நடப்புகள்

போஜ்பூர் லிங்கம்: சத்குருவுடன் ஒரு வினோத மறைஞான ஆய்வு

1997-ஆம் ஆண்டை கற்பனை செய்து பாருங்கள் - தியானலிங்கப் பிரதிஷ்டைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மேலும் உங்களால் சத்குருவுடன் ஒரு மறைஞானப் பயணம் மேற்கொள்ள முடியும். சரியாக இதுதான் ஈஷா தியான அன்பருக்கு நேர்ந்தது, அவர் தனது மனதை பிரமிக்க வைத்த அனுபவத்தை இங்கே நினைவுகூறுகிறார். காலப்போக்கில் பின்னோக்கிச் சென்று, அவர்களுடன் போஜ்பூருக்குப் பயணம் செய்யுங்கள், இது ஒரு காலத்தில் உயர்ந்த மறைஞான செயல்களைக் கண்ட ஒரு தலம், ஆனால் இன்றும் அவர்களின் சோகமான தோல்வியின் வடுக்களைத் தாங்கி நிற்கிறது.

போபாலுக்கு அருகிலுள்ள போஜ்பூரில் உள்ள ஒரு லிங்கத்தைப் பற்றி சத்குரு முதன்முதலில் குறிப்பிட்டு அந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என விருப்பம் தெரிவித்தது 1994-ஆம் ஆண்டாக இருந்திருக்க வேண்டும். அது வழிபாட்டிற்கான லிங்கம் அல்ல, தியானலிங்கமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒன்று என்று அவர் உணர்ந்தார். விஜி அந்த யோசனையை முழுவதுமாக ஏற்றுக்கொண்டார், மேலும் நாங்கள் அங்கு சென்று சத்குருவின் முன்னிலையில் தியானம் செய்ய வேண்டும் என்று அவர் மிகவும் விரும்பினார். ஆனால், அவர் இருக்கும்போது அது நிகழவில்லை.

அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிறகு, 1997-ஆம் ஆண்டு இறுதிக்குள் போபாலுக்கு செல்ல வேண்டும் என்று சத்குரு மிகவும் ஆர்வமாக இருந்தார். டிசம்பர் 7, 1997 எங்கள் குருவோடு போபாலுக்கு பயணம் செய்தது நாங்கள் செய்த பாக்கியம். திங்கட்கிழமை காலை நாங்கள் போபாலை அடைந்தோம். அங்கிருந்து ஒரு சிறிய அரை மணி நேரப் பயணம், நாங்கள் நேரடியாக போஜ்பூருக்கு சென்றோம். சிவபெருமானுக்கு உகந்த நாளான திங்கட்கிழமை அங்கு சென்றது என்பது தற்செயலாக நடந்ததா?

இடிந்த நிலையில் உள்ள ஒரு அற்புதமான அமைப்பு

போஜ்பூருக்கு சுமார் 10 கிமீ முன்பு, காரில் திடீரென அமைதி நிலவியது. சத்குருவின் செயல்பாடு எந்தக் கேள்விகளுக்கும் சிறு பேச்சுக்கும் கூட இடமளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து, நாங்கள் ஒரு சிறிய ஏற்றத்தில் வண்டியை ஓட்டிச் சென்றபோது, அந்த ஒரு சிறிய குன்றின் மேல் ஒரு அற்புதமான அமைப்பைக் கண்டோம். பாழடைந்த நிலையில் இருந்தாலும், அது கம்பீரமாக இருந்தது, நாங்கள் அதை அடைந்துவிட்டோம் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. கார் அருகில் இருந்த நிறுத்தத்தை அடைந்தது. சத்குரு முற்றிலும் அசைவின்றி கண்களை மூடிய நிலையில் இருந்தார்.

காலவெளியில் வேறொரு கணத்திற்கு அவர் சென்றுவிட்டது போல தோன்றியது. அவரது உடல் மிகவும் சக்திவாய்ந்த மேலும் வேதனையான செயல்முறையில் இருப்பத்தை உணர முடிந்தது. ஏதோ கனமான ஒன்று காற்றில் தொங்குவதைப் போலவும், ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்படுவதைப் போலவும் நாங்கள் உணர்ந்தோம். அந்த இடத்தின் உணர்வை உள்வாங்கிக்கொண்டு, காரில் அப்படியே அமர்ந்தபடி, சத்குரு கண்களைத் திறந்து காரைவிட்டு கீழே இறங்குவதற்காகக் காத்திருந்தோம்.

தலத்தின் பயங்கரமான தாக்கம்

சத்குரு மிக மெதுவாக கண்களைத் திறந்து, தனது இடது குதிகாலில் சிறிது அழுத்தம் கொடுக்க என்னிடம் சொன்னார். அவரது கால் விறைப்பாகவும் மிகவும் குளிராகவும் இருந்தது, மேலும் காரை விட்டு இறங்குவதற்கு அவர் சிறிது சிரமப்பட வேண்டியிருந்தது. பூ விற்றுக்கொண்டிருப்பவர்கள் எங்களை சுற்றி சத்தமாக இருந்தார்கள். ஆனால், சாதாரணமாக அவர்களுக்கு பதில் சொல்லும் சத்குரு, தன்னைச் சுற்றி நடக்கும் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தார். சிறிது நேரம் கழித்து, நாங்கள் மெதுவாக மலையின் மீது ஏறி அந்த பிரமிக்கத்தக்க இடிபாடுகளை நோக்கி நடந்தோம். சோக உணர்வு அங்கே இன்னும் அதிகமாக இருந்தது.

லிங்கம் பெரியதாகவும் கிட்டத்தட்ட நமது தியானலிங்கத்தின் அதே அளவு மற்றும் விகிதத்திலும் இருந்தது. அது பழுப்பு நிறக் கல்லால் உருவாக்கப்பட்டிருந்தது, மேலும் ஒரு சதுர ஆவுடையார் மீது அது அமர்ந்திருந்தது. உடைபட்டிருந்த லிங்கம் சிமெண்ட்டால் ஒட்டப்பட்டு இருந்தது. ஆனாலும், அது நல்ல நிலையில் இருந்தது. அதன் கட்டமைப்பு முழுமையடையாமல், சீரழிந்த நிலையில், மீட்டெடுக்கப்பட்ட தருணத்தில் இருந்தது.

ஆயிரம் ஆண்டு பழமையான வலி மற்றும் சோகம் நிறைந்த சூழல்

சத்குரு லிங்கத்தைச் சுற்றி வரும்போது, நாங்கள் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தோம். நான் தியானத்தில் மூழ்கத்தொடங்கினேன், என் கீழ் முதுகில் மெதுவான மந்தமான ஒரு வலி உருவானது. நான் தெளிவாக அறிய முடியாத சில குழப்பங்களும் இருந்தன. பின்னர் ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும், என் கீழ் முதுகில் துளைக்கும் வலி உருவாகி அலைகளாக என் முழு உடலிலும் பரவியது. அந்த இடத்திலும் முழுச் சூழலிலும் ஏதோ மிகவும் சோகமாக இருந்தது. சில கணங்கள் மட்டும் நான் நானாகவே இருந்தேன். பிறகு என் உடலின் ஒரு சக்கரத்திலிருந்து இன்னொரு சக்கரத்திற்கு மாறிக்கொண்டிருந்த ஒரு புதிய சக்தியால் நான் ஆட்கொள்ளப்பட்டேன்.

என்னுடையது அல்லாத பலவிதமான தீவிரமான உணர்வுகள், மன உணர்ச்சிகள் மற்றும் கிளர்ச்சிகள் என்னுள் பரவிக்கொண்டிருந்தன. பின்னணியில் சத்குரு “சிவ சம்போ” என்று பாடுவதை என்னால் கேட்க முடிந்தது. என் உடலை ஆக்கிரமித்ததாகத் தோன்றிய அந்த அம்சங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன, மேலும் என் முதுகுத்தண்டின் அடிப்பகுதியில் இருந்து என் உச்சந்தலை வரை ஒரு வெறுமை நிறைந்த தூண் நிறுவப்படுவது போல இருந்தது, அது என்னை அனைத்து உடல் உணர்வுகளையும் இழக்கச் செய்தது. நான் எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தேன் என்று எனக்கு தெரியவில்லை, ஆனால் சத்குருவின் தீவிர தலையீட்டிற்குப் பிறகுதான் என்னால் என் இயல்பு நிலைக்கு வர முடிந்தது.

சத்குருவை ஒரு எல்லையற்ற இருப்பாக உணர்வது

நான் கண்களைத் திறந்த அந்த நொடியில், சத்குருவைப் பார்த்தேன், எல்லையில்லா இருப்பைக் கண்டேன, மகத்தானதொரு இருப்பு, அதற்கு பயபக்தியோடும் நன்றியோடும் தலைவணங்குவது மட்டும் தான் என்னால் செய்ய முடிந்தது. அந்த சக்திவாய்ந்த சூழ்நிலையில் அவரைப் பார்த்ததும் எனக்குள் திடீரென்று ஒரு பயம் ஏற்பட்டது. அவருடைய வார்த்தைகளை கவனியாமலும் செவிசாய்க்காமலும் இருந்த எல்லா நேரங்களும், நான் அவரை லேசாக எடுத்துக் கொண்ட தருணங்களும் என் நினைவில் வெள்ளமாக எழுந்தன. என்னை அலைக்கழிக்கும் அந்த உணர்வுகளில் இருந்து விடுபட விரும்பி, சிறிது நேரம் தனிமையில் இருக்கவும் விரும்பி, அந்த கட்டமைப்பைச் சுற்றி நடந்தேன்.

நான்கு மிகப்பெரிய தூண்கள் லிங்கத்தின் மேல் ஒரு குவிமாடத்தைத் தாங்கின. அதைச் சுற்றி, பன்னிரண்டு தூண்கள் குவிமாடத்தைச் சுற்றி ஒரு சதுர கூரையைத் தாங்கின. அந்த தூண்களில் சிற்பங்கள் இருந்தன. சுவாரஸ்யமாக, அவர்கள் அனைவரும் வீராசனத்தில் அமர்ந்திருந்த பெண்களாக இருந்தனர், நமது தியானலிங்கத்திற்கான சில செயல்முறைகளின் போது நாங்கள் தியானத்தில் அமரும் ஆசனமாகும் அது.

கைவிடப்பட்ட விசித்திரமான தலத்தின் அழகான எச்சங்கள்

கட்டமைப்பு ஒருபோதும் முடிக்கப்படவில்லை என்பது மிகவும் தெளிவாக தெரிந்தது. மலையின் மீது பெரிய கற்களை எடுத்துச் செல்லத்தக்க வகையில் கட்டுமானத்துக்கான ஒரு பெரிய சரிவுப்பாதை இன்னும் இருக்கிறது. பாதி செதுக்கப்பட்ட கல் துண்டுகள் நிறைய எல்லா இடங்களிலும் சிதறிக் கிடந்தன. பாறை மேற்பரப்பில் விரிவான கட்டிடத் திட்டங்களுக்கான ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஒரு அழகான கல்லில் வட்ட வடிவில், 16 இதழ்கள் கொண்ட தாமரை வடிவமைக்கப்பட்டிருந்தது, அது குருபூஜை மற்றும் ஈஷாவில் வழக்கத்தில் உள்ள குருவை நடத்தும் 16 வழிகளாக அறியப்படும் ஷோடசோபச்சாரம் அர்ப்பணிக்கும் ஒரு இடம் என சத்குரு கூறினார்.

அந்த இடத்தில், ஒரு தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது தெரிந்தது, ஆனால் அது ஒருபோதும் முடிக்கப்படவில்லை. எவரும் வேண்டிடும் மிக அழகான அமைப்பை அந்த இடம் கொண்டிருந்தது. அதை முடித்திருந்தால் என்ன ஒரு இடமாக அது இருந்திருக்கும். அந்த இடத்தைப் பற்றி கனவு கண்ட அவர் எப்படிப்பட்ட ஒரு நபராக இருந்திருக்க வேண்டும். ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு கிட்டத்தட்ட அது நிறைவேறியும்விட்டது - பிரதிஷ்டை என்னும் கடைசி கட்டத்தைத் தவிர.

போற்றத்தக்க முயற்சி மனவேதனை தரும் முடிவு

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, போஜ்பூரில் ஒரு தியானலிங்கத்தை உருவாக்கும் கனவும் அதன் வழிமுறைகளையும் மிகவும் சக்திவாய்ந்த ஒரு யோகி கொண்டிருந்தார். ஆரம்பத்தில், அவர் ஒரு மன்னரின் முழு ஆதரவைப் பெற்றிருந்ததாகத் தோன்றுகிறது. தேவையான புரிதல் உள்ளவர்களும் அவரைச் சுற்றி இருந்திருக்கிறார்கள். அவர்களின் உயிரைப் பணயம் வைத்து, மிகவும் அறிவியல் பூர்வமாக, லிங்கப் பிரதிஷ்டைக்கான செயல்முறை அந்த பெருமானின் முன்னிலையில் நடந்தது.

ஒரு கட்டத்தில், படையெடுப்பினாலோ அல்லது சமூகத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாகவோ ஏற்பட்ட வன்முறையில், யோகியின் இடது கால் துண்டிக்கப்பட்டது. சேதமடைந்த 'ஈடாவுடன்' மேலும் தொடர முடியாமல், லிங்கத்துடன் ஒன்றிணையும் இறுதி முடிவை யோகி எடுத்தார். துரதிருஷ்டவசமாக, ஆற்றலைப் பூட்டி வைக்கும் இறுதிக் கட்டத்தை சரியான முறையில் நிறைவேற்ற முடியவில்லை, அது லிங்கத்தின் விரிசலுக்கு வழிவகுத்தது. மகத்தான முயற்சி ஒருபோதும் நிறைவடையவில்லை, மேலும் சமூகம் தங்களுக்கு புரியாத விஷயங்களை ஏற்றுக்கொள்ளாமல் போனால் என்ன ஆகும் என்பதற்கும், தன்னைத் தேடும் மக்களுக்கு சிவன் வைக்கும் சோதனைகளுக்கும் மற்றொரு எடுத்துக்காட்டாக அந்த முயற்சி இருக்கிறது.

சத்குரு விதிவசமான நிகழ்வுகளை மறுமுறை வாழ்ந்தார்

நம் குரு, அங்கு இருந்ததன் மூலமே, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு யோகியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை முழுவதுமாக மறுமுறை வாழ்ந்தார். அந்தப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்பே, காலத்தில் அவர் சென்ற பயணம் அவரது இடது பாதத்தை அது இல்லாதது போல மரத்துப்போகச் செய்தது. வெகுநேரம் கழித்து, அங்கே சுற்றி நடந்து கொண்டிருந்தபோது, ஒரு பெரிய முள் அவரது இடது காலில் குதிகால் அருகே குத்தியது, அங்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வு சற்று மென்மையான முறையில் நடந்தது.

சத்குரு, மக்கள் லிங்கத்தின் முன் நின்றபடி படம் எடுப்பதை பார்த்து, அங்கு இருக்கும் தீவிர ஆற்றல்களை உணராமல் இருக்கும் நிலையைப் பார்த்து கூறினார், “இங்கே நடந்தவற்றின் மகத்துவத்தை அனுபவிக்க சிறிது உணர்திறன் இருந்தாலே போதும். அவர்கள் இப்போது எதையும் உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் நிச்சயமாக ஏதோ ஒன்றை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். இது ஏதோ ஒருவகையில் அவர்களைத் தொடும்".

சூழ்நிலையை இலகுவாக மாற்றுவது

நாங்கள் கீழே இறங்கி ஆற்றை நோக்கி நடந்து கொண்டிருந்தபோது, அங்கே ஒருவர் சாரங்கி வாசித்து பாடிக்கொண்டிருந்தார். அவர் எங்களுக்காக சிறிது நேரம் வாசித்து, தன்னுடைய கிராமிய குரலில் உச்ச சுருதியில் பாடி, தனது சொந்த இசைக்கு தானே நடனமாடினார். சிவனையும் நம் குருவையும் போற்றிப் பாடினார். புறப்படும் நேரம் வந்ததும், அந்த இசைக்கலைஞர் சத்குருவின் காலில் விழுந்து வணங்கி, “உனக்காகப் பாடியதால் என் துக்கங்களிலிருந்து விடுபட்டேன்” என்றார். சத்குருவில் சிவனையே அவர் கண்டார். இறுதியாக நாங்கள் புறப்படும்போது, அனைவரும் சத்குருவையும் கம்பீரமான அவரது அழகையும் கண்டு வணங்கினர். அந்த இடத்தில் இருந்த சக்தி சத்குருவை தடுத்து நிறுத்த முயல்கின்றது என்று எங்களுக்குத் தோன்றியது. கடந்த காலத்தின் துயரமான பிடியில் இருந்து எங்களை வெளியே கொண்டுவர அந்த சாரங்கி இசைக்கலைஞரின் இசையும் மற்றும் படகு சவாரியும் உதவியது.

மாலை தாமதமாக நாங்கள் போபால் திரும்பினோம். சிறிய சிற்றுண்டிக்குப் பிறகு, நாங்கள் நகரத்திற்குள் ஒரு வாகனத்தில் சென்றோம். இறுதியாக காய்கறி சந்தை வழியாக நடந்தோம். அப்போது வானம் சிறிதாக தூறியது. எங்களுடைய அனைத்து தடைகளையும் விட்டுவிட்டு அந்த மழையில் நனைந்தோம். நம் குரு ஒரு குழந்தையின் அப்பாவித்தனத்துடனும் ஆர்வத்துடனும் சந்தையைச் சுற்றி வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. உருளைக்கிழங்கு அனைத்தும் அவரது சொந்த ஊரான சிக்கபள்ளாப்பூரில் இருந்து வந்தவை என்று அவர் எங்களிடம் விளக்கினார். எங்களுக்கு அது மறக்கவே முடியாத ஒரு அனுபவம்.

மறுநாள் காலையில் போபாலில் இருந்து நாங்கள் புறப்பட இருந்தோம். ஆனால் எங்கள் விமானம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. நாங்கள் மறுபடியும் ஊருக்குள் சென்று, நகரின் நடுவே இருந்த 'படா தலாப்' என்ற பெரிய ஏரியில் படகு சவாரி செய்தோம். படகோட்டியிடம் அருகில் இருந்த சிறிய தீவிற்கு அழைத்துச் செல்லும்படி கேட்டோம். அங்கு இறங்கி நடந்தோம். அந்த சிறிய தீவில் காணப்படும் வேர்களையும் தாவரங்களையும் மட்டுமே சாப்பிட்டு நீண்ட காலமாக அங்கு வாழ்ந்து வந்த துறவி ஷா அலி ஷா பாபா என்பவரின் சமாதியைக் கண்டோம். அனைத்து மதத்தினரும் அங்கு வந்து அஞ்சலி செலுத்துவதாக அறிந்தோம்.

படகு சவாரி மற்றும் குளிர்ந்த காலைத் தென்றல், அதைப்போலவே படகில் நாங்கள் செய்த தியானம் எங்கள் உற்சாகத்தை மேம்படுத்தியது. அந்த பயணத்துக்கு முன்பு வரை, போபால் பயங்கரமான விஷவாயு அவலத்தின் தோற்றத்தைதான் எப்போதும் கொடுத்திருந்தது. ஆனால் இப்போது போபால் என் இதயத்தில் ஆழ்ந்த பக்தியையும் வேதனையையும் கொண்டுவருகிறது.

- பாரதி தேவி