கடந்த சில வாரங்களின் முக்கிய நிகழ்வுகள் பற்றி...
ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சைன்சஸ் வளாகத்தில் நிகழ்ந்த இந்த தரிசனத்தில், சத்குரு மனதின் ஆற்றலைப் பற்றிப் பேசியதோடு, அதை நாம் பயன்படுத்தும் விதத்தைப் பொறுத்து அது அதிசயங்களையும் நிகழ்த்தமுடியும் அல்லது துயரத்திலும் ஆழ்த்தமுடியும் என்பதை விளக்கினார். மனதை பல லட்சம் அறைகள் கொண்ட ஒரு மாளிகையுடன் ஒப்பிட்ட சத்குரு, நம் குறுகிய வாழ்நாட்களால் அதன் முழு ஆற்றலையும் அறிந்துணர முடியாது என்றார். எனவே மனதின் ஆற்றலை பயன்படுத்த மட்டுமே செய்வதற்கு பதிலாக மனதின் அடிப்படைகளைப் புரிந்துகொள்வதை அறிவுறுத்தினார்.
புத்திசாலித்தனம் என்பது மூளையில் மட்டும் இருப்பதல்ல என்பதை கோடிட்டுக்காட்டிய சத்குரு, மனித உடல் முழுமையும் அதிக நுண்ணறிவைக் கொண்டுள்ளது என்று எடுத்துரைத்தார். உலகளவில் 300 கோடி மக்களிடத்தில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், 2024ல் தொடங்கப்படவுள்ள “Miracle of Mind” நிகழ்ச்சி குறித்து அவர் அறிவித்தார். ஆழ்ந்த நுண்ணறிவைத் தட்டியெழுப்பும் விதமாக, தினசரி வழிகாட்டலுடன் கூடிய 15 நிமிட தியானப் பயிற்சிகள் இந்நிகழ்ச்சியில் இடம்பெறும்.
குறிப்பாக அமெரிக்காவில், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகள் மற்றும் குடல் நுண்ணுயிரிகள் குறைவது போன்ற சில காரணிகளால், பெரிய அளவிலான மனநல பிரச்சனைகள் வரவிருப்பதைக்கூறி சத்குரு எச்சரித்தார். விழிப்புணர்வு மற்றும் மனதைப் பற்றிய விரிவான புரிதல்கள் மூலம், மனநலனை மீட்பதற்கான வாய்ப்பு இருப்பதை அவர் வலியுறுத்தினார். மேலும் அதிகரித்துவரும் மனநோய் விகிதங்களுக்கு காரணங்களாக, மக்கள் ஒருவரையொருவர் சாராமல் தனித்திருக்கும் மனநிலை அதிகரித்துவருவது, நுகர்வோராக சந்தைக்கு இரையாவது ஆகியவற்றை அவர் முன்வைத்தார்.
சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட, Sitcom Friends படத்தில் நடித்ததற்காக மிகவும் பிரபலமான நடிகர் மேத்யூ பெர்ரியின் சோகமான வாழ்க்கையை மேற்கோள் காட்டி, தொழில் வெற்றிக்கும் தனிமை மற்றும் விரக்திக்கும் இடையே உள்ள முழுமையான வேறுபாட்டை சத்குரு எடுத்துரைத்தார். ஒரு உயிரினமாக இருந்து விழிப்புணர்வுள்ள மனிதனாக மாறுவதன் முக்கியத்துவத்தையும், தனிமையாக உணராமல் மற்றும் வெளிப்புற தேவைகளைச் சார்ந்திராமல் தனித்து இருக்கக் கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு கேள்வி-பதில் நிகழ்வின்போது, மேலைநாட்டு சமூகங்கள் உள்நிலை மாற்றத்திற்கான கருவிகளை ஏற்றுக்கொள்வதில் எதிர்கொள்ளும் சிரமங்கள், ஒருவரின் கட்டமைப்பை மாற்றுவதில் யோகாவைப் பயன்படுத்துவது மற்றும் சரியான முடிவுகளை எடுப்பதற்காக தனிநபர்கள் காலத்துடன் ஒத்திசைவாகச் செல்லும் வழிமுறைகள் பற்றிய கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார்.
இந்தியாவின் பரபரப்பான உலகக் கோப்பை 2023 பயணம், நவம்பர் 19 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அதன் உச்சகட்டத்தை அடைந்தது. ஆட்டம் துவங்கியது முதலே அங்கு கூடியிருந்த 92,453 கிரிக்கெட் ஆர்வலர்களின் துடிப்புமிக்க எழுச்சியால் போட்டி உத்வேகம் கண்டது. போட்டி தொடங்கும் முன்பாக, வண்ணங்களின் ஒளிகளாலும் உற்சாகமூட்டும் இன்னிசைகளாலும் ஸ்டேடியம் நிரம்பியபோது, ஒரு எதிர்பாராத காட்சி பலரின் கண்களைக் கவர்ந்தது: சத்குருவும் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சிக்கு முன் சத்குரு வெளியிட்டிருந்த ஒரு வீடியோ செய்தியில், “விளையாட்டை எப்படி முழுமையாக விளையாடுவது என்பதுதான் நமது அக்கறை. பந்தை மட்டும் அடியுங்கள். விக்கெட்டுகளை வீழ்த்துங்கள்; அவ்வளவுதான்" என்று இந்திய அணியிடம் கூறினார்.
வானத்தில் ஜெட் விமானங்களின் வண்ணமிகு மாயாஜாலம் மற்றும் ரவி சாஸ்திரி அவர்களின் வர்ணனையால் தூண்டப்பட்ட பரபரப்புக்கு மத்தியில், விளையாட்டின் உற்சாகமும் அதன் உச்சகட்ட எதிர்பார்ப்பும் மற்றும் இந்திய அணிக்கான பிரமாதமான வாய்ப்பும் தெளிவாகத் தெரிந்தன. அந்த நாளின் மணித்துளிகள் கடக்கையில் சிலிர்ப்பான ஆரவாரங்கள் மெல்ல மெல்ல அமைதி அலையாக மாறின, கிரிக்கெட் போர்க்களத்தின் எதிர்பாராத ஏற்ற இறக்கங்களால், சோகமான ஒரு ஓவியமாக மைதானம் மாறியது.
ஈஷா யோக மையத்தில் இந்த ஆண்டு சாதனபாதாவால் நடத்தப்பட்ட சேவா மேளா, முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிக வண்ணத்தையும் உயிரோட்டத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது. 80க்கும் மேற்பட்ட துறைகள் தங்கள் கலைப்படைப்புகள், வடிவமைப்புகள், கைவினைப்பொருட்கள், விளையாட்டுகள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் ஆகியவற்றின் மூலம் “சத்குருவின் பார்வைக்கு உங்கள் பங்களிப்பு” என்ற தலைப்பில் தனித்துவமான தங்களது படைப்புகளைக் காட்சிப்படுத்தினர்.
இந்த உற்சாகமான கொண்டாட்டத்தில் பங்கேற்பாளர்களின் உற்சாகமும், சேவாவில் அவர்களின் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டன. ஒரு கலகலப்பான இசை நிகழ்ச்சி மற்றும் நடனத்துடன் அதன் உச்சத்தை அடைந்தது. நிகழ்வின் அற்புதமான காட்சித்துளிகளை எங்கள் slideshowல் கண்டுமகிழுங்கள்.
நவம்பர் 12 அன்று தீபாவளி கொண்டாட்டங்களால் கோவை ஈஷா யோக மையம் பரபரப்பானது. பிரகாசிக்கும் ஒளிவிளக்குகளும் வண்ணமயமான அலங்காரங்களும் அவ்விடத்தை அழகாக்கின.
ஆனால், விழாவின் உற்சாகம் மைய வளாகங்களுக்குள் நின்றுவிடவில்லை. தீபாவளியின் உற்சாகத்தை பக்கத்து கிராமங்களுக்கு எடுத்துச்சென்ற ஈஷா தன்னார்வலர்கள், இனிப்புகளையும் புத்தாடைகளையும் வழங்கி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். அவர்களின் உற்சாகப் புன்னகைகள் பண்டிகை சூழ்நிலையில் கூடுதல் உயிரோட்டத்தைச் சேர்த்தது.
ஒரு பெரிய கொண்டாட்டம் சேவாதாரர்களுக்காகக் காத்திருந்தது, அவர்களில் பலர் தங்கள் வீடுகள் மற்றும் குடும்பங்களை விட்டு வெகுதொலைவில் வந்துள்ளனர். அவர்களின் இடைவிடாத அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதற்காக, பெண்களுக்காக மிகவும் நுட்பமான மெஹந்தி அலங்காரங்களை ஆசிரமவாசிகளும் பிரம்மச்சாரிகளும் செய்தனர். அதேநேரத்தில் அனைத்து சேவாதாரர்களும் பரிசுகள், விருந்துகள், இசை மற்றும் நடனம் ஆகியவற்றை அனுபவித்து மகிழ்ந்தனர். இந்த அற்புதக் கொண்டாட்டம் சேவாதாரர்களுக்கு வீட்டை விட்டு வெளியே இருந்தாலும், வீட்டில் இருக்கும் ஒரு உணர்வை வழங்கியது என்றே சொல்லலாம்.
ஈஷா யோக மையத்தில் 2023 தீபாவளி, வழக்கமான தீபங்களின் ஒரு கொண்டாட்டம் என்பதைக் கடந்து, அனைவரையும் ஒன்றாக அரவணைத்தல், பாராட்டுதல் மற்றும் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொள்வதாக அமைந்தது.
அமெரிக்காவில் டென்னசியிலுள்ள ஈஷா யோக மையத்தில் சத்குரு இவ்விழாவைக் கொண்டாடினார்.