முடைய உடல்தன்மையான இருப்புடன் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே தரிசன நேரமாக இருந்தால், உங்களுக்கு ஒரு உடல் இருக்கும்போது, நீங்கள் இங்கு வருவதற்கான பயணதூரம், அதற்கான பயணச்செலவு, மற்றும் பல்வேறு காரணங்களால் தரிசனத்துக்கு வருகை தருவதற்கான உங்கள் வாய்ப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. உங்களுக்கு ஒரு உடல் இல்லாமல் இருந்தால், தரிசன நேரம் 3,000 வருடங்களுக்கு நீடித்தாலும்கூட, அது உங்களுக்கு ஒரு பிரச்சனையாக இருக்காது.

உங்களுக்கு ஒரு உடல் இருக்கும் காரணத்தினால்தான், நேரம் அல்லது காலம் தொடர்புடையதாக இருக்கிறது. உடல்தன்மையின் சுழற்சிகளின் காரணத்தினால் மட்டும்தான் உங்களுக்கு காலம் முக்கியத்துவம் பெறுகிறது. உடல்தன்மை இல்லையென்றால், உங்களுக்கு காலம் என்பது எதுவுமில்லை. இப்போது கேள்வி எழுகிறது: இந்த சுழற்சிகளுக்குள் எப்போது நீங்கள் பெருந்தாக்கத்தினைப் பெறமுடியும்? இது கடினமானது ஏனென்றால் காலம் மற்றும் சக்தியைப் பொருத்தவரையில், நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம். நீங்கள் துன்பத்தில் இருந்தால்தான், வாழ்க்கை மிக நீண்டதாகத் தோன்றுகிறது. இல்லையென்றால், இது மிகக் குறுகிய காலம் என்பதுடன், நமக்கு இருக்கும் சக்தியின் அளவும் மிகவும் குறைவானதுதான். இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு சின்னஞ்சிறு உயிர்த்துளியாகத்தான் இருக்கிறோம்.

உங்களுக்கு ஒரு உடல் இருக்கும் காரணத்தினால்தான், நேரம் அல்லது காலம் தொடர்புடையதாக இருக்கிறது. உடல்தன்மையின் சுழற்சிகளின் காரணத்தினால் மட்டும்தான் உங்களுக்கு காலம் முக்கியத்துவம் பெறுகிறது.

காலமும், சக்தியும் எல்லைக்கு உட்பட்டது என்பதால், நாம் அவற்றைத் திறம்படப் பயன்படுத்திக்கொள்வது மிக அவசியமானது. இல்லையென்றால் வாழ்க்கை குறிப்பிடத்தக்க தாக்கத்தை உருவாக்காமல் கடந்துவிடும். செயல்பாட்டின் நோக்கம் தாக்கம் ஏற்படுத்துவதற்கானது; இல்லையென்றால், ஏன் செயல் செய்யவேண்டும்? பலன் அளிப்பதற்கு, நீங்கள் எங்கு அதிக தாக்கம் ஏற்படுத்துவீர்களோ அந்த சரியான சுழற்சியில் நீங்கள் செயல்படவேண்டும். வேறொருவருடன் உங்களது சுழற்சி வித்தியாசப்படலாம், ஆனால் உங்கள் சுழற்சியை நீங்கள் அதிக ஆற்றலுடன் நிகழ்த்தினால், மற்றவர்கள் உங்களுடன் இசைந்திருப்பார்கள். இதற்கு சுழற்சிசார் செயல்முறைகளின் உள்ளார்ந்த இயல்பு காரணமாகிறது – நீங்கள் போதிய தீவிரத்துடன் அவர்களை இயக்கினால், மற்ற அனைத்தும் அவர்களுடன் ஒத்திசைவுடன் பொருந்துகிறது. அதுதான் காலத்தின் முக்கியத்துவம்.

நீங்கள் அதனை ஒரு புயல் அல்லது சூறாவளிக்கு ஒப்பிடமுடியும். நாம் தினமும் சுவாசிக்கும் அதே காற்றைத்தான் அவைகள் உள்ளடக்கியுள்ளன. எந்தப் புதிய காற்றும் செவ்வாய் கிரகத்திலிருந்தோ அல்லது வேறொரு பால்வெளியிலிருந்தோ இறக்குமதி செய்யப்படவில்லை. தற்போது, இங்கே உள்ளும் வெளியுமாக ஓடிக்கொண்டிருக்கும் காற்றானது சூறாவளியை உருவாக்கவில்லை. அதே மூலக்கூறுகளால்தான் அது உருவாக்கப்பட்டுள்ளது, ஆனால் அது சுழன்றுகொண்டிருக்கவில்லை. அது சுழன்றால், கற்பனை செய்யமுடியாத சக்தியாக அது மாறமுடியும். சாதகமான சூழல்கள் சரியாக இருந்து, அது போதிய பலத்துடன் சுழலும்போது, ஒரே ஒரு சூறாவளியல்ல, நூற்றுக்கணக்கானவை தோன்றும்.

ஒரு சூறாவளி வேகமெடுக்கத் தொடங்கினாலே, அது உங்கள் கவனத்தைப் பெறுவதற்குப் போதுமானது. சிறிய அளவில் பலவும் நிகழும்போது, ஒன்றுமட்டும் பெருமளவு சக்தியுடன் எழுந்தால், அனைத்தும் ஒன்றாகி, பிறகு யாராலும் அலட்சியம் செய்யமுடியாதவாறு அது ஒரு பிரம்மாண்டமான சக்தியாக மாறுகிறது. இதைத்தான் நீங்கள் செய்யமுடியும்: சரியான நேரத்தில் நீங்கள் போதிய வலிமையுடன் சுழன்றால், அனைத்தும் ஒத்திசைந்து, ஒரு பெரிய சக்தியாகிறது.

யோகக் கலாச்சாரத்தில், ஒரு குறிப்பிட்ட யோகியை நாம் சஹஸ்ரபாஹு என்று அழைக்கிறோம். அதாவது, அவருக்கு ஆயிரக்கணக்கான கைகள் இருந்தன என்பது பொருள். ஒரு ஆக்டொபஸ் சூரிய கிரியா செய்வதைக்கூட உங்களால் கற்பனை செய்யமுடியாதபோது, அவர் ஆயிரக்கணக்கான கைகளுடன் எப்படி சூரிய கிரியா செய்தார் என்று இப்போது நீங்கள் ஆச்சரியமடையலாம். “ஆயிரக்கணக்கான கைகள்” என்பதை அப்படிப் பொருள் கொள்ளக்கூடாது. அதன் பொருள் என்னவென்றால், அவரைச் சுற்றிலுமிருந்த ஆயிரக்கணக்கான கைகளும் அவருடைய கைகளாக இருக்கும்படி, அவரது காலத்தில் அவர் ஒரு பெரும் சக்தியாக இருந்தார். ஆயிரக்கணக்கான கைகளும் வெவ்வேறு உடல்களுடன் பொருந்தியிருந்தன, ஆனால் அவைகள் அனைத்தும் அவருடைய கரங்களாகி, மகத்தான தாக்கம் ஏற்படுவதை சாத்தியமாக்கின.

மற்ற உயிரினங்கள் அவைகளுக்குரிய பிழைப்பை மட்டும் சிந்தித்தால், அது பரவாயில்லை. ஆனால் நீங்கள், உங்களது பிழைப்புத் தேடலில், ஒட்டுமொத்த உலகத்துக்கும் தீங்கு செய்தால், நீங்கள் மனித உயிரினமாக இருக்கிறீர்களே தவிர, ஒரு மனித உயிராக இல்லை என்பதே அதன் பொருள்.

நீங்கள் சரியான விதத்தில் அடையாளம் கொண்டிருந்தால், இயற்கையாகவே வாழ்க்கையுடனான சரியான நிலைப்பாடு உங்களுக்கு இருக்கிறது. உங்கள் வாழ்க்கை உங்களுக்குச் சொந்தமானது, அதில் மற்றவர்கள் இல்லை என்று நீங்கள் நம்பினால், அப்போது நீங்கள் அதிக ஆற்றல் நிரம்பியவராக உருவெடுக்கும்போது, அவர்களை நீங்கள் தவிர்த்துவிட விரும்பக்கூடும். அதனால்தான் ஏதோ ஒரு வழியில் ஒவ்வொரு உயிரையும் உங்கள் பாகமாகப் பார்க்கத் தொடங்குவது அவசியமானது. அது உங்களது அனுபவத்தில் இல்லாமல் இருந்தாலும், குறைந்தபட்சம் எண்ணத்தின் அளவில், அதை நீங்கள் உணரவேண்டும்.

மற்ற உயிரினங்கள் அவைகளுக்குரிய பிழைப்பை மட்டும் சிந்தித்தால், அது பரவாயில்லை. ஆனால் நீங்கள், உங்களது பிழைப்புத் தேடலில், ஒட்டுமொத்த உலகத்துக்கும் தீங்கு செய்தால், நீங்கள் மனித உயிரினமாக இருக்கிறீர்களே தவிர, ஒரு மனித உயிராக இல்லை என்பதே அதன் பொருள். அடிப்படையான பிழைப்பு என்பது ஒரு கழுதையின் வாழ்க்கை. நீங்கள் ஒரு கழுதையின் வாழ்க்கையை வாழ்வதற்கு விரும்பினால், குறைந்தபட்சம் நீங்கள் கடினமாக உழைக்கவேண்டும். நீங்கள் ஒரு பூவைப்போல் வாழ விரும்பினால், நீங்கள் நறுமணத்தையும், மலர்ச்சியையும் கசியவிடவேண்டும். உங்களிடம் அந்த நறுமணத்தை நான் பார்த்துவிட்டால், சக்திநிலையில் பல கடவுக் குறியீடுகளை நான் உங்களுக்குக் கொடுப்பேன். பெற்றுக்கொள்வது வல்லமை தருகிறது. ஆனால் சரியான செயல்பாடு இல்லாமல் வல்லமையளிப்பது ஒரு பேரழிவானது.

ஒரு அணுகல் குறியீடு என்றால், அனைவருக்கும் கிடைக்கமுடியாத சிறப்புரிமையான அணுகல் என்பது பொருள். இந்த அணுகலின் சிறப்புரிமை உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒருவேளை உங்களுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் டேட்டா பேஸ்-க்கான அணுகல் கிடைக்கிறது என்றால், ஒருவர் 100 கோடி டாலர்களை எப்படித் திருடுவது என்று எண்ணலாம். மற்றொருவர், அரசாங்க செயல்பாட்டை நாசப்படுத்துவதற்கு அல்லது இடையூறு செய்வதற்கு விரும்பலாம். மற்றொருவர் அதிலிருக்கும் ஓட்டைகளை அடையாளம் கண்டு, அவற்றை எப்படி சரிசெய்யலாம் அல்லது முன்னேற்றலாம் என்று விரும்பலாம். வெவ்வேறு மக்களுக்கும் வெவ்வேறு செயல்திட்டம் உள்ளது.

நீங்கள் ஒரு பூவைப்போல் வாழ விரும்பினால், நீங்கள் நறுமணத்தையும், மலர்ச்சியையும் கசியவிடவேண்டும். உங்களிடம் அந்த நறுமணத்தை நான் பார்த்துவிட்டால், சக்திநிலையில் பல கடவுக் குறியீடுகளை நான் உங்களுக்குக் கொடுப்பேன்.

இதனால்தான் உங்களை மிக எளிமையான தீட்சைக்கு உட்படுத்துவது மிகவும் முக்கியமாக உள்ளது. எளிமையானது என்றால் முக்கியமற்றது என்பதல்ல. வாழ்க்கை மிகவும் எளிமையானது. அதை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை என்றால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிக்கலாக்கிக்கொண்டு, பல வழிகளிலும் குளறுபடி செய்துவிடுவீர்கள். அதை சிக்கலாக்குவதால், அது மிகவும் முக்கியமடைவது இல்லை, ஆனால் அதிகமாக குளறுபடியாகிறது. அது ஒரு குளறுபடியாக இருக்கும்போது, அதற்கு அதிகக் கவனம் தேவைப்படுகிறது.

ஆதலால், தினமும், நீங்கள் இன்னர் இஞ்ஜினியரிங் அல்லது ஈஷா யோகாவின் அடிப்படைகளை இரண்டு நிமிடங்களுக்கு உங்களுக்கே நினைவூட்டிக்கொள்ள வேண்டும். அப்போது, உங்களுக்குக் கிடைக்கக்கூடிய எந்த அணுகுமுறையும் முன்னேற்றத்துக்கு வழிநடத்தும்.