வாழ்வில் உங்களுடைய உச்சபட்ச இலக்குகள் என்ன?
உங்களுடைய ஆரோக்கியம், செல்வம், அதிகாரம், அமைதி, பாலுறவு இவைகளை மட்டும் மேம்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது வாழ்வு மற்றும் மரணத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆனந்தமாக கடந்து செல்வதற்கான உண்மை மற்றும் ஆற்றலின் உணர்தலை விரும்புகிறீர்களா? நீங்கள் தியானத்தன்மையை அடைவதற்கு விரும்பினால், குறிப்பிட்ட வேறுசில விஷயங்கள் நிறைவடைய வேண்டும். மனிதர்கள் இயற்கையாகவே ஏன் தியானத்தன்மை அடையவில்லை என்பதற்கு, அவர்கள் தளர்வு நிலையில் இல்லாமல் இருப்பதுதான் ஒரே காரணம். எப்போதும் அவர்கள் ஏதோ ஒருவிதமான இறுக்கத்தில் உள்ளனர். இது பிழைத்திருப்பதற்கான உந்துதல். பிழைத்தலுக்கான உந்துதல் இருக்கும்வரை, நீங்கள் ஒரு குறிப்பிட்ட அழுத்தத்திலும், இறுக்கத்திலும் இருக்கிறீர்கள். நீங்கள் முழுமையான பித்து நிலைக்கு செல்லாமல் இருக்கலாம், ஆனால் நிச்சயம் நீங்கள் தளர்வு நிலையில் இல்லை.
நீங்கள் தெளிவான அறிவு பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், அடுத்த சில வருடங்கள் இந்த பூமி மீது ஒரு சக்தியூட்டப்பட்ட காலம் செயல்பாட்டில் இருக்கப்போகிறது.
அநேகமாக, 2025ம் ஆண்டின் மத்தியில், இந்த சூரிய செயல்பாடு அதன் உச்சத்துக்கு அதிகரிக்கும். அந்த நேரத்தில், நாம் உலகத்துக்கு உணர்தலைக் கொண்டுவருவோமா அல்லது அழிவுகளைக் கொண்டுவருவோமா? தேசங்கள் ஒன்றை ஒன்று நோக்கி சுட்டு வீழ்த்தத் தொடங்குமா? நான் நேர்மறையான, அற்புதமான நிகழ்வுகளைக் காண்பதற்கே விரும்புவேன். ஆனால் நான் ஒற்றை மனிதன்தான். பண்டைய காலங்களில், சில யோகிகள் சஹஸ்ரங்கா என்று விவரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஆயிரம் கரங்களுடன் ஒரு யோகி. யாரோ ஒருவர் எனக்கு ஒரு “சேனை” இருப்பதாகக் கூறினார். ஒரு சேனையானது உத்தரவுகளை ஏற்கிறது. உங்களிடமிருந்து ஒரு “yes, sir” எனக்கு வேண்டாம், ஆனால் நீங்கள் தெளிவான அறிவு பெறவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனென்றால், அடுத்த சில வருடங்கள் இந்த பூமி மீது ஒரு சக்தியூட்டப்பட்ட காலம் செயல்பாட்டில் இருக்கப்போகிறது.
இந்த சக்தியை நாம் மாற்றமடையவும், உணர்தலுக்கும் பயன்படுத்தப்போகிறோமா, அல்லது நமது உடலில் ஏதோ ஒரு தூண்டல் நிகழ்ந்துகொண்டிருப்பதால் ஒருவரை ஒருவர் கொல்லப் போகிறோமா? நமக்கு சமநிலை இல்லையென்றால், நாம் ஒருவருக்கொருவர் பாதிப்பு ஏற்படுத்திக்கொள்வோம். இப்போது இந்த இடத்தில்தான் நாம் இருக்கிறோம். இந்த சூரிய எரிப்புகள் கடந்த காலத்தில் யோக நாட்காட்டியில் குறிக்கப்பட்டுள்ளது. எப்போதெல்லாம் சூரிய எரிப்புகள் ஒரு குறிப்பிட்ட உச்சத்தை எட்டுகிறதோ, அப்போது அந்தக் கலாச்சாரத்தில் மகத்தான யோகிகள் உச்சமடைந்தனர். அதே நேரத்தில், போர்கள், பேரழிவு நிகழ்வுகள், சில நேரங்களில் பூகம்பங்கள் நிகழ்ந்தன, ஏனென்றால் பூமியின் காந்த சக்திகள் மற்றும் பூமிக்கோளத்தின் மையத்தில் இருக்கும் வெப்ப சக்திகள் அனைத்தின் மீதும் சூரிய எரிப்புகள் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
சூழ்நிலையை நமக்கு சாதகமாக மாற்றுவது
ஒரு எரிமலை முழுவதுமாக வெடித்தெழுவதை நீங்கள் கேலரியில் இருந்து காணும் பார்வையில் கண்டால், அது என்ன ஒரு அற்புதமான காட்சியாக இருக்கும்! அதை நீங்கள் தவறவிட விரும்பமாட்டீர்கள். ஆனால் நீங்கள் எரிமலையின் அடிவாரத்தில் இருந்துகொண்டு, எரிமலைக் குழம்பின் ஒரு பகுதியாக மாறவிருந்தால், அப்போது அது ஒரு நல்ல விஷயம் அல்ல. உலகத்தில் ஒவ்வொரு சக்தியும் இதைப் போன்றதுதான். ஆகவே, இதைப்போன்ற ஏதோ ஒன்று நிகழும்போது, சரியான இடத்தைச் சென்றடைவதற்கான புத்திசாலித்தனத்தை மனித ஜனத்திரள் கொண்டிருக்கவேண்டும். அதன் விளைவாக, இந்த பூமி மீது செலுத்தப்படும் கூடுதல் சக்தி நமக்கு சாதகமாக செயல்படமுடியும்.
இதனால்தான் உங்கள் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் குறிப்பிடுவது அதிமுக்கியமானது. இல்லையென்றால், வலி, மரணம் மற்றும் பல பிரச்சனைகளும் எழும். ஆனால் ஒட்டுமொத்த உலகத்தையும் மாற்றுவதுகூட, இன்றைக்கு இருக்கும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பங்களால் சாத்தியமாகவே உள்ளது. தொழில்நுட்பங்களையும், சூரிய எரிப்புகளையும் பயன்படுத்தி, அடுத்த மூன்றரை வருடங்களை மனிதகுலத்திற்கான பிரம்மாண்டமான நேரமாக நாம் உருவாக்கமுடியும். அதைப் பயன்படுத்திக்கொள்பவர்கள் உயரமுடியும். அதைப் பயன்படுத்திக் கொள்ளாதவர்களுக்கு அது எப்படி செயல்படும் என்பது நமக்குத் தெரியவில்லை.
தொழில்நுட்பங்களையும், சூரிய எரிப்புகளையும் பயன்படுத்தி, அடுத்த மூன்றரை வருடங்களை மனிதகுலத்திற்கான பிரம்மாண்டமான நேரமாக நாம் உருவாக்கமுடியும்.
அது, பூகம்பம் அல்லது வெள்ளம் நிகழும் என்பதைப் போன்ற இயற்கைப் பேரழிவு அல்ல. ஆனால் இந்த பூமி மீது செயல்படும் எல்லா சக்திகள், புவிசார் காந்த சக்திகள், அணுக்கதிர் வீச்சுகள், பூமியைத் தொடரும் காந்தசக்தி மீதும், மற்றும் பூமியுடன் சந்திரன் தொடர்புகொள்ளும் விதத்திலும், சூரிய எரிப்பு சக்திகளை பூமியை நோக்கி எப்படித் திருப்பிவிடுகிறது என்பதிலும் ஒரு கூடுதல் தூண்டல் இருக்கிறது.
கூடுதலான தூண்டல் நிகழும்போது, தேவையான ஆற்றல் இல்லாமல் உங்களால் செய்யமுடியாத விஷயங்களை, இப்போது எளிதாக நீங்கள் செய்யலாம். தற்போது, பூமியின் மீது இந்த கூடுதல் தூண்டல் இருக்கிறது, மற்றும் அடுத்த மூன்று வருடங்களில் அது அதிகமாகப்போகிறது. அது நிகழும்போது, நமது எலும்புகளை நாம் உடைத்துக்கொள்ள முடியும் அல்லது நாம் உயரமுடியும். அனைவரும் உயரவேண்டும் என்பதே என் விருப்பம். நாம் செய்யக்கூடியது என்னவாக இருப்பினும், மனிதகுலம் எழுச்சியடையும் வகையில் நாம் செய்யவேண்டும், ஏனென்றால் நமக்கு நாமே உற்பத்தி செய்வதற்கு மிகக் கடினமான ஒரு இயற்கை சக்தி இருப்பதுடன், ஒட்டுமொத்த பூமி மீதும் அது தாக்கத்தினை ஏற்படுத்துகிறது.
உங்களையே தடையற்றவராக உருவாக்குங்கள்
பலரிடமும் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் போதிய கவனம் செலுத்துவதில்லை. நீங்கள் தேவையான கவனத்துடன் இருந்தால், உங்கள் சக்திகளை பல வழிகளில் நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களது ஞாபகமும், கற்பனையும் ஒன்றாகப் பிணைந்திருப்பதுதான் பிரச்சனை. எப்போது அவர்கள் கடந்த காலத்தை நினைவுபடுத்துகின்றனர், எப்போது அவர்கள் நிகழ்காலத்தை உணர்கின்றனர், மற்றும் எப்போது அவர்கள் எதிர்காலத்தை கற்பனை செய்கின்றனர் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை. கடந்த காலம் நினைவில் மட்டுமே இருக்கமுடியும். நிகழ்காலம் மட்டுமே உணர்வதற்கானது. எதிர்காலம் உருவாக்கப்பட வேண்டியது.
மக்கள் இப்போது கடந்த காலத்தினால் துன்பம் அடைந்துகொண்டு, நிகழ்காலத்தை முற்றிலுமாக தவறவிடுகின்றனர். ஒரு உயிர்ப்புமிக்க, செயலூக்கமான, வளர்ச்சி பெறும் வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் வடிவமைக்க வேண்டும். நீங்கள் அதனை உருவாக்குவதற்கு, கடந்தகாலம் நினைவில் மட்டுமே இருக்கமுடியும் - அது வாழமுடியாதது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நிகழ்காலத்தை அனுபவிக்கத்தான் முடியும் - அது குறித்து நீங்கள் எதுவும் செய்யமுடியாது. எதிர்காலத்தை உங்களால் உருவாக்கமு டியும்.
ஒரு உயிர்ப்புமிக்க, செயலூக்கமான, வளர்ச்சி பெறும் வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், அதை நீங்கள் வடிவமைக்க வேண்டும்.
உங்கள் எதிர்காலத்தை நீங்கள் வடிவமைக்கவேண்டும் என்றால், அதை அடைவதற்கான வழி ஒரு முக்கியமான அம்சமாக உள்ளது. அது சமூக வழிமுறையாக இருக்கலாம், பணம் சார்ந்த வழிமுறையாக இருக்கலாம், அரசியல் வழிமுறையாக இருக்கலாம் அல்லது சக்திநிலையின் வழிமுறையாக இருக்கலாம். நிச்சயமாக உங்களுக்கு வழிமுறை தேவை. வழிமுறை இல்லையென்றால், உங்களிடம் கார் இருந்தும், எரிபொருள் இல்லாததைப் போன்றது அது. உங்களுக்குள் இடையறாமல் செயல்படும் இரண்டு அடிப்படையான உந்துசக்திகள் இருக்கின்றன. ஒன்று, சுய பாதுகாப்புக்கான உங்களது உள்ளுணர்வு, இது உங்களது உடல்ரீதியான தற்காப்புக்கு மிகவும் அத்தியாவசியமானது. மற்றொன்று, விரிவடைவதற்கான பேராவல். விரிவடைவதற்கான இந்தப் பேராவல் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது ஏனென்றால், சுய பாதுகாப்புக்கான உள்ளுணர்வு பெரிய அளவில் முக்கியத்துவம் பெற்றுவிடுகிறது.
உங்கள் வாழ்க்கையில் ஒரு சில வலிமிகுந்த அனுபவங்கள் உங்களுக்கு இருப்பதால், விரிவடைவதற்கான உங்கள் பேராவலைவிட உங்களது சுய பாதுகாப்பு பெரிதாகிவிடுகிறது. அது ஆன்மீகம் குறித்ததாக மட்டும் இல்லாமல், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் குறித்தது. இது ஏன் செயல்படவில்லை? என்று பல தருணங்களில் நீங்கள் திகைத்து நிற்பதுண்டு. இதற்குக் காரணம், விரிவடையும் ஆவலைவிட சுய பாதுகாப்புக்கான உங்கள் உள்ளுணர்வு வலிமையாக உள்ளது. இந்தக் காரணத்தால், புதிதாக எதுவும் நிகழாது. நீங்கள் சுய பாதுகாப்பை அல்லது விரிவடைதலை விரும்பக்கூடும், ஆனால் அது நிகழாது. ஏனென்றால் நீங்கள் சுவர் ஒன்றைக் கட்டிவிட்டு, பிறகு வெளியே செல்வதற்கு முயற்சிக்கிறீர்கள். இது, அந்த மாதிரி வேலை செய்யாது. சுய பாதுகாப்பின் உள்ளுணர்வை நீங்கள் கடந்திருந்தால், அப்போது உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் தளர்வுநிலைக்கு வரும்.