பகிர்வுகள்

மனிதன் என்பவன் ஒரு வளம் அல்ல 2021

நோக்கம், ஆர்வம் மற்றும் கலாச்சாரம் கொண்டு வழிநடத்துதல்

ஒரு பொதுவான சங்கடம், ஒரு முடிவுறாத இடர்பாடு, முழுமை பெறாத வளர்ச்சி கதைகள், உறைந்த நிறுவனங்கள். உயிர்ப்போடு இருக்கும் ஒரு உயிரினமாக நம்மை நாமே எவ்வாறு மறுஉருவாக்கம் செய்துகொள்வது?

1958ல் இ.வைட் பாக்கே என்ற பொருளாதார நிபுணரால் "மனித வளம்" என்ற சொல்லாக்கம் உருவாக்கப்பட்டது - மனிதர்களை முதலாளிகளுக்கு வளம் சேர்க்கும் ஒரு சாதனமாக கருதிய சிந்தனையில் பிறந்தது அந்த சொல்லாடல்.

இந்த கருத்தின் அடிப்படைக்கு சவால்விடும் விதமாக, ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் "Human Is Not A Resource (HINAR) ("மனிதன் என்பவன் ஒரு வளம் அல்ல") என்ற மூன்று நாள் வணிக பயிற்சி நிகழ்ச்சி 2017ம் ஆண்டு துவங்கி வருடம்தோறும் நிகழ்ந்து வருகிறது. "நீங்கள் ஒரு மனிதரை ஒரு வளம் என கருதினால், அதற்கு அர்த்தம் மனிதரை அறுதியான ஒன்றாக நீங்கள் நம்புகிறீர்கள் என்பதுதான். ஒரு மனிதர் அறுதியானவர் அல்ல, அவர் என்றும் பரிமளித்துக் கொண்டிருக்கும் ஒரு சாத்தியம்" என்று கூறும் சத்குரு, இதையே HINAR-ன் அடிப்படைக் கூறாக வரையறுத்துள்ளார்.

நோக்கம், ஆர்வம் மற்றும் கலாச்சாரம்

முதன்முறையாக, இந்த வருடம் சத்குரு நேரடியாக ஒரு அமர்வை வழிநடத்தினார். இந்த தலைமுறையின் பெரிய சவாலாக விளங்கும் கோவிட்-19 பெருந்தொற்று எவ்வாறு காலாவதியான பழைய அமைப்புகள் மற்றும் கருத்துகளை மறுசீரமைப்பு செய்து, புதுமையை துரிதப்படுத்துவதற்கான மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கிறது என்பது குறித்து நினைவூட்டினார் சத்குரு. "நிலையற்ற தன்மையே நாம் வாழும் உலகின் இயல்பாக இருக்கும்பட்சத்தில், நீங்கள் நம்பிக்கை வைக்கக்கூடிய மக்களோடு பணியாற்ற வேண்டியது இன்னும் முக்கியம் வாய்ந்ததாக ஆகிறது" என்று குறிப்பிட்டார் சத்குரு.

உயிர்ப்போடும் மீள்திறனோடும் நிறுவனங்கள் இயங்குவதற்கான மூன்று அடிப்படை கருப்பொருட்கள்: நோக்கத்தை மறுசிந்தனை செய்தல், அந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்தும் பேரார்வம், மக்களை பிணைப்பதை கலாச்சாரமாக கொள்வதன் மூலம் தெளிவின்மையை குறைத்தல்.

HINAR-ன் ஐந்தாம் வருட நிகழ்வில் 11 நாடுகளைச் சேர்ந்த 111 மேல்நிலை தொழில்முனைவோர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்று கலந்துரையாடினார்கள். அப்போது, உயிர்ப்போடும் மீள்திறனோடும் நிறுவனங்கள் இயங்குவதற்கான மூன்று அடிப்படை கருப்பொருட்களாக - நோக்கத்தை மறுசிந்தனை செய்தல், அந்த நோக்கத்தை நடைமுறைப்படுத்தும் பேரார்வம், மக்களை பிணைப்பதை கலாச்சாரமாக கொள்வதன் மூலம் தெளிவின்மையை குறைத்தல் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்தனர். மிகுந்த அனுபவம் வாய்ந்த வணிகத்தலைவர்கள் பங்கேற்பாளர்களை சிறுசிறு குழுவாக பிரித்து, அவர்களுக்கு தலைமையேற்று சிறப்பு கவனம் செலுத்தி கலந்துரையாடினர். நிகழ்ச்சிக்கு முன்பும், பின்பும், ஒருவரை ஒருவர் சந்தித்து கருத்து பரிமாற்றமும் செய்துகொண்டனர்.

ஒரு அதிசயம் வாய்ந்த தேசத்தை உருவாக்குவதற்கான வழி

மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தின் முன்னாள் குழு தலைவர் (மனிதவளம் மற்றும் பெருநிறுவன சேவைகள்), மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (சந்தைக்கு பிறகான பிரிவு) ராஜீவ்டுபே அவர்கள் "மனிதவளம் - ஆணையை மறுபரிசீலனை செய்வது" என்ற அமர்வை வழிநடத்தினார். அப்போது அவர், "மனித ஆற்றலை வெளிக்கொணருவது என்பது ஏதோ ஒரு துறையில் மட்டும் நிகழ்வதாக இருக்கக்கூடாது. நிறுவனத்தில் உள்ள ஒவ்வொருவரும் மனிதர்களைதான் கையாள்கிறார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் சிறந்ததை எவ்வாறு வெளிக்கொணர்வது என்பது பற்றி ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும்" என்றார்.

"மக்கள்தொகையில் பெரும் பங்கு வகிக்கும் நமது இளைஞர்கள் திறன் மேம்பட்டவர்களாக, ஒருமுக கவனம் கொண்டவர்களாக, நிலையானவர்களாக, ஊக்கம் மிக்கவர்களாக இருந்தால், அடுத்த 10-15 வருடங்களில் ஒரு அதிசயம் வாய்ந்த தேசத்தை நம்மால் உருவாக்க முடியும்." - சத்குரு

கிராமப்புற இந்தியாவை வலிமைப்படுத்துவது மற்றும் இளைஞர்களைத் தலைவர்களாக உருவாக்குவது போன்ற பரந்த நோக்கங்களை நிறுவனங்கள் பின்பற்றவேண்டும் என்று சத்குரு வலியுறுத்தினார். "நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்து, தேவைப்படும் திறன்களை மக்களிடம் வளர்க்க வேண்டும். உங்கள் முதலீட்டில் குறைந்தது 10% கிராமப்புற இந்தியாவை நோக்கி அமைய வேண்டும். உங்கள் தொழிலில் மிகப்பெரிய அளவில் புதுமைத் திறன் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். மக்கள் எங்கே இருக்கிறார்களோ அங்கே வணிகம் செல்ல வேண்டும். தொடர்ந்த சத்குரு, "மக்கள்தொகையில் பெரும் பங்கு வகிக்கும் நமது இளைஞர்கள் திறன் மேம்பட்டவர்களாக, ஒருமுக கவனம் கொண்டவர்களாக, நிலையானவர்களாக, ஊக்கம் மிக்கவர்களாக இருந்தால், அடுத்த 10-15 வருடங்களில் ஒரு அதிசயம் வாய்ந்த தேசத்தை நம்மால் உருவாக்க முடியும்" என்றார்.

மக்களை மையமாகக் கொண்ட ஒரு அணுகுமுறை

நிறுவனமாவதின் நோக்கம் குறித்து பேசுகையில், ரெபோஸ் எனர்ஜி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை வியூக அதிகாரி, அதிதி போசலே-வாலுஞ் பகிர்கையில், "எங்களுடைய நோக்கத்தை முதலில் கண்டடைந்தோம். பின்னர் அதையொட்டி எங்கள் நிறுவனத்தை உருவாக்கினோம்" என்றார். நோக்கத்தை அடையும் ஆற்றலை விரிவடையச் செய்யும் சக்தியான பேரார்வத்தைப் பற்றி குறிப்பிடும்போது, பரம் விசிஷ்ட சேவா பதக்கம் மற்றும் விசிஷ்ட சேவா பதக்கம் பெற்றவரும், குடியரசு தலைவரின் கௌரவ உதவியாளரும் (ஓய்வு) தென்மேற்கு படைப் பிரிவின் முன்னாள் பொது முதன்மை படைத்தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் அலோக் க்ளேர் கூறினார், "உடல் மற்றும் மனம் சார்ந்த கடுமையான ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதுடன், ஒவ்வொரு தருணத்திலும் தன்னளவில் மிகச் சிறந்ததை வெளிப்படுத்துவதும், உங்கள் பேரார்வத்தை முயற்சியன்றி நிலைத்திருக்கச் செய்யும்," என பகிர்ந்துகொண்டார்

"நாங்கள் எப்போதுமே முதலில் மக்கள், அடுத்து வணிகம், இறுதியாக லாபம் என்பதையே முன்னிறுத்தி வந்துள்ளோம்." - சௌகதா குப்தா

மாரிகோ-வின் (7315 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட இந்தியாவின் முதன்மையான நுகர்பொருள் நிறுவனங்களில் ஒன்று) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, சௌகதா குப்தா அவர்கள் கலாச்சாரம் குறித்து சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். "நாங்கள் எப்போதுமே முதலில் மக்கள், அடுத்து வணிகம், இறுதியாக லாபம் என்பதையே முன்னிறுத்தி வந்துள்ளோம்" என்றவர், நம்பிக்கையின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்திக் கூறும்போது, மிகக் குறைந்த அளவிலான மேற்பார்வை, மேலாண்மை மற்றும் தொழிலாளர்களுடனான குறைந்தளவு நேரடித் தொடர்பு இருந்தபோதிலும், சமீபத்திய பெருந்தொற்று காலத்தில்தான் மாரிகோ சிறந்த வளர்ச்சியை அடைந்துள்ளதாக பகிர்ந்துகொண்டார். இது நிறுவனத்துக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே பரஸ்பரம் இருக்கும் நம்பிக்கையின் விளைவாகதான் நிகழ்ந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

சத்குரு மக்களோடு வேலை செய்யும் வழிமுறை

HINAR மற்றும் INSIGHT நிகழ்வுகளில் மிகவும் பாராட்டப்படும், மிக அதிகமாக விரும்பப்படும் அம்சம், ஈஷா ஒரு நிறுவனமாக "மனிதன் ஒரு வளம் அல்ல, ஆனால் ஒரு சாத்தியம்" என்ற கோட்பாட்டுக்கு எவ்வாறு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது என்பதை ஈஷா தலைமைத்துவ குழுவிடம் இருந்து நிகழ்ச்சியில் பங்கு கொள்பவர்கள் கேட்டறியும் அமர்வுதான். ஈஷா அறக்கட்டளையின்  மனித சாத்திய துறையைத் தலைமையேற்று நடத்திவரும் மா ஞானா இவ்வாறு கூறினார்: "ஈஷாவில், விளைவு என்னவாகும் என்பதில் பெரிதாக கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஒவ்வொரு தனிமனிதரையும் பேணிவளர்க்கும், ஊக்குவிக்கும் சூழலை வளர்த்தெடுப்பதற்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது."

ஈஷா லீடர்ஷிப் அகாடமியை இணை-தலைமையேற்று நடத்திவரும் மௌமிதா சென்சர்மா பேசுகையில், "ஈஷாவில் சத்குரு "ஏன்" என்ற அம்சத்தை முற்றிலும் வேறுதளத்துக்கு கொண்டு செல்வார். அதன் மூலம் தன்னுடைய நோக்கத்தை மிக தெளிவாக எங்களுக்கு புரிய வைப்பார். எங்களுடைய விருப்பு வெறுப்புகளை உடைத்து, ஒரு தனிமனிதரை அவருடைய முழுஆற்றலையும் உணரவைக்கும் நிலைக்கு கொண்டுவருவதைத் தவிர வேறு எண்ணம் அவர் மனதில் இல்லை" என பகிர்ந்து கொண்டார்.

உங்களை விட மிகப்பெரிய ஒன்றை உருவாக்குவதற்கான ஊக்கம்

ஊக்குவிப்பது, மதிப்பளிப்பது மற்றும் தன்னார்வலர்களை வளர்த்தெடுப்பதன் மூலம் மிகப்பெரிய திட்டங்களை குறுகிய காலத்திலேயே செய்து முடிப்பது என்பது ஈஷாவில் சாதாரணமாக நிகழும் ஒன்றாகிவிட்டது. இது "எவ்வாறு" சாத்தியமாகிறது என்பதைக் குறித்து பேசும்போது சுவாமி உல்லாசா கூறினார், "சத்குரு நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களோடு கணக்கற்ற நேரம் செலவிட்டு நோக்கத்தைப் பகிர்ந்து கொள்வதுடன், எல்லாவிதமான "ஆனால்" என்ற கேள்விகளும் முடிவு பெறும் வரை இடைவிடாமல் பதிலளிக்கிறார். அதற்குப் பிறகே, குழுவினர் அந்த நோக்கத்தை திட்டமாக மாற்றும் தெளிவு பெற தொடர்ந்து பணிசெய்கிறார்கள்." நதிகளை மீட்போம் இயக்கத்தின் நோக்கத்தை விளக்க, உணர்வு எந்த அளவு முக்கியமான ஒரு வழியாக இருந்தது என்பதை சுவாமி உல்லாசா ஒரு கதை மூலம் விளக்கினார்.

"ஒரு சில தன்னார்வலர்களின் மனதில், இதயத்தில் இருந்த ஒரு திட்டம் எவ்வாறு ஆயிரக்கணக்கான மக்களின் கைகளில் சேர்ந்து ஒரு வடிவம் பெற்றது என்பதை கண்ணுற்றது இன்னும் பசுமையாக கண்களில் நிழலாடுகிறது."
- ஸ்வாமி உல்லாசா

ஈஷா யோக மையத்தில் தன்னார்வலர்கள் குழுவும், தேர்ந்த புகைப்பட கலைஞர்களும் ஒரே இரவு பயிற்சியில் மனிதர்களைக் கொண்டு பிரம்மாண்டமான ஒரு இந்திய வரைபட வடிவத்தை உருவாக்கினர். தன்னார்வலர்கள் மிகச் சரியான உருவாக்கத்தில் நின்று, நதிகளை மீட்போம் அட்டைகளை ஒத்திசைவாக அசைத்தது, வசீகரிக்கும் ஒரு விளைவை ஏற்படுத்தியது. அந்த முழு நிகழ்வுமே ட்ரோன் கேமராக்கள் மற்றும் கிரேன் கேமராக்கள் மூலம் படமாக்கப்பட்டது. அந்த நாள் பற்றி இப்படி நினைவு கூர்கிறார் சுவாமி: "ஒருசில தன்னார்வலர்களின் மனதில், இதயத்தில் இருந்த ஒரு திட்டம் ஆயிரக்கணக்கான மக்களின் கைகளில் சேர்ந்து ஒரு வடிவம் பெற்றதை கண்ணுற்றது, இன்னும் பசுமையாக கண்களில் நிழலாடுகிறது."

ஈஷா அவுட்ரீச் செயல்படுத்தி வரும் காவேரி கூக்குரல் திட்டத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் யூரி ஜெயின், ஈஷா திட்டங்களுக்கு குழுக்களை உருவாக்குவது குறித்து கூறும்போது, "நாங்கள் திறனைக் காட்டிலும் அர்ப்பணிப்பைதான் நாடுகிறோம். அனுபவம் இல்லாத தன்னார்வலர்களை அவர்களுக்கு பரிட்சயம் இல்லாத தளத்தில் விடுவதால் அவர்கள் தங்களுக்கு சௌகரியமாக இருக்கும் ஒரு நிலையில் இருந்து அகன்று, ஒரு தனிமனிதராக மென்மேலும் வளரும் ஒரு நிலையை அடைகிறார்கள். தலைவர் அவர்கள் மேல் கொண்டுள்ள அளப்பரிய நம்பிக்கையை அவர்கள் உணர்கிறார்கள்."

உங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை வாழ்க்கையை விட மேலான ஒரு நிலைக்கு நீங்கள் உயர்த்தலாம். அவ்வாறு நீங்கள் செய்தால், மக்கள் இன்னும் ஈடுபாடு கொள்வார்கள் - யூரிஜெயின்

மேலும் யூரி கூறினார், "சத்குருவின் நோக்கம் தனிமனித மாற்றத்தைக் குறித்தது. ஒவ்வொரு பணியும் ஒரு தனிமனிதரை வடிவமைக்கும் வண்ணமே அமைக்கப்பட்டுள்ளது. அநேக நிறுவனங்களில், தோல்வியைக் குறித்த பயம் செயலாக்கத்துக்கு இடையே புகுந்து தடை செய்யும். உங்கள் நிறுவனத்தின் நோக்கத்தை வாழ்க்கையை விட மேலான ஒரு நிலைக்கு நீங்கள் உயர்த்தலாம். அவ்வாறு நீங்கள் செய்தால், மக்கள் இன்னும் ஈடுபாடு கொள்வார்கள். நீங்கள் சமூகத்துக்கு இன்னும் பொருத்தமானவராக உங்களையே உருவாக்கிக் கொண்டால் லாபம் மற்றும் வருவாயும் தானாகவே உயரும்."

ஊக்கமும் கற்றலும் நிறைந்த ஒரு நிகழ்ச்சி

நிகழ்ச்சியின்போது காலையில் நடைபெற்ற யோகப் பயிற்சிகள் குறித்து ஒரு பங்கேற்பாளர் தன் பாராட்டைத் தெரிவித்தார். "இதை நான் தவறவிடவில்லை என்பது குறித்து மகிழ்கிறேன்! இது எனக்கு மன அமைதியையும் சக்தியையும் வழங்கியது."

இந்நிகழ்ச்சி ஒரே இரவில் என்னை என் தொழில்துறையில் தலைவராக முன்னிறுத்தியுள்ளது. - நிஷாந்த் கார்க்

ஜெம் மெஷினரி அண்ட் அலைட் இண்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் பங்குதாரர் நிஷாந்த் கார்க் பகிர்கையில், "இந்த நிகழ்வில் நிறைய கற்றலும் ஊக்கமும் இருந்தது. HINAR-ஐ தொடர்ந்து உடனடியாக என் தொழில்துறை சார்ந்த உலகளாவிய பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ளும் ஒரு இணையவழி நிகழ்ச்சியை நடத்த நான் முடிவு செய்தேன். நாம் ஏன் இதில் ஈடுபடுகிறோம் என்ற காரணம் குறித்து என் குழுவுக்கு நான் விளக்கினேன். அதை உணர்ந்துகொண்ட அவர்கள் என்னை ஆதரித்து, அந்த நிகழ்வுக்காக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 16 மணிநேரம் உழைத்தனர். 39 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த ஆன்லைன் மேடையில் நான் முன் நின்று செயலாற்ற முடிந்தது. இந்நிகழ்ச்சி ஒரே இரவில் என்னை என் தொழில்துறையில் தலைவராக முன்னிறுத்தியுள்ளது. இதுபோல ஒன்று எங்கள் தொழில்துறையில் இதுவரை நிகழ்ந்ததில்லை. என் வர்த்தகத்தின் தன்மையை மாற்றியமைக்கும் ஒரு நிகழ்வாக இது அமைந்தது. HINAR 2021க்கு மிக்க நன்றி!"

ஈஷா லீடர்ஷிப் அகாடமி நிகழ்ச்சிகள் குறித்து மேலும் தகவல் அறிந்துகொள்ள, leadership@ishainsight.org என்ற மின்னஞ்சலில் தொடர்புகொள்ளுங்கள்.