மிகச் சரியாக இருப்பது என்பது ஒரு கட்டுக்கதையா?
சத்குரு: சிறிது காலம் முன்பு, ஒரு இந்திய பிரபலம் என்னிடம் இப்படி கேட்டார்: "சத்குரு, நீங்கள் மிகச் சரியான குருவா?" நான் கேட்டேன், "நீங்கள் மிகச் சரியான ஆன்மீக சாதகரா?" அவர், "நான் அவ்வாறு நினைக்கவில்லை" என்றார். பின்னர் நான், "நீங்கள் ஒரு மோசமான சாதகரா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "இல்லை சத்குரு, நான் இது குறித்து உண்மையாக இருக்கிறேன். உண்மையில் இதை நான் நாடுகிறேன்," என்று பதிலுரைத்தார். அதற்கு நான், "சரி, நீங்கள் சாதகராக இருக்கும் பட்சத்தில், வாருங்கள், நாம் என்ன செய்யமுடியும் என்று பார்க்கலாம். நீங்கள் மிகச் சரியான சாதகராக மாறும்போது நானும் உங்களுக்கு மிகச் சரியான சில விஷயங்களை நிகழ்த்துவேன்" என்றேன்.
"மிகச் சரியான குரு" என்பது போன்ற கருத்து சில குறிப்பிட்ட ஆன்மீக புத்தகங்களை வாசிப்பதால் மக்கள் மனதில் புகுந்துள்ளது. வாழ்வில் மிகச் சரியானதை தேடும் எவருக்கும் வாழ்க்கை என்பது என்னவென்று தெரியவில்லை. வாழ்க்கை ஏற்கனவே பூரணத்துவத்துடன் இருந்தால், அது அடுத்த கட்டத்திற்கு நகர முடியுமா? நீங்கள் ஏற்கனவே பூரணத்துவம் வாய்ந்தவராக இருந்தால், அதற்குப் பின்னரும் நீங்கள் அடுத்த பரிணாமத்திற்கு செல்லமுடியுமா? பூரணத்துவம் என்றால் நமக்குத் தெரியாமலே சவம் போல் ஆவது என்று பொருள். இறப்பு என்பது எப்போதும் முழுமையாக நடப்பது. யாரேனும் அரைகுறையாக இறப்பதை நீங்கள் எப்போதேனும் கண்டதுண்டா? ஆனால் அனைவரும் அரைகுறையாக வாழ்கிறார்கள். வாழ்வைப் பற்றி திறந்த மனதோடு இருக்கும் எவருக்கும் நிறைவு என்பது சாத்தியமே இல்லை என்பது தெரிந்திருக்கும். நீங்கள் செய்வது என்னவாக இருந்தாலும், அதை இன்னும் சிறப்பாக செய்யக்கூடிய வழி ஒன்று இருக்கும்.
ஒருமுறை இவ்வாறு நிகழ்ந்தது. சங்கரன்பிள்ளை ஒரு பிரெஞ்சு அழகியை மணந்து கொண்டார். அவர்கள் ஐரோப்பாவிற்கு திரும்பிச்செல்ல முடிவெடுத்தனர். அவர் மனைவி ஏழு பெரிய பெட்டிகள், மூன்று அடுக்கு அழகுசாதன பெட்டிகள், அத்துடன் மேலும் பல்வேறு பொருட்களையும் பயணத்திற்கு தயாராக வைத்திருப்பதை அவர் கண்டார். அவை அனைத்தையும் ஒரு பெரிய எஸ்யூவி காரில் அடுக்கி விமானநிலையம் நோக்கி வண்டியை செலுத்தினார். அங்கே அவர் அனைத்தையும் கீழே இறக்கிவிட்டு விமான நிறுவனத்தின் கவுண்டரை நோக்கி சென்றார். பின்னர் அவர் திரும்பி இவ்வாறு சொன்னார், "நாம் பியானோவையும் கூட எடுத்து வந்திருக்க வேண்டும்." அதற்கு அவர் மனைவி, "நீங்கள் இப்படி கேலியாக பேசவேண்டிய அவசியமில்லை" என்றார். அதற்கு சங்கரன்பிள்ளை, "இல்லை, நான் விமான டிக்கெட்டை பியானோவின் மீது வைத்துவிட்டு வந்துவிட்டேன்" என்றார்!!