சிறப்புக் கட்டுரை

சத்குருவின் மண் காப்போம் பயணம் சுமார் 390 கோடி மக்களைத் தொட்டுள்ளது. ஆனால் இப்போதும் ஓய்வெடுக்க நேரமில்லை...

21 ஜூன் 2022 அன்று, சத்குரு தன்னந்தனியாக லண்டனிலிருந்து கோயம்புத்தூரிலிருக்கும் ஈஷா யோகா மையம் வரை தொடர்ந்த தனது 100 நாள் மோட்டார்சைக்கிள் பயணத்தை நிறைவு செய்தார். அவர் 27 தேசங்கள் வழியாக வண்டி ஓட்டிக்கொண்டு, 600 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவாறு, ஆன்லைனில் பல்வேறு சமூக ஊடக வலைதளங்கள் மூலம் மாபெரும் அளவிலான 390 கோடி மக்களை இதில் ஈடுபடுத்தினார். மண் காப்போம் பயணம் பற்றியும், வரவிருக்கும் மாதங்களில் என்ன காத்திருக்கிறது என்பதையும் இங்கே சத்குரு எடுத்துரைக்கிறார். பொதுவாக வாழ்க்கையைப் பற்றிய சில மிகவும் அடிப்படையான, கண்களைத் திறக்கவைக்கும் உண்மைகளையும் இங்கு வெளிப்படுத்துகின்றார்.

சத்குரு: இன்று சர்வதேச யோகா தினம். யோகா என்றால் சங்கமம். சங்கமம் என்பது ஒரு புதிய கண்டுபிடிப்போ, தத்துவமோ, அல்லது கருத்தாக்கமோ அல்ல – அதுதான் உயிரின் இயல்பு. நீங்கள் அதனுடன் ஒத்திசைந்து இருக்கலாம், அல்லது எதிர்நீச்சலிடலாம். எதிர்நீச்சலிடுபவர்கள் திரண்ட புஜங்களை வளர்க்கலாம், ஆனால் அவர்கள் எங்கும் சென்று சேரமாட்டார்கள். அதன் பொருள் என்னவென்றால், எந்த விதத்திலும் அவர்களது வாழ்க்கை பிரகாசிக்காது, நகரவும் செய்யாது. அதிகபட்சமாக, வெளி உலகில் அவர்கள் சிறிது பிரகாசிக்கலாம். ஆனால் வாழ்க்கை பிரகாசிக்காது.

வாழ்க்கை பிரகாசிப்பதற்கு, அது இணைத்துக்கொள்ளும் தன்மையில் இருக்கவேண்டும். அந்த விதமாகத்தான் வாழ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது. யோகா என்றால் சங்கமத்தில் இருப்பது என்று நான் சொன்னபோது, அது ஏதோ நான் கண்டுபிடித்தது அல்ல – அதைப்பற்றி நான் பேசத்தான் செய்தேன். தென்றல் குளுமையானது, மற்றும் ரம்மியமானது என்று நான் கூறினால், நான் அதை உருவாக்கியதாக அர்த்தமில்லை – அதை உங்களுக்கு எடுத்துக்கூறுவதை மட்டும்தான் நான் செய்கிறேன். அதைப்போலவே, மண் காப்போம் என்னுடைய கருத்து அல்ல. அது இப்போது தேவைப்படுகிறது, ஆகவே நாம் அதைச் செய்துகொண்டிருக்கிறோம்.

முதுமை அடைவதற்கு நேரமில்லை

நான் புக்காரெஸ்ட் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தபொழுது, நிகழ்ந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. அங்கு மாலை 7 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்காக நான் சென்றடைய வேண்டியிருந்தது. ஒரு ஓட்டலில் அவர்கள் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து தயார் நிலையில் இருந்தனர். ஆனால் மிகக் கடுமையான வானிலை மற்றும் மோசமான சாலைகளின் காரணமாக, தோராயமாக 5 1/2 மணி நேரப் பயணம் 9 1/2 மணி நேரத்துக்கும் மேல் ஆனது. நாங்கள் அங்கு சென்றபோது மணி 11.15. அந்த நேரத்தில் பேட்டி இருக்காது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவும், நிகழ்ச்சி நெறியாளருடன் 7 மணியிலிருந்து 11:15 வரை காத்திருந்தனர்.

நான் மோட்டார்சைக்கிளிலிருந்து இறங்கி, நேராகச் சென்று கேமராக்களுக்கு முன் நின்றேன். நிகழ்ச்சியை நான் முடித்தபோது, மணி சுமார் 1 ஆகியிருந்தது. பிறகு நான் நெறியாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் கூறினார், “சத்குரு, இந்த வயதில், நீங்கள் இதை எப்படிச் செய்கிறீர்கள்? ஒன்பது மணி நேரத்திற்கும் அதிகமாக வண்டி ஓட்டிவிட்டு, அப்படியே நேர்காணலுக்கு வந்து, இந்த எல்லா விஷயங்களையும் சரளமாகப் பேசுகிறீர்கள். இப்போதும் இங்கே நீங்கள் உட்கார்ந்துகொண்டு உற்சாகமாகக் காணப்படுகிறீர்கள்.” அந்த நெறியாளர் “இந்த வயதில்” என்ற வார்த்தையை மூன்று முறை மீண்டும் மீண்டும் கூறினார், அதை நான் விரும்பவில்லை.

வாழ்க்கை பிரகாசிப்பதற்கு, அது அனைத்தையும் அரவணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும். அப்படித்தான் வாழ்க்கை உருவாக்கப்பட்டுள்ளது.

நான் கூறினேன், “பாருங்கள், என் வாழ்க்கையை நான் அதிதீவிரமாக வாழ்ந்துள்ளேன். வயதாவதற்கு எனக்கு ஒருபோதும் நேரம் கிடைத்ததில்லை.” முதுமை அடைவதற்கு, நிறைய நேரம் தேவை; அதற்காக உட்கார்ந்து வயதாகவேண்டும். 28 வருடங்களுக்கு முன்னர், இளைஞர்களாக, அவர்களது 18-20 வயதுகளில் என்னிடம் வந்த பலரும் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர். இப்போது சிலர் அவர்களது நாற்பதுகளில், சிலர் அவர்களது ஐம்பது, அறுபதுகளில் இருந்துகொண்டு, அதேவிதத்தில் இன்னமும் சுழன்று ஓடியவாறு இருக்கின்றனர். நான் இன்னமும் அவர்களை பையன்கள் என்றுதான் அழைக்கிறேன், மேலும் அவர்கள் இன்னமும் பையன்களைப்போலேவே நடந்துகொள்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு உட்காரவும், முதுமை அடையவும் நேரம் இல்லாமல் இருப்பதை நான் உறுதி செய்துகொண்டேன்.

உங்களுக்கு நேரம் இருந்தால், நீங்கள் உயிரோட்டமாக இல்லை என்பதே அதன் பொருள். வாழ்ந்துகொண்டே இறந்துவிட்ட ஒரு நபருக்குத்தான் நேரம் இருக்கிறது. இல்லையென்றால், வாழ்க்கை உங்களை ஈடுபடுத்தும் – அது செயல்பாட்டில் இருக்கவேண்டிய அவசியமில்லை, வெறுமனே கவனம் செலுத்துவதில்.

வாழ்க்கை உங்களைக் கடந்து செல்வதை எப்படித் தடுப்பது

ஒரு மோட்டார்சைக்கிளை ஓட்டுவது என்பது கணத்துக்குக் கணம் கூர்கவனம் தேவைப்படுகின்ற ஒரு விஷயம். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் செல்லும்போது, ஒரு கணத்துக்கு உங்கள் கவனம் அங்கே இல்லையென்றாலும், நீங்கள் அங்கே இல்லாமல் போவீர்கள். நீங்கள் கூர்மையான கவனத்துடன் இருந்தாலும்கூட, சில நேரங்களில் அது இன்னமும் உங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்கக்கூடும். கூர்கவனம் என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப்பற்றி அல்ல. உங்களால் குறிப்பிட்ட விஷயங்கள் அல்லது குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் கவனம் செலுத்தமுடியும் என்றால், அந்த முன்முடிவு சார்ந்த கவனம், பிரித்துப்பார்க்கும் தன்மையினால் வருகிறது. கூர்கவனம் ஒளியைப் போன்றது. அது இங்கு உள்ள அனைத்தையும் ஒளிரச்செய்கிறது.

கூர்கவனத்தின் இயல்பு முன்முடிவுக்கு உட்பட்டதல்ல, ஆனால் நீங்கள் அதை முன்முடிவுக்கு உட்படுத்தும் கணமே, அதாவது முக்கியமானது என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களுக்கு, அல்லது உங்களுடையது என்று நீங்கள் நினைக்கும் விஷயங்களுக்கு மட்டும் நீங்கள் கவனம் செலுத்தினால், அப்போது வாழ்க்கை உங்களைக் கடந்துச் செல்லும். நீங்கள் பல விஷயங்களையும் செய்யக்கூடும், ஆனால் வாழ்க்கை உங்களைக் கடந்துச் செல்லும். ஒருவேளை, உங்கள் உடலின் சுவையை நீங்கள் அறிந்திருக்கலாம்; உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளின் சுவையை நீங்கள் அறிந்திருக்கலாம்; உங்களைச் சுற்றியுள்ள பொருட்களின் சுவையை நீங்கள் அறிந்திருக்கலாம்; ஆனால் நிச்சயமாக வாழ்வின் சுவையை நீங்கள் அறியமாட்டீர்கள்.

மேலும், உங்களுக்கு இருக்கும் ஒரே விஷயம் வாழ்க்கை மட்டுமே. மற்ற விஷயங்கள் அனைத்தும், உங்கள் தலைக்குள் இருக்கும் அடிமுட்டாள்தனம்தான். இந்த முட்டாள்தனம் அனைத்தையும் வெளியே வைத்தால், வாழ்க்கை துடிக்கும். உங்கள் வாழ்க்கை துடிக்கும்போது இது ஒரு வாழும் பிரபஞ்சம்.

சத்குருவின் தளர்வறியா சக்தியின் இரகசியம்

மக்கள் எப்போதும் என்னைக் கேட்கின்றனர், “சத்குரு, உங்களுக்கு இந்த சக்தி எங்கிருந்து கிடைக்கிறது?’

நான் கூறினேன், “உங்களுக்கு நீங்களே ஏன் மறுத்துக்கொள்கிறீர்கள்? ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சக்தி தான். உங்களுடைய கூண்டுக்குள் நீங்களே ஏன் அடைபட்டுக்கொள்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கை ஒரு திறந்த வாசலாக இருந்தால், சக்திக்கு தட்டுப்பாடு என்பதே இல்லை. ஆனால் உங்களை நீங்களே இறுகிய வார்ப்பாக உருவாக்கிக்கொண்டால், அப்போது எல்லாமே வலி மிகுந்ததாக இருக்கிறது, ஒவ்வொன்றும் தொந்தரவாக இருக்கிறது, எல்லா விஷயமும் பிரச்சனையாக இருக்கிறது. உங்களை சந்தோஷப்படுத்தவேண்டும் என்றால், முழு கிரகத்தையும் தோண்டி எடுக்கவேண்டும். அதனால் தான், மண் காப்போம் இயக்கம்.

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சக்தி தான்

உங்கள் இயல்பினாலேயே எப்படி ஆனந்தமாகவும், பரவசமாகவும் இருப்பது என்பது உங்களுக்குத் தெரிந்தால், மண் காப்பதற்கு என்ன தேவை இருக்கப்போகிறது? மனிதர்கள் தங்களது இயல்பிலேயே ஆனந்தமானவர்களாக இருந்திருந்தால், சுற்றிலும் என்ன நிகழ்கிறது என்று அவர்கள் கவனிப்பார்கள். ஆனால் ஒருவரும் எந்த ஒரு விஷயத்தையும் கவனிப்பதில்லை. ஒவ்வொருவரும் என்னைப் பார்த்து, ”சத்குரு, நீங்கள் எப்படி மண் விஞ்ஞானியானீர்கள்? நீங்கள் எப்படி ஒரு சூழலியலாளரானீர்கள்?” என்று கேட்கின்றனர்.

நான் ஒரு மண் விஞ்ஞானி அல்ல; நான் ஒரு சூழலியலாளர் அல்ல; நான் சுற்றுச்சூழலாளரோ அல்லது அது குறித்த செயல்பாட்டாளரோகூட அல்ல. இந்த பூமியில் நான் ஒரு புழுவைப் போல இருக்கிறேன். சுமார் 65 ஆண்டுகளாக ஊர்ந்து சுற்றிக்கொண்டு இருக்கிறேன் – என்ன நிகழ்கிறது என்று எனக்கு எப்படித் தெரியாமல் இருக்கும்? இப்போது மக்கள் கூறலாம், “ஓ, நாங்களும்கூட இங்கேதான் இருந்துள்ளோம்,” என்று. ஆனால் பெரும்பாலான நேரம், நீங்கள் இந்த உலகத்தில் இருப்பதில்லை – உங்களுக்கே உரிய உலகம் ஒன்று உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் உயிர்ப்புடனும் துடிப்புடனும் கூடிய உண்மையான உலகத்தை நீங்கள் இன்னமும் தொடவில்லை, உங்களுக்கே உரிய ஒரு சின்ன உலகத்தை நீங்கள் உருவாக்கிக்கொண்டுள்ளீர்கள்.

உங்களுக்குத் தேவை, வாழ்வின்மீதான காமம்

உங்களுக்கு நீங்களே உருவாக்கியிருக்கும் அந்த உலகம், ஒரு சிறிய அற்பமான உலகம். அதை நீங்கள் குடும்பம், தேசம், சமுதாயம், நட்பு வட்டம், மனமகிழ் மன்றம், அல்லது சமூகம் என்று எப்படியும் அழைத்துக்கொள்ளலாம். ஆனால் அது ஒரு அற்பமான சிறிய உலகம், ஏனென்றால் அதை துண்டு மற்றும் துணுக்குகளை கொண்டு நீங்கள் அறிந்தவரையில், உருவாக்கினீர்கள். ஆனால் வாழ்க்கை அதைப் போன்றதல்ல. வாழ்க்கையானது படைப்பின் பிரம்மாண்டம். உயிரோட்டமாக, மண்ணிலிருந்து முளைத்தெழும் ஏதோ ஒரு தாவரத்தை, அதன் அருகில் சென்றுதான் பாருங்களேன் - அது எவ்வளவு உயிர்ப்புடன், அதிர்வு ததும்ப இருக்கிறது என்பதை. இந்த அனுபவம் உங்கள் வாழ்க்கைக்குள் வரவில்லையென்றால், நீங்கள் இதுவரை வாழ்ந்திருக்கவில்லை என்பதுதான் அதன் அர்த்தம்

உங்கள் கூர்கவனம் எப்போதும் செயல்பாட்டில் இருந்தால், அடையமுடியாதது என்று எதுவுமில்லை

இதற்கு வாழ்க்கை மீதான காமம் தேவை. நான் மிகுந்த விழிப்புணர்வோடு இந்த வார்த்தையை உபயோகப்படுத்துகிறேன், ஏனெனில் காமம் அன்பைவிடவும் அதிக நிர்ப்பந்தமானது; காமம் ஆசையை விட அதிக நிர்ப்பந்தமானது. உங்களுக்குத் தேவை ஹார்மோன் தூண்டுதலில் எழும் காமமில்லை, வாழ்க்கை மீதான காமம். அப்போது உங்கள் கவனம் சூரியன் போல் பிரகாசிக்கும். நீங்கள் விழித்திருந்தாலும் அல்லது உறக்கத்தில் இருந்தாலும், அது எப்போதும் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது. உங்கள் கூர்கவனம் எப்போதும் செயல்பாட்டில் இருந்தால், அடையமுடியாதது என்று எதுவுமில்லை. உணரமுடியாதது என்று எதுவுமில்லை. செய்யமுடியாதது என்று ஒன்றுமில்லை. அதற்கு, உங்களின் ஆர்வமும் செய்வதற்கு எந்த அளவுக்கு நீங்கள் விருப்பத்துடன் இருக்கிறீர்கள் என்பதும் மட்டுமே கேள்வி.

மண் காப்போம் இயக்கத்துக்கான அடுத்தகட்ட நகர்வு என்ன?

அந்த அபாயகரமான பயணம் முடிந்துவிட்டது. ஆனால் இப்போதிருந்துதான் உண்மையிலேயே கடினமான பணி தொடங்குகிறது. யோகா மையத்தில் நான் நான்கு தினங்களுக்கு மட்டுமே இருக்கிறேன்; அதன் பிறகு நாங்கள் யுகே, அமெரிக்கா, கரீபியன் நாடுகள், மற்றும் தென் அமெரிக்காவுக்கு பயணிக்கிறோம், ஏனெனில் இந்த நாடுகள் அனைத்தும் மண் காப்பதை மேற்கொண்டு செயல்படுத்தத் தயாராக இருக்கின்றன. ஆனால் இந்த நாட்களில் அவர்கள் ஒரு நிபந்தனை இடுகின்றனர்: “நீங்கள் வந்தால், நாங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு, அதை முன்னெடுத்துச் செல்கிறோம். நீங்கள் வரவில்லை என்றால், நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்று. அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு, 20 க்கும் அதிகமான நாடுகளுக்கு நான் பயணிக்கிறேன் என்று நினைக்கிறேன், ஏனென்றால் இப்பொழுது அடுத்தகட்ட செயல்பாடு நிகழவேண்டும்.

என் கணிப்பின்படி, ஏறக்குறைய 12 இலிருந்து 18 மாதங்களில், பெரும்பாலான தேசங்களை, ஏதோ ஒரு விதமான மண் சீரமைப்புக் கொள்கையை நோக்கி நகர்த்தமுடியும். இது நிகழ்வதற்கு, உங்களது குரல்கள் ஓங்கி உயர்ந்து, ஒலித்துக்கொண்டே இருக்கவேண்டும். ஒரு நாள் முழக்கமிடுவதும், அடுக்குமொழி வாசகம் பேசுவதும், வேண்டுகோள் விடுப்பதும் பயன்தராது. இதற்கு ஓய்வில்லாத உறுதியும், பொறுப்பும் தேவை. குறைந்தபட்சம் அடுத்த 12 மாதங்களுக்கு, மண் காப்போம் செய்தியை ஒரு நாளில் குறைந்தபட்சம் 10-12 நிமிடங்களுக்கு மற்றவர்களிடம் பரப்புவது உங்களது தினசரி பூஜையாக இருக்கவேண்டும்.