யோகா & ஞானம்

யோகா என்றால் என்ன? ஜோ ரோகனும், சத்குரு அவர்களும் ஒளிவு மறைவில்லாமல், இதயத்திலிருந்து பேசுகின்றனர்

சர்வதேச யோகா தினம், ஜூன் 21 அன்று வரவிருக்கிறது! இதனை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறீர்களா? யோகா என்றால் உண்மையில் அது எதைப் பற்றியது என்பதற்கான உங்களின் தெளிவான புரிதலுக்கு, ஜோ ரோகன் - வலையொளியாளர் (போட்காஸ்டர்), UFC குத்துச்சண்டை வர்ணனையாளர் மற்றும் நகைச்சுவையாளர், அவர்களிடம் யோகா குறித்து எடுத்துரைத்த சத்குரு அவர்களின் விளக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

அனைவரின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற “ஜோ ரோகன் அனுபவம்” என்ற வெற்றிகரமான வலையொளி நிகழ்வில், சொர்க்கத்திலிருந்து மண் வரைக்கும் பல தலைப்புகள் விவாதிக்கப்பட்ட அவர்களின் உரையாடலில் இருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜோ ரோகன்: முதலில் நாம் யோகா பற்றி பேசலாம்.

சத்குரு: அமெரிக்காவில் “யோகா” என்னை பயமுறுத்துகிறது. ஏனெனில் இங்கே, யோகா என்றால் நீங்கள் ஒரு மீதமான நெளிந்துகிடக்கும் நூடுல் போலத் தோன்றவேண்டும். யோகா என்றால் இணைதல் என்று பொருள். நாம் மண் குறித்துப் பேசினோம். அந்த மண்ணிலிருந்துதான் நீங்கள் முளைத்திருக்கிறீர்கள். அதை நீங்கள் உணராமல் இருக்கலாம், ஏனெனில் நீங்கள் ஒரு நாற்காலி மீது அமர்ந்திருக்கிறீர்கள்; நீங்கள் காலணிகள் அணிந்துகொண்டு சுற்றிவந்து கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ஒரு மரம் போல் நீங்கள் உருவாக்கப்பட்டிருந்தால், நீங்கள் மண்ணின் ஒரு பகுதியாக இருப்பதை தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.

பெரும்பாலான மக்கள், அவர்களைப் புதைக்கும்போதுதான், தாங்கள் மண்ணின் ஒரு பகுதியாக இருப்பதைப் புரிந்துகொள்கின்றனர். அடிப்படையில், நீங்கள் அதன் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறீர்கள், ஆனால் அப்படி நீங்கள் அதை உணர்வதில்லை. இது மண்ணுடன் மட்டும்தான் என்பதில்லை - ஒட்டுமொத்த படைப்புடனும், பிரபஞ்சத்துடனும்கூட இது பொருந்துகிறது. இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் உடலின் ஒவ்வொரு அணுஉட்துகளும் உண்மையில் மற்ற அனைத்துடனும் தொடர்பில் இருந்துகொண்டிருக்கிறது என்று நவீன விஞ்ஞானம் இன்று புரிதலுக்கு வந்துள்ளது. ஆனால் பெரும்பாலான மக்களிடத்தில் அப்படிப்பட்ட ஒரு உணர்தல் இல்லை.

பரவசத்தின் அனுபவம்

நான் 25 வயதாக இருந்தபொழுது, என் உடலின் ஒவ்வொரு அணுவும் பரவசத்தால் நனைந்துகொண்டிருந்த ஒரு அனுபவத்தில் நான் வெடித்தெழுந்தேன். ஒரு பாறை மீது அமர்ந்திருந்த நான், அந்த மாதிரி வெடித்தெழுந்தேன். என் வாழ்வில் முதல்முறையாக, கண்ணீர் பெருகிக்கொண்டிருந்தது. அந்த உணர்விலிருந்து வெளிவந்தபோது, 10-12 நிமிடங்கள் கழிந்திருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஏறக்குறைய 4½ மணி நேரங்கள் கடந்திருந்தது; கண்ணீரினால் எனது மேல்சட்டை நனைந்திருந்தது.

“எனக்கு என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது? எனக்கு மனம் எதுவும் பிறழ்ந்துவிட்டதா என்ன?” என்று நினைத்தேன். பொதுவாக பிரபஞ்சத்தின் எல்லா விஷயங்களைக் குறித்தும் எனக்கு சந்தேகங்கள் உண்டு. குடும்ப அமைப்பு, சமூகம், மதம், அரசியல், பொருளாதாரங்கள் என்று எல்லாவற்றையும் பற்றி என்னிடம் கேள்விகள் இருந்தன.

ஜோ ரோகன்: என்ன நிகழ்ந்துகொண்டிருந்ததாக நீங்கள் நினைக்கிறீர்கள்?

சத்குரு: என் நெருங்கிய நண்பர்களிடம் நான் கூறினேன், "எனக்கு ஏதோ நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நான் பரவசத்தில் நிறைந்திருக்கிறேன்.”

அதற்கு அவர்கள், “ஏய், உனக்கு என்ன ஆயிற்று? ஏதாவது அருந்திவிட்டாயா? போதை அளிக்கும் மாத்திரை எடுத்தாயா?” என்று கேட்டனர்.

என் அனுபவத்துக்கு எதுவும் தொடர்பில்லை என்று பிறகு நான் அறிந்துகொண்டேன். அதனால், எனக்குள்ளாகவே மேன்மேலும் அதிகமாக நேரம் செலவழிக்கத் தொடங்கினேன். என் மனதிலிருந்து முற்றிலுமாக நான் விலகியிருந்தால், என் உடலின் ஒவ்வொரு அணுவும் பரவசத்துடன் வெடித்தெழுகிறது என்பதை நான் உணர்ந்தேன். அதை எப்படிச் செய்வது என்று எனக்குள் நான் ஒருங்கமைத்தேன். பிறகு நான் நிதானமாக அமர்ந்து சிந்தித்து, ஒரு திட்டம் வகுத்தேன். “இரண்டரை வருட காலங்களில், நான் ஒட்டுமொத்த உலகத்தையும் பரவசப்படுத்திவிடுவேன்”, என்று அப்போது உறுதியாக இருந்தேன். இப்போது, நாற்பது வருடங்கள் கழித்து, இங்கே நின்றுகொண்டிருக்கிறேன்.

உங்கள் வாழ்வை மாற்றும் காலம் குறித்த ஒரு உணர்தல்

உலகத்திலேயே சிறந்த விஷயத்தை நீங்கள் மக்களுக்கு வழங்கினாலும், அதன் முக்கியத்துவம் புரியாமல், அதைச் சுற்றி வட்டமிட்டு சுழன்று சுழன்று சென்றுகொண்டிருப்பார்கள், ஏனெனில் அவர்கள் வேறு ஏதேதோ விஷயங்களில் மிக ஆழமாக வேரூன்றி இருக்கின்றனர் என்பதை உணர்வதற்கு எனக்கு சில காலம் தேவைப்பட்டது. ஒவ்வொரு இதயத்துடிப்புடனும் வாழ்வு நழுவிக்கொண்டிருப்பதை அவர்கள் உணர்வதில்லை. அவர்களது ஆயுட்காலம் கடந்துகொண்டிருக்கிறது, அதிலிருந்து சிறந்ததை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது என்ற விழிப்புணர்வு தினசரி அளவில் மக்களிடம் இல்லை.

அவர்களது ஆயுட்காலம் கடந்துகொண்டிருக்கிறது, அதிலிருந்து சிறந்ததை உருவாக்க வேண்டிய தேவையுள்ளது என்ற விழிப்புணர்வு தினசரி அளவில் மக்களிடம் இல்லை.

உங்களுக்குள் பிரபஞ்ச முழுமையை உருவாக்கும் ஒரு சீரமைப்பு

ஜோ ரோகன்: எல்லாவற்றின் இயல்புகளையும் குறித்து நீங்கள் உணர்ந்ததும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் நிகழ்ந்திருக்கலாம். தற்செயலான வகையில் நடக்கும் சங்கமம் போல் அனைத்தும் ஒன்றாக நிகழ்ந்தன. அப்படியா?

சத்குரு: அவற்றை மீண்டும் திரும்பிப் பார்க்கும்போது, எல்லாமே திட்டமிட்டு அமைந்தது போல் இருக்கிறது. அந்த நேரத்தில், அவை அனைத்தும் அற்புதமான விபத்துகளாக நிகழ்ந்தன.

ஜோ ரோகன்: ஆமாம், சில நேரங்களில் அப்படி நிகழ்வதுண்டு, இல்லையா? நீங்கள் சரியான பாதையில் இருக்கும்போது, அற்புதமான விபத்துகள் நிகழ்வதாகத்தான் தோன்றுகிறது.

சத்குரு: உங்கள் உடலை அனைத்து படைப்புகளுடனும் வடிவியல்ரீதியான ஒத்த தன்மையை அடையச் செய்வது யோகாவின் ஒரு அம்சம். நீங்கள் வடிவியல் ரீதியாக ஒத்திருந்தால், உங்கள் அனுபவம் தனிப்பட்டதாக இல்லாமல், பிரபஞ்ச அளவில் விரிந்து இருக்கிறது.

உங்கள் புலன் உணர்ச்சி உடலை விரிவடையச் செய்வதால் என்ன நிகழ்கிறது?

உங்களுக்கும், நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலிக்கும் இடையே என்ன வித்தியாசம்? “இது நான்” மற்றும் “அது நான் அல்ல” என்று எடுத்துரைக்கும் உங்கள் உணர்வில்தான் வித்தியாசம் இருக்கிறது. ஆகவே அடிப்படையில், “நான்” என்று நீங்கள் அழைப்பது எதுவோ, அது உணர்ச்சிகளின் ஒரு குறிப்பிட்ட எல்லையாக இருக்கிறது.

ஆனந்தம் அல்லது பரவசத்தினால், உங்களையே நீங்கள் அளவற்ற உற்சாகத்தில் ஆழ்த்திக்கொண்டால், உணர்ச்சி உடல் விரிவடைகிறது

நீங்கள் எதையாவது உத்வேகத்துடனோ அல்லது தீவிரமாகவோ செய்தால், சட்டென்று உங்கள் உணர்ச்சியின் எல்லைகள் உடைபட்டு, ஏதோ ஒன்று பீறிட்டெழுவதை உணர்கிறீர்கள். உணர்வின் எல்லை இப்படி உடைபடுவதே யோகா. உங்கள் புலன் உணர்ச்சி உடலை இந்த அறைக்கு சமமாக உங்களால் பெரிதாக்க முடிந்தால், இந்த அறையில் இருக்கும் ஒவ்வொன்றையும் உங்களைப்போல் நீங்கள் உணரக்கூடும்.

ஆனந்தம் அல்லது பரவசத்தினால், உங்களையே நீங்கள் அளவற்ற உற்சாகத்தில் ஆழ்த்திக்கொண்டால், உணர்ச்சி உடல் விரிவடைகிறது. பிரபஞ்சத்தைப் போல் பெரிதாக இருக்கும் அளவுக்கு உங்கள் உணர்ச்சி உடலை நீங்கள் விரிவுபடுத்தினால், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் உங்களைப்போலவே நீங்கள் உணர்வீர்கள். இதுவே யோகா. உங்கள் பௌதிக உடலும், உங்கள் உணர்ச்சி உடலும் ஒன்றோடொன்று சிக்கிவிடாமல் இருக்குமளவுக்கு உடலை தளர்த்துவதற்காகவே முறுக்குவதும், திருப்புவதும், சுவாசத்தை நிறுத்துவதும் பயிற்சியாக செய்யப்படுகிறது. இதனால் உணர்ச்சி உடல் விரிவடைய முடியும்.

முக்கியமாக, வாழ்வின் அனுபவத்தை அளிக்கும் உணர்ச்சி உடலுக்கு, ஒரு சாரக்கட்டு போல் பௌதிக உடல் செயல்படுகிறது. உங்கள் உணர்ச்சி உடல் விரிவடைந்தால், இந்த அறை முழுவதும் அல்லது கட்டிடம் அல்லது முழு நகரத்தையும் உங்களைப்போல் உணர்வீர்கள். இதுதான் யோகாவின் நோக்கம். யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றை உங்களின் ஒரு பாகமாக நீங்கள் உணர்ந்துவிட்டால், எந்த நல்லொழுக்கத்தையும் உங்களுக்கு எவரும் கற்பிக்கவேண்டியதில்லை. உங்களைப் போலவே உணரும் ஒன்றுடன் உங்களுக்கு முரண்பாடு இருப்பதில்லை. யோகா என்பதன் பொருள் இதுதான். இதற்கென பல்வேறு செயல்நுட்பங்கள் உள்ளன. ஒருவர் அதை எவ்வாறு அடையக்கூடும் என்பதற்கு முறையான 112 தொழில்நுட்பங்கள் உள்ளன.

உங்களின் நான்கு அம்சங்களில் மட்டுமே நீங்கள் செயல் செய்யமுடியும்

ஜோ ரோகன்: நான் வாசித்திருந்த உங்கள் புத்தகத்தில், வெவ்வேறு விதமான யோகா குறித்து நீங்கள் கூறியிருந்தீர்கள். அவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் கடவுள் குறித்தும் ஒரு வேடிக்கை மிகுந்த கதையைக் கூறினீர்கள். யோகாவின் வெவ்வேறு விதங்கள் என்ன?

சத்குரு: உங்களது உடலைப் பயன்படுத்தி செயல் செய்து, யோகா செய்யமுடியும் - இது கர்ம யோகா. கர்மா என்றால் செயல் - பிரபஞ்சத்துடன் ஒருமை நிலை அடைவதற்கு நீங்கள் செயலைப் பயன்படுத்துகிறீர்கள். பிரபஞ்சத்துடன் ஒருமை அடைவதற்கு உங்கள் புத்திசாலித்தனத்தை நீங்கள் பயன்படுத்தினால், அது ஞான யோகா என்று அழைக்கப்படுகிறது, அதாவது புத்திக்கூர்மையின் யோகா. ஒருமை அடைவதற்கு உங்களது உணர்ச்சியை நீங்கள் பயன்படுத்தினால் அது பக்தி யோகா என்று அழைக்கப்படுகிறது, அதாவது பக்தி அல்லது உணர்ச்சியின் யோகா. உங்கள் சக்திகளை நீங்கள் பயன்படுத்தினால், அது கிரியா யோகா, ஒருவரது சக்திகளை பட்டைதீட்டி, விரிவடையச்செய்யும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்று அழைக்கப்படுகிறது.

ஒரே நான்கு அம்சங்களின் வெவ்வேறு விதமான கலவைகள் வெவ்வேறு மனிதர்களிடம் இருக்கின்றன. அதற்குத் தகுந்தாற்போல் யோகாவினை கலந்து வழங்கவேண்டும்.

உங்களுக்கு ஒரு உடல் இருக்கிறது, ஒரு மனம் இருக்கிறது, உங்களுக்கு உணர்ச்சிகள் உள்ளன, மற்றும் உங்களுக்குள் உயிர்சக்திகள் நிலைகொண்டுள்ளன. இந்த நான்கு மட்டுமே நிதர்சனங்கள், மற்றவை அனைத்தும் கற்பனைதான். உங்களிடம் இருப்பதை வைத்துத்தான் நீங்கள் செயல் செய்யமுடியும். நாம் அனைவரும் இந்த நான்கு அம்சங்களின் - உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்தியின் கலவையாக இருக்கிறோம். அது என்னவென்றால், ஒரு நபரில், உடல் ஆதிக்கம் செலுத்தக்கூடும்; மற்றொரு நபரில், மனம் ஆதிக்கம் செலுத்தக்கூடும்; வேறொரு நபரில், உணர்ச்சியின் ஆதிக்கம் இருக்கக்கூடும்.

ஒரே நான்கு அம்சங்களின் வெவ்வேறு விதமான கலவைகள் வெவ்வேறு மனிதர்களிடம் இருக்கின்றன. அதற்குத் தகுந்தாற்போல் யோகாவினை கலந்து வழங்கவேண்டும். இதன் காரணமாகத்தான், கிழக்கத்திய கலாச்சாரங்களில், உங்களைக் கவனித்து, சரியான கலவையை உங்களுக்கு வழங்கக்கூடிய ஒரு வாழும் குரு இருப்பதன் முக்கியத்துவம் பேசப்படுகிறது.

ஜோ ரோகன்: அதனால்தான் மக்களுக்கு ஒரு குரு தேவைப்படுகிறாரா?

சத்குரு: அமெரிக்காவில் இன்றைக்கு, குரு(Guru) என்பது ஒரு நான்கெழுத்து சொல்.

ஜோ ரோகன்: ஆமாம், ஏனெனில் இங்கே பல போலிகள் இருக்கின்றன, இல்லையா?

சத்குரு: அதனால்தான் நான் சத்குரு(Sadhguru) - அதற்கு எட்டு எழுத்துகள் உள்ளன.

ஒரு யோகி என்பவர் யார்?

ஜோ ரோகன்: யோகா எப்படித் தொடங்கியது? அதாவது, அதன் தொடக்கம் எதுவென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? கண்டிப்பாக, அதைப் பயிற்சி செய்வதால் பலரும் அதிகமாக பயனடைகின்றனர். அது எவ்வாறு தொடங்கியது?

சத்குரு: யோகா அல்லாத எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை. அதாவது, இந்த பிரபஞ்சத்தில் அனைத்துடனும் ஒருமித்து இல்லாதது என்று ஒன்றுமில்லை, ஆனால் மனிதமனம் மட்டும் இதற்கு விதிவிலக்கு. மண்ணினைக் குறித்தும் நான் இதையேதான் கூறுகிறேன். தொடர்பில்லாமல் இருக்கும் எதுவும் இந்த கிரகத்தில், இந்த சூரிய குடும்பத்தில் மற்றும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. அதனால், பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றும் யோகாவில் இருக்கின்றன. நீங்கள் அதை உணர்கிறீர்களா, இல்லையா என்பதுதான் கேள்வி.

இந்த பிரபஞ்சத்தில் அனைத்துடனும் ஒருமித்து இல்லாதது என்று ஒன்றுமில்லை, ஆனால் மனிதமனம் மட்டும் இதற்கு விதிவிலக்கு.

நீங்கள் அதை உணர்ந்தால், அதை அனுபவபூர்வமாக அறிந்துகொண்டால், அப்போது உங்களை ஒரு யோகி என்று நாம் அழைக்கிறோம். உடலை வளைப்பவரும், முறுக்குபவரும் ஒரு யோகி என்று அர்த்தமல்ல. தற்போது ஒருமையை உணர்பவரே ஒரு யோகி. ஒரு தனிமனிதராக இருந்தாலும், ஒரு யோகியின் உணர்தல் தனிமனித இயல்பைக் கடந்திருக்கிறது. அப்போது, உங்கள் உயிரின் ஒருமைத்தன்மையை நீங்கள் உணர்கிறீர்கள்.