கலாச்சாரம்

சிவன் ஏன் நடனத்தின் கடவுளாகப் பார்க்கப்படுகிறார்?

யோகாவுடன் நடனத்துக்கு என்ன தொடர்பு? சிவன், நடராஜன் - “நடனத்தின் அரசன்” என்று ஏன் அழைக்கப்படுகிறார்? அவரை இவ்வாறு சித்தரிப்பதன் பின்னணியில் இருக்கும் குறியீடு என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களையும் மேலும் பலவற்றையும் சத்குரு அவர்கள் இந்த கட்டுரையில் வெளிப்படுத்துகிறார்.

சத்குரு: இயற்கையில் உள்ள பஞ்ச பூதங்களுக்காக தென்னிந்தியாவில் ஐந்து லிங்கங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றாகிய ஆகாயம் அல்லது வெட்டவெளிக்கான லிங்கத்தை பதஞ்சலி பிரதிஷ்டை செய்தார். அதுதான் சிதம்பரம். கோவில் வளாகம் பிரம்மாண்டமாக, கல்லில் செதுக்கப்பட்ட அற்புதமான கலை வேலைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக, 40 ஏக்கருக்கும் அதிகமாக பரந்து விரிந்திருக்கிறது. கோவிலை பதஞ்சலி பிரதிஷ்டை செய்தபொழுது, ஒரு குறிப்பிட்ட அளவிலான சாதனா மற்றும் நித்தியகர்மங்களையும் கோவிலில் ஒரு குறிப்பிட்ட வழிமுறையுடனான தினசரி சடங்குகளையும் கடைபிடிக்கக்கூடிய ஒரு குழுவை தயார் செய்தார். அந்தக் குடும்பங்களின் சந்ததியினர் பெருகி, அவர்கள் தொடர்ந்து கோவிலை உயிர்ப்புடன் வைத்திருந்தனர்.

பதஞ்சலி யோக சூத்திரங்களை எழுதினார் மேலும் அவர் நவீன யோகாவின் தந்தையாகவும் அறியப்படுகிறார். உலகின் மாபெரும் விஞ்ஞானிகள்கூட அவர் முன் மழலையர் பள்ளிக் குழந்தைகள் போலத் தோன்றச்செய்யும் விதமான காரண அறிவை அவர் பெற்றிருந்தார். ஒரு யோகியாக மட்டுமில்லாமல், ஒரு மனிதராகவும், எண்ணற்ற பல விஷயங்களின் மீது அவருக்கு இருந்த திறன்களும், தேர்ச்சியும் முற்றிலும் வியப்புக்குரியது. ஆனால் அவர் அப்படித்தான் வாழ்ந்தார். இந்தக் கோவிலின் ஒரு முக்கியமான அம்சம், நடராஜர், நடனமாடும் சிவன்.

இந்தியக் கடவுள்கள் நடனமாட வேண்டுமென்ற எதிர்பார்ப்பு எதனால்?

சிவன், நடராஜனாக – நடனமாடுபவர்களின் அரசராக இருக்கிறார். நமக்கான கடவுள்கள் நடனமாட வேண்டியிருக்கும் ஒரே இடம் இந்தியா மட்டும்தான். அவர்களால் நடனமாட முடியவில்லை என்றால், அவர்கள் கடவுள்களாக இருக்கமுடியாது. இது ஏனென்றால், படைத்தலின் அதிசய நிகழ்வுக்கு நீங்கள் கொடுக்கக்கூடிய மிக நெருங்கிய உவமை என்னவென்றால், அது ஒரு நடனம் போல் இருக்கிறது. எல்லாமே ஒரு நடனத்தில் இருப்பதாகத் தோன்றுகிறது என்று நவீன இயற்பியலாளர்கள் இன்று கூறுகின்றனர். அதன் பொருள், அதற்கான தர்க்கரீதியான ஒத்திசைவு இல்லை என்று தோன்றினாலும், நீங்கள் அதனைக் கூர்ந்து கவனித்தால், ஒட்டுமொத்த செயல்முறைக்கும் மிக ஆழமானதொரு முறைமை இருக்கிறது.

அந்த ஒத்திசைவை பார்வையாளர்கள் தங்களுக்குள் அடைந்தால் தவிர, அவர்களால் உண்மையாக நடனத்தை இரசிக்கமுடியாது.

நடனத்தில் நீங்கள் சித்தரிக்க விரும்பும் ஒவ்வொரு விஷயத்துக்கும், உங்கள் கைகளையும், கால்களையும் முழுமையான ஒத்திசைவில் நீங்கள் சுழற்றி வீசக்கூடிய ஒரு நிலையை அடைவதற்கு பல வருட கற்பித்தலும், பயிற்சியும் தேவைப்படுகிறது. அந்த ஒத்திசைவை பார்வையாளர்கள் தங்களுக்குள் அடைந்தால் தவிர, அவர்களால் உண்மையாக நடனத்தை ரசிக்கமுடியாது. நீங்கள் ஒரு பாரம்பரிய நடன நிகழ்ச்சியைப் பார்த்தால், உங்களுக்கு கதை தெரியாமலோ அல்லது புரியாமலோ இருக்கலாம், ஆனால் நடனத்தின் வடிவியல் நேர்த்தியே ஒரு குறிப்பிட்ட விதத்தில் உங்களைத் தொடும். வேறொரு பரிமாணத்தில், இசைக்கும் இதுவே பொருந்துகிறது.

இந்த ஒன்றை இயற்பியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்கள், “அனைத்தும் அங்குமிங்குமாகவும், தற்செயலாகவும் இருக்கிறது” என்று கூறினர். ஆனால் இப்போது, நெருங்கிச்சென்று கவனித்ததில், அங்குமிங்குமாகவும், தற்செயலாகவும் தோன்றுகின்ற அனைத்தும் உண்மையில் ஏதோ ஒரு வழியில் இசைவாக இருப்பதை அவர்கள் காண்கின்றனர். நம்மால் இன்னமும் அறிந்துகொள்ள இயலாத வகையில், எல்லாவற்றுக்கும் ஒருவிதமான ஒத்திசைவு இருக்கிறது.

யோகாவுக்கும், நடனத்துக்கும் பொதுவானது என்ன

தனிப்பட்ட உயிருக்கும், படைப்பின் மாபெரும் வெளிப்பாட்டிற்கும் இடையில் ஒத்திசைவு இருக்கும் காரணத்தினால்தான் யோகா சாத்தியமாகின்றது. ஒத்திசைவு இல்லாமல் இருந்திருந்தால், உங்களால் ஒருமையை அடைய முடியாது. ஒத்திசைவு இல்லையென்றால், யோகாவுக்கான சாத்தியக்கூறு இல்லை. படைப்பு ஒரு நடனமாக இருப்பதால் நாம் கூறினோம், “இறைவன் ஒரு கூத்தன். இல்லையென்றால், இறைவன் இந்த நடனத்தை எப்படி நிகழ்த்தியிருக்க முடியும்?” என்று. சிவன் ஒரு பிரபஞ்ச கூத்தன் என்று நாம் கூறும்போது, ஒரு தனிநபர் பிரபஞ்சமெங்கும் நடனமாடிக் கொண்டிருப்பதைக் குறித்து நாம் பேசவில்லை – பிரபஞ்சமே நடனமாடுவதைக் குறித்து நாம் பேசுகிறோம். அதனால்தான் நடராஜரைச் சுற்றி ஒரு வட்டம் இருக்கிறது.

சிவனை பிரபஞ்ச கூத்தனாக வழிபடுவதன் பின்னணியில் இருக்கும் உண்மையான அர்த்தம்

ஒரு வட்டம் எப்போதுமே பிரபஞ்சத்தின் ஒரு குறியீடாக இருக்கிறது. ஏனென்றால் ஏதோவொன்று நகரும்பொழுது, வட்ட வடிவம்தான் படைப்பில் நிகழும் மிக இயல்பான வடிவமாக இருக்கிறது. பூமி, சந்திரன், சூரியன் எல்லாமே ஒரு வட்டம்தான். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இருக்கும்பொழுது, அது இலேசாக ஒரு நீள்வட்டமாக மாறுபாடு அடையக்கூடும், ஆனால் பொதுவாக, நகரும் எந்த ஒரு பொருளும் இயற்கையாகவே ஒரு வட்டமாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் ஒரு வட்டம் என்பது குறைந்தபட்ச தடை கொண்ட ஒரு வடிவமாக உள்ளது. அதனால்தான், நடராஜரைச் சுற்றி இருக்கும் வட்டம், பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. அவர் எப்போதும் ஒரு பிரபஞ்ச கூத்தனாக வர்ணிக்கப்படுகிறார்.

பிரபஞ்சம் ஒரு நடனத்தில் இருக்கிறது, மேலும் அந்த நடனம் ஒரு குறிப்பிட்ட ஞானத்தினால் வழிநடத்தப்படுகிறது.

பிரபஞ்சம் ஒரு நடனத்தில் இருக்கிறது, மேலும் அந்த நடனம் ஒரு குறிப்பிட்ட ஞானத்தினால் வழிநடத்தப்படுகிறது. அந்த ஞானத்திற்கு நாம் தனித்தன்மையளிக்க விரும்புகிறோம், ஏனென்றால் நாம் தனிப்பட்டவர்களாக இருக்கின்றோம், மேலும் நமக்கே உரிய புரிதலினால் எல்லாவற்றையும் தனித்தனியான உயிர் வடிவங்களாக நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால் மேலே ஒருவர் இருந்துகொண்டு பிரபஞ்சமெங்கும் நடனமாடுகிறார் என்பதை நம்ப வேண்டாம்.

ஒரு நடன கலைஞருக்கான உச்சபட்ச கௌரவம்

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரு நடனத்தில் இருக்கிறது. அதை கண்டுணர்வதற்கு போதுமான சான்றுகள் உண்டு. தெய்வீகம் இந்தப் பிரபஞ்சத்தின் மூலம் என்று நாம் கூறும்போது, இயல்பாகவே அது ஒரு நடனமாடுபவராக தான் இருக்கவேண்டும். சிவன் நடராஜராக, உச்சபட்ச கூத்தனாக இருக்கிறார். மேலும் சிதம்பரம் கோவில் அவரது இல்லமாக இருக்கிறது. சிவனே அங்கு வந்து நடனமாடியதாகக் கூறுகின்றனர். அதனால்தான், எந்தவொரு நடனக் கலைஞருக்கும் சிதம்பரம் கோவிலில் நடனமாடுவது என்பது உச்சபட்ச கௌரவமாக இருக்கிறது.