

சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதைக் குறித்து, வெளிப்பார்வைக்குக் குழப்பமாகத் தோன்றும் ஒரு ஜென் குருவின் வாசகத்தை சத்குரு விளக்குகிறார்.
கே: சத்குரு, ஒருமுறை சீடன் ஒருவன் ஜென் குருவிடம், “நேரானப் பாதையில் நடப்பது எனக்கு சிறந்ததா அல்லது என் வாழ்க்கை என்னை கொண்டுசெல்லும் வளைவான பாதையைத் தேர்வு செய்வது எனக்கு மேலானதாக இருக்குமா?” என்று கேட்டான். குரு கூறினார், “வடக்கே நீளும் நேரானப் பாதையில் நடப்பவன், வடதிசையைக் காண்கிறான். தெற்கில் நீளும் நேரான பாதையில் நடப்பவன், தென் திசையைக் காண்கிறான். கிழக்கு நோக்கிய நேர் பாதையை தேர்வு செய்பவன், கிழக்கைக் காண்கிறான். மேற்கு நோக்கிய நேர் பாதையில் செல்பவன், மேற்கைக் காண்கிறான். மேலும் வளைந்த பாதையில் நடப்பவன் எல்லாத் திசைகளையும் காண்கிறான்.” இந்த பதிலை எங்களுக்கு விளக்கமுடியுமா?
சத்குரு: பல்வேறு மறுக்கக்கூடாத கொள்கைகளுடன் மக்கள் அடையாளம் கொண்டிருந்த காரணத்தால் இது சொல்லப்பட்டது. “ஒரு நேரானப் பாதை” என்று ஜென் குரு கூறியபோது, ஒரு குறிப்பிட்ட வழியில் வேதங்கள் மற்றும் போதனைகளைப் பின்பற்றும் ஒரு பிடிவாதமான பாதையைப் பற்றி அவர் பேசியிருக்கிறார். ஆகவே, நீங்கள் வடக்கு திசை நோக்கி இருந்தால், அது வடக்கு திசையில் மட்டும்தான் செல்கிறது. நீங்கள் மேற்கு நோக்கிச் சென்றால், அது மேற்கு திசையில் மட்டும்தான் செல்கிறது. கிழக்கு திசை கிழக்கில்தான் செல்கிறது, மற்றும் தெற்கு திசை தெற்கு நோக்கித்தான் செல்கிறது. நீங்கள் வளைந்து செல்லும் பாதையைத் தேர்ந்தெடுத்தால், எல்லா திசைகளையும் பார்ப்பீர்கள், ஆனால் நீங்கள் எங்கும் போய் சேரமாட்டீர்கள்.
நீங்கள் வளைந்து நெளியும் பாதையைத் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு ஒரு நல்ல சுற்றுலாக் காட்சி கிடைக்கும், ஆனால் அதன் பிறகு நீங்கள் பழைய இடத்திற்கே திரும்பிவிடுகிறீர்கள். நீங்கள் இங்கே வேடிக்கைப் பார்ப்பதற்காக இருக்கிறீர்களா, அல்லது ஏதோ ஒரு இடத்தைச் சென்றுசேர்வதற்காக இங்கே இருக்கிறீர்களா? அதுதான் கேள்வி. வளைந்த பாதை என்றால், நீங்கள் வளைந்து செல்லமுடியும் என்று நினைத்தால், அப்படிப்பட்ட பாதையே இல்லை. பாதையில் நீங்கள் வளைந்து செல்லலாம், ஆனால் நீங்கள் நேராக இருக்கவேண்டும். உங்களது வளைந்த நிலையை ஜென் குரு அங்கீகரிக்கிறார் என்று எண்ணிவிடாதீர்கள். நீங்கள் வளைந்திருந்தால், பாதை இல்லை. நீங்கள் நேராக இருந்தால், எல்லாமே பாதைதான். அடிப்படையில், நேரானப் பாதை அல்லது வளைவானப் பாதை என்கிற விஷயமே இல்லை. ஏனென்றால் ஆன்மீக செயல்முறை, உள்முகமாகத் திரும்புவதைப் பற்றியது.
நீங்கள் உள்முகமாகப் பார்ப்பதால் உங்களுக்கு ஆன்மீக செயல்முறை நிகழுமே தவிர, நீங்கள் மேலே, கீழே அல்லது நான்கு வெவ்வேறு திசைகளிலும் பார்ப்பதால் அல்ல. உள்நோக்கி இருப்பது பரிமாணமற்றது. தங்களுக்குள் நேர்நிலையில் இருப்பவர்களால்தான் பரிமாணமற்ற தன்மையை அணுகமுடியுமேயன்றி, ஒரு நேரானப் பாதையாலோ அல்லது வளைவானப் பாதையாலோ அல்ல. பாதை நேரானதா அல்லது வளைவானதா, மேலா அல்லது கீழா என்று நீங்கள் கவலைப்படத் தேவையில்ல, ஏனெனில் சற்று சாகசமானதாக நீங்கள் உணர்வதற்காக உருவாக்கப்பட்டவை அவை.
உண்மையில், அங்கு பாதை இல்லை. உங்கள் ஒட்டுமொத்த வாழ்விலும் நீங்கள் மாயையான வெளிப்புறத்தையே கண்டு வந்துள்ளீர்கள். நீங்கள் புறக்காட்சியை நிறுத்தினால், எல்லாம் உள்ளேயே இருக்கிறது. ஒருவிதத்தில், தியானம் என்பது அதுதான். நீங்கள் வெறுமனே உங்கள் கண்களை மூடி அமர்ந்தால், ஆரம்பத்தில், வெளிப்புற பைத்தியக்காரத்தனங்கள் வெளிப்படுகிறது. ஆனால் நீங்கள் சரியான வகையான இருப்பில் அமர்ந்தால், அதன்பிறகு, வெளிப்புற பைத்தியக்காரத்தனங்களின் மனக்காட்சிகள் ஓய்ந்தபிறகு, வேறு எந்த கவனச்சிதறலும் இருக்காது.
எல்லா கவனச்சிதறல்களும் விலகிவிட்டபின், நீங்கள் ஏதோ ஒன்றை மட்டும் பார்த்தவாறு இருந்தால், நீங்கள் அதனுடன் காதல்வயப்பட்டுவிடுவீர்கள். எந்த கவனச்சிதறலும் இல்லாமல், நீங்கள் ஒரு பூச்சியை, ஒரு மலரை, ஒரு குச்சியை, ஒரு மலையை, ஒரு பாறையை அல்லது ஒரு மண்துகளை அசைவின்றிப் பார்த்தாலும், நீங்கள் அதனுடன் முழுமையாக காதலில் வீழ்ந்துவிடுவீர்கள். தியானம் என்பது அதுதான். ஆகவே, நீங்கள் நேரானப் பாதையிலும் செல்லவேண்டாம், வளைவானப் பாதையிலும் செல்லவேண்டாம். உங்களுக்குள் நேராக இருப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் எங்கு செல்வதற்கும் முயற்சிக்க வேண்டாம் - வெறுமனே இங்கு இருங்கள், அது நிகழும், ஏனென்றால் செல்வதற்கு இங்கு வேறு எந்த இடமும் இல்லை.
“பாதை” என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போது, எங்கோ செல்லவேண்டியுள்ளது என்று உங்கள் மனம் இயல்பாகவே எண்ணுகிறது. இங்கே செல்வதற்கு எந்த இடமும் இல்லை. அப்படியென்றால் தேங்கிப்போவதாக அர்த்தமில்லை. “ஏதோ ஒன்று” என்பது ஒரு குறிப்பிட்ட அளவு. “ஒன்றுமில்லை” என்பது ஒரு அளவு அல்ல - அது அளவற்றதாக இருக்கும் ஒரு பரிமாணம். அது ஆதியும், அந்தமும் இல்லாத ஒரு சாத்தியம். எங்கோ என்பது மிகச் சிறியதொரு இடம்; அங்கே செல்வதில் பலனில்லை. “எங்குமில்லை” என்பது எல்லையில்லாத பரவெளி. ஆகவே, நீங்கள் வடக்கில் சென்றால், நீங்கள் எங்கோ செல்வீர்கள். தெற்கில் சென்றால், நீங்கள் எங்கோ செல்வீர்கள். நீங்கள் கிழக்கு அல்லது மேற்கு திசையில் சென்றால், வேறெங்கோ செல்வீர்கள். நீங்கள் சுற்றிச்சுற்றிச் சென்றால், நீங்கள் எங்கோதான் செல்வீர்கள். அது நமது நோக்கமல்ல. நாம் எங்கும் செல்ல விரும்பவில்லை, ஏனென்றால் எல்லையுள்ளதில் இருந்து எல்லையில்லாததற்கு பயணம் செல்கிறது. எல்லையில்லாமல் இருக்கும் ஒரே விஷயம் ஒன்றுமற்றதுதான், மற்றும் எங்கும் இல்லை என்பதுதான் ஒரே எல்லையற்ற பரவெளி.
ஆகவே, எல்லாவித வேடிக்கையான வழிகளிலும் தர்க்கத்தைப் பயன்படுத்தும் சர்க்கஸைத்தான் நாம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோமா? உங்கள் மனம் அதைத் தவிர்ப்பதற்கான ஒரு புதிய வழியை தினமும் சிந்திக்கும்படியான ஒரு நிலையில் இன்னமும் இருந்துகொண்டிருக்கும் காரணத்தால், நீங்கள் அந்தக் கேள்வியைக் கேட்டீர்கள். அது ஏன் நிகழமுடியாது என்பதற்கு, தினமும் ஒரு புதிய காரணத்துடன் நீங்கள் வருகிறீர்கள். அந்த நிலையில்தான் இன்னமும் உங்கள் மனம் இருக்கிறது. உங்களை அதன் எல்லைக்குள் வைத்திருப்பதற்காக, எண்ணற்ற புதுமையான கருத்துகளுடன் வருவதாகத் தோன்றும் இந்த தர்க்க மனதை நீங்கள் விரும்புகிறீர்கள். ஆகவே, இதை நாம் தர்க்க மனதின் கண்ணோட்டத்தில் இருந்து பார்ப்போம்.
நாம் குறிப்பிட்ட எல்லைகளுக்குள் இருப்பதை காரண அறிவு புரிந்துகொள்கிறது. மேலும் இந்த எல்லைகளைக் கடந்து நீங்கள் செல்லவேண்டும் என்பது உங்களுக்கும்கூடத் தெரிகிறது. பல தருணங்களில், சில எல்லைகளை நீங்கள் கடந்துள்ளீர்கள், மற்றும் உடனடியாக நீங்கள் அடுத்த எல்லைகளின் வீச்சினைக் கண்டுகொள்கிறீர்கள். போதிய தீவிரத்துடன் காரண அறிவை நீங்கள் பயன்படுத்தினால், எல்லைகளைக் கடந்து உங்களை எடுத்துச் செல்லும் வாகனமல்ல அது என்பதை காரண அறிவு தெளிவாக உணர்ந்துகொள்கிறது. காரண அறிவை எப்படிக் கடப்பது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் நீங்கள் காரண அறிவை ஏமாற்றுங்கள். காரண அறிவை நீங்கள் ஏமாற்றினால், அதன் குறுக்கீடு குறையும். அதன் குறுக்கீடு குறைந்தால், உங்களுடன் நாம் செயல்பட முடியும்.
நீங்கள் எதற்கும் தீட்சை பெற்றிருக்கவில்லை என்றாலும்கூட, உங்கள் கண்களை மூடியவாறே சற்றே நீண்ட நேரத்துக்கு அப்படியே இருந்தால், சிறிது நேரத்துக்குப் பிறகு உங்கள் மனதின் செயல்பாடு மறையத் துவங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். கூடுதல் தகவல் ஏதும் இல்லாமல் மனம் உயிர்த்திருக்க முடியாது என்பதால், நீங்கள் கண்களைத் திறப்பதற்கு மனம் விரும்பும் காரணத்தால், அது ஆரம்பத்தில் அதிகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஏதோ புதிய வதந்தி அதற்குத் தேவைப்படுகிறது; இல்லையென்றால் அது உயிர்த்திருக்க முடியாது. நீங்கள் வெறுமனே கண்களை மூடி வெகுநேரம் இருந்தால், காரண அறிவின் குறிக்கீடு குறையும். அது உங்களுடைய செல்ல நாய் போல இருக்கும். மனதை நாம் கொன்றுவிட விரும்பவில்லை. நமக்கு அது தேவை. ஆனால் நமக்கு அது தேவைப்படும்போது மட்டும்தான் அது உயிர்ப்புடன் இருக்கவேண்டும். இல்லையென்றால், அது வாய் மூடி அமர்ந்திருப்பதையே நாம் விரும்புகிறோம்.
உங்களது காரண அறிவின் குறுக்கீடு குறைந்து, அதற்குப் போதிய அவகாசம் அளித்தபிறகு, உண்மையான புத்திசாலித்தனம் செயல்படத் துவங்குகிறது. புத்திசாலித்தனம் என்று நீங்கள் குறிப்பிடுவதும், படைப்பின் மூலம் என்று நீங்கள் கூறுவதும் வெவ்வேறு அல்ல. உண்மையான புத்திசாலித்தனம் உங்களுக்குள் செயல்படத் துவங்கிவிட்டால், நீங்கள் இயல்பாகவே ஒரு பரவசமான மனிதராக இருக்கிறீர்கள் - வேறுவிதமாக இருக்கவே முடியாது. அது உங்களின் நோக்கமல்ல. அது நீங்கள் உருவாக்குவது அல்ல. அது எப்படி இருக்கிறதோ அப்படியேதான் இருக்கிறது. நீங்கள் உங்களது இயல்பினாலேயே பரவசமாக இருக்கும்போது மட்டும்தான், ஒன்றுமற்றதின் ஆழங்களுக்குள் குதிப்பதற்கு விருப்பத்துடன் இருக்கிறீர்கள். அப்போது நீங்கள் வெறுமைக்கு செல்வதற்கு உண்மையில் தயாராக இருக்கிறீர்கள்.
“நான் எல்லையற்றதைத் தேடுகிறேன்”, என்று நீங்கள் கூறும்பொழுது, ஆழங்காணமுடியாத ஒரு பள்ளத்துக்குள் விழுவதைப் பற்றி பேசுகிறீர்கள். அது அபாயகரமானது அல்ல. தரை தொடும் பள்ளம்தான் அபாயகரமானது. பள்ளத்துக்கு தரை இல்லையென்றால், குதிப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? நீங்கள் எப்போதுமே மிதந்துக்கொண்டு, எதனாலும் துன்புறாமலும், தொடப்படாமலும் இருப்பீர்கள். ஆழங்காணமுடியாத பள்ளத்துக்குள் நீங்கள் விழும்போது மட்டும்தான், உண்மையில் பரவசமாக இருக்கிறீர்கள். இல்லையென்றால், நீங்கள் எப்போதும் எங்கோ சென்றடைவதற்கு ஆவலுடன் இருக்கிறீர்கள். உங்களால் எங்கும் செல்லமுடியாது. நீங்கள் எங்கு சென்றாலும், அது வடக்கு திசையாக அல்லது தெற்கு திசையாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையின் அனுபவம் உங்களுக்குள் மட்டும்தான் நிகழ்கிறது. இது ஒரு வலைப்பொறி அல்ல - இதுதான் வாயில் கதவு.