நிலம் பாண்டே: நமஸ்தே. என் பெயர் நிலம் ப்ரதான் பாண்டே. என் பெரும்பகுதி வாழ்வையும் நான் காத்மண்டூவில் கழித்துள்ளேன். நான் சத்குருவை முதல்முறையாக ஒரு யூட்யூப் வீடியோவில் கண்டேன். அவர் கூறியதைக் கேட்ட கணமே, இப்படிப்பட்ட ஒரு குருவைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். நான் பல புத்தமத, இந்துமத ஆசான்கள் மற்றும் குருமார்களிடம் சென்றிருக்கிறேன். ஆனால், நான் வாழ்க்கையில் என்னதான் செய்தாலும், “இல்லை, அது அல்ல இது”, என்றே உணர்ந்தேன்.
நான் வேறொன்றைத் தேடிக்கொண்டிருந்தேன். அது என்னவென்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் அது எங்கோ இருந்தது, மற்றும் அது அழகான, முழுமையான ஒன்றாக இருந்தது. ஒரு தோழியின் பரிந்துரையின் பேரில், ஜனவரி 2015ல் ஈஷா யோக மையத்தில் நடந்த இன்னர் இஞ்ஜினியரிங் ரெட்ரீட் வகுப்பிற்கு பதிவு செய்தேன்.
என்ன எதிர்பார்ப்பது என்பதுகூடத் தெரியாமல், எனது இளைய மகளுடன், முதல்முறையாக ஆசிரமத்திற்கு சென்றேன். ஆனால், இன்னர் இஞ்ஜினியரிங் வகுப்பை நிறைவு செய்தபோது, நான் உயிர்த்தெழுந்ததாக உணர்ந்தேன். எனக்குள் ஏதோவொன்று தீப்பற்றிக்கொண்டது. வாழ்வைப் பார்க்கும் முற்றிலும் புதியதொரு கண்ணோட்டம் எனக்குள் திறந்துகொண்டது.
நான் ஒரு லைஃப் ஸ்டைல் ஸ்டூடியோ நடத்துகிறேன். அதற்கு அதிகமான கற்பனைத்திறனும், அர்ப்பணிப்பான பணியும் தேவைப்படுகிறது. அனைத்தும் சுமூகமாக நிகழ்வதற்கு, நான் இரவும் பகலும் பேரார்வத்துடன் உழைத்தேன், மற்றும் என் சக திறனாளிகளின் நலனையும் நான் நன்றாக கவனித்துக்கொண்டேன். வாழ்வில் அதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது: அழகு மிளிரும் கலைத்திறன், மற்றும் மகிழ்ச்சியும், ஊக்கமுமான ஒரு சககுழுவைக் காட்டிலும் வேறென்ன வேண்டும்?
சத்குருவின் பல உரைகளைக் கேட்டு, மேலும் இன்னர் இஞ்ஜினியரிங் ரெட்ரீட் வகுப்பில் பங்கேற்றதற்குப் பிறகு, நான் நிம்மதியாக உணர்ந்தேன். எனக்குள்ளே ஒருவிதமான நிச்சலனம் காணப்பட்டது. எப்போதும் அந்த நிச்சலனம் இருந்திருந்தது, ஆனால் என் பொறுப்புகளின் சுமையால் நான் அதை கவனித்ததில்லை.
இன்னர் இஞ்ஜினியரிங் ரெட்ரீட் வகுப்பிற்கு பிறகு, எங்களுக்கு சத்குருவின் தரிசனம் கிடைத்தது. என் பாதை திறந்ததில், எனது இதயத்தில் பொங்கிய நன்றியுணர்ச்சி அளித்த உத்வேகத்தில், நான் அவர் முன்பு பேசுவதற்கு எழுந்து நின்றேன். நேபாளத்தின் மக்களுக்கு சத்குரு தேவைப்படுவதை வெளிப்படுத்துவதற்கு விரும்பினேன். மேலும், நேபாளத்தில் ஒரு ஈஷா யோக மையம் அமைப்பது சாத்தியம்தானா என்றும் கேட்டேன். நான் ஒரு சாதாரண பிரஜ்ஜையாக இருந்தாலும், என் விருப்பத்துக்கு உறுதுணை செய்யும் துணிவும், திடமான நம்பிக்கையும் இருந்ததை அவரிடம் என் பேச்சின் மூலம் வெளிப்படுத்தினேன்.
சத்குரு தனக்கே உரித்தான சிரிப்பை உதிர்த்தவராக, என் துணிவை அவர் சந்தேகிக்கவில்லை என்றும், ஆகஸ்டில் நேபாளத்துக்கு அவர் வருவதாகவும், அப்போது என்ன செய்யக்கூடும் என்பதை ஆராய்ந்து பார்ப்பதாகவும் கூறினார். ஆகஸ்டில், நேபாளத்தில் சத்குருவுடன் எங்களுக்கு ஒரு சத்சங்கம் இருந்தது. அவர் நேபாளத்தை எப்படி நேசிக்கிறார் என்பதைப் பற்றியும், ஒவ்வொரு வருடமும் கைலாஷ் புனித யாத்திரைக்காக நேபாளத்துக்கு வருகையளிப்பது குறித்தும் பேசினார்.
நேபாளத்தில் இன்னர் இஞ்ஜினியரிங் நிகழ்வதை உறுதி செய்யும்பொருட்டு, அதற்கான தேவை என்னவாக இருந்தாலும் நான் நிறைவேற்றுவேன் என்று எனக்கு நானே சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன். நான் நேர்மையான, அர்ப்பணிப்பான தன்னார்வத் தொண்டினைத் தொடங்கினேன்.
எனக்கு அப்போது 60 வயது பூர்த்தியாகி இருந்தது. ஷூன்யாவில் தொடங்கி, இறுதியாக 2017ல் சம்யமாவில் பங்கேற்பது வரைக்கும், ஆசிரமத்தில் வழங்கப்பட்ட அனைத்து வெவ்வேறு வகுப்புகளையும் முடித்தேன். பிறகு, மாயம் செய்யும் கைலாய யாத்திரையையும் 2018ல் மேற்கொண்டேன்.
2016 ம் வருடம், ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களில் கலந்துகொண்டபிறகு, நான் லிங்கபைரவி குடியை என் இல்லத்தில் இருத்தினேன். அனைவரும் அவளைப் பார்க்கவும், அவளது இருப்பை உணரவும் வேண்டி, எனது வீட்டின் பிரதான வாயிலில் ஒரு மேடையில் அவளை அமர்த்தினேன். அதற்குப்பிறகு, என் வாழ்க்கையில் பல விஷயங்களும் மாறத் துவங்கின. தேவி, எனக்கான ஒரு தோழியானாள்.
நான் எப்போதும், வழக்கமாக மற்றவர்களை கவனித்துக்கொள்கிறேன், ஆனால் எனக்கே எனக்கென்றும் ஒரு தோழி, நான் தொடர்பு கொள்வதற்கு ஒரு பாதுகாவலர், ஒரு காப்பாளர் வேண்டுமென்று, உள்ளுக்குள் மௌனமாக விரும்பினேன். தேவியுடன் நான் மெல்லமெல்ல வளர்த்துக்கொண்ட உறவு அதுதான். “என் கைகளில் எனக்குப் போதுமானது உள்ளது; மற்றவற்றை நீயே கவனித்துக்கொள்.” எனக்கு இப்போது கிடைத்த எல்லாவற்றுக்கும், தேவி எங்கள் வாழ்க்கைக்குள் வந்துவிட்டதுதான் காரணம் என்பதை நான் உணர்ந்தேன்.
அதற்குப்பிறகு, நான் உள்ளுக்குள் போராடுவதை நிறுத்திக்கொண்டேன். அவள் எனக்களித்த மிகப்பெரிய பரிசு இதுதான் என்று எண்ணுகிறேன். வெளியில் போராட்டம் இருந்தாலும், உள்ளத்தில் மிகவும் அமைதியாக, சமாதானமாக இருந்தேன். இந்த சாத்தியத்தை என்னைச்சுற்றிலும் உள்ள அனைவரிடமும் பகிர்ந்துகொள்வது என் இதயத்தின் தீவிரமான விருப்பமாக இருந்தது. அவ்வளவு அற்புதமான ஒன்றை யாரும் எப்படித் தவறவிடக்கூடும்?
நாளடைவில், தேவியை மற்றவர்களின் வாழ்க்கைக்குள் கொண்டுவரும் எனது ஆசை கட்டுக்கடங்காமல் போனது. 2017ல், சத்குருவின் நேபாள வருகையின் முடிவில், விமான நிலையத்தில் வழியனுப்பும்போது, அவரைப் பார்த்து நான் கேட்டேன், “சத்குரு, எங்களுக்கு நேபாளத்தில் ஒரு தேவி கோவில் கிடைக்குமா?” சத்குரு என்னை ஒரு பார்வை பார்த்தபடி, நகர்ந்துவிட்டார்.
அடுத்த முறை சத்குரு நேபாளத்துக்கு வருகை தந்தபோது, நான் மீண்டும் அவரைக் கேட்டேன், “சத்குரு, தயவுசெய்து எங்களுக்கு நேபாளத்தில் ஒரு தேவி கோவில் கிடைக்குமா? அடுத்த இரண்டு வருடங்களில், என் வாழ்நாளிலேயே நான் அதைக் காண விரும்புகிறேன்.” என்னை அவர் வெறுமனே பார்த்துவிட்டு, பிறகு கூறினார், “இரண்டு வருடங்களில் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என்று எண்ணுகிறீர்களா?” மீண்டும் இந்தமுறையும், மேற்கொண்டு எந்த பதிலும் அளிக்காமல் அவர் விலகிச் சென்றுவிட்டார்.
எந்த ஒன்றும் நிகழவேண்டும் என்று இருந்தால், அது நிகழும் என்பதை என் இதயத்தின் ஆழத்தில், நான் அறிந்தேன். தேவி கோவில் நிர்மாணத்துக்குப் பின்புலத்தில் இருக்கும், தேவையான உபகரணங்கள் மற்றும் செயல்பாடுகளை நான் அப்போது புரிந்திருக்கவில்லை. இப்போது தேவி இங்கு வீற்றிருக்கும் நிலையில், சத்குரு அன்றைக்கு எனக்கு பதிலளிப்பதற்கு ஏன் நேரம் எடுத்துக்கொண்டார் என்பதை இப்போது உணர்கிறேன்.
2021 செப்டம்பரில் சத்குரு நேபாளம் வந்தபோது, நான் எனது பயிற்சிகளில் ஆழ்ந்திருந்தேன். சத்குரு எனக்குள் நீங்காமல் இருந்ததைப்போல், தேவியும் என் வாழ்வில் பிரிக்கமுடியாத அங்கமாக இருந்தாள். சத்குருவை நேரில் சந்திக்கும் அவசியம்கூட இல்லாத ஒரு மையவெளியில் நான் இருந்தேன். அவர் எனக்குள் இருந்ததை நான் உணர்ந்ததுடன், அவர் விரும்பினால், என்னை அருகில் அழைப்பார் என்றும் அறிந்திருந்தேன்.
சத்குருவின் நேபாள வருகையின் கடைசி நாளன்று, மா கம்பீரி என்னை அழைத்து, “சத்குரு உங்களைக் காண விரும்புகிறார்,” என்றார். நான் உடனடியாக அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விரைந்தேன். எங்களது உரையாடலின் போக்கில், நான் முன்பின் யோசிக்காமல் சட்டென்று, “சத்குரு, தேவி கோவிலுக்காக நான் என் வீட்டை வழங்கலாமா?” என்று கேட்டேன். அவர் என்னை ஊடுறுவிப் பார்த்தவாறு கேட்டார், “எவ்வளவு காலமாக அங்கே வாழ்ந்து வருகிறீர்கள்?” நான், “சுமார் 30 வருடங்களாக, சத்குரு. நான் இந்த வீட்டை ஒவ்வொரு செங்கல்லாகப் பார்த்துப்பார்த்து கட்டினேன். இப்போது அதை தேவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன்” என்றேன்.
சத்குரு என்னிடம், “உங்கள் வீட்டின் மீது உங்களுக்கு பற்றில்லையா?” என்று வினவினார். நான் கூறினேன், “உண்மையில் இல்லை, சத்குரு. நான் எனது மரங்கள், செடிகளுடன்தான் அதிக பற்றுக் கொண்டுள்ளேன், ஏனென்றால் ஒவ்வொன்றுக்கும் கூறுவதற்கு என்னிடம் ஒரு கதை உள்ளது.”
சத்குரு கேட்டார், “ஏன் உங்கள் வீட்டை தேவிக்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்கள்?” நான் கூறினேன், “எனது முன்னுரிமை தேவிக்குத்தான் என்றாலும், நீங்கள் என்ன கூறினாலும் நான் செய்வேன்.” பிறகு அவர் என்னைப் பார்த்து, “ஆனால் நீங்கள் எங்கே வசிப்பீர்கள்?” என்று கேட்டார். என் சகோதரி மகள், “அவள் மாடியில் வசிப்பாள், சத்குரு”, என்று ஆலோசனை கூறினாள். நான் கூறினேன், “நான் தேவியின் சிரசு மீது வாழ்வதில் எனக்கு உடன்பாடில்லை. நான் எனக்கான ஒரு வீட்டைக் கட்டும்வரை, நான் ஒரு வாடகைக் குடியிருப்பில் தங்கிக்கொள்ள முடியும்; ஆனால், சத்குரு, நான் என் வீட்டை வழங்க விரும்புகிறேன்.”
சத்குரு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். பிறகு தினேஷ் அண்ணாவை அழைத்து, என் வீட்டுக்கு வந்து, புகைப்படங்கள் எடுத்து வருமாறு கேட்டுக்கொண்டார். அண்ணாவும் பல வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்தார். வீட்டின் தன்மையை அவர் உணர்ந்தபிறகு, மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். என்னுடைய வீடு எப்போதும் அன்பு, கருணை, அர்ப்பணிப்பு, மற்றும் அனைவருக்குமான பிரார்த்தனைகளின் இடமாக இருந்துவந்துள்ளது. அது கட்டமைக்கப்படும்போதே, நிறைய மக்களுடன் என் வீட்டை பகிர்ந்துகொள்வதையே எப்போதும் நான் விரும்பினேன். உண்மையில் அந்த உணர்வைத்தான் அண்ணா உள்வாங்கியிருக்க வேண்டும்.
1990ல், என் வீட்டை நான் கட்டத் துவங்கியிருந்தபோதே, அது மக்கள் வந்து, தங்களின் சுமையை இறக்கிவைக்கக்கூடிய ஒரு இடமாக, ஒரு சிறிய புகழிடமாக, அன்பு செலுத்தப்படுவதை மக்கள் உணரக்கூடிய ஒரு இடமாக இருக்கவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
இந்தத் தீர்மானம் வருடந்தோறும் என்னை வழிநடத்திச் சென்றது. எங்களிடம் இருந்த சிறிய பலிபீடத்துக்கு பிரார்த்தனைகளும், அர்ப்பணங்களும் செய்யப்படுவதை நான் தினசரி வழக்கமாக்கிக்கொண்டேன். வருடங்களின் ஓட்டத்தில், என் வீட்டில் பிரார்த்தனைகளும், வழிபாட்டு வெளிகளும் பன்மடங்காகப் பெருகின. 2017ல் நான் சத்குரு சந்நிதியைக் கொண்டுவந்தேன். பிறகு, எனக்கென்று ஒரு தியான அறையை அமைத்துக்கொண்டேன். என் குழந்தைகள் அனைவரும் வாழ்க்கையை மதிப்புடன் பார்ப்பதற்கு கற்றுக்கொடுக்கப்பட்டதுடன், தினசரி தியானிக்கவும், யோகப் பயிற்சிகள் செய்யவும் ஊக்குவிக்கப்பட்டனர். இந்தக் காலக்கட்டத்துக்குள், என் மீது நம்பிக்கை கொண்டிருந்த அனைவரும் இன்னர் இஞ்ஜினியரிங் வகுப்பை முடித்துவிட்டனர்.
பெரும்பாலான வீடுகளைக்காட்டிலும், அதிக தெய்வீகத்தன்மையான ஒரு சூழலை நான் வீட்டில் கட்டமைத்திருந்தேன். இப்போது விஷயங்கள் எப்படி கச்சிதமாக நிகழ்கின்றன என்று நான் பார்க்கும்போது, இது எப்போதுமே தேவியின் திருத்தலமாகத்தான் இருந்துள்ளது என்பதே இப்போதுதான் எனக்கு விளங்குகிறது. அவளது வருகைக்காக காத்திருந்த நான் அந்த வீட்டிற்கு ஒரு பராமரிப்பாளராக மட்டுமே இருந்திருக்கிறேன்.
எனது இந்த முடிவால், குடும்பத்துக்குள் எந்தக் குழப்பமும் உருவாகவில்லை என்று கூறமுடியாது. என் மகளையும் அவளது எட்டு செல்ல நாய்களையும், மற்றுமுள்ள என் குழந்தைகளையும் வேறு இடத்துக்கு மாற்றுவது அவ்வளவு எளிதாக இல்லை – அவர்கள் பெரிய வளாகம் மற்றும் தோட்டத்தின் சௌகரியங்களுக்கு மிகவும் பழக்கப்பட்டுவிட்டனர். என் மகள் என்னிடம், “இப்போது நாம் எங்கு செல்வது”, என்று கேட்டாள்.
அவளது செல்ல நாய்களுக்குத் தேவையான இடத்துக்கு முன்னுரிமை அளித்து, எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்க முடிவெடுத்து, தேடத் துவங்கினோம். இறுதியாக நாங்கள் ஒரு வீட்டைக் கண்டுபிடித்தோம். அதனை தேவியிடமிருந்து கிடைத்த பரிசாகவே நான் நம்புகிறேன். எங்கள் வீட்டுக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இந்த வாடகை வீட்டில் முழுமையாக உள்ளது. சூரிய வெளிச்சம், நாய்களுக்கான விசாலமான இடம், தெளிவான நீலநிற வானம், மற்றும் கருணைமிகுந்த ஒரு வீட்டு உரிமையாளர் என்று அனைத்தும் நிறைவாக உள்ளது. அறைகளும், இடமும் சிறியதாக இருந்தாலும், இப்போது எங்களுக்கு இது போதுமானதாக உள்ளது. நாங்கள் எங்களுடைய புதிய வீட்டைக் கட்டும்வரை (என் மகளிடம் வாக்களித்துள்ளேன்) எங்களது தேவைகளுக்கு போதுமானதாக உள்ளது.
எனது படைப்பாக்கப் பணியினைத் தொடர்வதற்கு தேவையான இடத்தையும் நான் தேடிக் கண்டுபிடித்துக்கொண்டேன். என்னுடைய கலைப் பயணத்தைத் தொடருமாறு சத்குரு என்னை ஊக்கப்படுத்தியதில், அந்த இடம் சிறியதாக இருந்தாலும், எனது பணியைத் தொடர்வதற்கு போதுமானதாக உள்ளது.
ஒருபுறம், மக்கள் ஆன்மீகத்தின் மீது பெருமதிப்பு கொண்டுள்ளனர். மறுபுறம், வெளிப்புறத் தாக்கங்கள் மிக அதிகமாக உள்ளன. இளைய தலைமுறையினர் ஒரு குழம்பிய நிலையில் உள்ளனர். இதற்குப் பெரிதும் சமூக ஊடகங்கள் காரணமாக உள்ளன. அவர்கள் மேற்கத்திய நாடுகளை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். மற்றவர்களைவிட சிறப்பாக செயல்படும் ஆர்வத்துடன் நாம் வளர்ந்து வந்த மதிப்பீடுகள் மக்களிடத்தில் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
தேவி தன் அருளினால், ஏன் மக்களுக்கு வழிகாட்டி, நிலைநிறுத்தக்கூடாது? என்றே எனக்குள் எண்ணம் எழுந்தது. ஒரு மிகப்பெரிய நிதர்சனத்தை அவர்களுக்கு வழங்குவதற்கு, அவர்கள் அரவணைத்துக் கொள்வதற்கான மிக எளிதான, ஒரு சிறிய படி.
ஏழு வருட தன்னார்வத்தொண்டுக்குப் பிறகு, நான் ஒன்றை உணர்ந்தேன். எல்லா ஈஷா தியான அன்பர்களும் இங்கே ஏதாவது நிகழ்வதை உண்மையாகவே விரும்பியிருந்தாலும், எங்கிருந்து துவங்குவது என்று ஒருவரும் அறிந்திருக்கவில்லை.
2021 டிசம்பரில், தேவி கோவிலுக்கான எனது முதல் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கும் விதமாக, ஆறு வருடங்களுக்குப் பிறகு, சத்குருவுடன் எங்களுக்கு ஒரு கூகுள் சந்திப்பு நிகழ்ந்தது. இறுதியாக, நேபாளத்தில் நாம் ஒரு தேவி கோவிலை உருவாக்கலாம் என்று சத்குரு எங்களுக்கு பச்சைக்கொடி காட்டினார். மார்ச் 7, 2023 அன்று பிரதிஷ்டை தினமாக முடிவு செய்யப்பட்டது. இந்தியாவிற்கு வெளியில் இதுதான் முதல்முதலான லிங்கபைரவி கோவிலாக இருக்கப்போகிறது. நேபாள கலைத்திறனின் பிரதிநிதித்துவமாக, கோவில் நேபாளிகளால் கட்டப்படுவது உட்பட அனைத்தும் சத்குருவின் வழிகாட்டுதல்களாக இருந்தது.
கட்டுமானத்தின்போது, ஆசிரமத்திலிருந்து வந்திருந்த ஒரு நிபுணர்கள் குழுவுடன் நாங்கள் பணிபுரிந்தோம். இந்த வியத்தற்குரிய திருத்தலத்தை உருவாக்க உதவி செய்த அனைத்து நிபுணர்களுக்கும், அர்ப்பணிப்பான நேபாளக் குழுவினருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள்.
நான் தினமும் கோவிலில் இருப்பதற்கு, குறிப்பாக மாலை அபிஷேகத்தில் பங்கேற்பதற்கு முயற்சிக்கிறேன். ஒவ்வொரு முறை நான் வரும்போதும், எவ்வளவு நபர்கள் அங்கே இருக்கின்றனர் என்று பார்ப்பதற்காக, வெளியிலிருக்கும் காலணிகளை, ஒரு குழந்தைபோன்று, விரல்விட்டு எண்ணுகிறேன். மக்களுடன் கோவில் அதிரும்போது, நான் நிறைவின் பேருணர்வை அனுபவிக்கிறேன்.
பெரும்பான்மையான பக்தர்களும் கோவிலில் நீண்ட நேரம் அமரும் அளவுக்கு அதிக பரவசத்துக்கு ஆட்படுகின்றனர். இந்த இடம் ஒருவித தீவிரமான, உணரக்கூடிய தியானத்தன்மையின் சக்தி கொண்டிருப்பதாக பலரும் கூறுகின்றனர். நகரத்தின் குழப்பமான இரைச்சல்களில் இருந்து கோவிலுக்குள் அவர்கள் நடந்து வருகையில், அது ஒரு பாலைவனச் சோலை போல் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசிர்வாதமாக நான் உணர்கிறேன். எல்லா வயதினரும், வாழ்வின் அனைத்து தரப்பு மக்களும், மற்றும் உலகெங்கிலும் இருந்து மக்கள் கோவிலுக்கு வருகை தருவதை நான் காண்கிறேன்.
தேவியின் அருளில் நனைவதை எங்களுக்கு சாத்தியமாக்கியதற்கும், கோவிலைப் பராமரிக்கவும், வழிநடத்தவும் எங்களுக்கு கிடைக்கும் எல்லா ஆதரவுக்கும், நான் உண்மையிலேயே சத்குருவுக்கு நன்றியுடன் இருக்கிறேன். மேலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை கோவில் பணிகளுக்காக நாங்கள் பயிற்றுவிக்க வேண்டியுள்ளது, எங்களுக்கு அதிகமான தன்னார்வலர்கள் தேவைப்படுகின்றனர், இந்தத் திருத்தலத்தைப் பற்றி அதிக மக்கள் அறிந்துகொள்ளத் தேவையுள்ளது. இது தலைமுறை தலைமுறையாக நடத்தப்படுவதற்காக, எங்களுக்கு அதிகமான தேவி சேவகர்களும், உள்ளூர் பைராகிணி மாக்களும், அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகின்றனர்.
இன்னமும் செய்யப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன...
இந்த அர்ப்பணம், உலகெங்கிலும் உள்ள பிற தியான அன்பர்களை ஊக்குவித்து தங்களின் பங்களிப்பை வழங்கிட முன்வரச் செய்யும் என்ற நம்பிக்கை என் இதயத்தில் ஆழமாக உள்ளது. மேலும், இயன்றவரை உலகம் முழுவதும் பல இடங்களை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்ற சத்குருவின் நோக்கத்திற்கு ஆதரவாக, நம்மால் முடிந்ததை பங்களிக்க என்னுடன் இணையுங்கள்.