ஈஷா சமையல்

மாம்பழ ‘சில்லி டிப்’புடன் கூடிய வெண்டைக்காய் ஃப்ரை

மாம்பழ சில்லி டிப்

தேவையான பொருட்கள்

பஜ்ஜி மிளகாய் - 1

மாம்பழம் - 1

கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி

வெல்லம் (அல்லது) சர்க்கரை - சுவைக்கேற்ப

ஆப்பிள் சைடர் வினிகர் – 1 மேஜை கரண்டி

வெண்டைக்காய் ஃப்ரை செய்வதற்கு

வெண்டைக்காய் - 100 கிராம்

மிளகாய் பொடி - ½ தேக்கரண்டி

தனியா பொடி - ½ தேக்கரண்டி

ஜீரகப் பொடி - ½ தேக்கரண்டி

மஞ்சள் பொடி - ½ தேக்கரண்டி

கடலை மாவு - 2 மேஜை கரண்டி

அரிசி மாவு - 1 மேஜை கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

வெண்டைக்காய் ஃப்ரை செய்வதற்கு

  1. வெண்டைக்காயை நன்றாக கழுவி, ஈரம் போக துடைத்துக் கொள்ளவும்.
  2. வெண்டைக்காயின் தலைப்பகுதியையும், வால் பகுதியில் சிறிதளவும் வெட்டிவிடவும்.
  3. வெண்டைக்காயை நீளவாக்கில் 4 துண்டுகளாக நறுக்கி, விதைகளை நீக்கவும்.
  4. ஒரு பெரிய பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஜீரகப் பொடி, தனியா பொடி, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி எல்லாவற்றையும் நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
  5. வெண்டைக்காய்களை இந்த மசாலா கலவையில் நன்றாக பிரட்டிவிடவும்.
  6. ஒரு தேக்கரண்டி உப்பு எடுத்து வெண்டைக்காய் மசாலா கலவையில் தூவிக் கொள்ளவும். (உப்பு தூவுவதால், வெண்டைக்காயிலிருந்து நீர் கசிந்து மசாலா கலவையில் நன்றாக சேர்ந்துவிடும்).
  7. வெண்டைக்காய்களை 15-20 நிமிடங்கள் வரை மசாலா கலவையில் ஊற வைக்கவும். இதனால், வெண்டைக்காயில் மசாலா கலவை நன்றாக சேர்ந்து ஒட்டிக்கொள்ளும்.
  8. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, அதனை நன்றாக காய விடவும்.
  9. எண்ணெய் காய்ந்து விட்டதா என்று பரிசோதிக்க, ஒரு துண்டு வெண்டைக்காயை எடுத்து எண்ணையில் போடவும். வெண்டைக்காய் மேலே மிதந்து வந்தால், எண்ணெய் காய்ந்துவிட்டது என்று தெரிந்து கொள்ளலாம்.
  10. வெண்டைக்காய்களை சிறிது சிறிதான எண்ணிக்கையில், எண்ணெயில் பொறித்து எடுத்துக் கொள்ளவும். வெண்டைக்காய்களை, எண்ணெயில் அதிகம் கிளற வேண்டாம். (கிளறினால், மசாலா பொருட்கள் எண்ணையில் கலந்துவிடும்).
  11. வெண்டைக்காய்கள் பொன்னிறமாக, மொருமொருவென ஆனவுடன், எண்ணெயிலிருந்து எடுத்து ஒரு வடிகட்டியில் போடவும். (இதற்கு பட்டர் பேப்பரோ, பேப்பர் டவலோ உபயோகிக்க வேண்டாம்).


மாம்பழ டிப்

  1. மாம்பழத்தின் சதைப்பகுதியை எடுத்து மிக்ஸியில் போடவும்.
  2. அதில் ¼ கப் தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. பின்னர் அதில் 1 அங்குலம் பஜ்ஜி மிளகாய், கொத்தமல்லி இலைகள் (காம்பு இல்லாமல்), ஆப்பிள் சைடர் வினிகர், 1 தேக்கரண்டி உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  4. வேண்டுமென்றால், தண்ணீர் (வேண்டிய பதத்திற்கு) சேர்க்கலாம்.
  5. தேவையான அளவிற்கு பொடித்த வெல்லம் (அல்லது) சர்க்கரையை சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது பஜ்ஜி மிளகாயை சேர்த்து கொள்ளவும். (உங்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம் சமன்பாடு வரும் வரை).
  6. எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும்.