
கேள்வி: சத்குரு, நாம் உண்மையில் வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்ள முடியும் என்பது குறித்த உங்களது கண்ணோட்டத்தை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?
சத்குரு: புரிதல் என்றால் உண்மையில் என்ன பொருள் என்று பார்ப்போம். ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்வதற்கு, அவர்கள் தங்களுக்கே உரிய காரண அறிவின் வரையறைக்குள் பொருத்துவதற்கு அதைச் சரிசெய்யவேண்டும் என்று பலரும் நம்புகின்றனர். அடிப்படையில் நாம் அனைவருமே ஒரே காரண அறிவின் கொள்கைகளைக் கற்றிருக்கலாம் என்றாலும், உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்களுக்கே உரித்தான, லேசாக மாறுபட்ட பதிப்பு இருக்கிறது. இதனால்தான் பற்பல சர்ச்சைகளும், விவாதங்களும் இருந்துகொண்டிருக்கின்றன. ஒரு விஷயம் உங்களுடைய காரண அறிவின் கட்டமைப்புக்குள் பொருந்திவிட்டால், நீங்கள் அதைப் புரிந்துகொண்டதாக எண்ணுகிறீர்கள். புரிந்துகொள்ளும் அந்த முயற்சியை நீங்கள் கைவிடவேண்டும்.
நமது வாழ்வின் இயல்பு குறித்த எதையும் நீங்கள் இன்னமும் புரிந்திருக்கவில்லை. நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? நீங்கள் எங்கே செல்வீர்கள்? மதத்தின் பெயரால், சில முட்டாள்தனமான கதைகள் உங்களிடம் இருக்கலாம். ஆனால் உங்களுடைய சொந்த இருப்பு குறித்து உண்மையில் உங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறது? எதுவும் இல்லை.
மறைஞானம் என்பது உணர்தலைக் குறிக்கிறது, புரிதலைக் குறிப்பது அல்ல. ஏனென்றால் ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள முயற்சிக்கும்பொழுது, ஒன்று உங்கள் மனதில் நீங்களே சொந்தமாகக் கற்பிதங்களை உருவாக்குகிறீர்கள், அல்லது உங்கள் காரண அறிவுக்குப் பொருந்தும் விதமாக உங்களையே நீங்கள் வரையறை செய்துகொள்கிறீர்கள். அதைச் செய்வதைத் தவிர்த்துவிடுங்கள்.
நீங்கள் புரிதலுக்கு வரும்வரை, எதுவேண்டுமானாலும் நிகழட்டும். இது எனது ஆசிர்வாதம். உங்களுக்கு எல்லாம் நிகழட்டும். சில விஷயங்கள் நிகழக்கூடாது என்று நீங்கள் நினைக்கும்பொழுது, வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் மட்டுமே நிகழ்வதற்கு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்பது அதன் பொருள். வாழ்க்கை வித்தியாசமான விதத்தில் நிகழ்ந்தால், நீங்கள் அதை நிராகரிக்க விரும்புகிறீர்கள். திறந்ததன்மையில் இருப்பதற்கும், வாழ்க்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அனுமதிக்கும் விருப்பத்துடன் இருப்பதையும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
மறைஞானம் உங்களுக்குப் புதிரானது ஏனென்றால் அதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது; அதை உணரத்தான் முடியும். சிவனாகவே இருந்த ஆதியோகியை மணப்பதற்கு பார்வதி விரும்பியபொழுது இது நிகழ்ந்தது. அவரது இருப்பின் தன்மையால், அவள் சுவாரஸ்யமடைந்தாள், கிளர்ச்சியுற்றாள், மற்றும் தாங்கொணா உணர்ச்சிவசப்பட்டாள். சிவன் சடைமுடியுடன், யானைத் தோலினை ஆடையாக அணிந்துகொண்டு, ஆக்ரோஷமாக வாழ்ந்தார்.
உங்களால் என்ணிப்பார்க்கமுடியாத அளவுக்கு அவர் ஆக்ரோஷமான மனிதராக இருந்தார். புராண இதிகாசத்தின்படி, முழு வளர்ச்சியடைந்த ஒரு குதிரைக்கு அடுத்து அவர் நிற்கும்பொழுது, அவரது தலையானது குதிரையின் தலைக்குச் சரிசமமான உயரத்தில் இருந்தது. அவர் தென்னிந்தியாவுக்கு வந்தபோது, ஒரு சராசரி பெண்ணின் உயரத்தில் இரண்டு மடங்காக அவர் இருந்ததாக மக்கள் விவரித்தனர். இன்றைக்கும்கூட, தென்னிந்தியாவில் குறிப்பிட்ட ஆதிவாசிகள் கனத்த, உறுதியான உருவாக்கத்துடன் இருப்பதை நீங்கள் காணமுடியும். ஆண்கள் சுமார் ஐந்தடி உயரத்திலும், பெண்கள் சற்றே குறைவாகவும் உள்ளனர்.
அவர் ஒரு சராசரி பெண்ணின் உயரத்தில் இரண்டு மடங்கு இருந்தார் என்று அவர்கள் விவரித்தனர். இந்த விவரிப்புகளின்படி, அவர் சுமார் எட்டரையில் இருந்து ஒன்பது அடி உயரம் இருந்தார் என்று நாம் அனுமானிக்கிறோம். இந்த பிரம்மாண்டமான மனிதர், யானைத் தோல் போர்த்திக்கொண்டு, அவரது கண்களை மூடிய நிலையில், முற்றிலும் போதையடைந்தவராக, ஆவேசமாக நடனமாடினார். இசைக்குக் கட்டுப்பட்டவர்களைப்போல் மக்கள் அவரைத் தொடர்ந்தனர். பார்வதி அந்த மனிதரை மணந்துகொள்ள விரும்பும் அளவுக்கு அவர்பால் கட்டுக்கடங்காமல் ஆர்வம் கொண்டாள். அவர் மணந்துகொள்ளும் விதமானவர் அல்ல, ஆனால் அவருக்காக எதையும் செய்ய விரும்பும் அவளது உறுதியைக் கண்டு, அவர் சம்மதித்தார்.
அவள் வீட்டிற்குச் சென்று அவளது தாயை எப்படியோ சமாதானப்படுத்திவிட்டாள், ஆனால் அவளது தந்தை மிகுந்த கோபத்துடன் கூறினார், “அவன் ஒரு மனிதனே அல்ல, அவன் ஒரு காட்டு உயிரினம். நீயோ ஒரு இளவரசி. நீ எப்படி அவனை மணக்கமுடியும்?” ஆனால் அவளோ, “அவர் இல்லையென்றால் நான் இறந்துபோவேன்”, என்றாள். ஒருவாறாக அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர்.
அந்தப் பகுதியில் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும், எல்லா சமுதாயத்தினர் மற்றும் அரசமாந்தர்கள் அடங்கலாக ஒவ்வொருவரும் திருமணத்துக்கு வருகைதந்தனர். அவர்கள் அனைவரும் மணமகன் வருவதற்காகக் காத்திருந்தனர். இந்தியாவில், இன்றைக்கும்கூட, குறிப்பாக வடக்கில் இந்தப் பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. திருமணத்தை கலாச்சாரக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அவர்களது வளம் மற்றும் பலத்தை விமரிசையாக வெளிப்படுத்தும்படி, மணமகன் ஒரு அலங்கரிக்கப்பட்ட குதிரை மீதேறி, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பரிவாரத்துடன் வருகிறார்.
ஆதியோகி, ஏறக்குறைய ஒன்பது அடி உயரத்தில், அவரது மேனியில் போர்த்தப்பட்டு இன்னமும் இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த யானைத்தோலுடன், வந்தடைந்தார். அவருடன் வந்திருந்த அவரது நண்பர்கள் அனைவரும், வடிவமற்ற பூதகணங்களாக எந்த மனிதமொழியையும் போல இல்லாத சகிக்கமுடியாத இரைச்சலை உருவாக்கும் ஒரு கூட்டமாக இருந்தது. அவர்கள் அனைவரும் பெரும்போதையில் இருந்தனர், மற்றும் ஆதியோகி ஒரு யானையைப்போல் வந்தார். இதைக்கண்ட பார்வதியின் தாய் மேனா, என்ன இது? என் மகள் மணக்கவிருக்கும் மனிதனா இது?” என்று அரற்றியவளாக, அதனைக் கற்பனை செய்ய இயலாமல், தன் உணர்வை இழந்தாள்.
பார்வதி, தனது தாய் நிலைகுலைவதைக் கண்டபோது, அவளது தந்தையும் தனது திருமணத்துக்கு எதிர்ப்பாக இருந்ததை அறிந்தவளாக, அவள் ஆதியோகியிடம் ஓடிச்சென்று, “தயவுசெய்து தங்களது வடிவத்தை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் யார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவர்கள் உங்களது வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கின்றனர். அவர்களுக்கு, நீங்கள் ஏதோ ஒரு உயிரிமாகத்தான் இருக்கிறீர்கள், ஒரு மனிதராக அல்ல. ஏதாவது செய்யுங்கள்”, என்று இறைஞ்சினாள். அவர் அவளைப் பார்த்துக் கேட்டார்,” என்னிடம் என்ன தவறு உள்ளது?” அவர் மலைகளில் இருப்பதற்கு சரியான உடல்தகுதியில் இருந்தார். ஒரு மணமகனாக திருமணக்கூடத்துக்குள் இருப்பதற்குதான் பொருத்தமற்றவராகத் தோன்றினார்.
பிறகும் அவள் மன்றாடினாள், தயவுசெய்து இதை செய்துவிடுங்கள்! இல்லையென்றால் என் தாய் அவளது உயிரை விட்டுவிட நேரிடும்.” ஆதியோகி அவளுக்கு இசைந்து, அவரது வடிவத்தை மாற்றிக்கொண்டு, இன்றைக்கு சுந்தரமூர்த்தி என்று குறிப்பிடப்படும் உருவத்தை எடுத்தார். சுந்தரமூர்த்தி என்றால் அதிரூப அழகு வடிவம் என்பது பொருள். சட்டென்று, எந்த ஒரு இளவரசிக்கும் இவர் மிகப் பொருத்தமானவர் என்பதைப்போல், அனைவரும் அவரிடம் ஆழமாக ஈர்க்கப்பட்டனர். அவர் மணம் செய்துகொள்வதிலோ அல்லது அதைப்போன்ற எதிலும் ஆர்வம்கூட இல்லாதவராக இருந்தார்; அவர் அவளுக்காகத்தான் விட்டுக்கொடுத்தார்.
நீங்கள் காண்பது சமூக நிலையில் மட்டும்தான் தொடர்புடையது என்பதையே இந்தக் கதை விளக்குகிறது. வேறு குறிப்பிட்ட பரிமாணங்களுக்குள் நீங்கள் செல்லத்தொடங்கிவிட்டால் அதற்கு எந்தத் தொடர்புமில்லை. உங்களது வழக்கமான புரிதலின்படி சென்று, ஒவ்வொன்றையும் நல்லது, கெட்டது, சரியானது, சரியில்லாதது, அழகானது, அழகற்றது என்று தரம் பிரிக்காதீர்கள். வெறுமனே, தென்றலைப்போல் செல்லுங்கள். என்ன நிகழ்ந்தாலும், நிகழட்டும். எதுவும் நிகழவில்லை என்றாலும், மகத்தானதுதான். புரிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள், ஏனென்றால் மறைஞானம் புரிந்துகொள்வதற்கானது அல்ல, அது ஆழ்ந்துணர்ந்து, அனுபவிப்பதற்கானது.