வாழ்க்கை கேள்விகள்

கோபப்படுத்தும் மக்களை எப்படி நேசிப்பது?

உங்களை சதா எரிச்சலூட்டுபவர்கள் உங்களைச் சுற்றி உள்ளனரா? அதனை எப்படிக் கையாள்வது என்பதற்கான ஒரு புதிய, எதிர்பாராத கண்ணோட்டத்தை சத்குரு வழங்குகிறார்.

கேள்வி: அன்புள்ள சத்குரு, நம்மை அதிகம் எரிச்சலூட்டுபவர்களை நாம் எப்படி நேசிப்பது?

சத்குரு: உங்களை எரிச்சலூட்டும் மக்களை எப்படி நேசிப்பது? முதலில், அவர்களை நேசிப்பதாக நடிக்காதீர்கள் - அவர்கள் உங்களை எரிச்சலூட்டுவதை புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் ஏன் உங்களை எரிச்சலூட்டுகிறார்கள்? ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அல்லது நீங்கள் விரும்பும் விதமாக அவர்கள் இல்லை. ஆனால் அதே நேரத்தில், நீங்கள் கடவுளை நம்புவதாகக் கூறிக்கொள்கிறீர்கள். நீங்கள் கடவுளை நம்பினால், உங்களை எரிச்சல்படுத்தும் நபர்கூட கடவுளின் ஒரு படைப்பாகத்தான் இருக்கிறார். அத்துடன், உங்களை மிக அதிகமாக எரிச்சலூட்டக்கூடிய அளவுக்கு கைதேர்ந்த ஒரு படைப்பாகத் தெரிகின்றார்.

ஆகவே, உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். எது சரி, எது தவறு என்று ஏற்கனவே நீங்கள் தீர்மானித்துவிட்ட காரணத்தினால்தான் இந்த எரிச்சல் ஏற்படுகிறது என்பதை மட்டும் பாருங்கள். நீங்கள் பார்க்கும் விதம்தான் சரியானது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர்கள் வேறுவிதமாக இருந்தால், முதலில் நீங்கள் எரிச்சல் கொள்வீர்கள், பிறகு கோபம் கொள்வீர்கள், பிறகு அவர்களை வெறுப்பீர்கள், அதன் பிறகு அவர்களைக் கொல்வதற்கு விரும்புவீர்கள்.

அவர்கள் ஏன் உங்களை எரிச்சலூட்டுகிறார்கள்? ஏனென்றால் நீங்கள் எதிர்பார்க்கும் விதத்தில் அல்லது நீங்கள் விரும்பும் விதமாக அவர்கள் இல்லை.

இவை அனைத்துமே தன்னிச்சையான செயல்முறைகள். உலகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களைப்போல் இருக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கும் ஒரே காரணத்தினால்தான் இது நிகழ்கிறது. உலகத்தில் அனைவரும் உங்களைப்போல் இருந்துவிட்டால், உங்களால் இங்கு இருக்கமுடியுமா? உங்கள் வீட்டிலேயே இன்னொரு நபர் உங்களைப்போல் இருந்தால், அங்கு உங்களால் வாழமுடியுமா? உலகத்தில் ஒவ்வொருவரும் அவரவர் வழியில் இருப்பது மிகவும் நல்லது.

இந்த ஒட்டுமொத்த மக்கள் திரளிலும் எந்த ஒரு மனிதரும் முற்றிலும் தனித்துவமானவராக இருக்கிறார். தற்போது உங்களுக்கு அருகில் இருக்கும் நபரை நீங்கள் பார்த்தால், இந்த பூமியில் வேறெந்த மனிதரும் அவரைப்போல் இல்லை என்பதை நீங்கள் காண்பீர்கள். அவரைப்போல் வேறொருவர், இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை, மற்றும் அவரைப்போல் இன்னொருவர், இனிமேலும் ஒருபோதும் இருக்கமாட்டார்.

அவர்கள் அவ்வளவு மதிப்பு வாய்ந்தவர்கள். இதை நீங்கள் அங்கீகரித்தால், உங்களை எப்படி அவர்கள் எரிச்சலூட்ட முடியும்? உங்களைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொருவரும் முற்றிலும் தனித்துவமான மனிதர்தான். அவர்களைப்போல் வேறு ஒருவர் இல்லை. முற்றிலும் தனித்துவமான இந்த மனிதருக்கு அருகில் நீங்கள் இன்றைக்கு இருப்பது உங்களுக்கு நிகழக்கூடிய ஒரு பெரிய அற்புதம். இதை நீங்கள் கண்டால், எரிச்சலடைவது என்ற கேள்விக்கு இடமேது?

நீங்கள் வாழ்க்கையைக் கண்மூடித்தனமாக நடத்துகிறீர்கள். உங்களது கண்களைத் திறந்து, வாழ்க்கையை நீங்கள் இன்னமும் பார்க்கவில்லை - அதனால்தான் உங்களால் எரிச்சல்பட முடிகிறது. இல்லையென்றால், எப்படி யாராவது எரிச்சலூட்ட முடியும்? எல்லாப் படைப்பின் தனித்தன்மையையும் நீங்கள் கண் திறந்து பார்த்தால், நேசிப்பது ஒன்றுதான் நீங்கள் இருக்கக்கூடிய ஒரே வழியாக இருக்கும். அப்போது நீங்கள் அன்பின் பிரவாகமாகவே மாறிவிடுவீர்கள்.