சத்குரு: சிறிது காலத்திற்கு முன், அமெரிக்காவில் ஒருவர் என்னிடம் வந்து, ஒரு ஞானமடைந்த மனிதர் எப்படி மாம்பழம் சாப்பிடுகிறார் என்று கேட்டார். அது ஒரு அற்பமான கேள்வியாக உங்களுக்குத் தோன்றினால் – மாம்பழங்கள் சலிப்பான சாதாரண விஷயம் அல்ல. நான் குழந்தையாக இருந்தபோது, வருடத்தின் நான்கு மாதங்களுக்கு, மாம்பழம் தான் இந்தியாவில் மதமாக இருந்தது. மாம்பழ சீஸனில், மாம்பழத்தை மட்டுமே நான் உணவாகக் கொள்வது வழக்கம். மாம்பழத்தைத் தவிர வேறு எதுவும் எங்கள் வயிற்றில் இருக்காது. மாம்பழ பித்து எடுக்கும்போது, முகங்களெங்கும் மாம்பழம், ஆடைகளில் மாம்பழம்; எங்கள் மீது மாம்பழ மணம் வீசியது, வீடே மாம்பழ வாசனையில் இருந்தது – எல்லாமே மாம்பழம்தான்.
மாம்பழங்களைப் பற்றி படிப்பதில் மும்முரமாக இருந்ததால், நான் தேர்வுகளைக்கூட தவறவிட்டேன். மைசூரு நகரைச் சுற்றிலும், நிறைய வகையான மாமரங்களும், மாந்தோப்புகளும் இருந்தன. மாம்பழம் கிடைக்கும் இடங்களையும், அதன் வகைகளையும் தேடுதலில் ஏறக்குறைய 5-6 வருடங்களைக் கழித்தேன். மாமரங்கள் இருக்கும் எல்லாப் பகுதிகளையும் என் மனதில் வரைபடமாக வைத்திருந்தேன். மார்ச்சில் இருந்து ஜூலை இறுதிவரை மாம்பழங்கள் வெவ்வேறு சுவைகளில் இருப்பதுடன், அவைகளின் நிறமும், அவற்றை நீங்கள் ருசிக்கும் விதமும் வித்தியாசமாக இருக்கிறது.
நான் பியூசி படித்துக்கொண்டிருந்தபொழுது இது நிகழ்ந்தது. இது மிகவும் முக்கியமான கட்டம், ஏனென்றால் பியூசியில் ஒருவருக்கு கிடைக்கும் மதிப்பெண்கள்தான் அதன் பிறகு வரும் அவரது எதிர்கால கல்விப் பாதையை முடிவு செய்யும். கல்லூரி பருவ நாட்கள் முடிந்துவிட்டாலும், நாங்கள் அதிகபட்ச மதிப்பெண்களை வாங்குவதை உறுதி செய்வதற்காக கடினமாக படிக்கவேண்டிய கட்டாயம். எங்களது வெளி நடமாட்டத்தை குடும்பம் கட்டுப்படுத்தும் காலகட்டமாக இருந்த நிலையில், அது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாத மிகக் கடினமான விஷயமாக இருந்தது. நான் வீட்டைவிட்டு வெளியறுவதற்கு, கல்லூரியின் சிறப்பு வகுப்புகள் வாய்ப்பளித்தன.