உங்கள் மாயைகளை இழப்பது ஏன் நல்லது?
உங்கள் வாழ்க்கையில் மனிதர்களாலும், நிகழ்வுகளாலும் எப்போதாவது நீங்கள் ஏமாற்றமடைந்ததாக உணர்ந்ததுண்டா? அவ்வாறு இருந்தால், அது ஏன் கசப்புணர்வுக்கான காரணமாக இல்லாமல், வளர்ச்சிக்கான ஒரு வாய்ப்பாக இருக்கமுடியும் என்பதனை சுட்டிக்காட்டுகிறார் சத்குரு.
மாயையிலிருந்து விடுபட்ட அரசன்
சத்குரு: இந்தியாவில், தீவிரமான ஆன்மீகத் தேடலில் ஈடுபடவேண்டும் என்ற மாபெரும் உந்துதலுடன் ஒரு அரசர் இருந்தார். அதற்காக அவர் தனது அரண்மனை மற்றும் அதிகாரத்தையும் துறக்க விருப்பத்துடன் இருந்தார். தனது பல மனைவிகளையும் துறக்க அவர் விருப்பமாக இருந்தாலும், பிங்களா என்ற பெயர் கொண்ட ஒரு மனைவியிடம் அவர் ஆழமான பற்றுடன் இருந்தார். வருடங்கள் பல கடந்தன. ஒரு நாள், ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். தீவிரமான ஆன்மீகத் தேடுதலுடன் இருந்த அரசர் அவருக்குத் தலைவணங்கி, உரிய மரியாதையுடன் அவரை உபசரித்தார். அரசரின் பக்தியில் மகிழ்ந்துபோன முனிவர், ஒரு கனியை அளித்து, “இது சமநிலை வழங்கும் கனி. இது உனக்கு நீண்ட ஆயுளை மட்டுமல்லாமல், ஆனந்தமயமான வாழ்வையும், சமநிலையான மனதையும் வழங்கும். நீ இதற்குத் தகுதியாக இருக்கிறாய், பெற்றுக்கொள்” என்றார்.
அரசன் கனியை பெற்றுக்கொண்டான். கனியை உண்ண அவன் விரும்பினாலும், அவனுக்கு மிகவும் பிடித்தமான மனைவி பிங்களாவைப் பற்றி எண்ணினான். “இதை நான் உண்பதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நான் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும், அமைதியாகவும், சமநிலையுடனும் இருப்பதைவிட என் மனைவி அப்படி இருப்பதுதான் எனக்கு அதிகமான ஆனந்தம் தரும்” என்று எண்ணினான். ஆகவே அந்தக் கனியை தன் மனைவி பிங்களாவிடம் உண்ணக் கொடுத்தான். அவள் அவனுக்கு மனைவியாக இருந்து, அவர்களுக்குள் மிக நல்ல உறவுநிலை இருந்தபோதிலும், இரகசியமாக அவளுக்கு ஒரு காதலன் இருந்தான். அவன் ஒரு தேரோட்டி. அவள் சிறு பெண்ணாக இருந்த காலம்தொட்டு, அவளை வெளியில் அழைத்துச் செல்வது அவனது வழக்கமாக இருந்த நிலையில், அவர்களிடையே ஒரு உறவு வளர்ந்திருந்தது. ஆகவே அவள், “அவன்தான் இந்தக் கனியை உண்ண வேண்டும்” என்று எண்ணி, தேரோட்டியிடம் கனியைக் கொடுத்தாள்.
தேரோட்டியோ பெருத்த ஏமாற்றத்தில் இருந்தான், ஏனென்றால் அவள் அவனைக் காதலித்தாலும், வேறொருவனை மணந்திருந்தாள், மிக அரிதாகவே அவனிடம் நேரத்தைக் கழித்தாள். இந்த ஏமாற்றத்தின் வெளிப்பாடாக, அவன் ஒரு விலைமாதிடம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். அந்தப் பெண்மணி, தேரோட்டியிடம் மிகவும் நன்றாக நடந்துகொண்டதால், அவன் அவளிடம் காதலில் வீழ்ந்திருந்தான். ஆகவே அவன், “இந்தக் கனியை அவள் உண்ணட்டும்” என்று நினைத்து, அவளிடம் கனியைக் கொடுத்தான். சமநிலை, உற்சாகம், அமைதி மற்றும் நீண்ட ஆயுளை வழங்கும் கனியைப் பெற்ற விலைமாது, ”இதை வைத்துக்கொண்டு நான் என்ன செய்யப்போகிறேன்? இதற்குத் தகுதியான ஒருவர் உண்டு என்றால், அது அரசர்தான்” என்று நினைத்தாள். எனவே அந்தக் கனியை அரசனிடம் கொண்டுவந்தாள். கனியைக் கண்ட அரசன், என்ன நிகழ்ந்திருக்கிறது என்று உணர்ந்து கொண்டதுடன், தனது அத்தனை ஆண்டுக் கால மாயையிலிருந்தும் விடுபட்டான்.
வாழ்க்கையில் முழுமையான ஒரு விஷயம்
இன்றைய நாட்களில் நீங்கள் இத்தனை அனுபவங்களுக்கும் காத்திருக்கத் தேவையில்லை. உங்களது ஆண் நண்பர்கள், பெண் தோழிகள், கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் நீங்கள் கற்பனை செய்து கொண்டுள்ள மாயைகளிலிருந்து உங்களை வெகு விரைவாக விடுவிக்கிறார்கள். மாயைகள் உதிர்வது கெட்ட விஷயம் அல்ல. அதாவது உங்களிடமிருந்த எல்லா மாயைகளும் அகன்றுவிட்டன. நீங்கள் மாயையிலிருந்து விடுபட்டுவிட்டால், பிறகு உணர்தலுக்கான நேரம் வந்துவிட்டது என்று பொருள். ஆனால் நீங்களோ ஒரு புதிய பெண் தோழிக்கான நேரம் வந்துவிட்டதாக நினைக்கிறீர்கள்! உங்களுக்கு நெருக்கமான யாரோ ஒருவரை நீங்கள் இழந்துவிட்டால், விரைவில் அதற்கான மாற்று ஒன்றைக் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சி செய்கிறீர்கள். ஆனால் நீங்கள் அதற்காக அதிக விலை கொடுப்பீர்கள். சிறிது காலத்திற்குப் பிறகு, சமநிலை, அமைதி, அளப்பரிய தன்மையை அளிக்கும் கனியை நீங்கள் உண்டாலும் அது உங்களை எங்கும் கொண்டு செல்லாத அளவுக்கான ஒரு இடத்துக்கு நீங்கள் வந்திருப்பீர்கள். ஏனென்றால் உங்கள் மாயைகளை புனிதமென கருதி அதிலேயே புதைந்து விட்டீர்கள்.
குடும்பம், வேலை, உறவுகள், காரணங்கள் அல்லது மற்ற செயல்பாடுகள் என்று உலகில் நாம் ஈடுபாடு செலுத்தக்கூடியது எதுவாக இருந்தாலும், எல்லாமே மிகவும் முக்கியம்தான். ஆனால், அது ஒன்றுக்கொன்று தொடர்புடையதுதானே தவிர, எதுவும் அதனளவில் முழுமையானது அல்ல. இதை நாம் மறந்துபோனால், பிறகு நாம் ஒரு மாயையான நிலையிலேயே தேங்கிவிடுவோம் என்பதுடன், நமது வாழ்வின் வழியில் எத்தகைய பரிசுகள் எதிர்பட்டாலும், அது நம்மைக் கடந்து சென்றுவிடும்.
நீங்கள் சேர்த்து வைத்துள்ள அல்லது உருவாக்கியுள்ள அனைத்தும் உடைந்துபோகலாம் அல்லது பறிபோகலாம். அது உங்கள் உடலாக இருக்கலாம் அல்லது மனம், உறவுகள், வேலை அல்லது வீடு என்று எதுவாக இருந்தாலும், அவைகள் எல்லாமே ஒரு குறிப்பிட்ட அளவு கவனத்துடனும், புனிதத் தன்மையுடனும் நடத்தப்பட வேண்டும்; இல்லையென்றால், அவைகள் உங்களுடன் இருக்காது. அதே நேரத்தில், அவைகளே முழுமையானவை அல்ல என்பதை அறிந்துகொள்வதும் முக்கியமானது. நீங்கள் அதைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் ஒரு பற்றற்ற தன்மையை அடைவீர்கள். பற்றற்ற தன்மை என்றால் ஆசையற்று இருப்பது என்பதல்ல. பற்றின்மை என்பது உங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்வதற்காக, இத்தகைய விஷயங்களை உங்களைச் சுற்றிலும் நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளும்போது நிகழ்வது.
உங்கள் வசதிக்காக நீங்கள் செய்திருந்த சில ஏற்பாடுகள் உங்களுடைய உயிர் அல்ல, நீங்கள்தான் உயிர். உங்கள் வாழ்க்கை நன்றாக நிகழ்வதற்காக நீங்கள் சில ஏற்பாடுகளை செய்துள்ளீர்கள். இதனை நீங்கள் மறந்துவிட்டால், பிறகு வாழ்வின் இதர அம்சங்கள் உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் அடைந்துவிடுகின்றன. “உயிர்” என்று கூறும்போது, நான் உங்களை ஒரு நபர் என்ற பொருளில் கூறவில்லை. நாம் இங்கே அமர்ந்திருக்கையில், இது என் உடல் – அது உங்கள் உடல்; இது என் மனம் – அது உங்கள் மனம் என்று நம்மை வேறுபடுத்த முடியும். ஆனால், என் உயிர் உங்கள் உயிர் என்பதைப் போன்ற ஒரு விஷயமே இல்லை. இது, வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பிரபஞ்சம். இந்தப் பிறவியில் இதை நீங்கள் உணரவில்லை என்றால், உங்கள் மீது போர்த்தப்பட்டிருக்கும் இந்த மனித வடிவம் வீணாகிவிட்டது என்பதுதான் பொருள்.
மனிதராக வந்திருப்பது எதற்காக?
இந்த பூமியின் மீது விலங்குகளின் பரிணாம வளர்ச்சியை நீங்கள் உற்று நோக்கினால், அவைகளது வாழ்வின் போக்கு, அவைகள் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளும் ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறியலாம். ஆனால் ஒரு மனிதராக நீங்கள் இங்கு பிறந்துவிட்டால், மற்ற உயிரினங்களைப் போல் இல்லாமல், விழிப்புணர்வோடு வளரக்கூடிய திறன் உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் உள்நிலையில் பரிணாம வளர்ச்சி அடைய, உங்கள் வரையறைகளை உடைத்தெறிய, அடுத்த படிநிலையை அடைவதற்கு மட்டுமல்லாது, உங்களுடைய உச்சபட்ச இயல்பை எட்டுவதற்கும் நீங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த வாய்ப்பை நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் மனிதராக இங்கு வந்திருப்பதன் முக்கியத்துவம். உங்களது வரையறைகளுடன் உடன்பாடு செய்துகொண்டு தேங்கிவிடாதீர்கள். உங்கள் எண்ணப்போக்கு, உணர்ச்சிகள் மற்றும் ஏதேதோ மாயைகளால் வாழ்வை ஒரு எல்லைக்குட்பட்ட செயல்பாடாக செய்து விடாதீர்கள். உங்கள் வாழ்வின் அனுபவம், ஒரு உச்சபட்ச சாத்தியத்தை நோக்கி நகரட்டும்.