புகழ்பெற்ற கணிதவியலாளரும், வானியலாளருமான பேராசிரியர். பெர்னார்ட் கார் மற்றும் சத்குரு அவர்களுக்கு இடையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான உரையாடலில், அறிவியலும் ஆன்மீகமும் சந்திக்கும் புள்ளியில் பயணிக்கின்றனர். சமீபத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தைக் கவரும் இந்த விவாதத்தின்போது, மனரீதியான, ஆன்மீகரீதியான நிகழ்வுகளை இணைத்துக்கொள்வதற்கு, இயற்பியலில் ஸ்பேஸ் – டைம் கருத்தாக்கத்தை வளர்க்கும் தேவையை பெர்னார்ட் கார் முன்மொழிகிறார்.
பேரா. பெர்னார்ட் கார்: மனரீதியான மற்றும் ஆன்மீகரீதியான நிகழ்வுகளை உள்ளடக்குவதற்கு இயற்பியலை விரிவாக்கம் செய்வது அவசியம் என்று நான் எண்ணுகிறேன். நான் ஒரு இயற்பியலாளர் என்பதுடன், இயற்பியலில் எனக்குப் பெருவிருப்பம் உண்டு. பொருள்தன்மையான உலகத்தை விவரிப்பதில் அது வெற்றிகரமாக செயல்பட்டதைப்போல், அந்த வெற்றியை மற்ற துறைகளுக்கும் விரிவாக்கம் செய்ய விரும்புகிறேன். இடம் மற்றும் காலம் குறித்த ஒருவரது கருத்துகளை விரிவடையச் செய்வதனால், அது நிகழமுடியும் என்று நான் எண்ணுகிறேன். ஆனால் இப்போது நான் கூறப்போவது அனைத்துமே நிரூபிக்கப்படாத ஊகத்தின் அடிப்படையில் எழுந்த கருத்துகள்தான்.
இயற்பியலின் கருத்தாக்கத்தின்படி, வெளிஇடம் என்பதை நாம் அர்த்தப்படுத்துவது மாறியுள்ளது. நியூட்டனின் இயற்பியலில், இடவெளியின் மூன்று பரிமாணங்கள், மற்றும் காலத்தின் ஒரு பரிமாணம் இருந்தது. அதுதான் நிதர்சனத்தின் கருத்தாக இருந்தது. ஆனால் பிறகு ஐன்ஸ்டீன் வந்தபிறகு, இடவெளி மற்றும் காலத்தின் ஒன்றிணைந்த நான்கு பரிமாண நிதர்சனத்தை முன்வைத்தார்.
ஆனால் பிறகு 1920 களில், பௌதிகவியலாளர்கள் கலூசா மற்றும் க்லெய்ன் ஆகிய இருவரும், ஐந்தாவதாக ஒரு பரிமாணத்தை எழுப்புவதன் வாயிலாக, மின்காந்தவியலின் வடிவியல் விளக்கத்தை அவர்கள் கொடுக்க முடிவதை உணர்ந்தனர். வளைந்த இடவெளியின்படி, ஐன்ஸ்டீன் ஈர்ப்புவிசையின் ஒரு வடிவியல் விளக்கத்தைக் கொடுத்திருந்தார். அதன் பிறகு, 1990 களின் பாதியில், ப்ரின்ஸ்டன்-ல் இருந்து ஒரு இயற்பியலாளர் எட் விட்டன், உண்மையில் 11 பரிமாணங்கள் தேவை என்பதை உணர்ந்தார்.
சத்குரு: யோகப் பாரம்பரியத்தில், அது எப்போதுமே 11 பரிமாணங்களாகத்தான் பார்க்கப்படுகிறது. ப்ரின்ஸ்டனிலிருந்து ஒரு மனிதரால் அதைக் கூறமுடிந்தது எனக்குத் தெரியாது. ஆனாலும் அது மிகவும் சுவாரஸ்யமானதுதான். உண்மையின் இயல்பு என்னவென்றால், எந்தத் திசையிலிருந்து நீங்கள் அதைப் பார்த்தாலும், அது எப்போதும் ஒரே விஷயமாகவே உள்ளது.
பேரா.பெர்னார்ட் கார்: மிகச் சரியானது. இந்த 11 பரிமாணக் கோட்பாட்டில், ஒரு பெரும்பரிமாண இடவெளியில் பௌதிக உலகம் என்பது ஒரு சிறு துண்டாகத்தான் இருக்கிறது. மனதின் கண்ணோட்டத்தில் இருந்து நான் பிரச்சனைக்கு வரவிரும்புகிறேன். சில கருத்தாக்கங்கள் முற்றிலும் கணிதவியலாக உள்ளன. ஆனால் இதனை ஆராய்பவர்கள் இயற்பியலாளர்களாக இருக்கின்றனர்.
இப்போது மனரீதியான அனுபவம் குறித்து கேட்போம். நாம் இந்த உலகத்தை, நிகழ்வெளியை (phenomenal space) உணர்ந்திருப்பது நம் அனைவருக்கும் தெரிகிறது. ஆனால் அது பௌதிக உலகம் குறித்த நமது அனுபவமாக உள்ளது. மேலும், பௌதிக வெளி (physical space) மற்றும் நிகழ்வெளிக்கு இடையிலான தொடர்பு குறித்து நீண்ட தத்துவார்த்தரீதியான ஒரு விவாதம் இருக்கிறது. இருப்பினும், விழிப்புநிலையில் நாம் அனுபவிக்கும் இடவெளிகளைவிட, விழிப்புணர்வின் நிலைகளில் நாம் உணர்வதில்தான் நான் ஆர்வம் கொண்டிருக்கிறேன். கனவுகள் மற்றும் தெளிவான கனவுகள் குறித்து பல கலந்துரையாடல்களும், உடலுக்கு வெளியிலான அனுபவங்களும் பலவாறாக இருந்துள்ளன. உடலுக்கு வெளியிலான அனுபவங்களில், உங்களது விழிப்புணர்வு உங்கள் உடலை விட்டு விலகி, சுற்றி அலைவதாகத் தோன்றுகிறது. அது பௌதிக இடவெளிக்கு தொடர்புடையது என்றாலும், அதை ஒத்திருப்பது அல்ல.
மேலும், ஆவிகள், அருவங்கள் குறித்தும் அனுபவங்கள் உள்ளன. ஆவி என்பது மனத்தோற்றம்தான் என்று பெரும்பாலான மனோவியலாளர்கள் கூறுவார்கள். இருப்பினும், ஒருவருக்கு மேற்பட்ட நபர்கள் ஒரே நேரத்தில் ஆவிக்காட்சிகளைப் பார்த்ததாக சாட்சிகள் உண்டு. ஆவியானது அதற்கே உரிய இடவெளியில் இருப்பதாகவும், அது சாதாரணமான பௌதிகவெளியில் இருப்பதில்லை என்றும் தோன்றுவதால், அது உண்மையானதாகக் கருதப்படுவதில்லை.
மேலும், மரணத்தை நெருங்கிய அனுபவங்கள் உள்ளன; அவைகள் ஒரு இடவெளியில் நிகழ்கின்றன, அதாவது நிகழ்வதில்லை; ஒரு சுரங்கம் வழியாகச் சென்று, ஒரு பாலத்தைக் கடப்பது போல உணரப்படுகிறது; ஆனால் மீண்டும், அது பௌதிக வெளி அல்ல. மேலும், மறைஞான அனுபவங்களும் உள்ளன; இவைகளும் பௌதிக வெளியில் இல்லாமல் வேறொரு இடவெளியில் நிகழ்வதாகத் தோன்றுகிறது. ஆகவே சுருக்கமாக, மனரீதியான மற்றும் ஆன்மீகரீதியான அனுபவங்கள் பெரும்பாலும் வேறொரு விதமான இடவெளியில் நிகழ்வதாக உள்ளது.
கேள்வி என்னவென்றால் மனதிற்கும், ஆவிக்குமான இந்த இடவெளியை, இயற்பியலாளர்கள் பேசியுள்ள இந்த இடவெளிக்கு எப்படி நான் தொடர்புபடுத்துவது? இயற்பியலின் இந்த உயர்நிலை பரிமாண இடவெளியுடன், மனம் மற்றும் ஆன்மீக அனுபவத்தின் இந்த உயர்நிலை பரிமாண இடவெளியினை நான் அடையாளம் காணவேண்டும் என்பது என் முன்மொழிவு. எனது சொந்த மனரீதியான அனுபவங்கள் மட்டும்தான் எனக்குத் தெரிந்த ஒரே விஷயம். ஆகவே எனது மனரீதியான மற்றும் ஆன்மீகரீதியான அனுபவங்களை இந்த உயர்நிலை பரிமாண இடவெளியில் பொருத்துவதே நியாயமாகத் தோன்றுகிறது.
Dr.பாலச்சந்தர் சுப்ரமணியம்: சத்குரு, இப்போது பெர்னார்ட் கூறியுள்ளதைக் குறித்து நம்மிடம் ஏதேனும் கருத்து உள்ளதா?
சத்குரு: “மனம்” என்ற வார்த்தையின் நவீன புரிதலில், அதை நாம் எப்போதும் தனிப்பட்ட ஒன்றாகவே குறிக்கிறோம். ஆனால் யோக அறிவியலில், மனம் என்பதை நாம் தனித்துவமான அம்சங்களைக் கொண்டதாகப் பார்க்கிறோம். மனதின் முன்முனையில் ‘புத்தி’ என்று அழைக்கப்படும் காரணஅறிவு உள்ளது. ‘அகங்காரம்’ என்று நாம் அழைப்பது, மனதின் இரண்டாவது அம்சம். இது பலவாறாக அடையாளப்படுகிறது.
நீங்கள் ஏதோ ஒரு விஷயத்துடன் அதிகமாக அடையாளப்படும்பொழுது, அந்த அடையாளத்தோடு உங்களது காரண அறிவு அதிகம் பொறுப்பேற்பதால், அது அந்தக் குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே செயல்படும். நீங்கள் ஒரு விஞ்ஞானியாக, ஒரு ஞானியாக, ஒரு யோகியாக அல்லது அது எந்த அடையாளமாக இருந்தாலும், உங்களது மனம் அந்தக் குறிப்பிட்ட வரம்புக்குள் செயல்படும். உங்களது காரண அறிவு, உங்கள் அடையாளத்துக்கு முழுமையாகக் கட்டுப்பட்டதாக உள்ளது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்துடன் உங்களையே அடையாளப்படுத்தி இருந்தால், உங்கள் மனம் ஒருவிதமாக செயல்படுகிறது. உங்களையே நீங்கள் ஒரு நாத்திகராகப் பார்த்தால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. இந்த தேசத்துடன் நீங்கள் அடையாளப்பட்டிருந்தால், அது ஒரு வழியில் செயல்படுகிறது; நீங்கள் வேறொன்றுடன் அடையாளப்பட்டிருந்தால், அது வித்தியாசமான வழியில் செயல்படுகிறது.
மனித காரண அறிவின் எல்லா வித்தியாசமான செயல்பாட்டுக்கும், இந்த நிர்ணயிக்கப்பட்ட அடையாளம்தான் அடித்தளமாக உள்ளது. குறிப்பாக எதனுடனும் அடையாளப்படாமல், இயற்கையில் அண்டவியல் அடையாளத்தைக் (cosmic identity) காண்பதற்காக நாம் எப்போதும் முயற்சி செய்வதற்கு, முழுமையான யோக முறைகள் இருக்கின்றன. எதனுடனும் அடையாளப்படாமல் இருப்பது கடினம், ஆகையால் தெளிவான எல்லைகள் இல்லாத ஏதோவொன்றுடன் நீங்கள் அடையாளப்படுகிறீர்கள்.
எப்படி ஒருவர் தனது அடையாளத்தைக் கடந்து செல்வது? அது சாத்தியமா? 100 சதவிகித சாத்தியம் உண்டு. ஆனால் உங்களது அடையாளத்தைத் தாண்டி நீங்கள் சென்றால், உங்களுடைய தனித்தன்மையான பண்புகளை நீங்கள் இழக்கிறீர்கள். நீங்கள் அதைச் செய்ய விரும்புகிறீர்களா?
மனதின் அடுத்த அம்சம் என்னவென்றால், ஞாபகப்பதிவு என்பது எட்டு பரிமாணங்களுடன் இருக்கிறது. இதனை நாம் அடிப்படை ஞாபகம், பரிணாமவியல் ஞாபகம், மரபியல் ஞாபகம், கர்மவினை ஞாபகம், விழிப்புணர்வு மற்றும் விழிப்புணர்வற்ற ஞாபகம், வெளிப்படும் மற்றும் வெளிப்படாத ஞாபகம் என்று குறிப்பிடுகிறோம்.
உங்கள் காரண அறிவு கூர்மையாக இருப்பதை விரும்புகிறீர்களா அல்லது மழுங்கி இருப்பதையா? முக்கியமாக, உங்கள் காரண அறிவு ஒரு வெட்டும் கருவியாகத்தான் உள்ளது. ஒரு வெட்டும் கருவியைக்கொண்டு, நீங்கள் பிரித்துப் பகுத்து சோதிக்க முடியும். உங்களைப் பகுத்து சோதிப்பதன் வாயிலாக, நான் உங்களுடைய கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் போன்றவைகளைக் காணலாம், ஆனால் நான் ‘உங்களை’ கண்டுபிடிக்க முடியாது. உங்களை நான் பகுத்து ஆராய்ந்தால், உங்களின் எதையும் நான் அறிந்துகொள்ள மாட்டேன். குறுக்காக வெட்டும் அல்லது பகுத்து ஆராயும் இந்தக் கருவியை நாம் எல்லாவற்றையும் அறிவதற்குப் பயன்படுத்துகிறோம். இது, ஒரு கத்தியைக்கொண்டு உங்கள் ஆடைகளைத் தைப்பதைப் போன்றது – எல்லாமே கிழிந்துதான் போகும்.
உங்களுடைய காரண அறிவினால் மட்டும் உங்கள் வாழ்க்கையினை கையாள்வதற்கு நீங்கள் முயற்சித்தால், அது துண்டுதுண்டாகத்தான் இருக்கும். நவீன கல்வியுடன், மக்கள் முன்பு எப்போதையும்விட அதிக குழப்பமடைவதை நாம் பார்த்துள்ளோம். உங்களை வந்தடையும் எந்த தகவலாலும் நீங்கள் தாக்கத்துக்கு ஆளாகாமல் இருப்பதற்கு அதிகமான முயற்சி தேவைப்படுகிறது. நீங்கள் பெறும் தகவல் எவ்வளவு மதிப்பானது அல்லது புனிதமானதாக இருந்தாலும், அல்லது அது எங்கிருந்து வந்தாலும், அதனால் நீங்கள் தாக்கத்துக்கு ஆளாவதில்லை. அது வேதத்திலிருந்து, ஒரு பேராசிரியரிடம் இருந்து, அல்லது ஒரு குருவிடம் இருந்து வருவதாக இருந்தாலும் – அதனுடன் நீங்கள் அடையாளப்படுவதில்லை. அதேபோன்று, உங்களது பெற்றோர், சுற்றுப்புறம், பல்வேறு வழிகளிலிருந்து மிக அதிகமான தகவல் உங்களுக்குள் இருக்கிறது, ஆனால் நீங்கள் தாக்கமில்லாமல் இருங்கள்.
கத்தி எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை எந்தவிதமான கை அதைப் பிடித்திருக்கிறதோ, அது தீர்மானிக்கும் – அது காப்பாற்றுமா அல்லது யாருடைய உயிரையாவது எடுக்குமா? அது கத்தியைச் சார்ந்ததல்ல, அதைப் பிடித்திருக்கும் கையைச் சார்ந்தது.
தவிரவும், இந்தக் கையானது ஞாபகக்கிடங்குடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஞாபகக்கிடங்கு ஒரு எல்லைக்கு உட்பட்ட அடையாளத்தில் இருந்தால், அது எல்லா ஞாபகத்திறன்களையும் ஒரு எல்லைக்கு உட்பட்ட வழியிலேயே பயன்படுத்தும். முக்கியமாக, காரணஅறிவானது சுய பாதுகாத்தலின் கருவியாக உள்ளது. நீங்கள் வாழ்வதற்கு உடல் நிலையில், உணர்ச்சி நிலையில், சமூக நிலையில், மற்றும் பல்வேறு நிலைகளில் பாதுகாத்தல் தேவைப்படுகிறது. தன்னைப் பாதுகாப்பது என்றால் பிழைத்திருத்தல். பிழைத்திருத்தல் மிக முக்கியமானது, ஆனால் அதேநேரத்தில், அது எப்போதுமே உங்களை நிறைவு செய்வதும் கிடையாது.
நீங்கள் இங்கு வேறு ஏதாவது உயிரினமாக வந்திருந்தால், வயிறு நிரம்பிவிட்டால், உங்கள் வாழ்க்கை நிறைவடைந்துவிடுகிறது. இங்கு ஒரு மனிதராக வந்துவிட்டீர்கள் என்றால், வயிறு காலியாக இருந்தால் அது ஒன்றுதான் பிரச்சனை; ஆனால் வயிறு நிரம்பினால், நூறு பிரச்சனைகள். இதுதான் மனிதரின் இயல்பாக உள்ளது. உங்களது பிழைப்பு கவனிக்கப்பட்டால்தான், மனிதம் என்று நீங்கள் அழைப்பது தொடங்குகிறது. அதுவரை, நீங்கள் மற்றொரு உயிரியல் படைப்பாகத்தான் இருக்கிறீர்கள். பிழைப்பு வெற்றிகரமாக இருக்கும்போது மட்டும்தான், பிழைப்பின் உந்துதல் குறைகிறது, விழிப்புணர்வான ஒரு மனிதராக இருப்பதற்கான சாத்தியம் உங்களுக்குள் எழுகிறது.
உங்கள் அடையாளத்தைக் குறைத்துக்கொள்வது அல்லது உங்கள் கற்பனையில், கூடுமானவரை அதை எல்லையற்றதாகச் செய்துகொள்வது மிக முக்கியமானது. அப்போதுதான், பல்வேறு முனைகளிலிருந்து நீங்கள் பெறும் அறிவு, ஞாபகம் அல்லது தகவல் அனைத்தும், உங்களுடனோ அல்லது வேறு எதனுடனோ முரண்படாத விதத்தில் செயல்படுகிறது. தற்போது, நீங்கள் சுமக்கும் தகவல் உங்களை ஆயிரம் வழிகளில் துன்புறுத்துகிறது, ஏனென்றால் உங்களிடம் மிகக் கூர்மையான ஒரு கத்தி இருந்தால், உங்களுக்கு மிக நிலையான, நடுக்கமில்லாத ஒரு கை இருக்கவேண்டும்.
மனதின் மூன்றாவது பகுதி, ஞாபகத்தின் கிடங்காக இருக்கும் ‘மனஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மனதின் நான்காவது பாகமாக இருக்கும் ‘சித்தா’ எனப்படுவது மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆனால், வாழ்க்கையை காரண அறிவின் வழியில் அணுகும் மக்களால் பெரிதும் கண்டுணரப்படாமல் இருக்கிறது. சித்தா என்பது ஞாபகத்திரளினால் களங்கப்படாமல் இருக்கும் ஒரு புத்திசாலித்தனம். அங்கே ஞாபகம் இல்லை, ஆனால் அது ஒரு புத்திசாலித்தனம். அதற்கு நீங்கள் சிறிதளவு ஞாபகத்தை அளித்தால் மட்டும், அந்த ஞாபகத்தின் நோக்கம் மற்றும் திசையைப்பொறுத்து அது செயல்படும். இல்லையென்றால் அது செயல்படுவதில்லை, ஆனால் அதுதான் எல்லாவற்றுக்கும் அடித்தளமாக இருக்கிறது.
தற்போது, விழிப்புணர்வு என்ற வார்த்தை எல்லா இடத்திலும் பயன்படுத்தப்படுகிறது. உணர்வுடன் இருத்தல் அல்லது உணர்விழந்து இருத்தல் ஆகியவை இரண்டு வெவ்வேறு நிலைகள், ஆனால் விழிப்புணர்வு என்பது இதைப்பற்றி அல்ல. நாம் முக்கியமாக மனரீதியான அறிதலை, விழிப்புணர்வு என்று தவறாகப் புரிந்துகொள்கிறோம். அதை வேறு பக்கத்திலிருந்து நாம் பார்க்கலாம். அங்கே பிராணன், பிரக்ஞை, மற்றும் சித்தா இருக்கிறது. பிரக்ஞை என்பது உங்களது விழிப்பு நிலை. இப்போது நீங்கள் பிரக்ஞையில் இருக்கிறீர்கள்; நீங்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள், உறக்கத்தில் இல்லை.
பிராணன் என்பது உங்களுக்குள் இருக்கும் ஒரு புத்திசாலித்தனம், அது உங்கள் இதயம், ஈரல், மற்றும் உடலின் ஒவ்வொரு உறுப்பும் செயல்படுவதற்கு அனுமதிக்கிறது. இதையெல்லாம் செய்யும் ஒரு புத்திசாலித்தனம் உங்களுக்குள் இருந்துகொண்டிருக்கிறது. அதை ஒருபோதும் முழுமையாக உங்களால் புரிந்து, உணரமுடியாது, ஏனென்றால் உங்களது காரண அறிவானது நீங்கள் அதற்குக் கொடுத்துள்ள எல்லைக்கு உட்பட்ட தகவலின் வழியாகச் செயல்படுகிறது.
பிரபஞ்சம் எல்லையில்லாதது என்று நவீன பௌதிகவியலாளர்கள்கூட கூறுகின்றனர். எல்லையில்லாதது என்ன என்பதை காரணஅறிவுரீதியாக வரையறுக்க முயற்சிப்பதனால், நீண்ட நெடுங்காலமாக நாம் தவறான திசையில் பார்த்துக்கொண்டுள்ளோம். இறுதியாக, அறிவியல் சரியான திசையைச் சுட்டிக்காட்டுவது அதிர்ஷ்டவசமானது. அந்தத் திசையில் பார்ப்பதற்கான நேரம் வந்துவிட்டது. அது முற்றிலும் வேறொரு பணி.