சேகர் குப்தா: நீர் காப்போம், நதி காப்போம், சுற்றுச்சூழல் காப்போம், கார்பன் டை ஆக்ஸைட் காப்போம் மற்றும் வேறெதையும் காப்பதிலிருந்து மண் காப்போம் எப்படி வித்தியாசப்படுகிறது என்பதைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள்.
சத்குரு: கார்பன் டை ஆக்ஸைடைக்கூட யாராவது காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்களா?
சேகர் குப்தா: அதைக் குறைப்பதற்கு மக்கள் முயற்சிப்பதைக் கூறினேன்……
சத்குரு: அது கார்பன் டை ஆக்ஸைடில் இருந்து விடுபடுவது…… அதைக் காப்பது அல்ல.
சுற்றுச்சூழலுக்கு மட்டுமல்ல, இது வாழ்விற்கான பிரச்சனையும் கூட
சத்குரு: மண் நமது வாழ்வுக்கு அடிப்படையானது. மேலும் கார்பன் டை ஆக்ஸைடு போல் அல்லாமல், மண் ஒரு வாழும் உயிராக இருக்கிறது. இந்த கிரகத்தில் மட்டுமல்லாமல், அறியப்பட்ட பிரபஞ்சத்திலேயே மண்தான் மிகப்பெரிய வாழும் உயிராக இருக்கிறது. மேல்மண்ணின் 15 – 18 அங்குல ஆழத்துக்குள் என்ன நிகழ்கிறதோ அதன் விளைவான ஒரு உயிராக நாம் இருந்தாலும், துரதிருஷ்டவசமாக நாம் அதனை ஒரு ஜடப்பொருளாகத்தான் குறிப்பிட்டு வந்துள்ளோம். மண்ணை ஒரு ஆதாரவளமாக பயன்படுத்தியதுடன், இன்றைக்கு மண் அறிவியலாளர்கள் மண் அழிவு என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் ஒரு கட்டத்திற்கு அதைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளோம். மண் அழிவு வாழ்வின் அழிவு.
இந்த கிரகத்தின் மீது மட்டுமல்லாமல், அறியப்பட்ட பிரபஞ்சத்திலேயே மண்தான் மிகப்பெரிய வாழும் உயிராக இருக்கிறது.
பலவாறான சுற்றுச்சூழல் பற்றிய கவலைகள் இருக்கின்றன; அவைகள் முக்கியமல்ல என்று நான் கூறவில்லை – அவை முக்கியமானவை. ஆனால் மண், உயிரின் அடிப்படையாக, இந்த பூமி மீது நம் இருப்பிற்கும் எதிர்கால சந்ததியின் வாழ்விற்கும் அடித்தளமாகவே இருக்கின்றது. ஆகவே, மண் காப்போம் மிக வித்தியாசமான ஒரு தன்மை உடையது. மற்ற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் அவற்றுடன் முரண்படுகின்ற வகையிலான பொருளாதார அம்சங்களைக் கொண்டுள்ளன, அதனால்தான் அவை குறித்த முடிவில்லாத விவாதங்கள் இருந்துவருகின்றன. மண்ணின் கரிம வளத்தையும், மண் வளத்தையும் மேம்படுத்துவது என்று வரும்போது, அதற்கு எதிர்ப்பாக கூட்டங்கள் இல்லை, தொழிற்சாலை இல்லை, மற்றும் பூமியில் அதற்கு எதிராக எந்த மனிதரும் இல்லை; அனைவரும் அதற்கு சார்பாகவே இருக்கின்றனர்.
மற்ற சிக்கலான சூழலியல் பிரச்சனைகளில் இருந்து மண்ணைத் தனித்துப் பார்ப்பதையே நாம் விரும்புகிறோம். அப்போதுதான், மண்ணை ஒரு சுற்றுச்சூழல் பிரச்சனையாக இல்லாமல், உயிரியல் பிரச்சனையாக, ஒரு வாழ்வியல் பிரச்சனையாக பார்க்கமுடியும்.
கரிமவளத்தை அதிகரிப்பதற்கு நமக்குத் தேவையான இரண்டு விஷயங்கள்
சேகர் குப்தா: மண்ணின் கரிமவளத்தை அதிகரிப்பது என்றால் நீங்கள் கூறவருவது என்ன?
சத்குரு: அதாவது, நுண்ணுயிர்களுக்கு காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு பரிமாறுவது. மண் ஒரு வாழும் உயிரினம். ஏனென்றால் ஒரு கைப்பிடி மண், அதனுள் 800-1000 கோடி நுண்ணுயிர்களைக் கொண்டிருக்க முடியும்.
சேகர் குப்தா: அது சரி.
சத்குரு: மேலும் உலகெங்கும் கோடானுகோடி நுண்ணுயிர்கள் மற்றும் இலட்சக்கணக்கான உயிரினங்கள் மண்ணில் இருக்கின்றன. இந்த எண்ணிக்கை எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், மண்ணில் வாழ்ந்துகொண்டிருக்கும் நுண்ணுயிர்கள் அல்லது உயிரினங்களில் ஒரு சதவிகிதத்தைக்கூட மண் அறிவியலாளர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை அவர்களே வெளிப்படையாக ஒத்துக்கொள்கின்றனர். ஆகவே, அந்த அளவுக்கான சிக்கல் உள்ளது. ஆனால் தற்போது, ஐநாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் படி (UNFAO)[2] சராசரியாக 27,000 உயிரினங்கள் ஒவ்வொரு வருடமும் அழிந்துகொண்டிருக்கின்றன.
சேகர் குப்தா: அப்படியென்றால், எப்படி நீங்கள் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவை மண்ணுடன் சேர்க்கிறீர்கள்?
சத்குரு: கரிமவளத்திற்கான மூலங்கள் இரண்டு மட்டும்தான்: தாவர உயிரி மற்றும் கால்நடை உயிரி. வேறெதுவும் இல்லை. தற்போது, நீங்கள் விவசாய நிலங்களைப் பார்த்தால், குறிப்பாக பெரிய மேலை நாடு அல்லது இந்தியாவில்கூட, அது வெறும் பழுப்பு மண் மற்றும் இயந்திரங்களாகவே இருக்கின்றது. நிலத்தில் தாவர உயிரி அல்லது கால்நடை உயிரி இல்லை – அதனால் அங்கே கரிமவளம் எப்படி இருக்கமுடியும்? அதனால்தான் கரிமவளக் குறைவு நிகழ்ந்துள்ளது.
இயற்கையான சுழற்சியை எப்படி புதுப்பிப்பது
இயந்திரங்களுடன் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவை கழிவு அகற்றுவதில்லை. இயந்திரங்கள் கார்பன் டை ஆக்சைடு அல்லது கார்பன் மோனாக்ஸைடை காற்றில் வெளியிடுகிறது, ஆனால் மண்ணுக்கு எதுவும் திரும்பிச் செல்வதில்லை. விலங்குகள் நிலத்தில் வேலை செய்தபொழுது, அவைகள் சாப்பிடுவது என்னவாக இருந்தாலும், அது வேறொரு வடிவத்தில் கழிவாக, மண்ணுக்குள் திரும்பப் போடப்பட்டது. அதற்காக மண்ணின் ஒட்டுமொத்த ஜீவ உயிர்களும் காத்திருந்தன. இப்படித்தான் படைப்பு இயங்குகிறது: ஒரு உயிரின் கழிவு, மற்றொரு உயிரின் உணவாக இருக்கிறது. அது இறந்துவிடும்பொழுது, அதன் உடல் உணவாகிறது.
இது ஒரு தற்சார்புடைய, உயிர் சங்கிலியின் சுழற்சிப் பொருளாதாரமாக இருப்பதால், இதனைவிடச் சிறந்த ஒரு வடிவமைப்பு இருக்கமுடியாது. இன்றைக்கு வெவ்வேறு நிலைகளில் நாம் அதற்கு பெருமளவுக்கு இடையூறு செய்துவிட்டோம். ஒரு குறிப்பிடத்தக்க இடையூறு என்னவென்றால், உலகின் 54% மண் முழுமையான வேளாண்மையின் கீழ் இருக்கிறது. மற்றொரு 18-20% மண் பகுதியளவு விவசாயத்தில் இருக்கிறது. ஆகவே, 72% க்கும் அதிகமான உலகின் நிலம் உழப்படுகிறது.
கரிமவளம் என்றாலே இரண்டு மட்டும்தான்: தாவர உயிரி மற்றும் கால்நடை உயிரி. வேறெதுவும் இல்லை.
சேகர் குப்தா: பயிரிடத்தகுந்த நிலமா?
சத்குரு: ஆம், காடுகளை ஒதுக்கிவிட்டால், அதுதான் உண்மை. மேலும் உலகத்தின் 4.2% நிலம் நகர்ப்புறமாக இருப்பதால், அது நடைபாதைத்தளம் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே மொத்தமாக, 75% க்கும் அதிகமான உலகின் பரப்பு, உழப்படுகிறது அல்லது தளமாக்கப்படுகிறது. அதாவது அங்கே ஒளிச்சேர்க்கை இல்லை, தாவர உயிர் இல்லை, மற்றும் பெருமளவுக்கு விலங்கினங்களும் இல்லை. நாயை நீங்கள் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் சென்று, அது மலம் கழிக்கலாம், ஆனால் அது தீர்வு அல்ல. பெருமளவுக்கான கழிவு சுழற்சி நிலத்துக்குத் தேவைப்படுகிறது. கணிசமான எண்ணிக்கையில் விலங்குகளும், கூடவே தாவர உயிரிகளும் இருந்தால்தான் அது நிகழமுடியும்.
ஒரு உபயோகமான கண்டுபிடிப்பு தவறாகப் போய்விட்டது
தாவரங்களும், கால்நடைகளும் ஏன் மறைந்துவிட்டன? 1918 ம் ஆண்டுகளில், ஒரு ஜெர்மன் விஞ்ஞானி நைட்ரஜன் உரங்களுடன் வந்தார். மக்கள் அதை எடுத்து அவர்களது நிலங்களில் தூவியதும், பயிர்கள் செழுமையாக எழுந்தன. அப்படிப்பட்ட வளர்ச்சி, மக்கள் அதற்கு முன்னர் ஒருபோதும் பார்த்திராத ஒன்றாக இருந்தது. இதுதான் அன்றைய பசுமைப் புரட்சி. இந்தியாவின் பல பகுதிகளிலும், நமது மகசூல் 300%க்கும் அதிகமாக உயர்ந்தது. உண்மையிலேயே அது மாயாஜாலப் பொடியாக இருந்தது.
இந்த மாயாஜாலப் பொடி உங்களுக்குக் கிடைத்தவுடன், அதை நீங்கள் எல்லா இடங்களிலும் தூவத் தொடங்க, எல்லா இடங்களிலும் பயிர்கள் வெடித்துக் கிளம்பின. ஆகவே இயல்பாகவே, மக்கள் அதுகுறித்து முழுமையாக மகிழ்ந்துபோனார்கள். மேலும், கடந்த காலங்களில் பஞ்சங்கள் பெருத்த நாசம் விளைவித்து, இலட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கியது. பஞ்சத்தின் பிடியிலிருந்து மீள்வதற்காக, இரசாயனங்களை எப்படிப் பயன்படுத்துவது என்று நாம் கொள்கைகள் வகுத்து, அதைத் திறம்படச் செயல்படுத்தினோம். இந்த நாட்டின் சராசரி ஆயுள்காலத்தை நாம் மேம்படுத்தினோம். 1947 ல் சராசரி ஆயுட்காலம் 30 வருடங்களாக இருந்தது – அதை உங்களால் நம்பமுடிகிறதா?
இப்பொழுது, இந்த 75 வருடங்களில், நாம் சராசரி ஆயுட்காலம் 70 வருடங்களை எட்டியுள்ளோம். இது எந்த ஒரு தேசத்துக்கும் மகத்தானதொரு சாதனை. பஞ்சகாலங்களைக் கடப்பதற்கான ஒரு முயற்சியாக அந்த பசுமைப் புரட்சி விளங்கியது. மறுகரைக்குச் செல்வதற்காக நீங்கள் ஒரு பாலத்தின் மீது ஏறுகிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பாலத்தின் மீது ஏறியபிறகு, இறங்கவேயில்லை என்றால், நீங்கள் எங்கும் சென்று சேராத ஒரு நிலையில் இருக்கிறீர்கள். ஏதோ ஒரு வழியில், நாமும், ஒட்டுமொத்த உலகமும் இந்தத் தவறைத்தான் செய்துள்ளோம். இப்பொழுது பாலத்திலிருந்து இறங்குவதற்கான நேரம் வந்துவிட்டது.
ரோபோ தொழில்நுட்பம் வேளாண்மையை சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக மாற்றமுடியுமா?
உலகளாவிய வேளாண் உற்பத்தியை திட்டமிடுவதற்கும், நாம் விரும்பும் இடத்திற்கு உணவை எடுத்துச் செல்லவும் இன்று நமக்கு போதிய திறன்கள் உண்டு. இந்தத் திறன்களை இப்பொழுது நாம் பெற்றுள்ளதால், பாலம் தரையிறங்குவதற்கும், மண்ணை எப்படி மறு உருவாக்கம் செய்வது என்று நாம் பார்ப்பதற்கும் நேரம் வந்துவிட்டது. நாம் மீண்டும் தாவர உயிரிகளையும், விலங்கின உயிரிகளையும் மண்ணுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும், ஆனால் விலங்குகள் இனி வேலை செய்யத் தேவையில்லை. இயந்திரங்கள் வேலை செய்கின்றன; அது என்னவென்றால், நாம் பயன்படுத்தும் இயந்திரங்கள் நிலத்தைப் பண்படுத்துவதில்லை, ஆனால் தலைகீழாக மாற்றி புரட்டுவதாகவே இருக்கின்றன.
நாம் மீண்டும் தாவர உயிரிகளையும், விலங்கின உயிரிகளையும் மண்ணுக்குத் திரும்பக் கொண்டுவர வேண்டும்
இரவும், பகலும் வேலை செய்யக்கூடிய ரோபோடிக்ஸ் விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒரு ட்ராக்டர் அல்லது மற்ற பெரிய இயந்திரங்களைப் போல் ஒட்டுமொத்த சூழலியல் அமைப்பையும் குலைக்காமல், விவசாய நிலத்தில் ஒரு ஆண் அல்லது பெண்ணைப்போல அது வேலை செய்யமுடியும். நாம் அந்த திசையில் நகரவேண்டியது அவசியம்.
இந்த இயக்கத்தை உலகளாவிய செயல்பாடாக எப்படி மாற்றம் செய்வது?
நீலம் பாண்டே: மண் காப்போம் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும்போது, என் மனதில் எழும் முதல் கேள்வி என்னவென்றால், ஒரு இயக்கத்தைத் தொடங்குவதும், அதை நீடிக்கச் செய்வதும் எவ்வளவு கடினமானது என்பதுதான். இதற்கு செல்வாக்கு நிறைந்தவர்களும், இயக்கத்தின் பின்னணியில் ஒருவிதமான அரசியல் உறுதிப்பாடும் உங்களுக்குத் தேவை.
சத்குரு: இந்த செல்வாக்கு நிறைந்தவர்கள் அம்சம் என்பது மக்களைச் செயல் செய்வதற்கு தூண்டுவதற்கானது. அது இல்லாமல், உலகமெங்கும் உள்ள நிர்வாகங்களின் கவனத்தைப் பெறமுடியாது. நிர்வாகங்களின் கவனத்தைப் பெற்றுவிட்டால், பிறகு செய்யவேண்டிய பணி முற்றிலும் வித்தியாசமான இயல்புடையது. அந்த செயல்முறையை நாங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டோம், அது ஒரு நீண்டதூர செயல்பாடு. அதுதான் உண்மையிலேயே கடினமான பணி. மேலும் அது பொதுமக்களின் பார்வையில் இருக்காது.
பேச்சாளர்: எங்களுடைய சந்தாதாரர்களில் ஒருவர் இதனை அறிந்துகொள்ள விரும்புகின்றார்… "நீங்கள் உலகளவில் தலைவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் – இந்த மண் காப்போம் பிரச்சனையின் மீது ஒரு உலகளாவிய ஒருமித்த கருத்து உருவாகிக்கொண்டு இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?”
சத்குரு: நிச்சயமாக. நான் ஐரோப்பிய யூனியன்(EU), கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பு, (CARICOM)[4], காமன்வெல்த் நாடுகள் உள்ளிட்ட 197 உறுப்பு நாடுகளும் பங்கேற்ற COP15 மாநாட்டில்கூட பேசினேன்.
சேகர் குப்தா: COP26?
சத்குரு: இல்லை, இது ஐநாவின் பாலைவனமாதலுக்கு எதிரான அமைப்பின் (UNCCD)[6] COP15.
[1] கரீபியன் கம்யூனிட்டி, 15 உறுப்பு நாடுகளின் அரசுகளுக்கிடையேயான, அரசியல் மற்றும் பொருளாதார கூட்டமைப்பு
[2] பாலைவனமாதலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் ஒப்பந்தம்
மிக முக்கியமானது பருவநிலையா அல்லது மண்ணா?
சத்குரு: எல்லா கவனமும் COP26 மீது இருப்பது ஏனென்றால் அது முற்றிலும் பருவநிலையைக் குறித்த ஐநாவின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாடு (UNFCCC)[8]. சுமார் 40% பருவநிலை மாற்றமும், புவி வெப்பமாதலும் மண் சீரழிவின் காரணமாக நிகழும்போது மண்ணிற்கு தீர்வு காணாமல் எப்படி பருவநிலைப் பற்றி பேசமுடியும்? பருவநிலை மாற்றத்தின் அறிவியல் உங்களுக்குத் தெரியவில்லை என்றால்…. இப்போது நீங்கள் டெல்லியில் இருக்கிறீர்கள். சுமாராக ஒரு மணி நேரத்துக்கு வெய்யிலில் நில்லுங்கள்; பிறகு மர நிழலுக்கு நகர்ந்து செல்லுங்கள் – பருவநிலை மாற்றம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வீர்கள். குறைந்தபட்சம் 3-4 டிகிரி வித்தியாசம் இருக்கிறது.
மண் ஈரமாக இருப்பது அவசியம்; அது மூடப்பட்டிருப்பது அவசியமானது; கோடையில் அதற்கு மூடு பயிர்களோ அல்லது மர அடிப்படையிலான விவசாயமோ தேவைப்படுகிறது
நிலத்துக்கும், நுண்ணுயிரிகளுக்கும், உயிரியக்கம் தொடர்ந்து செயல்படுவதற்கு சற்று நிழல் தேவைப்படுகிறது. மேலும் அதில் ஈரப்பதமும் இருக்கவேண்டும் – கரிமவளம் அதிகமாக இருந்தால் மட்டும் தான் இது சாத்தியம்; இல்லையென்றால், மண் வறண்டுவிடுகிறது. டெல்லியைச் சுற்றிலும் உள்ள விவசாய நிலங்களில் நீங்கள் தோண்டினால், 15 அங்குல ஆழத்திற்கு நீங்கள் சென்றால்கூட, ஒரு இம்மியளவும் ஈரப்பதம் இல்லை – அது முற்றிலும் காய்ந்துபோன எலும்பாக உள்ளது. அதாவது, அது இறந்துவிட்டது, மணலுக்கு இணையாக இருக்கிறது. மண் ஈரமாக இருப்பது அவசியம்; அது மூடப்பட்டிருப்பது அவசியமானது; கோடையில் அதற்கு மூடு பயிர்களோ அல்லது மர அடிப்படையிலான விவசாயமோ தேவைப்படுகிறது.
[1] பருவநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கொள்கை வரையறை
எதிர்காலத்தில் வரவிருக்கும் உண்மையான தீர்வு
சத்குரு: நாங்கள் 1,30,000 விவசாயிகளை மர வேளாண்மைக்கு மாற்றமடையச் செய்துள்ளோம். நீங்கள் வந்து அந்த மாற்றத்தைப் பார்க்க வேண்டும்.
சேகர் குப்தா: நான் வருவதற்கு மிகவும் விருப்பமாக இருக்கிறேன்…
சத்குரு: நீங்கள் அவசியம் வரவேண்டும். அவர்களது வருவாய் ஏறக்குறைய 300-800% உயர்ந்துவிட்டது; மண்ணின் கரிமவளம் உயர்ந்துள்ளது; பயிர்களின் ஊட்டச்சத்து மதிப்பீடு உயர்ந்துவிட்டது; நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு, குறைந்தபட்சம் 50-100 ஏக்கர்களில் மரங்கள் வளர்க்க வேண்டியிருக்கும் என்று எப்போதும் நம்பியிருந்தேன். ஆனால் 5 ஏக்கர் தோட்டத்திலேயே, நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதுதான் நிலத்தின் ஆச்சர்யமூட்டும் இயல்பு.