பகிர்வுகள்

ஈஷாவும் ஆயுதப்படைகளும்: தீவிரமும், உள்நிலைத் தேடுதலும் நிறைந்த வியத்தகு அனுபவங்கள்

கடந்த சில வருடங்களாக, இந்தியாவின் ஆயுதப்படை மற்றும் துணை இராணுவப் படைகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறுவதில் ஈஷா அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. சத்குருவின் வழிகாட்டுதலின் கீழ், யோகாவை நல்வாழ்வுக்கான ஒரு கருவியாகவும், இந்திய ஆயுதப்படைகளின் பயிற்சி முறையில் ஒரு பகுதியாகவும் இணைத்து செயல்படுத்துவதில் மத்திய அரசாங்கம் முனைப்பாக உள்ளது. அர்ப்பணிப்புடன் தேசத்தைப் பாதுகாக்கும் இவர்களுக்கு யோகாவை எப்படி வழங்கலாம் என்று ஆராயும் நோக்கில்
ஈஷா ஹட யோக பள்ளி பயிற்சி வழங்குகிறது.

சத்குருவின் வழிகாட்டுதல் என்பது என்ன?

சத்குரு கூறுகிறார், “தேசத்துக்காக வாழ்பவர்கள், தேசத்துக்காக உயிர் துறக்கவும் சித்தமாக இருப்பவர்கள், அதிகபட்சமான ஆற்றலைப் பெறவேண்டும் என்று நான் நினைக்கிறேன். நம்மிடம் இருக்கும் முதல் கருவிகள் நம் உடல், நமது மனம் மற்றும் நமது சக்தி. ஒருவரது உடலையும், மனதையும் வளர்ச்சிபெறச் செய்வதற்கும் மற்றும் அனைத்துக்கும் மேலாக சக்தியையும், உயிர்த்துடிப்பையும் அதன் உச்சநிலையில் வைத்திருப்பதற்கும், முழுமையான ஒரு யோக அமைப்பு இருக்கிறது. இந்த நாட்டுக்கு சேவை செய்யும் ஒவ்வொரு வீரரும் யோகாவின் பலனைப் பெறவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”

ஈஷா ஹடயோகா பள்ளியைச் சேர்ந்த ஆயுதப்படை மற்றும் துணை இராணுவப் படைகளுக்கான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுமித் மாத்தூர் பகிர்ந்துகொள்கிறார், “சத்குருவின் வழிகாட்டுதல் எளிமையானது – அங்கமர்தனா பயிற்சியை நம் இராணுவப் படைகளுக்கு எடுத்துச் செல்லுங்கள், அவ்வளவுதான்! அவர்களது இராணுவப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாகிய உடற்பயிற்சி, அவர்களுக்கு உடல் வலிமையை வழங்கும்; அதனுடன் யோகாவை இணைப்பது அவர்களுக்கு சுறுசுறுப்பையும், சமநிலையையும் வழங்கும்". சத்குருவுடனான ஓர் உரையாடல் நிகழ்ச்சியில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஓர் அதிகாரி சத்குருவிடம், “பகைவருடன் சண்டையிட்டு, எல்லைகளைப் பாதுகாப்பதற்கு ஒரு வீரனுக்கு கோபமும், ஆக்ரோஷமும் தேவைப்படாதா?” என்று கேட்டார். சத்குரு உடனே, “கோபம் கொண்ட ஒரு வீரன் ஒருபோதும் நேராகச் சுடமுடியாது – சமநிலையான ஒருவரால் மட்டும்தான் அது இயலும்,” என்று பதிலளித்தார்.

நிகழ்ச்சிக்காக ஈஷா குழுவினர் எவ்விதம் முன்னேற்பாடு செய்தனர்?

நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகளை பல துறைகளை உள்ளடக்கிய குழுக்கள், சங்கிலித் தொடரான செயல்பாடுகளில் துரிதமாக ஈடுபட்டன. அனைவருக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டு செல்வதற்காக, உபயோகா, அங்கமர்தனா மற்றும் சூர்ய கிரியா பயிற்சிகளைப் பற்றிய குறிப்புகள் அடங்கிய பகுதிகள் இந்தியில் மொழியாக்கம் செய்யப்பட வேண்டியிருந்தது. நிகழ்ச்சி தொடர்பான அனைத்தும் மொழியாக்கம் செய்தல், அவற்றுக்குக் குரல் கொடுப்பவர்களின் குரல் மாதிரிகளைச் சேகரித்தல், பொருத்தமான குரல் தேர்வு, அதைத் தொடர்ந்த மணிக்கணக்கான குரல் பதிவுகள் என்று, இது பல செயல்பாடுகளை உள்ளடக்கி இருந்தது. சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவும் தங்களது ஸ்டூடியோ மற்றும் உபகரணங்களை வழங்கி குரல் பதிவுகளுக்கு உதவிக்கரம் நீட்டியது. வீடியோ பதிவுகளுடன் ஆடியோ செய்முறை விளக்கங்களை இணைப்பதற்கு வீடியோ வெளியீட்டகம் பல மணி நேரங்கள் கடினமாக எடிட் செய்து அளித்தது. செய்முறை விளக்க வீடியோ பதிவுகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது, ஹடயோகா ஸ்கூலின் மற்றொரு குழு, ஐ.டி குழுவின் உதவியுடன், டிஜிட்டல் பிரதிகள் எடுத்தது. இந்தப் பிரதிகள், பயிற்சியாளர்களாகத் தேர்வானவர்களுக்கு அளிக்கப்பட்டது. சுமித், “இந்த செயல்பாடுகளின் ஒரு பகுதியாக நான் இருந்த நிலையில், பலமுறை எனக்குள் கூறிக்கொண்டதுண்டு, ‘ஒரு உயிர்த்துடிப்பான அங்கத்தின் இதர பாகங்களாக, தளர்வில்லாமல் செயல்படும் தன்னார்வலர்களுக்கு, ஈஷாங்கா என்பது, என்ன ஒரு பொருத்தமான வார்த்தை.’ இதனை குழு செயல்பாடு என்று அழைப்பது உண்மையில் குறைத்து மதிப்பிடுவதாகவே இருக்கும்,” என்று தன் உணர்வை வெளிப்படுத்தினார்.

பயிற்சிகளை பங்கேற்பாளர்கள் எவ்விதம் எதிர்கொண்டனர்?

ஹடயோகா ஆசிரியராகவும், ஆசிரம வளாகத்தில் இந்திய இராணுவத்துக்கு ஹடயோகா பயிற்சி மற்றும் மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினருக்கு அங்கமர்தனா பயிற்சி நடத்திய குழுக்களின் ஒரு பாகமாகவும், பயிற்சி விளக்க உரையின் வீடியோ பகுதியை உருவாக்கியவருமாகிய பூபேந்த்ர மிஷ்ரா, பகிர்ந்துகொள்கிறார்: “பங்கேற்றுக்கொண்ட வீரர்கள் திறந்த நிலையிலும், உள் வாங்குதலுடனும், கூர்மையாக கவனிப்பவர்களாகவும் இருந்தனர். வகுப்பறை எப்படி அமைக்கப்பட்டிருந்தது, உணவு எப்படி பரிமாறப்பட்டது, ஆசிரியர்களும், தன்னார்வலர்களும், ஆசிரமவாசிகளும் தங்களை எப்படி நடத்திக்கொண்டனர் போன்ற அனைத்து விஷயங்களையும் உற்று கவனித்து உள்வாங்கிக் கொண்டனர்.

“எல்லா செயல்முறைகளும் ஏதோ ஒரு விதிமுறையாக அல்லது திணிப்பாக இல்லாமல் எப்படி மென்மையான தன்மையில் ஒரு ஆலோசனையாக அவர்களுக்கு உணர்த்தப்பட்டது என்பது அவர்களை ஆழமாகத் தொட்டதாக பகிர்ந்துகொண்டனர். அவர்களுக்கு அதிகாலை 5.30 மணியில் இருந்து, இரவு 9.00 மணி வரை திட்டமிடப்பட்டதால், பயிற்சி தீவிரமாக இருந்தது. “இராணுவ அதிரடிப்படை பயிற்சி இந்த யோகப் பயிற்சி கற்றுக்கொள்வதை விட, எளிதாக இருந்தது,” என்று சிலர் நகைச்சுவையாகக் குறிப்பிட்டனர்.”

மற்றொரு ஹடயோகா ஆசிரியரும், மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினருக்கும், போர்ட் ப்ளேயரில் 2019 சர்வதேச யோகா தின நிகழ்வுக்கும் அங்கமர்தனா பயிற்சி நடத்திய குழுவின் அங்கமாக இருந்தவருமான விஜய், பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பினால் தான் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்; “பயிற்சிக் குறிப்பினை அவர்கள் இம்மியளவும் பிசகாமல் ஏற்றுக்கொண்டது உற்சாகம் தருவதாக இருந்தது. இத்தகைய தன்மைகள் என்னுள்ளே ஆழமாகத் தொடுவதாக உள்ளது, நானும் சிலவற்றைப் பின்பற்ற முயற்சிக்கிறேன். நிகழ்ச்சியின் இறுதிகட்டத்தை நெருங்கும் தருவாயில், அவர்களால் நெடு நேரங்களுக்கு அசைவில்லாமல் உட்கார்ந்திருக்க முடிந்தது. ஆன்மீக செயல்முறையில் ஆன்மீக அன்பர்கள் அமர்ந்திருப்பதைப் போல் அவர்கள் இங்கு அமர்ந்திருந்ததைக் காண வியப்பாக இருந்தது.

“நிகழ்ச்சி ஆரம்பித்து சில நாட்களில், பங்கேற்பாளர்கள் தங்கள் தியானத்தில் கண்கள் மூடிய நிலையில் எப்படி அசைவில்லாமல் உட்கார முடிந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. ஏனென்றால் முதல் நாளன்று ஏறக்குறைய அவர்களுக்கு அது சாத்தியமே இல்லை என்று தோன்றுமளவுக்கு இருந்தனர். இந்த மாற்றத்தை ஒவ்வொரு நிகழ்வின் முடிவிலும் கண்டபோது, நிகழ்வில் வழங்கப்பட்டதை முழுமையான அர்ப்பணிப்புடன் அவர்கள் உள்வாங்கியதைக் கண்டு, என் கண்கள் பொங்கிப் பிரவாகமெடுத்தன. எந்தச் செயலையும் செய்வதில் அவர்கள் காண்பிக்கும் தீவிரம் இணையற்றது.”

இராணுவ உடற்பயிற்சிக் கழகத்தின் தலைமை பயிற்றுனர் மற்றும் இராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு ஆணையத்தின் இணைச் செயலாளர் லெப்.கர்னல் விஷால் ஹூடா, ஆசிரமத்தில் நிகழ்ந்த ஹடயோகா நிகழ்வின் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிரார்; “வீரர்களுக்கே உரிய உடல் தகுதியும், மன ஆரோக்கியமும் ஒருங்கே அமைந்திருக்கும் நிலையில், இத்தகைய புராதனமான பயிற்சிகள் வரையறுக்கப்படாத பரிமாணங்களைத் திறந்துவிட்டது. யோக மையத்தின் அளப்பரிய சக்தி வளையம், அமைதியான முன்னேற்பாடுடன் கூடிய தளர்வறியா ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் இனிமையான இயல்பு கொண்ட தன்னார்வலர்கள் வழங்கிய உற்சாகமான சூழல் அனைத்தும் இணைந்து, அனுபவத்தின் ஆழத்தை அழுத்தமாக வழங்கியது. நிகழ்ச்சி முடிந்து நாங்கள் எங்களது வழக்கமான பணிக்குத் திரும்பியபொழுது, பார்ப்பதற்கு நாங்கள் முன்பிருந்ததைப் போல் தோன்றினாலும், அடியாழத்தில் எங்களுக்குள் மிக அதிகமான மாற்றம் இருந்தது.

“வாழ்வின் வெவ்வேறு அம்சங்களையும் நாங்கள் அணுகிய விதத்திலேயே அடிப்படையான மாற்றங்கள் இருந்தன. ஏறக்குறைய மூன்றாண்டுகள் கடந்திருந்த நிலையிலும், ஒவ்வொருமுறை பயிற்சி செய்யும்போதும், உணர்வுபூர்வமான பரிமாணம் ஆழமாகத் துளைத்தெடுப்பது இன்றைக்கும் தொடர்கிறது. தீவிரமாக ஆனால் அழுத்தமில்லாமல் இருப்பது, ஈடுபாட்டுடன் ஆனால் சிக்கிப்போகாமல் இருப்பது – இப்படிப்பட்ட பழமொழிகள் எங்களது வாழ்க்கை அனுபவத்தில் உண்மையானது.”

லெப்.கர்னல் ஹூடா, அங்கமர்தனா பயிற்சியைக் கற்றுக்கொண்டதைக் குறித்துக் கூறுகிறார்: “அது எங்களுக்கு சஞ்சீவினி போன்று இருந்தது. ஏனென்றால், இராணுவ வீரர்களின் வயது அதிகரிக்கும்பொழுது, குறிப்பாக அவர்கள் கடுமையான சூழல்களில் வாழ நேரும்பொழுது, அவர்களது உடல் தகுதி ஓரளவுக்குப் பாதிக்கப்படுவதை நாங்கள் அடிக்கடி கண்டுள்ளோம். தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு பங்கரில் உட்கார வேண்டியிருக்கும்பொழுது, ஒழுங்கமைக்கப்பட்ட உடல்பயிற்சிகளைக் கற்கும் எங்களுக்கு, நடப்பதற்குப் போதிய இடமில்லாத இடத்தில், கால், கைகளை வளைக்கக்கூட முடியவில்லையே என்ற வருத்தம் மேலோங்குவதுண்டு. ஆனால் நாங்கள் அங்கமர்தனாவை அதன் முறைப்படியே ஆறு அடிக்கு ஆறு அடி இடத்திலேயே செய்துவிட முடியும்.”

“பங்கேற்பாளர்களில் பெரும்பாலானவர்களுக்கு வெளிப்படாத ஆன்மீக நாட்டம் இருந்ததையும், அது ஆசிரம சூழலில் எப்படி வெளிப்பட்டது என்பதையும் கவனித்து நான் வியப்படைந்தேன்,” சுமித் கண்ணோட்டம் இது. “வெளியில் கடினமான வீரர்களாகத் தோன்றும் இந்த ஆண்களும், பெண்களும் முற்றிலும் வித்தியாசமான ஒரு பக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும், ஒரு ஆன்மீக சாதகருக்கும் இடையில் பொதுவான ஏதோ ஒன்று – தீவிரம் – இருப்பதை நான் உணர்ந்தேன். அவர்களது பணியின் தன்மைக்கு தீவிரமாகச் செயல்படுவது தேவைப்படுவதால், இது அவர்களுக்குள் இருக்கும் பக்தியின் பரிமாணங்களை திறந்திருக்கக்கூடும்.”

இராணுவ உடற்பயிற்சிக் கழகத்திலிருந்து வந்திருந்த நாயக் அஜய் சிங், அவரது ஆசிரம வருகை குறித்து பேசுகையில், “இங்கிருக்கும் சூழலில் ஒருவிதமான புத்துணர்ச்சியும், நறுமணமும் இருக்கிறது. நீங்கள் எங்கு சென்றாலும் இதனை உணரமுடியும். நறுமணங்கள் பல விதங்கள் என்றாலும், இந்த நறுமணம் மக்களின் இதயங்களில் மிக வித்தியாசமானதொரு உணர்வைத் தட்டி எழுப்புகிறது. இந்த நறுமணத்திற்கென்றே ஒரு குறிப்பிட்ட சாந்தப்படுத்தும் தன்மையும் இருக்கிறது.”

“ஆசிரமத்தில் இருந்த ஒவ்வொன்றையும், ஒவ்வொருவரையும் வீரர்கள் உற்று நோக்கியவாறு இருந்தனர்.” ஹடயோகா ஆசிரியராகவும், ஈஷா யோக மையத்தில், இராணுவத்தினருக்கு ஹடயோகா பயிற்சி நடத்திய குழுவின் ஒரு பாகமாகவும் இருந்த சுபோத் ஜதார், உற்சாகத்துடன் நினைவுகூர்கிறார். ஒரு நாள், ஒரு பங்கேற்பாளர் என்னை அணுகி கூறினார், “வீரர்களிடம், நாங்கள் எதையாவது செய்யுமாறு கூற வேண்டுமென்றால், வழக்கமாக நாங்கள் கடுமையான மொழியைப் பயன்படுத்த வேண்டும், இல்லையென்றால் அவர்கள் கவனிப்பதில்லை. ஆனால் இங்கே, ஒருவரும் உரத்த குரலில்கூடப் பேசாததை நான் பார்க்கிறேன். உண்மையில், ஒவ்வொருவரும் மெத்தப் பணிவுடன்தான் பேசுகின்றனர், இருந்தும் வேலைகள் நிகழ்கிறது! இது எப்படி சாத்தியமாகிறது?”

இராணுவப் படைப்பிரிவின் பயிற்சி மையங்களுள் ஒன்றில் நிகழ்ந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தை ஹடயோகா ஆசிரியர் விஜய் நினைவு கூர்கிறார்: “ஏதோ ஒரு காரணத்துக்காக, எல்.இ.டி திரை வருவதற்கு தாமதமானதுடன், எங்களுக்கு வேறொரு மீட்டிங்கிற்கும் செல்லவேண்டியிருந்தது. நாங்கள் திரும்பி வருவதற்குள், பங்கேற்பாளர்கள் திரையை தயார்நிலையில் இயங்குமாறு வைத்திருந்தனர். நாங்கள் அதை ஆய்வு செய்தபொழுது, அதன் உயரத்தை ஒரு சில அங்குலங்கள் குறைக்கவேண்டும் என்று தோன்றியது. அவர்களுடன் இந்த கருத்தைப் பகிர்ந்துகொண்டபோது, எந்தக் கேள்விகளும் இல்லாமல், அவர்கள் திரையை முழுக்கப் பிரித்து, உயரத்தை சரிசெய்து, மீண்டும் தயார்நிலைக்குக் கொண்டுவந்தனர். இதற்கு அவர்களுக்கு ஒரு சில மணி நேரங்கள் ஆனது.  இதைக் கண்டதும் எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது.”

இந்த முயற்சி தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எப்படி தாக்கம் ஏற்படுத்தியது?

மற்றொரு ஈஷா ஹடயோகா ஆசிரியரும், இந்திய கடற்பாதுகாப்பு படையினருக்கு டாமனில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தவரும், 2019 சர்வதேச யோகா தினம் நிகழ்வுக்காக போர்ட் ப்ளேயர், அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்குப் பயணம் செய்த ஈஷா குழுவின் பாகமாகவும் இருந்த மகராண்ட் மோடே, இந்த முயற்சி தனிப்பட்ட முறையில் அவருக்கு என்ன தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதைப் பிரதிபலிக்கிறார்: “எனது பள்ளிப் பருவத்தில் கார்கில் போர் நிகழ்ந்தது. என் ஆங்கில ஆசிரியர் போரைப் பற்றி விளக்கிக் கூறினார். தேசத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் மற்றும் நமது வீரர்கள் தேசப் பாதுகாப்பை முன்னிறுத்தி எப்படி அவர்களது உயிர், குடும்பம் மற்றும் அனைத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு போரிடுகிறார்கள் என்று கூறினார். எங்களில் பலரும் அழுதது எனக்கு நினைவிருக்கிறது. கார்கில் நிவாரண நிதிக்கு எங்கள் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரு தொகை சேகரித்து நன்கொடை அளித்தது எங்களுக்கான பெருமிதமான கணமாக இருந்தது. அப்போதிருந்து, அந்தத் தொடர்பு உயிரோட்டமாக இருக்கிறது.”

ஹடயோகா ஆசிரியர், சுபோத் ஜாதர், சியாச்சினில் சர்வதேச யோகா தினம் நிகழ்வை நடத்திய குழுவின் பாகமாக இருந்தவர், நினைவுகூர்கிறார்: “இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, இந்தியப் படையினரின் வீரத்தைப் பறைசாற்றும் சில நினைவு மையங்களைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது. எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தபொழுது, என்னுள் ஆழமான ஒரு வலியை உணர்ந்தேன். அதற்கு முன்பு, நம் வீரர்கள் தேசத்தைப் பாதுகாப்பதற்காக எந்த விதமான கடின வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்பதை நான் அறிந்திருப்பதாகவே நினைத்தேன்.”

“ஆனால் முதல்முறையாக எல்லாவற்றையும் கண்கூடாகப் பார்த்து, அவர்களுடன் அளவளாவி, வீர மரணம் எய்திய மகன்களுக்கு, அவர்களது பெற்றோர் எழுதிய கடிதங்கள் அல்லது ஒரு வீரரால் அவரது மரணத்துக்குச் சற்று முன்பு எழுதப்பட்ட கடிதங்களைப் படிக்க நேர்ந்ததில், அவர்களது வாழ்வின் நிதர்சனமான உண்மை என்னைக் கலங்கடித்துவிட்டது. இந்த இடங்களை ஒவ்வொரு இந்தியரும் காணவேண்டும் என்று நான் நினைத்தேன். அந்த இடத்தை விட்டு நாங்கள் வெளியேறியபொழுது, கதவில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டேன்:  'நீங்கள் வீடு திரும்பியதும், எங்களைப் பற்றி குடும்பத்தினரிடம் கூறுங்கள், உங்கள் நாளைய பொழுதுக்காக, எங்களது இன்றைய தினத்தை நாங்கள் கொடுத்துவிட்டோம்.”