மண்ணின் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்வது குறித்து மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்திக்கொண்டு கண்டங்கள் கடந்து சத்குரு அவர்கள் தனியாக இருசக்கர வாகனத்தில் பயணிப்பதில் , மண் காப்போம் இயக்கத்துக்காக உலகம் இன்று வேரூன்றி நிற்கிறது. கொள்கை வகுப்பாளர்களிடையே வேகம் பெற்றிருப்பதும் களத்திலும், இணையதளத்திலும் மக்கள் இந்த காரணத்திற்காக ஒன்றுகூடுவதும் நிகழ்கையில், இதனை வெற்றிகரமான ஒரு இயக்கமாக்க ஈஷா தன்னார்வலர்களின் குழு ஒன்றும் சப்தமில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தது. மக்களின் கண்களுக்கு அவர்கள் தென்படவில்லை, ஆனால் மண்ணுக்கு புத்துயிரூட்டும் உலகளாவிய கொள்கை வரைவு & தீர்வுகள் கையேட்டினை உருவாக்குவதில் அவர்களின் ஈடுபாடு சொல்லில் அடங்காதது.
சத்குரு அவர்கள் தனியொருவராக இருசக்கர வாகனம் ஓட்டியவாறு, உலகெங்கும் 30,000 கிலோமீட்டர் பயணம் செய்து ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தபொழுது, அவருக்கு இணையான பேரார்வமும், அர்ப்பணிப்பும் கொண்ட மற்றொரு மண் நண்பர்கள் குழு ஓய்வின்றி பணி செய்தது. அவர்கள், இயக்கத்தின் சாராம்சமாக இருந்த மண்ணுக்கு புத்துயிரூட்டும் உலகளாவிய கொள்கை வரைவு & தீர்வுகள் கையேடு உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்தக் கையேடு, உலகளாவிய மண் காப்போம் இயக்கத்தின் மைய அம்சமாக இருக்கிறது. ஏனெனில், மண் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்வதன் சூழலியல் மற்றும் பொருளாதார அபாயங்களை சுட்டிக்காட்டுவது மட்டுமின்றி, மண்ணின் கரிம வளத்தை அதிகரிப்பதற்கான பரிந்துரைகளையும், மிக அவசியமான இந்தத் தலையீட்டின் பன்முனைப் பலன்களையும் இந்த கையேடு வழங்குகிறது. சத்குரு அவர்களின் உலகளாவிய மண் காப்போம் இயக்கத்தின் பிரிக்க இயலாத ஒரு பகுதியாக இந்தக் கையேடு இப்போது உருவாகியிருக்கிறது. உலகமெங்கும் உள்ள கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இந்த கையேடு வழங்கப்பட்டுள்ளது.
Conscious Planet ன் தொழில்நுட்ப தலைவர், பிரவீணா ஸ்ரீதர் பகிர்ந்துகொள்கிறார், “சத்குரு ஒரு வருடத்திற்கு முன்பே, Conscious Planet – மண் காப்போம் இயக்கம் பற்றி எங்களிடம் கூறி, அதற்கான தீர்வுகளையும் ஆராயுமாறு கூறினார்”.
இப்பொழுது அந்தக் கருத்து கண்ணெதிரே மலர்ந்துள்ளது. வெவ்வேறு கண்டம் மற்றும் நிலப்பகுதியின் (ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மத்திய கிழக்கு & வட ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா மற்றும் ஓசியானியா) அடிப்படையில், அவற்றின் எல்லாத் தேவைகளுக்கும் தகுந்தாற்போல் தனித்தனி பதிப்புகளுடன், மண்ணுக்கு புத்துயிரூட்டும் உலகளாவிய கொள்கை வரைவு & தீர்வுகள் கையேடு தயாராக உள்ளது. கையேட்டின் முழுமையான உலகளாவிய பதிப்பின் மொத்த பக்கங்களின் எண்ணிக்கை 568.
"மண் எதிர்கொண்டிருக்கும் அச்சுறுத்தல் பற்றி நமது உலகின் பெரும்பாலான பகுதிகளின் விஞ்ஞானிகளும், சட்டம் இயற்றுபவர்களும் அறிந்துள்ளனர். மண் வளத்தின் மீதான விஞ்ஞானபூர்வமான ஆராய்ச்சி 1970 களிலிருந்து நிகழ்ந்து வருகின்றது” என்று பிரவீணா விவரிக்கிறார். தன்னார்வலர்கள் இந்தக் கையேட்டில், எண்ணற்ற பொருத்தமான தகவல்களைத் தொகுத்து, உலகின் பல்வேறு வேளாண் காலநிலை மண்டலங்களுக்கு ஏற்றவாறு சாத்தியமான தீர்வுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.
கையேட்டின் அத்தியாயம் 1, மண் அழிவு மற்றும் அதற்கான காரணிகள் மற்றும் இந்த அழிவினால் சூழலியலுக்கும், மனிதர்களுக்கும் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்கிறது. இரண்டாவது அத்தியாயம், மண்ணின் நுட்பமான நுண்ணுயிர் சூழலகம் பற்றி விவரிக்கிறது. மேலும், மண் புத்துயிர் பெறுவதற்கு குறைந்தபட்ச 3-6% கரிம வளம் பராமரிக்கப்படுவது எவ்வாறு அதற்கான அடிப்படை தீர்வாக இருக்கிறது என்பதையும் எடுத்துரைக்கிறது. கையேட்டின் பெரும்பகுதியாக இருக்கும் அத்தியாயம் 3, உலகின் தற்போதைய கொள்கை சூழலியல் அமைப்புகளை சீர்தூக்கிப்பார்த்து, மண்ணுக்கு புத்துயிரூட்டுவதற்கு பிராந்திய அடிப்படையிலான கொள்கைகளை பரிந்துரைக்கிறது. இறுதியாக நான்காவது அத்தியாயம், வேளாண் காலநிலை மண்டலங்கள் மற்றும் உலகின் பல்வேறு நிலப்பரப்புகளுக்கான மண் வகைகளின் அடிப்படையில் நீடித்த மண் மேலாண்மை தீர்வுகளுக்கான Conscious Planet ன் அணுகுமுறையை வழங்குகிறது.
கையேட்டின் பல்வேறு பதிப்புகளைத் தவிர்த்து, நாடுகளின் அடிப்படையிலான எண்ணற்ற துணை ஆவணங்கள் இணைக்கப்பட்டன. இந்த ஆவணங்கள் கையேட்டின் அத்தியாயம் 4 ன் தொடர்ச்சியானவை. வேளாண் காலநிலை மண்டலங்கள் மற்றும் வெவ்வேறு நாடுகளின் மண் வகைகளின் அடிப்படையில் மண்ணுக்கு புத்துயிரூட்டுவதற்கான நடைமுறைக்கேற்ற, அறிவியல்பூர்வமான தீர்வுகள் இந்த ஆவணங்களில் அடங்கியுள்ளன.
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் பொறியியல் மற்றும் அறிவியலில் முதுநிலை பட்டதாரி, மற்றும் பொதுஜன கொள்கையில் முதுநிலை பட்டமும் பெற்று யுனிசெஃப் நிறுவனத்தில் ஆலோசகராக இருந்த அனுபவம் உடைய பிரவீனா, தனது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட பணியைக் கையாள்வதற்கு அவரது நிபுணத்துவம் அத்தனையையும் வெளிக்கொணர்ந்தார். நதிகளை மீட்போம் இயக்கத்தின், இந்தியாவின் நதிகளுக்கு புத்துயிரூட்டுதல் – கொள்கை வரைவு பரிந்துரைகள் என்ற 760 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை உருவாக்கிய ஒரு முக்கியமான தன்னார்வலராகவும் இவர் இருந்துள்ளார். பின் அது இந்திய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இருப்பினும், மண் அறிவியலின் மர்ம களம் அவருக்கு அவ்வளவு பரிச்சயமாக இல்லை. "எங்களது ஆராய்ச்சியின் அணுகுமுறையை தீர்மானிப்பதற்கு முன்னர், நான் மண் சுகாதார தேவைகளைப் படித்ததுடன், இந்தியா, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடனும் கலந்தாலோசித்தேன்” என்று அவர் பகிர்கிறார்.
பிரவீணா மேலும் 20 தன்னார்வலர்களுடன் இணைந்து கையேடு உருவாக்கும் பணியைத் தொடங்கினார். வாரங்கள் செல்லச்செல்ல, தன்னார்வலர்களின் எண்ணிக்கை 100 ஐ கடந்துவிட்டது. உலகெங்கிலும் – வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து, இதற்கு முன்பு ஒருவரையொருவர் சந்தித்திராத மக்கள் ஒன்றாக பணி செய்தனர். ஒப்படைக்கபட்ட பணி அளப்பரியதாகவும், புதிய கருத்தாகவும், மேலும் அதனை முழுமையாக்கக் கொடுக்கப்பட்டிருந்த கால அவகாசம் மிகவும் குறுகியதாகவும் இருந்தது. ஆனால், மேன்மையான சவால்கள் அவர்களை கால மண்டலங்கள் கடந்து நெருக்கமாக இணைத்து, அவர்களது உறுதியை மேலும் வலுப்படுத்தியது.
100 க்கும் அதிகமான ஆராய்ச்சி தன்னார்வலர்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒரு உறுப்பினர், ப்ரூக் பகிர்கிறார்: “மண் குறித்து மிகக் குறைவான அனுபவம் உள்ள என்னைப் போன்றவர்கள், கல்லூரிப் பருவத்தினர், பிஹெச்டி பட்டப்படிப்பு படித்த மக்கள், அனுபவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், வேறுபட்ட பின்னணிகளுடன் ஐந்து கண்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல தனிமனிதர்கள் என்று அனைவரையும் இந்தத் திட்டப்பணி ஒன்று சேர்த்தது. ஆனால் இதனை நிகழச்செய்யும் ஒரே விருப்பத்தினால், எல்லா வித்தியாசங்களும் புறந்தள்ளப்பட்டன. உலகத்தின் நல்வாழ்வுக்கு அத்தியாவசியமான, அதுவும் அவ்வளவு குறுகிய கால அவகாசத்தில் தாக்கம் ஏற்படுத்தும் இப்படிப்பட்ட ஒரு விஷயத்துக்காக இந்த பூமியில் வேறு எங்கு நம்மால் பங்காற்றமுடியும்?”
எந்தக் காரணத்தினாலும் திட்டப்பணி ஒருபோதும் நின்றுவிடாமல் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக, பிரவீணாவின் தலைமையில், ஒரு கூகுள் சந்திப்பு அறை 24-மணி நேரமும் திட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவினால் இயக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தடையில்லாமல் பணி நிகழ்வதற்காக, உலகெங்கும் ஆய்வாலர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, தேவையான உதவியை அவர்களுக்கு வழங்குவது இதன் நோக்கமாக இருந்தது. அதைத் தவிர, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் தன்னார்வலர்கள் சந்திப்பு நடத்தப்பட்டது.
தன்னார்வலர்கள் அவர்களது திறனின் முழு எல்லைக்கு நீட்டிக்கப்பட்டனர். ஆய்வுகள், தகவல் சேகரிப்பது, அதன் உண்மைத்தன்மையை சரிபார்ப்பது மற்றும் தணிக்கை செய்வது போன்ற செயல்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களது குடும்பங்கள், பணிப் பொறுப்புகள் மற்றும் வீட்டு அலுவல்கள் போன்ற பல்வேறு செயல்களுக்கு இடையே சமநிலையில் செயலாற்ற வேண்டியிருந்தது. “ஜெர்மனியில் ஒரு பிஹெச்டி மாணவி அவரது கல்விப்பணிக்கு இணையாக, கையேடு உருவாக்கப்பணியின் ஆய்வையும் தொடர்ந்து செய்திருந்தார்,” என்று ப்ரூக் நினைவுகூர்கிறார். இதற்கிடையே, நைஜீரியாவில் இருந்து ஒரு தன்னார்வலர் அடிக்கொருமுறை ஏற்படும் மின்தடங்கல்களுக்கு சளைக்காமல் தொடர்ந்து பணியாற்றினார்.
அமெரிக்காவில் இருந்த ஒரு ஆராய்ச்சியாளர், அவரது குடும்ப அவசரநிலை காரணமாக தம் குழந்தையை நகரம் விட்டு நகரம் இடமாற்றம் செய்யும் சூழலை எதிர்கொண்டார், ஆனாலும் அந்த பெண்மணி ஆய்வு மற்றும் தகவலை சேகரித்து அனுப்பும் அவரது அர்ப்பணிப்பிலிருந்து பின்வாங்கவில்லை. “அத்தனை சவால்கள் இருந்தாலும் அவர் தொடர்ந்து செயல் செய்ததை பார்ப்பது ஊக்கமளிப்பதாக இருந்தது,” என்கிறார் பிரவீணா.
தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, அதனை நிகழச்செய்யும் உறுதியை கவசமாகக்கொண்டு அசைக்கமுடியாத ஒரு உலகளாவிய வலைப்பின்னலை உருவாக்கினர். சாதாரணமாக ஒரு அமைப்பு பல வருட காலங்களை எடுத்துக்கொள்ளும் ஒரு விஷயத்தை ஒப்பீட்டளவில் கண்ணிமைக்கும் நேரத்தில் முடித்து, ஏறக்குறைய ஒரு சூப்பர்மேனின் வேகத்தில் சாதித்தனர்.
புத்தகத்தின் உள்ளடக்கம் எழுதப்பட்டதும், பதிப்பு மற்றும் வடிவமைப்புக்காக அது ஈஷா அறக்கட்டளையில் இருக்கும் வெளியீடுகள் சம்பந்தபட்ட வட்டத்தின் பார்வைக்கு அனுப்பப்பட வேண்டும். தொழில்நுட்பக் குழுவும், வெளியீடுகள் குழுவும் ஒன்றன்பின் ஒன்றாக இணைந்து செயல்பட்டன. பல உறக்கமில்லா இரவுகள் தொடர்ந்தன.
ஈஷா அறக்கட்டளையில் ஆங்கில வெளியீடுகள் துறையின் பாகமாக இருக்கும் மா ஈடா, கூறுகிறார், “அது எங்களுக்கு மிகுந்த சவாலாக இருந்தது, ஏனெனில் நாங்கள் மண் அறிவியலின் தொழில்நுட்ப அம்சங்களையும், கொள்கை உருவாக்கத்தையும் போகப்போகக் கற்றுத் தெரிந்துகொண்டிருந்தோம். நான் உயிரியல் பின்னணியிலிருந்து வந்திருப்பதால், ஒரு இரண்டு மாதங்களுக்கு, நான் மீண்டும் கல்லூரியில் இருப்பதுபோல் உணர்ந்தேன்!”
திருத்தியமைப்பதில் ஈடுபட்டிருந்த ஜனனி பகிர்ந்துகொள்வது: “குழுவில் இடம்பெற்றிருந்த பலரும் விஞ்ஞானிகளாகவோ அல்லது அந்தக் குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணர்களாகவோ இல்லையென்றாலும், முழுமையான ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்பின் மூலமாக மேன்மையாக செயல் செய்தனர். ஒரு இலக்கு நோக்கி ஒன்றுபடும்போது மக்கள் என்ன சாதிக்கமுடியும் என்பதை நிரூபித்தனர்.”
வரைகலை வடிவமைப்பாளர் முனுசாமிக்கு, கோவையில் உள்ள அவரது வீட்டிலிருந்து அகாலவேளைகளில் பணியாற்றுவது வழக்கமாகிவிட்டது. விடியற்காலை 4 மணிவரை கையேட்டின் உட்பக்கங்களையும், பலவிதமான நாடுகளுக்கே உரிய ஆவணங்களையும் வடிவமைத்துக்கொண்டே, அவரது பணியிடத்தில் அடிக்கடி ஆன்லைன் சந்திப்புகளில் இருப்பார். “இவ்வளவு பிரம்மாண்டமான திட்டத்திற்கு என்னால் பங்களிக்க முடிவதை கௌரவமாக நினைக்கிறேன். தன்னந்தனியான வாகன ஓட்டியாக சத்குரு மேற்கொண்டிருக்கும் செய்தற்கரிய பயணத்துடன் ஒப்பிடும்போது என் பங்களிப்பு ஒன்றுமில்லை. உலகத்தைத் தட்டி எழுப்புவதற்காக அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் உடல் அசௌகரியங்களும், செய்யும் தியாகங்களும், எங்களுடைய தனிப்பட்ட எல்லைகளைக் கடந்து செல்வதற்கு எங்களுக்கு ஊக்கமளித்துள்ளது. புத்தகத்தை வடிவமைப்பதில் நான் மூழ்கியிருக்கும்போது, காலம், நேரம், உணவு, உறக்கம் அல்லது வேறு எந்தக் காரணியும் எனக்குப் பொருட்டாக இருப்பதில்லை,” என்று அவர் பகிர்கிறார்.
மா ஈடா பகிர்கிறார், “மஹாசிவராத்திரி அன்று இரவுகூட, ஈஷா யோக மையத்தில் கொண்டாட்டங்கள் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டு இருந்தபொழுது, அவ்வளவு இசை மற்றும் கைதட்டல்களுக்கு மத்தியில், கையேட்டை பதிப்பித்து, வடிவமைப்பதற்கு ஆதியோகிக்கு அருகில் ஓரிடத்தில் வெளியீட்டு குழு பணி செய்துகொண்டிருந்தது.”
Conscious Planet குழுவின் அங்கமாக இருந்த நேஹா கௌஷிக், பகிர்ந்துகொள்கிறார்: “புத்தகத்தை அச்சிடுவதற்கு நாங்கள் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு தன்னார்வலர்களுடன் ஒருங்கிணைந்திருந்தோம். சத்குரு கடந்து செல்லும் ஒவ்வொரு நாட்டிற்கான கையேடு மற்றும் ஆவணங்கள் குறித்த நேரத்தில் முடிவடைவதற்காக, நாங்கள் அவரது பயண அட்டவணை மீது நெருக்கமாகக் கண் பதித்திருந்தோம். ஒவ்வொரு குழுக்களுக்குமான பல குறுகியகால கெடுவை நிர்ணயித்தோம்.”
எல்லாம் சுமூகமாக சென்றுகொண்டிருப்பதாகத் தோன்றியபொழுது, திடீரென்று சத்குருவின் பயணப்பாதை மாறிவிட்டது! பயணத்தில் புதிய நாடுகள் சேர்க்கப்பட்டன. மீண்டும் புதிய தகவல்களைப் பெறும் முயற்சியில் பலமுறை குழுக்கள் குழப்பத்தில் தள்ளப்பட்டன.
இருப்பினும், ஒரு பெருந்துயரத்தின் வடிவில் மிகப்பெரும் சவால் ஒன்று எழுந்தது. மா ஈடா பகிர்கிறார், “நாங்கள் தூங்காமலும், நேர அட்டவணையின் கெடுவை அரிதாக நிறைவேற்றிக்கொண்டும் கழுத்தை முறிக்கும் வேகத்தில் செயல்பட்டுக்கொண்டு இருந்தோம். அப்போது இரவு 10 மணிக்கு என் கணினியில் பதிப்பித்துக்கொண்டு இருந்தபோது பிரவீணா என்னை அழைத்து, ‘என் தந்தை இறந்துவிட்டார். நான் சென்னை செல்லவேண்டும்’ என்றார். என் வயிற்றில் திகில் படர்வதை உணர்ந்தேன். அவர் கூறியதை நான் முழுவதுமாக உள்வாங்கும் முன், பிரவீணாவின் அடுத்த வார்த்தைகள் என்னைத் திகைப்பில் ஆழ்த்தியது: ‘ஆனால் வார இறுதிக்குள் நான் அந்த அத்தியாயத்தை முடித்துவிடுவேன்.’
“பிரவீணாவின் மனோவலிமை, மீண்டெழல், முழுமையான உறுதிப்பாடு என்னை வியக்க வைத்தது. அது எதிர்பாராத, அதிர்ச்சியாக இருந்த ஒரு அகாலமரணம். இருந்தாலும், வேலை குறித்து கவலைகொள்ளாமல், குடும்பத்துடன் இருக்குமாறு என்னால் உண்மையாகக் கூறமுடியவில்லை. ஏனெனில், எங்களுக்கு வேறு வழியில்லை என்பதை நான் அறிந்திருந்தேன். பிரவீணாவும்கூட அதை அறிந்திருந்தார். சத்குரு அவரது உயிரையே பணயம் வைத்திருந்ததுடன், நமது பூமிக்கான ஒரு நெருக்கடியான, நம்மைவிட மிகப் பெரிய ஒரு இயக்கத்தின் நடுவில் இருந்தோம் – நாங்கள் அதை நிகழச்செய்ய வேண்டியிருந்தது. ஒரு சில நாட்களுக்குள், இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, அக்கா என்னைத் திரும்ப அழைத்து, அவர் பணியில் இருப்பதாகக் கூறினார். அவருக்கு என்னால் தலை வணங்கத்தான் முடிந்தது.”
தனிப்பட்ட இழப்புகள் மற்றும் கணிக்கவியலாத தடங்கல்களுக்கு மத்தியில், பின்புலக் காட்சியில் செயல்பட்ட பல தன்னார்வலர்களின் வியர்வையினூடாக, மண் காப்போம் கையேடு முழுமை அடைந்துள்ளது. “எல்லாமே, அது என்னவாக இருந்தாலும் அனைத்தும் சாத்தியமே என்பதை இந்தத் திட்டப்பணி எனக்கு கற்பித்துள்ளது.”
முகம் தெரியாமலும், பெயர் அறியாமலும், தன்னார்வலர் என்ற ஒரே அடையாளத்துடன் மட்டும் ஒன்று கூடியிருந்தாலும், நெருக்கடியான கணங்களில் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் ஒரு தனிப்பட்ட பந்தத்தை அவர்கள் வளர்த்துக்கொண்டு ஒரு குடும்பம் போல ஆகிவிட்டனர். திட்டப்பணி முடிவுக்கு வந்தபோது விடைபெறுவதும், அவரவரது தினசரி தொழில்முறைப் பணிகளுக்கு திரும்புவதும் பலருக்கும் கடினமாகத் தோன்றியது.
ஆனால், மீண்டும் விரைவிலேயே அவர்கள் இணைந்து வரக்கூடும், ஏனெனில் திட்டப்பணி முழுமையடைவதற்கு இன்னமும் வெகுதூரம் இருக்கிறது. 100 நாள் பயணத்தின் முடிவில் – சமூக ஊடக ரீங்காரங்கள், பாடல்கள், நடனம், கலை மற்றும் விழிப்புணர்வு முயற்சிகள் - ஒவ்வொரு நாட்டின் நிபுணர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் கைகோர்த்து செயல்படும் உண்மையான பணி தொடங்குகிறது, கொள்கைகள் உருவாகும் வரை. விரைவில், மீண்டும் இந்த ஓய்வறியா சக்கரத்தில், திட்டப்பணிக் குழுக்கள் சப்தமில்லாமல் இணைவதற்கான நேரம் வரும்.
மண் காப்போம். நாம் இதனை நிகழச் செய்வோம்!