கலாச்சாரம்

கிருஷ்ணன்: விளையாட்டுத்தனம் நிறைந்த குழந்தை, ஈர்க்கும் காதலன், தெய்வீகப் பிறவி – உண்மையில் யார் அவன்?

கிருஷ்ணன், அவனது வாழும் காலத்திலேயே கடவுளின் முழுமையான அவதாரமாகக் கருதப்பட்டு, அவனைச் சுற்றிலும் இருந்த பலராலும் புரிந்துகொள்ளப்பட்டு, உணரப்பட்டது ஏன் என்பதை சத்குரு விளக்குகிறார்.

சத்குரு: கிருஷ்ணன் எதிர்கொண்டதைப் போன்ற சிக்கலான சூழ்நிலைகளை சந்திக்கும் வாய்ப்பு வெகு சில மனிதர்களுக்கே அமைகிறது. ஒவ்வொரு சூழ்நிலையிலும், உண்மை எது, உண்மையல்லாதது எது என்பதை கண்டறிந்து, தெளிவான கண்ணோட்டத்தையும், நிச்சயத்தன்மையையும் அவன் வெளிப்படுத்தினான். மக்களுக்கு அவன் ஏற்படுத்திய தெளிவின் காரணத்தால், அவர்கள் அவனைக் கடவுளைப் போலவே உணர்ந்தனர். இதனால்தான் கிருஷ்ணன் கடவுளின் முழுமையான அவதாரமாகக் கருதப்பட்டான்.

அவதாரம் என்றால் என்ன?

சார்லஸ் டார்வினுக்கு வெகு முன்னதாகவே, ஒன்பது அவதாரங்கள் பற்றி கிழக்கில் பேசப்பட்டுவிட்டது. முதலாவது, மச்ச அவதாரம் என்றழைக்கப்படுகிறது. அதாவது கடவுள் ஒரு மீனின் உருவத்தில் தோன்றினார். பூமியில் தோன்றிய முதல் உயிர் வடிவம், நீர்வாழ் உயிரினமாகிய மீன் என்று சார்லஸ் டார்வின் கூறினார். அடுத்தது கூர்ம அவதாரம் – அதாவது நீரிலும், நிலத்திலும் வாழக்கூடிய ஊர்வன உயிரினம். மூன்றாவது அவதாரமாக வராக அவதாரம் – கடைநிலை பாலூட்டியான பன்றி. நான்காவது அவதாரம் – நரசிம்ம அவதாரம் – பாதி மனிதன், பாதி மிருகம். அடுத்ததாக வாமன அவதாரம் – ஒரு குள்ளமான மனிதன். அடுத்த அவதாரம் – பரசுராமன் – முழுமையாக வளர்ச்சியடைந்த ஒருவன், ஆனால் தனது தாயின் தலையையே வெட்டி எறியுமளவுக்குத் தீவிரமான வன்முறை குணமுள்ளவன். அடுத்து இராமாவதாரம் – மிகவும் அமைதியான ஆனால் ஒற்றைப் பரிமாணம் போன்ற இயல்புடைய ஒருவன். அடுத்ததாக, கிருஷ்ணாவதாரம் –  பன்முகப் பரிமாணங்கள் நிறைந்த ஒரு மனிதன்.

எனவே கடவுளின் முழுமையான ஒரு அவதாரமாக அல்லது கடவுள் மனித உருவெடுத்ததாக கிருஷ்ணாவதாரம் கருதப்பட்டது. கிருஷ்ணன் தன்னை ஒருபோதும் அந்த விதமாக கருதியதில்லை என்றாலும், அவனைச் சுற்றிலும் இருந்தவர்கள் இயல்பாகவே அவனை இறைவனாகத்தான் அடையாளப்படுத்தினர். அதனாலேயே, தெய்வீகத்தின் முழுமையான  அவதாரமாக இருக்கும் கிருஷ்ணனின் இந்த அடையாளத்தை மையப்படுத்தியே ஒரு ஒட்டுமொத்தக் கலாச்சாரம் வளர்ந்தெழுந்தது.

கிருஷ்ணனின் சமகாலத்தவரின் பார்வையில், அவனது பல முகங்கள்

கிருஷ்ணன் கட்டுப்படுத்த முடியாத ஒரு சுட்டிக்குழந்தை, குறும்புத்தனம் கொப்பளிக்கும் இயல்புடையவன், மயக்கும் குழலூதுபவன், ஒரு நளினமான நாட்டியக்காரன், ஈர்க்கும் காதலன், உண்மையிலேயே தீரமான போர்வீரன், அவனது எதிரிகளை இரக்கமின்றித் தோற்கடிப்பவன், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு உடைந்த இதயத்தை விட்டுச் சென்ற ஒருவன், தலைமையைத் தீர்மானிக்கும் ஒரு இராஜதந்திரி, அப்பழுக்கற்ற ஒரு பண்பாளன், மிகச் சிறந்த யோகியாக வாழ்ந்து காட்டியவன் மற்றும் வண்ணமயமான அவதார புருஷன். வெவ்வேறு நிலையிலிருந்த மக்களால் பல விதமான வழிகளில் அவன் பார்க்கப்பட்டான், புரிந்துகொள்ளப்பட்டான் மற்றும் உணரப்பட்டான்.

துரியோதனன்: தான் இருக்க நேர்ந்த சில சூழ்நிலைகளின் காரணத்தால்,  ஒரு பாதுகாப்பற்ற உணர்வினனாக, கோபம், பொறாமை, பேராசைகளின் மொத்த உருவமாக, அவனது வாழ்நாள் முழுவதும் தவறிழைத்தவனாகவே மற்றவர்களால் துரியோதனன் உணரப்பட்டான். அவனது பேராசை மற்றும் கோபத்திலிருந்து வெளிப்பட்ட செயல்களின் காரணமாக, ஒட்டுமொத்தமாக அவனது வம்சத்தின் அழிவுக்கும் முக்கிய கருவியானான். துரியோதனனின் வார்த்தைகளில், “புன்னகைக்கும் மோசக்காரன் ஒருவன் உண்டென்றால், அவன் கிருஷ்ணன் தான்.  அவனால் உண்ண முடியும், அருந்த முடியும், அவனால் பாடவும், ஆடவும் முடியும், அவனால் காதலிக்க முடியும், போரிட முடியும், வயதான பெண்மணிகளுடன் அமர்ந்து வம்பளக்க முடியும் மற்றும் சிறு குழந்தைகளுடன் விளையாட முடியும். அவனை கடவுள் என்று யார் கூறுவார்?” இதுதான் துரியோதனனின் புரிதல்.  

சகுனி: வஞ்சகமும், கபடமும் ஒருங்கே உருவெடுத்த மனிதனாக இருந்த சகுனி சொன்னது, “அவன் கடவுள் என்றே நாம் வைத்துக்கொண்டாலும், அதனால் என்ன? கடவுளால் என்ன செய்துவிட முடியும்? தன்னைத் துதிக்கும் பக்தர்களுக்கு மட்டுமே கடவுளால் தயை காட்டமுடியும். அவன் கடவுளாக இருக்கட்டுமே. நான் அவனை விரும்பவில்லை. தவிர, நீங்கள் யாரையாவது விரும்பாதபோது,  நீங்கள் நிச்சயம் அவர் புகழ் பாடவேண்டும்,” அதுதான் வஞ்சகம்.

ராதை: கிராமத்தில் பால் விற்பனையில் ஈடுபட்டிருந்த எளிமையான குடும்ப பின்னணி கொண்ட அவனது இளம்பருவ காதலி, அவளது ஆழமான அன்பு மற்றும் அசைவற்ற பக்தியினால் ராதையைத் தவிர்த்துவிட்டு கிருஷ்ணனைப் பற்றி நீங்கள் பேச முடியாத அளவுக்கு மிகப் பெரிதாக வளர்ந்தவள், கொண்டாடப்படுபவள். நாம் கிருஷ்ணராதா என்று கூறுவதில்லை, ராதாகிருஷ்ணன் என்று தான் கூறுகிறோம். எளிமையான ஒரு கிராமத்துப் பெண்மணி கிருஷ்ணனுக்கு இணையாக, அல்லது அவனை விடவும் சற்று அதிகமாகவே முக்கியத்துவம் அடைந்தாள். ராதை கூறினாள், “கிருஷ்ணன் என்னுடன் இருக்கிறான். அவன் எப்பொழுதும் என்னுடன் இருக்கிறான். அவன் எங்கிருந்தாலும், அவன் யாருடன் இருந்தாலும், அப்போதும் அவன் என்னுடன் தான் இருக்கிறான்.” அதுதான் அவளது புரிதல்.

வைந்தேயன்: கருடனின் மூத்த மகனான இந்த உற்சாகமான இளைஞன், ஒருவிதமான உடல் உபாதையின் காரணத்தால் முற்றிலும் முடமாகிப் போனான். முடமான இந்த இளைஞனை கிருஷ்ணன் எழுந்து நடக்கச் செய்தான். ஆகவே வைந்தேயன், “அவன் கடவுள், அவன் கடவுள், அவன் கடவுள்” என்றான்.

அக்ரூரர்: கிருஷ்ணனின் மாமனும், விவேகமும், துறவுப் பண்புகளும் கொண்டவராகிய இவர், கிருஷ்ணனைப் பற்றி இந்த விதமாக வெளிப்படுத்தினார்: “இந்த விநோதமான இளைஞனைப் பார்க்கும் பொழுது, அவனைச் சுற்றிலும் சூரியனும், சந்திரனும், ஏழு நட்சத்திரங்களும் சுழல்வதை நான் காண்கிறேன். அவன் பேசும்பொழுது, அவனது குரல் ஆதியந்தம் இல்லாததைப் போன்று ஒலிக்கிறது. இந்த உலகத்தில் நம்பிக்கை என்ற ஒன்று இருக்குமேயானால், அவனே அந்த நம்பிக்கையாக இருக்கிறான்.”

சிகண்டி: குழந்தைப் பருவம் முதல் அவனுக்குள் நிலவிய ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் காரணத்தால், சிகண்டி சித்திரவதைக்கு ஆட்பட்ட ஒரு மனிதனாக இருந்தான். அவன் கூறினான், “கிருஷ்ணன் எனக்கு ஒருபோதும் எந்தவித நம்பிக்கையும் அளிக்கவில்லை. ஆனால் அவன் இருக்கும்போது, நம்பிக்கையின் தென்றல் ஒவ்வொருவரையும் தொட்டுச் செல்கிறது.”

லீலை – விளையாட்டுத்தனம் மிக்கவனின் பாதை

பலவிதமான மக்களும், கிருஷ்ணனின் பல்வேறு முகங்களைக் கண்டனர். சிலருக்கு அவன் கடவுள். சிலருக்கு அவன் ஒரு வஞ்சகன். சிலருக்கு அவன் ஒரு காதலன். சிலருக்கு அவன் போர் புரிபவன். அவன் எவ்வளவோ பல விஷயங்களாக இருக்கிறான். கிருஷ்ணன் என்று நாம் குறிப்பிடும் விழிப்புணர்வின் சாரத்தை நாம் சுவைக்க வேண்டுமென்றால், நமக்கு லீலை தேவைப்படுகிறது. லீலை என்றால் விளையாட்டுத் தனத்தின் பாதை. இது சீரியஸான மனோபாவம் கொண்டவர்களுக்கானது அல்ல. நாம் விளையாடுவதற்கு மட்டும் விரும்புவதில்லை, வாழ்வின் மிக ஆழமான மற்றும் சீரியஸான அம்சங்களைக் காண்பதற்கு விரும்புகிறோம், ஆனால் விளையாட்டுத்தனமான வழியில் அடைய விரும்புகிறோம். விளையாட்டுத்தனம் இல்லையென்றால், கிருஷ்ணன் அங்கே இருக்கமாட்டான். உலகத்தின் மிகப் பெருவாரியான மக்கள் வாழ்வின் மிக ஆழமான பரிமாணங்களைத் தவறவிடுவது ஏனென்றால், அவர்களுக்கு விளையாட்டுத்தனமாக இருப்பது எப்படி என்பது தெரியவில்லை.

நீங்கள் விளையாட்டுத்தனமாக இருக்கவேண்டும் என்றால், உங்களுக்கு அன்பு நிறைந்த ஒரு இதயம், ஆனந்தம் நிறைந்த ஒரு மனம், மற்றும் துடிப்பான ஒரு உடல் தேவை. விளையாட்டுத்தனமான வழியில், வாழ்வின் மிக ஆழமான பரிமாணங்களைக் காண்பதற்கு, நீங்கள் உங்களது விழிப்புணர்வு, உங்கள் கற்பனை, உங்களது ஞாபகம், உங்கள் வாழ்வு மற்றும் மரணத்துடன் விளையாடுவதற்கு விருப்பத்துடன் இருக்க வேண்டும். எல்லாவற்றுடனும் விளையாடுவதற்கு நீங்கள் விரும்பினால் மட்டுமே, அங்கே லீலை இருக்கிறது. லீலை என்றால் யாரோ ஒருவருடன் நடனமாடுவது மட்டுமல்ல. உங்களது எதிரியுடனும், நீங்கள் நேசிப்பவருடனும் நடனமாடுவதற்கு நீங்கள் விருப்பத்துடன் இருக்கிறீர்கள். வாழ்வுடனும், உங்கள் மரணத்தின் இறுதிக் கணத்துடனும் நடனமாடுவதற்கு நீங்கள் விருப்பத்துடன் இருக்கிறீர்கள். அப்போதுதான் அங்கே லீலை நடக்கிறது.