சத்குரு: ஒருவர் தனது ஆழமான புரிதலுணர்வை மேம்படுத்துவதில் முனைப்புடன் இருந்தால், அப்போது ஆகாயம் முக்கியமாகிறது. பேச்சு வழக்கில், “ஆகாயம்” என்ற சொல்லுக்கு “வானம்” என்பது பொருள். இதனுடைய அர்த்தம் சரியானது என்றாலும் பெரும்பாலான மக்களின் புரிதலில் இது சரியானதல்ல, ஏனென்றால் அவர்கள் பொதுவாக வானம் என்பதை ஒருவிதமான கூரையாகத்தான் புரிந்துவைத்துள்ளனர். வானம், ஒரு கூரையல்ல, அது வளிமண்டலத்தைச் சுற்றிலும் இருக்கின்ற பரவெளி சக்தியின் ஒரு விளைவாக இருக்கிறது.
ஆகாயத்தை, வெற்றுவெளி என்றும் குறிப்பிடலாம். ஒவ்வொரு ஸ்தூல உடலும் ஏதோ ஒருவிதத்தில் இடையறாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த இயக்கத்தில், ஒரு சிறிதளவு எரிந்துகொண்டிருக்கிறது. ஏதோ ஒன்று உங்களுக்கு குளிர்ச்சியாகத் தோன்றக்கூடும், ஆனால் அது எரிந்துகொண்டுதான் இருக்கிறது, ஏனெனில் அதன் அணு துகள்கள் ஒரு இயக்கத்தில் இருக்கிறது.
வெற்றுவெளி – அனைத்தையும் கடந்து இருப்பதற்கான ஒரு வாயில்கதவு
ஒவ்வொரு ஸ்தூல பொருளும், அதைச் சுற்றிலும் ஒரு வெற்றுவெளி மண்டலத்தைக் கொண்டுள்ளது. ஒரு பாறையை, ஒரு மனிதரை, தாவரங்களை, கிரகங்களை அல்லது மற்ற பெரிய விண்பொருட்களை என எதை எடுத்துக்கொண்டாலும் ஒவ்வொன்றும் அவற்றைச் சுற்றிலும் ஒரு வெற்றுவெளி மண்டலத்தைக் கொண்டுள்ளது. துரதிருஷ்டவசமாக, நாம் அதில் பல துளைகள் போட்டு, பூமிக்கிரகத்தின் பரவெளி மண்டலத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கிறோம் – நாம் ஓசோன் பற்றி பேசவில்லை – அதற்கான ஒரு விலை நிச்சயமாக இருக்கும். ஏற்கனவே பல வழிகளிலும் நாம் அதற்கான விலையை கொடுக்கத் தொடங்கிவிட்டோம், ஆனால் பூமியின் வளிமண்டல குமிழியைச் சுற்றியிருக்கும் வெற்றுவெளியை சீர்குலைப்பதற்கு செலுத்தும் விலை மிக மோசமானதாக இருக்கக்கூடும்.
ஒவ்வொரு ஸ்தூல பொருளும், அதைச் சுற்றிலும் ஒரு வெற்றுவெளி மண்டலத்தைக் கொண்டுள்ளது.
உங்கள் உடல்கூட அதைச் சுற்றிலும் ஒரு வெற்றுவெளிக் குமிழியைக் கொண்டுள்ளது. எவருடனும் உடல்ரீதியான தொடர்பு கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட உடலியல் தூய்மையை பராமரிப்பதற்கான ஒரு முக்கியமான காரணம் என்னவென்றால், உங்கள் வெற்றுவெளி மண்டலம் குலைக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை, ஏனென்றால் நீங்கள் மேம்பட்ட புரிந்துணர்தலுக்கான முழு முயற்சியில் இருக்கிறீர்கள். உங்களது புரிந்துணரும் திறன் மேம்படுவதற்காக, உங்கள் வெற்றுவெளி மண்டலத்தை வலிமைப்படுத்த விரும்புகிறீர்கள். அதுதான் பிரம்மச்சரியத்தின் முழுமையான அடிப்படையாக இருக்கிறது. இது பூமிக்கிரகம் மற்றும் மனித உடல் இரண்டுக்கும் முக்கியமானது, ஆனால் நாம் அதைக் குறித்து கவனம் கொள்வதில்லை.
ஸ்தூலத்தன்மையை தாண்டிய ஏதோ ஒன்றை நீங்கள் புரிந்துணரவில்லை என்றால், நீங்கள் மிக அற்பமானதொரு வாழ்க்கையை வாழ்வீர்கள், ஆனால் உங்களது அற்பத்தனம் குறித்து நீங்கள் பெருமிதத்தில் இருப்பீர்கள். இது எல்லா இடங்களிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வாழ்வின் ஒட்டுமொத்த அனுபவமும் உங்களுக்கு உடல்தன்மையின் எல்லைக்கு உட்பட்டதாகவே இருக்கும்பொழுது, நீங்கள்தான் பிரபஞ்சத்தின் மையமாக இருப்பதாக நினைத்துக்கொள்கிறீர்கள். ஆனால் நீங்கள், நான் மற்றும் அனைவரும் அடுத்த கணமே நசுக்கப்பட்டுவிடக்கூடும். இந்த பூமிக்கிரகம் சிதறக்கூடும். நமது வாழ்நாளில் அது நிகழாமல் இருக்கலாம், ஆனால் ஒருநாள் அது உடைந்து விழும்.
உங்கள் புலன் உணர்ச்சியின் புரிதல் தாண்டி வேறொன்றைப் புரிந்துணர்ந்து, ஸ்தூலத்தன்மை அல்லாத ஒரு பரிமாணத்தைத் தொடமுடிவது ஒரு மனிதருக்கு மிகவும் முக்கியமானது. மற்ற அனைத்து உயிரினங்களும், அது ஒரு நாய், பூனை, பன்றி அல்லது பசுவாக இருந்தாலும், நீங்கள் குறுக்கீடு செய்தால் தவிர, அவைகள் அவற்றின் வாழ்வை முழுத்திறனுக்கு வாழ்கின்றன. மனிதன் மட்டும்தான் சுய வரம்புகளை விதித்துக்கொள்கிறான். ஒருவரும் உங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது உங்களை சிறையில் வைக்கவோ தேவையில்லை; உங்களுக்கு நீங்களே அதைச் செய்துகொள்வதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறீர்கள். அந்தத் தடையை உடைப்பதற்கு, புலன் உணர்ச்சியின் புரிதலைத் தாண்டிய ஒரு புரிதல் உங்களுக்குத் தேவை. அதற்கு, உங்களுக்கு ஆகாயம் தேவை.
உங்கள் புலன் உணர்ச்சியின் புரிதல் தாண்டி வேறொன்றை புரிந்துணர்ந்து, ஸ்தூலத்தன்மை அல்லாத ஒரு பரிமாணத்தைத் தொடமுடிவது ஒரு மனிதருக்கு மிகவும் முக்கியமானது.
ஆகாயம் அல்லது வெற்றுவெளி மக்களால் துதிபாடப்படுவது ஏனென்றால், அது ஸ்தூலத்தன்மையுடன் தொடர்பில்லாத புரிதலைப் பற்றியது. பிழைப்பினைக் கடந்து நீங்கள் சிந்திக்கத் தொடங்கும்பொழுது மட்டும்தான், இந்த விஷயங்கள் உங்களுக்குத் தொடர்புடையதாக இருக்கும்.
உங்களுக்கே உரித்தான வெற்றுவெளி மண்டலத்தைக் கண்டுபிடித்தல்
உங்களுடைய வெற்றுவெளிக் குமிழி (etheric bubble) இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு ஒரு வழி இருக்கிறது. அந்த புள்ளியைத் தொடுவதற்கு, அதை நோக்கி ஒரு குறிப்பிட்ட கவனம் உங்களுக்குத் தேவை. உடல்தன்மை கடந்து உங்கள் புரிதலை நீங்கள் மேம்படுத்தினால்தான், பிரபஞ்சத்தில் நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் அனைத்தையும் அறிவது சாத்தியம். தற்போது, பொருள்தன்மையாக இருப்பதை மட்டும்தான் உங்கள் கண்களால் பார்க்க முடிகிறது, அல்லது, வேறு வார்த்தைகளில் கூறவேண்டும் என்றால், ஒளியைத் தடுத்து நிறுத்தும் பொருட்களை மட்டும்தான் பார்க்கிறீர்கள். இது புலன் உறுப்புகளின் தன்மை. வெற்றுவெளி உங்கள் கண்களுக்குத் தென்படுவதில்லை, ஆனால் பொருள்தன்மை அல்லாத பரிமாணங்களை நீங்கள் பார்க்கவும், உணரவும், அனுபவிக்கவும் தொடங்கினால், அந்தத் திசையில் ஒவ்வொன்றும் மலரத் தொடங்கும்.
பொருள்தன்மை எல்லைக்குட்பட்டது – பொருள்தன்மை அல்லாதது எல்லையில்லாதது. நீங்கள் பொருள்தன்மையை எல்லையில்லாமல் செய்வதற்கு முயற்சித்தால், உங்களையும், உங்களைச் சுற்றியிருக்கும் உலகத்தையும் நீங்கள் அழித்துவிடுவீர்கள். அதுதான் தற்போது உலகத்தில் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது. நீங்கள் பொருள் கடந்த ஒன்றைத் தொட்டால், இயல்பாகவே நீங்கள் எல்லையில்லாதவராக இருக்கிறீர்கள். பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்களுடைய வெற்றுவெளிப் புள்ளி என்பது அவர்களின் புருவமத்தியில் இருந்து 15-21 அங்குலங்களுக்கு இடையில் எங்கோ இருக்கிறது. இந்தப் புள்ளி ஒருவரது முழுமையான புரிதலுக்கான வாயிலைத் திறந்துவிடுகிறது. உடனே அந்தப் புள்ளியை நீங்கள் கண்டுபிடிக்க மாட்டீர்கள்; அதற்கு சிறிது பயிற்சி தேவை. ஆகாயம் சூட்சுமமான, எங்கும் வியாபித்திருக்கும் ஒன்று.
ஸ்தூல தன்மையைத் தாண்டியிருக்கும் ஒரு பரிமாணத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும் ஊடகமாக ஆகாயம் இருக்கிறது.
ஸ்தூல தன்மையைத் தாண்டியிருக்கும் ஒரு பரிமாணத்துக்கு உங்களை எடுத்துச் செல்லும் ஊடகமாக ஆகாயம் இருக்கிறது. அது பொருள்தன்மை இல்லாததில் இருந்து, பொருள்தன்மைக்கான ஒரு பாதுகாப்பாக இருக்கிறது. ஆகாயம் ஒரு குமிழியாக இருக்கிறது. அது இல்லாவிட்டால் நாம் இருக்கமாட்டோம். அது ஒரு சுவராக, ஒரு மெல்லிய குமிழியாக இருக்கிறது, ஆனால் அதே நேரத்தில், அது ஒரு வாகனமாகவும், ஸ்தூல தன்மையைத் தாண்டி செல்வதற்கு ஒரு சாத்தியமாகவும் இருக்கிறது.
உங்களைப் பற்றிய பொருள்தன்மையானவை அனைத்தும் சேகரிக்கப்படுகிறது. உங்களுக்கும், உடலுக்கும் இடையிலும், மற்றும் உங்களுக்கும் மனதுக்கும் இடையிலும் ஒரு சிறு வெற்றிடம் அல்லது இடைவெளி இருந்துவிட்டால், ஸ்தூல தன்மை அல்லாததை உணரும் சாத்தியத்தை அந்த வெற்றிடமே திறந்துவிடும். நீங்கள் ஸ்தூல தன்மை அல்லாததைத் தொட்டுவிட்டால், நீங்கள் யாராக இருக்கிறீர்களோ அதற்கு ஒரு எல்லையில்லாத உணர்வு இருக்கும். இதை நீங்கள் ஒவ்வொருவரும் அறியவேண்டும் என்பது என் விருப்பமும், ஆசியுமாக இருக்கிறது. நீங்கள் இந்த மனித வடிவத்தில் இங்கே வந்திருக்கும் நிலையில், சேகரிக்கப்பட்ட உடல்தன்மை தாண்டி என்ன இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளாமல் இங்கிருந்து நீங்கள் போகக்கூடாது.