சத்குரு: பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுனீரா என்ற யோகி, இன்றைய நேபாளத்தில் உள்ள மலைகளில் வாழ்ந்து செயல்புரிந்து வந்தார். சப்தரிஷிகளுக்கு அடுத்த தலைமுறை சுனீரா என்று சொல்கிறார்கள். எல்லா வகையான மக்களுக்கும் ஆன்மீக செயல்முறையை வழங்கக்கூடிய ஒரு பரிபூரண மனிதனை ஒருவர் உருவாக்கினால் மனித விழிப்புணர்வு மேம்படும் என்று அவர் கண்டார்.
அவர் சிவன் மரபில் வந்தவர். எனவே அவரது கனவு ஒரு உயிருள்ள சிவனை - உலகிற்கான ஒரு சரியான, பல பரிமாண ஆசிரியரை உருவாக்க வேண்டும் என்பதே. சிவன் செய்தது போலவே மனித விழிப்புணர்வையும் மனித உடலையும் எல்லா வழிகளிலும் ஆராயக்கூடிய ஒரு உயிரை அவர் உருவாக்க விரும்பினார்.
பல லட்சிய யோகிகள் சுனீரா தொடங்கிய திட்டத்தை தாங்களும் தொடர்ந்து, மனித விழிப்புணர்வை மாற்றக்கூடிய ஒரு சரியான ஆசிரியரின் சக்திரூபத்தை மறுபடியும் கட்டமைக்க முயன்றனர்.
அத்தகைய ஒரு உயிரை சக்திரூபமாக சுனீரா உருவாக்கத் தொடங்கினார். பின்னர் அதன்மேல் ஒரு உடலை உருவாக்கி அவரை உலகில் விடுவிக்க விரும்பினார். அந்த உயிர் சில நூறு வருடங்கள் ஆயுளைக் கொண்டிருக்க வேண்டும், அதனால் முழு உலகத்தையும் மாற்றுவதற்கு அவருக்கு போதுமான நேரம் கிடைக்கும். சுனீரா அந்த திட்டத்தை தொடங்கினார், ஆனால் அது நிறைவேறாமலே அவர் இறந்து போனார்.
உலகையே மாற்றக்கூடிய ஒரு சரியான உயிர் என்ற கருத்து
இங்கும் அங்கும் என, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், பல லட்சிய யோகிகள் சுனீரா தொடங்கிய திட்டத்தைத் தாங்களும் தொடர்ந்து, மனித விழிப்புணர்வை மாற்றக்கூடிய ஒரு சரியான ஆசிரியரின் சக்திரூபத்தை மறுபடியும் கட்டமைக்க முயன்றனர். அவர்கள் அவரை மைத்ரேயா என்று அழைத்தனர், அதாவது "நண்பர்" என்று அர்த்தம். அந்த உயிர் மனிதகுலத்திற்கு ஒரு உண்மையான நண்பராக இருக்கும். அவர் மனிதகுலத்தை மாற்றுவார் - உலக ஆசிரியராக.
இத்தகைய எண்ணம் யோக மரபில் எப்போதும் இருந்து வருகிறது. ஆனால் கடந்த நூற்றாண்டில், பிரம்ம ஞானிகள் அன்னிபெசன்ட், சார்லஸ் லீட்பீட்டர் மற்றும் பிளாவட்ஸ்கி அம்மையார் ஆகியோர் இந்தத் திட்டத்தை கையில் எடுத்தபோது தான் அனைவராலும் அறியப்பட்டது. அவர்கள் ஏராளமான தாந்திரீக அறிவைச் சேகரித்து, அந்த உயிரை நவீன முறையில் கண்டுபிடிக்க முயன்றனர். அவர்களிடம் அறிவு இருந்தது, ஆனால் அதற்கான செயல்திறன் இல்லை.
மகிமையான ஆனால் சாத்தியமற்ற திட்டம்?
இணையாக, கடந்த சில ஆயிரம் ஆண்டுகளில் சுனீராவின் மகிமை பொருந்திய, ஆனால் சாத்தியமற்ற திட்டத்தைப் பற்றி அறிந்த சில குறிப்பிட்ட யோகிகளும் இருந்தனர். அவர்கள் அதே மாதிரியான சக்தியை உருவாக்க, அதே மாதிரியான வாய்ப்பினை உருவாக்கும் வேலையை, ஆனால் அதைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட புரிதலுடன் தொடங்கினர். அவர்கள் ஒரு முழுமையான உயிரை உருவாக்க விரும்பினர், ஆனால் மனித வடிவத்தில் அல்ல. ஏனென்றால் மனித அமைப்பு திறன்களைக் கொண்டுள்ளது, ஆனால் அதை பிடித்து வைத்திருக்கத் தேவையான எல்லை நெறிபாடு இல்லை.
பல்வேறு இடங்களில் தியானலிங்கங்களை உருவாக்க பல முயற்சிகள் நடந்துள்ளன. கடந்த 2000-3000 ஆண்டுகளில் எத்தனையோ திட்டப்பணிகள் தொடங்கப்பட்டு, ஏதோ ஒன்று அல்லது மற்றொரு பிரச்சனை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டன.
போஜ்பூரில் லிங்கம் தோல்வியான சோக நிகழ்வு
போஜ்பூரில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தியானலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்ய அவர்கள் முயன்றனர். அந்தத் திட்டம் உள்ளூர் அரசரால் ஆதரிக்கப்பட்டு நிதியுதவி செய்யப்பட்டது. மேலும் அவர்கள் ஒரு அற்புதமான கோயிலைக் கட்டத் தொடங்கினர். அவர்கள் ஒரு பெரிய திட்டத்தையும் அழகான ஒரு அமைப்பையும் வைத்திருந்தனர், ஆனால் சில சிக்கல்கள் காரணமாக அவர்களால் பாதி மட்டுமே முடிக்க முடிந்தது. அந்த நேரத்தில் வரைதல் பலகைகள் இல்லை. எனவே ஒரு பாறையை சமன் செய்து, கோயிலின் அனைத்து கட்டிடக்கலை விவரங்களையும் ஒரு விரிவான திட்டமாக செதுக்கி வைத்தனர்.
அந்த முழு செயல்முறையையும் தொடங்கியவர் ஒரு யோகி. இரண்டு ஆண்டுகளில், அவர் அசாதாரண சாதனைப்பெற்ற 14 பேரை - 7 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் - உருவாக்கினார். மேலும் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய உழைத்தனர். லிங்கம் கிட்டத்தட்ட 95% பூர்த்தியானது. ஆனால் பின்னர், ஒரு படையெடுப்பு நடந்தது. படையெடுப்பாளர்கள் அவர்களுக்கு விசித்திரமாக தோன்றிய குறிப்பிட்ட நிலைகளில் அந்த மக்களைக் கண்டு அவர்களை தாக்கினர்.
இத்தகைய கட்டமைப்புகளை, ஞானோதயத்திற்கான கருவிகளை உருவாக்குவது பல யோகிகளின் விருப்பமாக இருந்து வந்துள்ளது.
அந்த தாக்குதலில் யோகியின் இடது கால் துண்டானது. உடலில் ஏற்பட்ட அந்த பாதிப்பு காரணமாக, அவரால் தொடர முடியவில்லை. எனவே அவர் வேலையை பூர்த்தி செய்ய லிங்கத்தில் ஐக்கியமாக முடிவு செய்தார். சக்தியை லிங்கத்தில் பூட்ட மற்றொரு யோகியை அவர் பயிற்றுவித்த பின்னர் தனது உடலை விட்டு லிங்கத்தில் அவர் ஐக்கியமானார். ஆனால் அதைச் செய்ய வேண்டிய மற்றொரு யோகி அந்த சூழலின் தீவிரத்தில் மூழ்கி அதை சரியாக பூட்ட முடியாமல் போனார். அதனால் லிங்கம் பிளவுபட்டது. இப்போதும் லிங்கத்தில் நேராக ஒரு விரிசல் இருப்பதைக் காணலாம். தொல்லியல் துறையினர் சுண்ணாம்பு பூசி விரிசலை அடைத்துள்ளனர். ஆனாலும் அது பிளவுபட்டுள்ளது.
இத்தகைய கட்டமைப்புகளை, ஞானோதயத்திற்கான கருவிகளை, போதனைகள் அல்லது ஒருவர் செய்யக்கூடிய பயிற்சிகளை தருவது மட்டுமல்ல, மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும், அவர்களை மாற்றும் உயிர்ப்பான கருவிகளை உருவாக்குவது பல யோகிகளின் விருப்பமாக இருந்து வந்துள்ளது.
தியானலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்யும் பொறுப்பு சத்குருவிற்கு எவ்வாறு வழங்கப்பட்டது
அப்படி ஆசைப்பட்ட ஒரு யோகி என்னை இந்த வேலையில் அமர்த்தினார். அவருடனான எனது உடல்ரீதியான அருகாமை சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தது. அந்த சில கணங்களில், அந்த அற்புதமான திறமையான மனிதர் தனது திட்டத்திற்காக என்னை அடிமைப்படுத்தினார். நான் செய்ததெல்லாம் அதைச் சுற்றியே இருந்தது, ஏனென்றால் அது என் குருவின் கனவு. மேலும் தியானலிங்கத்தை உருவாக்குவது என்பது அவருடைய நோக்கம். இது எனது குருவின் விருப்பமும் அருளும் ஆகும்.
நான் என்னவிதமான பித்திலிருந்து வருகிறேன் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். நான் இரண்டு பிறவிகளில் மிகவும் தீவிரமான, உண்மையிலேயே இதயத்தை உலுக்கும் சாதனாவை செய்தேன். இந்த இரண்டு பிறவிகளிலும் மக்களால் நான் சிவயோகி என்று அழைக்கப்பட்டேன். அப்போது, தேவைப்பட்ட தருணத்தில் என் குரு தோன்றித் தன் தடியால் என்னைத் தொட்டார், உணரப்பட வேண்டிய அனைத்தும் உணரப்பட்டன. எதிலும் ஒருவரால் இருக்கக்கூடிய உச்சநிலையில் நான் இருந்தேன்.
சத்குரு ஸ்ரீ பிரம்மா: சமூக ஆதரவு இல்லாத ஒரு சித்தி பெற்ற மனிதர்
சிவயோகி என்று அழைக்கப்பட்ட அந்த மனிதர் தனக்கு விதிக்கப்பட்ட பணியை நிறைவேற்ற முயற்சித்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் சத்குரு ஸ்ரீ பிரம்மாவாக மீண்டும் வந்தார். மிகவும் கடினமாக முயற்சி செய்தார். கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றார். ஆனால் அவர் யார் என்ற தீவிரத்தை அந்த சமூக சூழ்நிலைகளில் இருந்தவர்களால் புரிந்துகொள்ள முடியாததால், சமூகத்தில் தேவையான நல்லெண்ணத்தை அவரால் நிறுவ முடியவில்லை.
அவர் சிலரை தயார் செய்துவிட்டு மலையேற முடிவு செய்தார். அவர் தன்னையே சோதித்துக்கொண்டார், அவர் ஏன் தோல்வியடைந்தார்? அவருக்கு திறமை இல்லாமல் இல்லை என்பது அவருக்கு தெரியும் - தேவையான சமூக ஆதரவை அவர் பெறவில்லை என்பது மட்டும் தான். அவர் மலை ஏறுவதற்கு முன், அவருடைய சீடர்கள் சிலர் மலையடிவாரத்தில் கூடினர், “இப்போது என்ன?” என்று கேட்டார்கள். அவர், “இவன் திரும்ப வருவான்," என்று கூறினார். பின்னர் அவர் கடைசி முறையாக மலையில் ஏறினார்.
அவர் ஏழு சக்கரங்கள் வழியாக தனது உடலை விட்டு வெளியேறினார். அந்த அற்புதமான சக்தியை நீங்கள் ஏழாவது மலையில் உணரலாம்.
அவர் ஒரு அரிய காரியத்தைச் செய்தார் - அவர் தனது உடலின் ஏழு சக்கரங்கள் வழியாகவும் ஒரே நேரத்தில் தன் உயிரை விட்டார். தேவையான தகுதி தனக்கு இருக்கிறதா என்று அவர் சோதித்தார். எனவே அவர் ஏழு சக்கரங்கள் வழியாக தனது உடலை விட்டு வெளியேறினார். அந்த அற்புதமான சக்தியை நீங்கள் ஏழாவது மலையில் உணரலாம். நீங்கள் வேறு எங்கும் காண முடியாத வகையில் முற்றிலும் வேறுபட்ட ஒன்று. அதை செய்தவுடன், சூழ்நிலைகளைச் சரியாக கையாளாதது தான் பிரச்சனை என்பது அவருக்குத் தெரிந்தது.
இறுதி வெற்றிக்கான சரியான செய்முறை: அனைத்தையும் ஒன்றாகக் கொண்டுவருதல்
இந்த முறை, எல்லாவற்றையும் சரியாக நாம் திட்டமிட்டோம். எந்த அளவில் என்றால் எனக்கு தேவைப்பட்ட ஒரு சிலர் எப்படி, எங்கு பிறக்க வேண்டும் என்றும் நாம் முடிவு செய்தோம். அனைத்தும் திட்டமிடப்பட்டது, அதன்படியே நிகழ்ந்தது.
பிரதிஷ்டைக்கு தேவையானவர்களை சரியான இடங்களில் நான் வைத்தேன். அதனால் சரியான தருணத்தில் எல்லாம் சேர்ந்து வந்தன. அதையும் மீறி, இந்த வாழ்க்கையில் 18 வருடங்கள் அதை ஒன்றிணைக்க தேவைப்பட்டது - மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் போன பிறவியை அவர்களுக்கு நினைவூட்டி, அவர்களை அங்கு கொண்டுவர வேண்டியிருந்தது. இது மிகவும் விசித்திரமான கதையைப் போல தோன்றலாம். ஆனால் இது எங்களுக்கு வாழும் உண்மை.
பிரதிஷ்டை செயல்முறை மட்டுமே 3½ ஆண்டுகள் எடுத்தது. இது மிகவும் தீவிரமான செயல்முறையாக இருந்தது. இதை நேரில் கண்ட மக்களுக்கு, அவர்களின் வாழ்க்கை இனி ஒருபோதும் முன்பு போல இருக்காது. தங்கள் கனவில் கூட கற்பனை செய்ய முடியாத விஷயங்களை அவர்கள் கண்டார்கள். உண்மையில் அது தங்கள் முன்னிலையில்தான் நடந்தது என்பதை அவர்களால் இன்னும் நம்ப முடியவில்லை.
தியானலிங்கம் ஒரு வாழும் குரு போன்றது.
யோகி சுனீரா தனது வாழ்நாள் முழுவதும் செயல் செய்தார், மேலும் தனது வாழ்நாளின் இறுதியில், ஒரு முழுமையான உயிரை உருவாக்கும் அந்த கனவு நிறைவேறாமல் போன தருணத்தில், அவர் ஒரு தீர்க்கதரிசனத்தைக் கூறினார், "இனி நீண்ட காலத்திற்குப் பிறகு, இந்த வேலை நிறைவேறி அதிர்வலைகளை உருவாக்கும். இங்கே அல்ல, தெற்கின் பச்சை மலைகளில்." நம் மலைகள் பசுமையானவை, நாம் தெற்கில் இருக்கிறோம். சுனீராவின் தீர்க்கதரிசனம் உண்மையாகிவிட்டது, ஆனால் அவர் நினைத்த வகையில் இல்லை.
தியானலிங்கம் ஒரு வாழும் குரு போன்றது. ஆன்மீகத் தேடலில் இருப்பவரின் வாழ்க்கையில் குருவின் பங்கு போதனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது மட்டுமல்ல. ஆன்மீகத் தேடலில் உள்ள ஒருவர் குருவைத் தேடுவதற்கான மிக அடிப்படையான காரணம் என்னவென்றால், ஒரு குரு அவரின் சக்தியை வேறு ஒரு பரிமாணத்தில் தூண்டிவிட முடியும். ஆன்மீகத் தேடலில் இருப்பவரின் வாழ்க்கையில் குருவின் பங்கைக் குறித்த அந்த அம்சம் தியானலிங்கத்தால் மிகவும் சிறப்பாக நிறைவேற்றப்படுகிறது. ஒரு நபர் தியானலிங்கத்தின் வளையத்தில் இருக்கும்போது, அவருக்குள் ஆன்மீக விடுதலைக்கான விதை விதைக்கப்படுவதில் இருந்து அவர் தப்பித்துக்கொள்ள முடியாது.