அபிட்ஜான், ஐவரி கோஸ்ட்டில், ஐக்கிய நாடுகளின் பாலைவனமாதலைத் தடுக்கும் COP15 மாநாட்டின் 15வது அமர்வில், மண்ணைக் காப்பதற்கு, ஒருமுனைப்பான கவனம் வழங்கவேண்டியதன் அவசியத்தை சத்குரு வலியுறுத்தினார். விவசாய மண்ணின் கரிமப் பொருளை அதிகரிப்பதன் மூலம் அதனை மீட்டெடுப்பதற்கான, நடைமுறைப்படுத்தக்கூடிய மும்முனை வழிமுறைகளை அவர் பரிந்துரைத்தார்.
சத்குரு: உலக நாடுகள் அனைத்தும் குழுமியுள்ள ஐவரி கோஸ்டில் நிகழும் COP15 மாநாடு, உலகெங்கும் விவசாய நிலத்தின் அழிவைத் தடுத்து, மீட்கும் நோக்கம் கொண்டதுடன், அதற்கான அரசாங்கக் கொள்கை முயற்சிகளை இரட்டிப்பாக்குவதற்கான முதன்மை வாய்ப்பாகவும் இருக்கிறது. இந்த செயல்பாடுகள், முழுமையாக மண் அழிந்து போகக்கூடிய விளிம்பு நிலையில் இருந்து மனிதகுலத்தை மீட்டெடுக்கும் சாத்தியம் கொண்டது.
மண் காக்கும் செயல் மகத்தான அளவில் நிகழ்வதற்கு, ஆழமாக வேரூன்றிய ஒரு மக்கள் இயக்கத்தை நாம் வடிவமைக்க வேண்டியுள்ளது. நம்மை எதிர்நோக்கியிருக்கும் சூழலியல் பிரச்சனையின் சிக்கலான தன்மையை தடுக்க இயலாத ஒரு நிலையில், சுருக்கமாகவும், எளிமையான வழியிலும் எடுத்துரைக்கும் நிவாரண செயல்பாட்டை ஒருமுனைப்பட்ட முயற்சியாக முன்னிலைப்படுத்த முடிந்தால் மட்டுமே, ஒரு வெற்றிகரமான மக்கள் இயக்கத்தை உருவாக்க முடியும். நமது சூழலியல் முயற்சியின் வரலாறு மிகச் சில சந்தேகமற்ற வெற்றிகளையே காட்டுகிறது. இதற்குக் காரணம் சிக்கலான அறிவியல்பூர்வமான விவாதங்களை எளிதில் புரியக்கூடிய செயல்பாடுகளாக மாற்றுவதற்கு, பெரும்பாலும் நாம் தவறிவிட்டோம். இன்றுவரை, 1987ன் மான்ட்ரியல் புரோட்டோகால் மட்டுமே மிக வெற்றிகரமான ஒரே சர்வதேச உடன்படிக்கையாகக் கொண்டாடப்படுகிறது. ஓசோன் படலம் குறைவதைத் தடுக்கும் ஒரு விஷயத்தை மட்டும் செயல்படுத்துவதில் முனைப்பான முயற்சி இருந்த காரணத்தால் அது நிகழ்ந்தது.
ஓசோன் படலத்தை சிதைக்கும் பொருட்களின் மீதான மான்ட்ரியல் கோட்பாடு என்பது, ஓசோன் படலத்தை சிதைக்கும் வகையில் மனிதனால் உருவாக்கப்பட்ட கிட்டத்தட்ட 100 இரசாயனங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வுகளை ஒழுங்குபடுத்தும் முக்கிய சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். இதுவரை 198 ஐ.நா உறுப்பு நாடுகளாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரே ஐ.நா ஒப்பந்தம் இது.
அதேவிதமாக, வித்தியாசமான மண் நிலவரங்கள், பல்வேறு சீதோஷ்ணங்களின் விவசாய நிலங்கள் மற்றும் வேறுபட்ட பண்பாட்டு மற்றும் பொருளாதார கலாச்சாரங்களின் அடிப்படையில், மண் அழிவு பிரச்சனையை எப்படிக் கையாள்வது என்பதில் விஞ்ஞானபூர்வமான பல மாறுபாடுகள் உள்ளன. இருப்பினும் விவசாய மண்ணில் குறைந்தபட்சம் 3-6% கரிமப்பொருள் இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரே ஒரு மிக முக்கியமான நோக்கத்தை முன்னிறுத்துவது சாத்தியமே. இது உலகெங்கும் உள்ள அனைத்து விவசாய நிலங்களிலும் நமது மண்ணுக்கு வீர்யத்துடன் உயிரூட்டி, நீடித்த வளம் கொழிக்கச் செய்யும்.
காலம் கடந்துகொண்டிருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக, என்ன செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தகுந்த அரசாங்கக் கொள்கைகளின் விரிவாக்கத்துடன், காலக் கடிகாரத்தில் நம்மால் மண் அழிவின் முட்களைத் திருத்தி அமைத்துவிட முடியும். உலகமெங்கும் அரசாங்கக் கொள்கை விரிவாக்கத்துக்கான இந்தத் துரிதமான பணியை முடுக்கிவிடுவதற்காக, 193 தேசங்கள் ஒவ்வொன்றுக்கும் பரிந்துரைக் கையேடு ஒன்றை, மண் காப்போம் இயக்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அதிகமான விபரங்களை, Savesoil.org என்ற இயக்கத்தின் வலைதளத்தில் பெறமுடியும்.