சத்குரு எக்ஸ்க்ளூசிவ்

உங்கள் வாழ்க்கையை ஓர் இனிய அனுபவமாக எப்படி உருவாக்குவது?

சத்குரு அவர்கள் ஆனந்தத்தை வாழ்வின் ஒரு இயல்பான பகுதியாக மாற்றுவதற்கான வியக்கத்தக்க ஒரு எளிய முறையை பகிர்ந்துள்ளார். மனித அமைப்பில் அது எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றி மட்டுமல்லாமல் எந்தெந்த நேரங்களில் அந்த நடைமுறை மிகவும் பயன்மிக்கதாக இருக்கும் என்பதையும் அவர் விளக்குகிறார்.

சத்குரு: ஒரு பணக்காரர் இறந்த பிறகு, அவரின் பக்கத்து வீட்டுக்காரர் சங்கரன்பிள்ளையிடம், “அவர் என்ன விட்டுச் சென்றார்?” என்று கேட்டார். அதற்கு சங்கரன்பிள்ளை சிரித்துக்கொண்டே, “ஒவ்வொரு பைசாவையும், ஒவ்வொரு குண்டுமணியையும், ஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களையும்” என்றார்.

நாம் என்ன சேகரிக்கிறோம் என்பது எந்த விதத்திலும் முக்கியம் இல்லை. முக்கியமான ஒரே விஷயம், இந்த உயிரை உள்ளிலிருந்து நாம் எப்படி வளர்க்கிறோம், அதிலிருந்து நமக்குள் நாம் என்ன செய்துகொள்கிறோம் என்பதுதான். நீங்கள் உயிர் சார்ந்தவராக மாறினால், ஆசையோ பற்றோ எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்பதை திடீரென்று நீங்கள் கண்டுகொள்வீர்கள். இனிமேல் கோபமோ வெறுப்போ இருக்காது, ஏனென்றால் உங்கள் இருப்பின் விலைமதிப்பற்ற தன்மையை நீங்கள் உணர்ந்தவுடன், அந்த விஷயங்களுக்கு நேரம் இருக்காது. இனிமையாகவும், அன்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பது இயல்பான ஒரு பலனாக இருக்கும்.

இந்த உயிர் மலர்வதில் மட்டும் தான் முக்தி இருக்கிறது. இந்த உயிர் பொங்கும் போது, நீங்கள் எந்தக் கடவுளையும் மேலே பார்த்து வழிபட வேண்டியதில்லை - தெய்வீகம் உங்களைத் தேடி வரும்.

மனித அனுபவம் இயங்கும் முறை

தங்கள் வாழ்வில் சிறிதளவேனும் அமைதி அல்லது மகிழ்ச்சியை நிலைநாட்ட பெரும்பாலான மனிதர்கள் ஏன் போராடுகிறார்கள்? இதைப் பற்றி பலப்பல தத்துவங்கள் உள்ளன, ஆனால் அதன் நுட்பத்தைப் பார்ப்போம். வாழ்க்கையின் எல்லா அனுபவங்களும் நமக்குள் எவ்வாறு நுழைகின்றன? நீங்கள் எதையாவது தொட்டால், சுவைத்தால், பார்த்தால், கேட்டால் அல்லது முகர்ந்தால், அது முதலில் உங்களின் புலனுணர்வைத் தொடுகிறது. அங்கிருந்து, நரம்பியல் அமைப்பு அதை உங்கள் மூளைக்கு எடுத்துச் சென்று இனிமையான அல்லது இனிமையல்லாத அனுபவத்தை உருவாக்குகிறது.

இந்த உயிர் பொங்கும் போது, நீங்கள் எந்தக் கடவுளையும் மேலே பார்த்து வழிபட வேண்டியதில்லை - தெய்வீகம் உங்களைத் தேடி வரும்.

அனுபவத்தின் இந்த இனிமை அல்லது இனிமையற்ற தன்மை முற்றிலும் வெளிப்புற தூண்டுதல்களில் இருந்து வரவில்லை, ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் இருக்கிறது. நீங்கள் விரக்தியடைந்து அல்லது கலக்கமாக இருந்தால், அப்போது யாராவது நல்ல இசையை வாசித்தால், அது உங்களை மேலும் கோபத்தில் ஆழ்த்தக்கூடும். இனிமையான இசை எப்போதும் இனிமையானது அல்ல - அந்த தருணத்தில் நீங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மனித அனுபவத்துக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று தூண்டுதலின் தன்மை, மற்றொன்று நாம் இப்போது எப்படி இருக்கிறோம் என்பது - நமது பதிவுகள், நமது சம்ஸ்காரம் மற்றும் நமது கர்மத்தின் சாரம். விரக்தி இந்த தருணத்தில் உங்கள் கர்மாவாக இருந்தால், அப்போது யாராவது உங்களுக்கு இனிமையான விஷயங்களைச் செய்ய முயற்சித்தால், நீங்கள் அவர்களின் கண்களைப் பறித்து எடுத்துவிடுவீர்கள். எனவே, அனுபவம் முழுவதும் தூண்டுதலால் அல்ல; ஒருவரின் கர்மத்தின் சாரமும் அதை பாதிக்கும்.

சக்தி உடலில் இனிமையை கொண்டுவருதல்

ஒரு தூண்டுதல் ஒரு புலனைத் தொடும்போது, அது அங்கிருந்து நரம்பியல் அமைப்பு மூலமாக கிட்டத்தட்ட உடனடியாக பயணிக்கிறது. அதற்கு அப்பால், மிகவும் விரிவான மற்றொரு அமைப்பு உள்ளது - பிராணமய கோசம் அல்லது சக்தி உடல். ஆனால் அது நரம்பியல் அமைப்பை விட குறைந்தது நூறு மடங்கு மெதுவாக நகருகிறது. ஒரு அனுபவத்தின் மூலம் நரம்பியல் அமைப்பு வழியாக ஏற்படும் இனிமையை நீங்கள் நீண்ட நேரம் வைத்திருந்தால், சக்தி உடல் வழியாக அந்த இனிமை பயணிக்கத் தொடங்குகிறது. சக்தி உடலில் இனிமை பரவியவுடன் - அது அன்பாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆனந்தமாக இருந்தாலும் - அது உங்கள் குணமாக மாறும்.

நீங்கள் ஆனந்தமாகிவிடுவீர்கள் என்பதல்ல; ஆனந்தம் உயிரின் இயல்பாக மாறி உங்கள் அமைப்பில் நிறைந்திருக்கும். உயிர் சக்தி இனிமையாக மாறினால், ஆனந்தம் உங்களின் இயல்பாக மாறிவிடும். சூரிய உதயத்தைப் பார்த்து ஒரு கணம் அற்புதமாக உணர்ந்தால், அது நரம்பியல் சார்ந்த இனிமை. அது உங்கள் உயிர்சக்தியின் ஒரு பகுதியாக மாறுவதற்கு, அந்த அனுபவத்தை நீங்கள் பிடித்துக்கொள்ள வேண்டும், ஏனெனில் அது குறைந்தது நூறு மடங்கு மெதுவாக இருக்கிறது.

சக்தி உடலில் இனிமை பரவியவுடன் - அது அன்பாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தாலும், ஆனந்தமாக இருந்தாலும் - அது உங்கள் குணமாக மாறும்.

எந்த ஒரு அனுபவத்தையும் நீங்கள் 24 நிமிடங்கள் பிடித்து வைத்திருந்தால் நரம்பியல் அமைப்பில் உள்ள இனிமை பிராண அமைப்பில் ஆழமாக இறங்கிவிடும். பிறகு இங்கே ஆனந்தமாக அமர்ந்திருப்பது சாதாரண ஒன்றாக ஆகிவிடும்.

உங்கள் அனுபவத்திற்கான உண்மையான மூலம்

உண்மையிலேயே தாகம் ஏற்பட்டு நீங்கள் ஒரு குவளை தண்ணீர் குடித்தால், தாகம் தணிவதோடு மட்டுமல்லாமல், உங்கள் தொண்டை நன்றாக இருப்பதாக உணருகிறது, மேலும் உங்கள் உடலில் குளிர்ச்சி பரவுகிறது - முழு உயிருமே இனிமையாக உணர்கிறது. இந்த இனிய அனுபவத்துடன் நிலைத்திருக்க கற்றுக்கொள்ளுங்கள். தற்போது, உங்களில் பெரும்பாலானோருக்கு இரண்டு முதல் மூன்று வினாடிகளுக்கு மேல் அந்த அனுபவத்தில் இருக்க முடியாது.

இந்த இனிய அனுபவமானது உள்ளிருந்து உருவாகிறது, மனத்தால் அல்ல. மனம் அனுபவத்தைத் தேர்ந்தெடுக்கிறது, ஆனால் அதனால் அனுபவத்தை ஏற்படுத்த முடியாது. நீங்கள் ஒருவரைப் பார்க்கும்போது, "ஐயோ, அவர் பயங்கரமானவர்" என்று உங்கள் மனம் நினைத்தால், உங்கள் உள்ளிருந்து ஏற்படும் ஒரு விரும்பத்தகாத அனுபவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர்கள். உங்கள் மனம் அந்த அனுபவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது, ஆனால் அதனால் அனுபவத்தை உருவாக்க முடியாது. நீங்கள் "நான்" என்று அழைக்கும் ஏதோ ஒன்று அல்லது "உயிர்" என்று நாம் அழைக்கும் ஒன்று அந்த அனுபவத்தை உருவாக்குகிறது.

உங்கள் மனம் கண்ணாடி போன்றது. அது ஒரு தெளிவான கண்ணாடியாக இல்லாமல் மிகவும் சிதைந்த ஒன்றாக இருந்தாலும் அதுவே உங்களுக்கு உலகைக் காட்டுகிறது. நீங்கள் அதை தெளிவாகப் பார்க்கிறீர்களா அல்லது திரித்து பார்க்கிறீர்களா என்பது விவாதத்திற்குரியது. நீங்கள் உலகத்தைப் பார்க்கிறீர்கள், ஏனென்றால் அது உங்கள் மனதில் பிரதிபலிக்கிறது. ஆனால் எப்போதும் மனம் உங்களைப் பிரதிபலிப்பதில்லை.

நீங்கள் உலகத்தைப் பார்க்கிறீர்கள், ஏனென்றால் அது உங்கள் மனதில் பிரதிபலிக்கிறது. ஆனால் எப்போதும் மனம் உங்களைப் பிரதிபலிப்பதில்லை.

நான் உங்கள் உடல் சார்ந்த அல்லது உளவியல் சார்ந்த சுயத்தைப் பற்றி பேசவில்லை. உங்கள் எண்ணம் மற்றும் உணர்ச்சியைப் பற்றி நீங்கள் சிந்திக்கலாம், ஆனால் உங்கள் உயிரைப் பற்றி சிந்திக்க முடியாது. உங்களின் இருப்பைப் பற்றி சிந்திக்க முடியாது; அதை அனுபவத்தில் உணர மட்டுமே முடியும். ஆனால் தற்போது இந்த படைப்பில் உங்களுக்கு இருக்கும் மிக முக்கியமான விஷயம் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள் என்பது தான். இல்லையெனில், பிரபஞ்சம் இருக்கிறதா இல்லையா என்று யார் கவலைப்படுகின்றார்கள்?

வாழ்க்கையை அறிவதற்கான ஒரே வழி உணவு, பானம், அன்பு அல்லது இன்பம் என்பதல்ல. கண்ணாடியின் மறுபக்கம் நீங்கள் சென்றால் மட்டுமே உயிரை உங்களால் அறிய முடியும். கண்ணாடியின் இந்தப் பக்கம் நாடகத்தை மட்டும் தான் உங்களால் பார்க்க முடியும்; உயிரை அதன் சாராம்சத்தில் உங்களால் பார்க்க முடியாது.

மனக்கண்ணாடிக்கு பின்னால்

தென்றல், சுவாசம், நீர், உணவு அல்லது எதுவாக இருந்தாலும் - அந்த அனுபவத்தின் இனிமையோடு நீங்கள் நிலைபெற்று இருந்தால் - நீங்கள் மெதுவாக கண்ணாடியின் மறுபக்கத்திற்கு மாறுவீர்கள்.

சாந்தியா காலம் என்று குறிப்பிடப்படும் நாளின் குறிப்பிட்ட நேரங்களில் அது பிரத்யேகமாக பயன்மிக்கதாக இருக்கும். சாந்தியா காலம் என்பது ஒரு நிலைமாறும் காலம் அல்லது இடைப்பட்ட காலம். ஒரு குறிப்பிட்ட இடைவெளி, ஒரு குறிப்பிட்ட விலகல் இருக்கும்போது, அதைத் தாண்டிச் செல்ல ஒரு சிறிய வாய்ப்பு உள்ளது. இந்த சாந்தியா காலங்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை நிகழும். உங்கள் சொந்த அமைப்புக்கு, உங்கள் சொந்த உடலுக்கு, மிக முக்கியமான சாந்தியா காலங்கள் நீங்கள் தூக்கத்திற்குள் செல்லும் நேரம் மற்றும் தூக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம்.

நீங்கள் விழித்தெழுந்து, உடல் செயல்பட துவங்கும்போது, ஒரு குறிப்பிட்ட இனிமை அதில் பரவுகிறது. நீங்கள் விழிக்கும் அந்தத் தருணத்தில் அந்த இனிமையோடு நீங்கள் நிலைத்திருந்தால், உங்கள் மனம் அந்த நாள் முழுவதும் இனிமையில் மூழ்கியிருக்கும். அதேபோல, நீங்கள் தூக்கத்துக்குள் செல்லத் தொடங்கும்போது - விழிப்புக்கும் தூக்கத்துக்கும் இடையே உள்ள அந்த ஓய்வு நிலையில் - உடலெங்கும் ஒரு இனிமை பரவுகிறது. ஆனால் அதைப் பற்றி விழிப்புடன் இருப்பது விழித்தெழும் தருணத்தோடு ஒப்பிடும்போது மிகவும் கடினமானது.