சத்குரு ஐம்பூதங்களில் மிகவும் மர்மமான ஆகாயத்தின் வெவ்வேறு தன்மைகளை விவரிக்கிறார்.
கேள்வியாளர்: சத்குரு, ஆகாயம் என்பது சிவனால் உருவாக்கப்பட்ட படைப்பின் இயற்பொருளா? மேலும் படைப்பு இல்லாமல் போகும்போது ஆகாயமும் மறைந்துவிடுமா?
சத்குரு: சிவன் எப்போதும் அழிப்பவர் என்றே விவரிக்கப்படுகிறார், எனவே படைப்பிற்காக அவரைக் குறை கூறாதீர்கள். அனைத்து "சிக்கல்களும்" படைப்பின் காரணமாகும். அனைத்தும் அழிவில் முடிகிறது. எனவே, உங்களின் அடிப்படைக் கேள்வி, “ஆகாயம் இயற்பொருள் சார்ந்ததா?” என்பதுதான். ஆகாயம் படைப்பின் அடிப்படை கூறுகளில் ஒன்றாகும், எனவே அது இயற்பொருள் சார்ந்ததாகதான் இருக்க வேண்டும். இது இயற்பொருளின் கடைசி விளிம்பு.
பூமி, நீர், காற்று மற்றும் நெருப்புக்கு இடையில், வெளிப்படைத் தன்மையில் இருந்து மிக நுட்பமான ஒன்றை நோக்கி செல்லும் ஒரு மாற்றம் உள்ளது. ஆகாயம் ஒருவகையில் இயற்பொருள் தன்மையில் கடைசி எல்லை. அல்லது வேறுவகையில் நோக்கினால், ஆகாயம் மற்ற நான்கு கூறுகளின் அடிப்படையாகும். ஆகாயத்தில் இருந்துதான் மற்ற நான்கு கூறுகளும் வந்துள்ளன. ஒருவகையில் அதுவே அடிப்படை கூறு. அது மிகவும் இயற்பொருள் சார்ந்த தன்மை. ஆனால் நீங்கள் சாதாரணமாக உணரும் உடல் சார்ந்த விதத்தில் அது அமைந்திருக்கவில்லை. இயற்பொருள் சார்ந்த அனைத்திலும் ஆகாயத்தின் கூறு உள்ளது; வேறுவகையில், ஐந்து கூறுகளின் விளையாட்டு இல்லாமல், எந்த இயற்பொருளும் அமையாது.
இயற்பொருள் உருவாவதில் ஆகாயத்தின் ஈடுபாடு பொருளுக்குப் பொருள், நபருக்கு நபர், மற்றும் உயிருக்கு உயிர் மாறுபடும். ஒவ்வொரு பொருளிலும், ஐந்து கூறுகளும் வெவ்வேறு விகிதங்களில் அல்லது வெவ்வேறு தொடர்பு நிலைகளில் உள்ளன. அதுவே ஒரு பொருளை மற்றொன்றிலிருந்து வேறுபடுத்துகிறது. அது ஆகாயத்துக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நபரில் ஆகாயத்தின் தொடர்பு நிலை மிகவும் தனித்துவமானது, மற்றும் நபருக்கு நபர், பொருளுக்குப் பொருள் அது மாறுபடுகிறது.
ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நபரில் ஆகாயத்தின் தொடர்பு நிலையும், அதை எவ்வாறு அளவிடுவது என்பதையும் நாம் பார்க்கத் தொடங்கினால், மக்கள் தேவையில்லாமல் முன்முடிவுகள் எடுக்கத் தொடங்கிவிடுவார்கள். அது உங்களுக்குள் அனுபவபூர்வமாக உயிர்ப்போடு இல்லையென்றால், ஒருவரின் ஆகாயம் மற்றொரு நபரின் ஆகாய நிலையை விட கொஞ்சம் சிறந்தது என்று அறிவுப்பூர்வமாக சொல்வது என்பது, அதன் அடிப்படையில் ஒரு மனிதன் மற்ற மனிதனை விட கொஞ்சம் சிறந்தவன் என்று கருதுவது போன்ற இந்த வகையான தீர்மானங்கள் மிகத் தவறானவையாகவே இருக்கும். எனவே, அதற்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.
கேள்வியாளர்: பிரபஞ்சத்தில் ஆகாயம் இல்லாத, வெறுமையான வெளிகள் உள்ளனவா? அதைதான் நாம் சிவா என்று அழைக்கிறோமா?
சத்குரு: ஆம், ஆகாயம் விலகிச் செல்ல செல்ல, அது மிக நுட்பமானதாகிறது. நிச்சயமாக, ஆகாயம் இல்லாத வெளிகள் உள்ளன. ஆகாயம் எல்லா இடங்களிலும் பரவக்கூடியது அல்ல, ஆனால் அது ஒரு பெரிய இடத்தை ஆக்கிரமித்துள்ளது, மனித அனுபவத்தில், அது எல்லா இடங்களிலும் இருப்பதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அது அவ்வாறில்லை - வெளியின் பெரும்பகுதியில் ஆகாயம் இல்லை. உண்மையில், விண்வெளியின் பெரும்பகுதியில் ஐம்பூதங்கள் எதுவும் இல்லை.
நாகப்பாம்புகள் மற்றும் பிற பாம்புகளுக்கு ஒருவித அகச்சிவப்பு பார்வை இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதாவது வாழ்க்கையின் நுட்பமான பரிமாணங்களை அவர்களால் உணர முடிகிறது. ஒரு நாகப்பாம்பால் பகல் நேரத்தில் ஆகாயத்திற்கு அப்பால் பார்க்க முடியும். நம் அனைவருக்கும் ஆகாயத்தை பகலில் பார்க்க முடிகிறது. நீங்கள் அதை இரவில் பார்க்க முடியாது - அதனால்தான் உங்களால் நட்சத்திரங்களைப் பார்க்க முடிகிறது. ஒரு வகையில், நாகப்பாம்பால் பகல் நேரத்தில் நட்சத்திரங்களைப் பார்க்க முடியும், ஏனெனில் அதன் பார்வை ஆகாயத்தை ஊடுருவ முடியும்.
ஆகாயம் என்பது ஒரு குறிப்பிட்ட கருப்பொருள் வலையாகும், அது ஒரு குறிப்பிட்ட வழியில் ஒளியைப் பிரதிபலித்து நம்மைச் சுற்றி ஒரு மாயையான விதானத்தை உருவாக்குகிறது. வானம் நீல நிறத்தில் இருப்பதற்கான காரணம் ஆகாயம் மற்றும் அதன் ஒளிவிலகல் தன்மைதான். ஒளியை ஒளிவிலகச் செய்ய, ஒன்று இயற்பொருளாக இருக்க வேண்டும். அது இயற்பொருளாக இல்லாவிட்டால், ஒளிவிலகல் நிகழாது. ஒளிவிலகல் என்பதற்கு அர்த்தம் ஒரு குறிப்பிட்ட விலகல் ஒளிக்கு நிகழ்கிறது என்பதாகும்.
எனவே, ஆகாயத்துக்கு அப்பால் உள்ள வெளிகள் காலியாக உள்ளனவா? இல்லை, பிரபஞ்சத்தில் காலி இடம் என்று எதுவும் இல்லை. அது முற்றிலும் தவறான கருத்து. நீங்கள் ஆகாயம் இல்லாத வெளிகளை 'சிவா' என்று அழைக்க விரும்பினால் அவ்வாறு அழைக்கலாம், ஏனென்றால் "சிவா" என்றால் இல்லாதது என்று பொருள். இயற்பொருளுக்கு அப்பாற்பட்ட ஒரு பரிமாணத்தைதான் நாம் சி-வா என்று குறிப்பிடுகிறோம், ஏனென்றால் இயற்பியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று இயற்கையாகவே அங்கு ஐம்பூதங்களின் இருப்பு இல்லை என்பதைக் குறிக்கிறது.