கேள்வியாளர்: லிங்கபைரவியைப் பற்றி அறிந்திராத யாராவது, லிங்கபைரவி யந்திரம் இருக்கும் வீட்டிற்குள் வந்தால், அவர்களுக்கு அது தாக்கத்தினை ஏற்படுத்துகிறதா?

நாம் அறிந்த பெரும்பாலான மற்ற பெண்தெய்வங்களில் இருந்து லிங்கபைரவியை எது வித்தியாசப்படுத்துகிறது என்பதையும் கட்டுப்பாடற்ற, உக்கிரமான அவளது சக்திகள் எப்படி உங்களுக்கு உச்சபட்ச “ஆதார ஆற்றலை” வழங்கமுடியும் என்பதையும் சத்குரு இங்கு வெளிப்படுத்துகிறார்.
கேள்வியாளர்: லிங்கபைரவியைப் பற்றி அறிந்திராத யாராவது, லிங்கபைரவி யந்திரம் இருக்கும் வீட்டிற்குள் வந்தால், அவர்களுக்கு அது தாக்கத்தினை ஏற்படுத்துகிறதா?
சத்குரு: லிங்கபைரவி இருக்கும் வீட்டிற்குள் ஒரு எருமை வந்தால்கூட, அந்த எருமைக்கு யந்திரம் ஏதோவொன்றைச் செய்யும். சக்தியானது அடிப்படையான நிலையில் இருக்கும் காரணத்தால், அது சற்று மேலான எருமையாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. லிங்கபைரவி, மனிதராக மட்டும் இருப்பதற்கு வரையறுக்கப்படவில்லை. அவள் ஒரு மனித ரூபம் அல்ல, ஆனால் மிகவும் அடிப்படைத் தன்மையானவள். அதனால்தான் அவள் குறித்து ஒரு கட்டற்றத்தன்மையும், உக்கிரமும் இருக்கிறது. அவளை ஒரு மென்மையான பெண்தெய்வமாக உருவாக்குவதற்கு நாம் விரும்பியிருந்தால், நாம் ஒரு மனித ரூபத்தை உருவாக்கியிருப்போம். வடிவமைப்பிலேயே ஒரு மனித ரூபத்தை நாம் உருவாக்கவில்லை, ஏனெனில் அவளது சக்திகள் மிகவும் அடிப்படையானதாக இருப்பதையே நாம் விரும்புகிறோம்.
வழக்கமாக, “அடிப்படை” என்பது ஒரு எதிர்மறையான சொல்லாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் நான் “அடிப்படை” என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, அது மனிதருடன் இருப்பதைவிட படைப்பின் மூலத்துக்கு நெருக்கமாக இருப்பதையே குறிக்கிறேன். எல்லாப் படைப்புகளிலும், படைத்தவனின் படைப்பிலிருந்து வெகுதொலைவில் இருப்பது அநேகமாக மனித இனம்தான். மற்ற அனைத்து உயிரினங்களும் படைத்தவனை அறிந்திருக்கவில்லை என்றாலும்கூட, அவை குறைந்தபட்சம் படைப்புக்கு மிக நெருக்கமாக இருக்கின்றன. படைத்தவனின் படைப்பிலிருந்து மனிதன் வெகுதூரத்துக்குச் சென்றுவிட்டான், ஏனென்றால் அவன் தன்னுடைய படைப்பான எண்ணம் மற்றும் உணர்ச்சியில் சிறைப்பட்டுக் கிடக்கிறான்.
பைரவியின் சக்திகள் மனித நிலை மீது மட்டும் செயல்படுவதில்லை. அந்த சக்திகள் மிகவும் அடிப்படையானவை. ஆகவே, அவளைச் சுற்றிலும் நீங்கள் ஏதாவது பொருட்களை வைத்தால்கூட, அவற்றின் தன்மையும் மாறிவிடும். இது, பைரவியின் இருப்பிலும், சக்திநிலையில் உயிரோட்டத்துடன் இருக்கும் மற்ற பல்வேறு ரூபங்களின் இருப்பிலும்கூட நிகழும். இதனால்தான் தீர்த்தம் மற்றும் பிரசாதம் என்று குறிப்பிடப்படுபவை மிகவும் முக்கியமானவையாக இருக்கின்றன. ஒரு பிரதிஷ்டை செய்யப்பட்ட வடிவத்திற்கு அருகாமையில் இருப்பதாலேயே, உணவு, மற்ற பொருட்கள், குறிப்பாக தண்ணீர் போன்றவை உயர்ந்த நிலையில் சக்தியூட்டப்படுகிறது.
பைரவிக்குப் பக்கத்தில் தண்ணீரை ஒரு பத்து நிமிடங்களுக்கு மட்டும் நீங்கள் வைத்திருந்தால், அந்த நீரின் மூலக்கூறின் கட்டமைப்பு வியக்கத்தக்க விதத்தில் மாறிவிடும். ஒரு தேக்கரண்டி அளவுக்கான நீரையாவது கோவிலிலிருந்து பெற்றுவிடுவதற்குப் போராடும் மக்களை இந்தியாவில் நீங்கள் பார்க்கலாம், ஏனென்றால் இந்த நீருக்கு தெய்வீகத்தின் ஞாபகம் உள்ளது. உங்களுக்குள் உறைந்திருக்கும் படைத்தவன் உயிரோட்டம் பெறுவதற்காக தெய்வீகத்தின் ஞாபகம் உங்களுக்குள் செல்ல வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள். அதன் பிறகு, நீங்கள் உடலாகவும், மனமாகவும் மட்டும் இருப்பதில்லை; ஒரு புழுவைப்போல் நீங்கள் இந்த பூமி மீது ஊர்ந்துகொண்டிருப்பதில்லை. உயர்ந்த தன்மையுடைய ஏதோவொன்று உங்கள் ஆற்றலை எழுப்பிவிடுகிறது. ஏனென்றால் ஒருவர் செய்யும் எந்த செயலிலும் வெற்றியடைவதற்கு, அருள் இல்லையென்றால் அவருக்கு வெற்றி வந்து சேராது.
துரதிருஷ்டவசமாக, உங்களது மனம் எப்போதும் மற்றவரை விட சிறப்பாக இருப்பதற்கே பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. இந்த உலகிலேயே முதல் இடத்தில் நீங்கள் இருக்க விரும்புகின்றீர்கள் என்றால் அதன் அர்த்தம், அடுத்தவர்களின் தோல்வியில் நீங்கள் மகிழ்ச்சியடைகின்றீர்கள் என்பதே. இது மாறவேண்டும். அடுத்தவர்களின் தோல்வியில் நாம் மகிழும்போது, அதனை நல்வாழ்வு என்று நாம் கூறமுடியாது, அது ஒருவிதமான நோய்.
ஏதேனும் ஒரு வழியில், நீங்கள் அருளுக்குப் பாத்திரமாக இருப்பதற்கு கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது மனோநிலையே உங்களை அருளுக்குப் பாத்திரமாக்கக்கூடும்; உங்களது உடலை நீங்கள் வைத்திருக்கும் விதம் உங்களை கிரகிக்கச் செய்யலாம்; உங்களது உணர்ச்சிகளை நீங்கள் வைத்திருக்கும் விதம் உங்களை கிரகிக்கச் செய்யலாம். அல்லது அதிக சிக்கலான வழிமுறைகளைத் தெரிந்தவராகவும் அவற்றின் மூலம் எப்படி கிரகித்துக்கொள்வது என்ற நுட்பங்களை புரிந்தவராகவும் நீங்கள் இருக்கலாம். அருள் இல்லாமல், வெற்றி இருக்காது. நீங்கள் அளவற்ற திறனுடையவராக இருக்கலாம், ஆனால் அருள் இல்லாத நிலையில் நீங்கள் ஒரு தோல்வியாளராகத்தான் இருப்பீர்கள்.
சரியாக செயல்படத் தெரியாத குழப்பமானவராக இருப்பார்கள், ஆனால் ஒரு கண நேரம் அருள் கிடைத்துவிட்டால், திடீரென்று அவர்கள் வெற்றிபெறுவதை நீங்கள் இந்த உலகத்தில் பார்ப்பீர்கள். உங்கள் உடலையும், மனதையும் எப்படி வைத்துக்கொள்வது என்பது உங்களுக்குத் தெரிந்தால், உங்களால் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்துவிட முடியும். ஆனால் உலகத்தை சென்றடைந்து, நீங்கள் செய்துகொண்டிருப்பதில் வெற்றியடைவது அருள் இல்லாமல் நிகழாது. அருள் என்னும் மசகு எண்ணெய் இல்லையென்றால், உங்கள் இயந்திரம் வெகுதூரம் செல்லாது. உங்கள் வாழ்வில் ஒவ்வொன்றும் மலையளவு பெருமுயற்சியுடன் அடைவதாகவே இருக்கும்.
பெரும்பாலான மனிதர்களும் இதைத் தங்களுக்கே செய்துகொள்கின்றனர், ஏனென்றால் அவர்கள் தலை கனத்து இருக்கின்றனர். அவர்கள் அருளுக்கு பாத்திரமாக இருக்கமாட்டார்கள். அவர்களது வாழ்வின் ஒவ்வொரு விஷயமும் - கல்வி, வேலை, திருமணம், குழந்தை வளர்ப்பு - கடினமாகவே இருக்கிறது.
நீங்கள் உயர்தரமான காரை ஓட்டினாலும், இஞ்சின் ஆயில் இல்லையென்றால், ஓட்டத்தொடங்கிய 10 நிமிடங்களில், அது பலவாறாக சப்தமெழுப்பும், மற்றும் அடுத்த 25 நிமிடங்களில் அது நின்றுவிடும். காரில் எல்லாமே சிறப்பானதுதான், ஆனால் மசகு எண்ணெய்தான் அதில் இல்லாத ஒரே விஷயம். அதுதான் அருள். அருள் இல்லையென்றால், உங்களது வாழ்க்கையில் மசகு எண்ணெய் இல்லை. எளிமையான விஷயங்களைச் செய்வதற்கே, நீங்கள் மோசமான சப்தங்களை எழுப்புவீர்கள்.
இந்தவிதமான சக்தி ரூபங்களை உருவாக்கும் முழு செயல்முறையும் மிக வலிமையாக அருள் உங்களை ஆட்கொள்ளவேண்டும் என்பதற்காகவே. நீங்கள் நன்கு உராய்வு குறைந்த மனிதராகிவிட்டால், அனைத்துமே சிரமமின்றி இருக்கும்.