கலாச்சாரம் & ஞானம்

புத்தரின் முந்தைய பிறவிகள்: மெதுவான, கடினமான ஒரு பாதைக்கு பூரண பக்தி

மகத்தான குருமார்கள் அவர்களது ஞானமடைதலுக்காக பிறவிகள்தோறும் எப்படி முயற்சித்தனர் என்று எப்போதாவது நீங்கள் வியப்படைந்ததுண்டா? இதோ கௌதம புத்தரின் முந்தைய பிறவிகளிலிருந்து பிரமிப்பை ஏற்படுத்தும் மூன்று கதைகள்.

சத்குரு: புத்தராவதற்கு முன், கௌதமர் ஞானமடைவதற்கு பல பிறவிகளாக கடும் முயற்சி செய்தார். அவருக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய குரு இல்லாமையாலும், சக்தியின் மேம்பட்ட நிலைகளுக்கு அவரை எடுத்துச் செல்வதற்கான சக்தியின் பிரவாகம் இல்லாத காரணத்தாலும், கருணை மற்றும் அன்பு போன்ற சில தன்மைகளுடன் அவர் தன்னையே சீரமைத்துக்கொள்வதற்கு கடுமையாக முயற்சித்தார். அவரது முற்பிறவிகளைக் குறித்து அவர் பேசிய அற்புதமான பல கதைகள் உண்டு.

ஒரு புறாவைக் காப்பதற்காக தன் சதையை அர்ப்பணித்த பேரரசர்

ஒரு குறிப்பிட்ட பிறவியில், அவர் சிபி என்ற பெயர் கொண்டிருந்தார். அவரது பூர்வபுண்ணியத்தின் பலனாக, அவர் ஒரு இளவரசனாகப் பிறந்து, ஒரு அரசரானார். அவர் பல போர்கள் புரிந்து, ஒரு பெரும் நிலப்பரப்புக்கு பேரரசராக உருவானார். அப்போது கடந்த காலத்தின் நினைவு அவருக்கு ஏற்பட்டது. அதன் மூலம், அவரது வாழ்க்கை ஒரு பேரரசராக இருந்துகொண்டு, மக்களை ஆட்சி செய்வதற்காக அல்ல, அவரது ஞானமடைதலுக்கான முயற்சியையும், மற்றவர்களுக்கு ஒரு ஒளியாக விளங்குவதையும் குறித்தது என்பதை அறிந்தார். ஆகவே, அவர் கருணையைப் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

ஒரு நாள், அவர் சில தியானப் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக, காட்டில் அமர்ந்திருந்தார். அப்போது காயப்பட்ட புறா ஒன்று பலவீனமாக சிறகசைத்தவாறு அவரது மடிமீது விழுந்தது. அதனைக் கையில் எடுத்தவர், அந்தப் புறாவின் சிறகு ஒடிந்து கிடந்ததையும், ஒரு வேடனின் அம்பு அதன் உடலில் துளைத்திருந்ததையும் கண்டார். அவர் தனது மேலங்கியைக் கிழித்து, புறாவின் சிறகுக்குக் கட்டுப்போட முயற்சித்தார். அதற்குள் அந்த வேடன் வந்து, “அது எனது பறவை, நீங்கள் என்னிடம் அதைக் கொடுத்துவிட வேண்டும்”, என்றான். பேரரசர் சிபி, “பறவை என் மடி மீது விழுந்தது, ஆதலால் அதை நான் உன்னிடத்தில் கொடுக்க வேண்டியதில்லை”, என்றார்.

வேடன் அவரிடம் நினைவூட்டினான், “நீங்கள் ஒரு பேரரசர்; நீங்கள் சட்டம் இயற்றிவிட்டு, நீங்களே அதை உடைக்கிறீர்கள். இந்த நாட்டின் சட்டம் என்னவென்றால், இரையை யார் சுடுகிறார்களோ அவர்களுக்கே அது உரியது. இந்த நாட்டின் சட்டத்தை நீங்கள் உடைக்கப்போகிறீர்களா? மேலும் என் உணவுக்கு என்ன வழி? இது எனது வாழ்வாதாரம். நான் வீழ்த்திய ஒரு பறவையை உங்களுடையதாக நீங்கள் உரிமை கொண்டாடுகிறீர்கள். எதிர்காலத் தலைமுறைகள் அதற்காக உங்களை சபிக்கும். சட்டத்தின் வடிவமாக இருக்கவேண்டிய பேரரசர், அவரது வசதிக்காக சட்டத்தை உடைக்கிறார்.”

பிறகு சிபி கூறினார், “எனக்கு சட்டம் புரிகிறது, ஆனால் ஒரு மேன்மையான சட்டத்துடன் இசைந்திருப்பதற்காக நான் விருப்பமும், முயற்சியும் கொண்டிருக்கிறேன். தயவுசெய்து இந்த ஒரு பறவைக்கு எனக்கு அனுமதி கொடு. நான் அதனிடம் கருணைகொள்ள விடு.” வேடன் கூறினான், “இல்லை, மேன்மையான சட்டங்கள் குறித்து எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம், நிலத்தின் சட்டம்தான். நான் அதைப் பின்பற்றுகிறேன், மேலும் நீங்களும் அதன்படி செல்வதை தான் நான் எதிர்பார்க்கிறேன்.” சிபி பறவையைப் பார்த்தார். பறவை தன் உயிரை அவர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையுடன் அவரைப் பரிதாபமாக நிமிர்ந்து பார்த்தது. ஆகவே பேரரசர் கூறினார், “இந்தப் பறவையின் எடைக்கு சமமாக என் தொடையிலிருந்து சதையை அறுத்து, உனக்குத் தருகிறேன்.”

வேடன் பேரரசரைப் பார்த்து, இது தன்னை ஏமாற்றுவதற்கான அரசரின் வழி என்று எண்ணினான். வேடன் கூறினான், “அது நல்லதுதான், பறவையை எடைபோடுங்கள். அதன் எடைக்குத் தகுந்தாற்போல் எனக்குத் தந்துவிடுங்கள். ஏனெனில் எனக்கு வேண்டியதெல்லாம் உணவுதான்.” சிபி ஒரு கத்தியை உருவி, அவரது தொடையில் ஒரு குறிப்பிட்ட அளவு பகுதியினை அறுத்து, வேடனிடம் கொடுத்தார். அதனால், அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் கால் ஊனமாகவே இருந்தார்.

நிபந்தனையற்ற தானம் செய்யும் ஒரு உறுதிமொழி எட்டிய உச்சம்

மற்றொரு பிறவியில், அவர் மீண்டும் ஒரு பேரரசராக இருந்தார். இந்த முறை, அவர் மேலும் அதிகமான பரிணாமம் அடைந்து, அவரது முக்தியை நோக்கிச் செல்வதில் உறுதியாக இருந்தார். அதனால் அவரது செல்வங்கள் அனைத்தையும் அவர் தானம் செய்துகொண்டிருந்தார். ஆன்மீகப் பாதையில் இருந்த மக்கள் வந்து தங்குவதற்கான மாபெரும் சத்திரங்களைக் கட்டி, அவர்கள் கேட்பதையெல்லாம் எப்போதும் தயங்காமல் வழங்கினார். இந்தச் செய்தி எல்லா இடங்களுக்கும் பரவியது. எப்போது, என்ன தேவை இருந்தாலும், அவரிடம் சென்று கேட்டால் கிடைத்துவிடும் என்பதை அனைவரும் அறிந்துகொண்டனர். மக்கள் என்ன கேட்டாலும், அவர் ஒருவருக்குக்கூட இல்லை என்று ஒருபோதும் கூறவில்லை. யார் வந்து, எதைக் கேட்டாலும், அவர் ஒருபோதும் இல்லை என்று கூறுவதில்லை என்று ஒரு உறுதிமொழி எடுத்திருந்தார்.

“யாராவது என் கைகால்களைக் கேட்டால், நான் அவற்றை வெட்டி, அவர்களுக்குக் கொடுத்து அனுப்புவேன்”, என்று கூறுமளவுக்கு அவர் இருந்தார். இந்திரன், தேவர்களின் அரசன், “இவன் மிகவும் பிரபலமாகிக்கொண்டு வருகிறான். அனைவரும் அவனைப்பற்றியே பிதற்றுகின்றனர்”, என்று எண்ணினான். இந்திரன் ஒரு வயோதிகமான, கண்களை இழந்த பிராமணனாக மாறுவேடம் பூண்டு அரசரிடன் வந்தான். அரசர், “நீ என்ன வேண்டுகிறாய்?” என்று கேட்டார். பிராமணன், “நான் இரண்டு கண்களையும் இழந்துவிட்டேன். உங்களுக்கு இரண்டு அற்புதமான கண்கள் உள்ளன. இந்த வாழ்க்கையைக் கடந்து செல்வதற்கு உங்களுக்கு ஒரு கண் போதும். எனக்கு ஒரு கண் கொடுங்கள்”, என்றான்.

அரசர் கூறினார், “இந்தக் கணம் வரை, இந்த வாய்ப்பை எனக்கு ஒருவரும் கொடுக்கவில்லை. யாராவது உண்மையாகவே பெரிதாக ஏதோ ஒன்றைக் கேட்பதற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். நீங்கள்தான் அதைக் கேட்கும் முதல் நபர். என் இரண்டு கண்களையும் கொடுத்துவிடும் அளவுக்கு நான் ஆனந்தப்படுகிறேன்”. எல்லா மந்திரிகளும், மற்றவர்களும் கூறினர், “இது சாத்தியமில்லை. இந்த மனிதன் உங்களுடைய தயாளகுணத்தைத் தவறாக பயன்படுத்தத்தான் முயற்சிக்கிறான். எல்லாவற்றுக்கும் மேல், கண்களை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்துவிடுவான்? அவன் தனது ஏழ்மையையும், மற்றவர்களின் செல்வத்தையும் பார்த்து துன்பம்தான் அடைவான். நீங்கள் பேரரசராக இருக்கிறீர்கள்; நீங்கள் உலகத்தின் கண்கள். உங்கள் கண்களை இழக்காமல் இருக்கவேண்டியது உங்களுடைய பொறுப்பு. நீங்கள் குருடராக இருப்பது மக்களுக்கு நல்லதல்ல”.

அவர்கள் கூறிய எதையும் பொருட்படுத்தாமல், அரசர் பதிலளித்தார், “நான் ஏற்கனவே அவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். நான் வாக்கு தவறுபவனல்ல. அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். இந்த மனிதர் ஒரு கண்ணைக் கேட்டார். நான் இரண்டையும் தருவேன்,” என்றவாறு உண்மையாகவே அவரது இரண்டு கண்மணிகளையும் வெளியில் எடுத்து, அந்த மனிதரிடம் கொடுத்தார். இந்த மாதிரி, கௌதமர் பலப்பல பிறவிகளாக ஞானமடைவதற்காக கடுமையாக முயற்சித்தார்.

ஒரு பசித்த பெண்புலிக்கு தன்னையே தியாகம் செய்த துறவி

மற்றொரு பிறவியில், அவர் ஒரு துறவியாக இருந்தார். அவர் கௌதமராக வருவதற்கு இரண்டு பிறவிகளுக்கு முந்தைய பிறவி இது. அவருடன் நடைப்பயணத்தில் இணைந்திருந்த ஒரு இளவயது ஆன்மீக ஆர்வலர் இருந்தார். இருவரும் காட்டில் சுற்றியலைந்துகொண்டு இருந்தனர். அவர்கள் ஒரு குகையை அடைந்து, அதற்குள் சென்றனர். அங்கே, அவர்கள் அப்போதுதான் குட்டிகளைப் பிரசவித்திருந்த ஒரு பெண் புலியைக் கண்டனர். புலி மிகவும் பசியோடு இருந்தது. அங்கு சுற்றிலும் உணவு இல்லை. புலிக்குத் தன் குட்டிகளின் மீது பாசத்தின் உந்துதல் இருந்தாலும், அவளது வயிற்றில் நெருப்பாக எரிந்துகொண்டிருந்த பசித்தீவிரத்தின் காரணமாக, புலி அதன் குட்டிகளையே தின்றுவிடும் நிலையில் இருந்தது.

இதைக்கண்ட துறவி, “இந்தப் பெண்புலி அவளுடைய குழந்தைகளையே தின்றுவிட்டால், குட்டிகளின் மீது அவளுக்கு இருக்கும் பாசத்தின் புனிதத்துவம் இந்த உலகத்தில் அழிக்கப்பட்டுவிடும். என்னால் இதை நிகழவிட முடியாது”, என்று கூறினார். அவருடன் இருந்த இளைஞரை வெளியில் அனுப்பி, புலிக்காக உணவு தேடிவர அனுப்பினார். ஆனால் அதற்குப் பிறகு, மேலும் காத்திருக்க நேரமில்லை என்பதையும், தாமதித்தால் தாய் தன் குட்டிகளையே தின்றுவிடுவாள் என்பதையும் உணர்ந்தார். ஆகவே அவர் ஒரு பெரிய கல்லை எடுத்து, அவரது தலையை நசுக்கிக்கொண்டு, புலிக்கு தன்னையே உணவாக்க முடிவுசெய்து, அதன் முன்னால் சரிந்து விழுந்தார்.

வெளியில் சென்ற இளைஞனால் எந்த உணவையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் குகைக்குத் திரும்பி வந்தபோது, மூத்த துறவியின் உடலில் பாதியை புலி தின்றுவிட்டதைக் கண்டான். அங்கே என்ன நிகழ்ந்திருந்தது என்பதை அவன் உணர்ந்துகொண்டான். ஒரு பெண்புலியை, தான் ஈன்ற குட்டிகளைச் சாப்பிடுவதிலிருந்து காப்பாற்றுவதற்காக, தனது உடலையே தாய்ப்புலிக்கு உணவாக்குவதற்கு சம்மதித்த ஒரு மனிதருடன் அவன் இணைந்திருந்ததில் மட்டற்ற ஆனந்தமடைந்தான்.

எனக்கு என்ன ஆகும்?

கௌதமர் அவரது உச்சபட்ச உணர்தலை அடைவதற்கு முன்னால், ஏறக்குறைய பதினைந்திலிருந்து பதினெட்டு விழிப்புணர்வான பிறவிகளுக்கு, இதைப்போல கடுமையாக முயற்சித்தார். அவரது உணர்வில், அது கடினமுயற்சியாக இல்லை, ஆனால் மற்றவர்களின் கண்களுக்கு அது நிச்சயமாக அப்படித்தான் இருந்தது. தன்னை உணர்தலுக்கான ஒரு வழி என்னவென்றால், மக்கள் மீது நாம் செயல்செய்யக்கூடிய வகையிலான விரிவான அமைப்புகளையும், ஒரு மார்க்கத்தையும் ஏற்படுத்துவது. அதனால் மக்கள் மெல்ல வளர்ச்சியடைய முடியும். இல்லையென்றால், குறைந்த கால அவகாசத்தில் தனிமனித உணர்தலை அடைவது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் மக்கள் விழுந்து, கரைந்துபோகக்கூடிய ஒரு கொதிகலனையும் உருவாக்க நாம் விரும்பினால், அப்போது “நான் என்பது என்ன” மற்றும் “நான் அல்லாதது என்ன” என்பதைத் தாண்டி நாம் உண்மையிலேயே பார்க்கவேண்டியது அவசியம். “எனக்கு என்ன ஆகும்?” என்பதும் ஆன்மீகமும் இணைந்து நிகழமுடியாது.