சிறப்புக் கட்டுரை

பாரதத்தின் தனித்துவமான வல்லமை - இதை நாம் எப்படி உலகில் பிரகாசிக்கச் செய்ய முடியும்?

பாரதத்தின் 75வது சுதந்திர தின கொண்டாட்டங்கள் நிகழும் இத்தருணத்தில், நமது தேசத்தின் நலம் நம்முடைய நல்வாழ்வுக்கு எப்படி அடித்தளமாக இருக்கிறது, மேற்கத்திய நடைமுறை ஏன் நமக்கு பொருந்தாது, எந்த விதமான தன்மைகளை நாம் கட்டமைக்க வேண்டும், மறைந்திருக்கும் நமது வலிமை எங்கே உள்ளது போன்ற கேள்விகளுக்கு பதிலளிப்பதுடன், மேற்கூறிய அனைத்தும் ஏன் ஒவ்வொரு தனிமனிதரைக் குறித்ததாகவே இருக்கிறது என்பதையும் விளக்குகிறார் சத்குரு.

சத்குரு: நம்மால் இன்னமும் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒரே அணியாக குறிப்பிட இயலவில்லை. ஒரு தேசம் என்பது, ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மனித இனத்தவரை குறிப்பிடுவதற்கான ஆகச் சிறந்த வழியாக உள்ளது. “பாரதம்” என்று நாம் கூறும்போது, 140 கோடி மக்களைப் பற்றியே நாம் பேசுகிறோம். இது மனிதகுலத்தில் ஒரு பெரும் எண்ணிக்கையாக இருக்கிறது. முக்கியமாக, தேசத்தைக் கட்டமைப்பது என்றால், அது இந்த மக்களின் நல்வாழ்வைப் பற்றியது. மக்களின் நல்வாழ்வை, மேற்கத்திய அளவுகோல்களின்படி ஜிடிபி, வருவாய், சொத்து மதிப்பைப் பொறுத்து மதிப்பீடு செய்யமுடியும்.

முக்கியமாக, தேசத்தைக் கட்டமைப்பது என்றால், அது இந்த மக்களின் நல்வாழ்வைப் பற்றியது.

மற்றொரு வழியில் அதைப் பார்ப்பதென்றால், நமது வசதி மற்றும் சௌகரியத்துக்காகத்தான் வாழ்க்கையில் எல்லா பொருள் தன்மையான ஏற்பாடுகளையும் நாம் செய்கிறோம். இருப்பினும், அவைகளினால் நல்வாழ்வு நிகழ்ந்துவிடாது. உலகிலேயே மிகுந்த செல்வமும், அதிகமான வளமும் கொண்டிருக்கும் அமெரிக்கா அதற்கான மிகச் சரியான உதாரணமாக இருக்கிறது. தற்பொழுது, ஏறக்குறைய 46 சதவிகித அமெரிக்கர்களுக்கு, அவர்களது வாழ்வின் ஏதோ ஒரு கட்டத்தில் மனரீதியான ஒரு பாதிப்பு உள்ளது.

ஒரு தனிப்பட்ட நபர் அல்லது ஒரு சமூகம் அல்லது ஒரு தேசம் வாழ்வில் வளத்தை நாடுகிறது என்றால் ஊட்டச்சத்து மிகுந்த உணவுத் தேவைதான் அதற்கான முதல் காரணமாக இருக்கிறது. ஊட்டச்சத்துக்கான தேவை நிறைவேறிய பிறகு கவனம் வாழ்க்கை முறை நோக்கி நகர்கிறது. உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் அளவிடற்கரிய தேர்வுகளைப் பெற்றுள்ள உலகின் மிகமிக வளமான தேசங்களுள் ஒன்று, உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே நல்வாழ்வு என்பது, பொருள்ரீதியான வளத்தின் மூலமாக மட்டும் நிகழ்வதல்ல.

நம் தேசத்தைப்போல், 140 கோடி மக்களும், குறைந்த அளவே நிலப்பரப்பும் கொண்ட ஒரு தேசம் மேற்கத்திய பாணியைப் பின்பற்ற முயற்சித்தால், அது வேலை செய்யாது.

உண்மையிலேயே நாம் நல்வாழ்வைத் தேடுகிறோம் என்றால் இந்தியா, மேற்கத்திய பாணியைப் பின்தொடராமல் இருப்பது மிகவும் முக்கியமானது. நமக்கே உரிய விதத்தில் நாம் உயர்ந்து நிற்க வேண்டும். இந்த நாட்டில், மனிதர்களுக்கான நல்வாழ்வு என்றால் அனைத்துக்கும் முதலாவதாக, ஊட்டச்சத்தான உணவு, சுத்தமான காற்று, சுத்தமான நீர், வளமான மண், அமைதியும் ஆனந்தமும் நிறைந்த ஒரு மனம், இவைகளுடன் நிச்சயமாக, பொருளாதாரம் மற்றும் பொருள்ரீதியான வளத்துடன் இணைந்த இதர ஏற்பாடுகளும் தேவை. இந்த எல்லா விஷயங்களும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

நம் தேசத்தைப்போல், 140 கோடி மக்களும், குறைந்த அளவே நிலப்பரப்பும் கொண்ட ஒரு தேசம் மேற்கத்திய பாணியைப் பின்பற்ற முயற்சித்தால், அது வேலை செய்யாது. அமெரிக்க ஐரோப்பிய பாணிகள், ஏகாதிபத்திய காலகட்டத்தில் வளர்ந்தவை. ஏகாதிபத்தியம் என்பது, “உலகத்தின் மற்ற பகுதிகளில் உள்ளவர்களின் எல்லா வளங்களையும் சுரண்டி அதைக்கொண்டு உங்கள் மக்களை ஊட்டி வளர்ப்பது,” அத்தகைய பாணி கடந்த காலத்தோடு முடிந்துவிட்ட ஒரு விஷயம்.

இப்போது, அனைத்து தேசங்களுமே முழு நலமுடன் இருப்பதற்கும், தங்களது மக்களுக்கு உணவளிக்கவும் விரும்புகிறது. ஆகவே, நாம் மீண்டெழ வேண்டியது மிக முக்கியமானது. அதற்காக மற்ற நாடுகளுக்கு நாம் கதவை சாத்திவிட்டோம் என்பது பொருளல்ல; உலகத்துக்கு நாம் திறந்த வாசலாக இருக்கவேண்டும், அதே நேரத்தில் நாம் சுய மீட்சித் திறனுடனும் இருக்கவேண்டும். சுய மீட்சியுடனும், தன்னிறைவுடனும் இருப்பது என்பது நமக்குள்ளேயே வட்டமிடும் பொருளாதாரமாக இருப்பதிலிருந்து வித்தியாசமானது.

நாம் ஒரு திறந்த பொருளாதாரமாக, ஆனால் மீண்டெழுவதாகவும் இருப்பது அவசியம். குறிப்பாக, ஒரு சில மாதங்களுக்குள் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடக்கூடிய இதைப்போன்ற ஒரு பெருந்தொற்றுக் காலத்தில், இந்த நிலைப்பாடு முக்கியமானது. மிகப் பெரிதாகவும், வெற்றிகரமாகவும் கருதப்பட்ட பொருளாதாரங்கள் மூன்று மாதங்களில் எப்படி தலைகீழாக மாறிவிட்டன என்பதை நாம் பார்த்துள்ளோம். ஒரு நாட்டின் முப்பது, நாற்பது, ஐம்பது வருட செயல்பாடு மூன்று மாதங்களுக்குள் துடைத்தெடுக்கப்படும் என்றால், இது மனித நலனையோ அல்லது தேசிய நலனையோ கட்டமைப்பதற்கான பாதுகாப்பான வழி அல்ல.

நாம் ஒரு திறந்த பொருளாதாரமாக, ஆனால் மீண்டெழுவதாகவும் இருப்பது அவசியம்.

முக்கியமாக, இன்றைய உலகில், ஒரு தேசம் என்ற தளம் இல்லாமல் நம்மால் செயல்பட முடியாது. ஒரு குறிப்பிட்ட சட்ட வரையறை, ஒரு குறிப்பிட்ட பாதுகாப்பு மற்றும் ஒரு குறிப்பிட்ட வாய்ப்பை தேசம் எனும் அமைப்பு வழங்குகிறது. தனிப்பட்ட மனிதர்களாக, குடும்பங்களாக, சமுதாயங்களாக, மாநிலங்களாக மற்றும் ஒரு தேசமாக நாம் வளம் பெற வேண்டுமென்றால், ஒரு தேசம் எனும் இந்தக் கட்டமைப்பு வலிமையாகவும், நிலையானதாகவும் இருக்கவேண்டும்.

நமது தனிப்பட்ட நல்வாழ்வுக்கு, தேசியத்தின் வடிவில் ஒரு நிலையான தளத்தை உருவாக்குவது முக்கியமானது. ஒவ்வொரு மனிதரும் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் செயல்படுவதற்கு அனுமதிக்கும் எந்த தேசத்தையும் நீங்கள் மரியாதை செய்து, பெருமிதமும் மதிப்பும் கொள்ள வேண்டும். தேசியம் என்ற நிலையான தளம் இல்லாவிட்டால், நமது முழு வாழ்க்கையும் அற்பமான, முடிவில்லாத சச்சரவுகளில் கழிந்துவிடும். ஒரு தேசம் என்றால், அதற்கென்று குறிப்பிட்ட சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் வரன்முறைகள் இருக்கும் காரணத்தால் நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் மோதல் இல்லாமல் தினசரி அளவில் செயல்பட முடிகிறது.

நாம் ஒவ்வொருவரும், நம்மால் இயன்ற வழியில் பங்களிக்க வேண்டும். ஏனென்றால் தேசிய தளத்தின் ஸ்திரத்தன்மை, நாம் வாழ்வதற்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

நீங்கள் ஒரு அறிவுஜீவியாக, ஒரு கவிஞராக, ஒரு ஓவியராக, ஒரு யோகியாக அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும், தேசத்திற்கு பங்களிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. ஏனெனில் தேசம் உங்களுக்கு வழங்கும் இந்த தளம் இல்லாமல் உங்களால் செயல்பட முடியாது. நாம் ஒவ்வொருவரும், நம்மால் இயன்ற வழியில் பங்களிக்க வேண்டும். ஏனென்றால் தேசிய தளத்தின் ஸ்திரத்தன்மை, நாம் வாழ்வதற்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.

இந்தக் கலாச்சாரத்தில், மிக முக்கியமாக நாம் எப்பொழுதும் தனிப்பட்ட மனிதர்கள் மீது கவனம் செலுத்தி வந்துள்ளோம். ஆரோக்கியமான தனிமனிதர்கள் இல்லாமல், ஆரோக்கியமான தேசம் என்பது இல்லை. வலிமையான மனிதர்கள் இல்லாமல், வலிமையான தேசம் என்பது இல்லை. திறமையான மனிதர்கள் இல்லாமல், திறமையான தேசம் இல்லை. வெற்றிகரமான செழுமையான மனிதர்கள் இல்லாமல், செழுமையான தேசம் இல்லை.

தனி மனிதர்கள் மீது நாம் கவனம் செலுத்துவது அடிப்படையில் முக்கியமானது. ஏனெனில் தற்போது மனிதர்கள்தான் நமக்கிருக்கும் மிகப்பெரிய சொத்து. நமக்கு ஒரு பெருந்திரளான மக்கள்தொகை இருக்கிறது என்பதுடன், அவர்களுள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் முப்பத்தி ஐந்து வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். இதுதான் தேசத்தைக் கட்டமைப்பதற்கான நேரம். நாம் தேசத்தைக் கட்டமைக்க வேண்டுமென்றால், நாம் மிக வலிமையான, மீண்டெழக்கூடிய மனிதர்களைக் கட்டமைக்க வேண்டும். ஆர்வமுள்ள, முனைப்பான, சமநிலையான, திறமையான இளைய சமுதாயத்தை உருவாக்குவது என்பது மிகவும் முக்கியமானது. இதை நாம் செய்து முடித்தால், 140 கோடி மக்களும் மகத்தான ஒரு அதிசயமாக இருப்பார்கள்.

ஒரு துண்டு நிலப்பரப்பு மட்டுமே ஒரு தேசத்தை உருவாக்குவதில்லை – அங்குள்ள மக்களே தேசத்தை உருவாக்குகிறார்கள்.

தனிமனிதர்களை வளர்ச்சி பெறச்செய்யாமல், தேசத்தை நம்மால் கட்டமைக்க முடியாது. ஒரு துண்டு நிலப்பரப்பு மட்டுமே ஒரு தேசத்தை உருவாக்குவதில்லை – அங்குள்ள மக்களே தேசத்தை உருவாக்குகிறார்கள். இந்தத் திசையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த பெருந்தொற்றுக் காலத்தில், சிற்சில இடங்களில் பிழைகள் நேர்ந்திருக்கலாம், ஆனால் நமது மக்கள்தொகையின் அளவுக்கும், அடர்த்திக்கும், நாம் ஆச்சரியப்படும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளோம். இந்திய மக்களுக்கு தலை வணங்குகிறேன்; காவல் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும், முழு அடைப்பை விவேகமுடனும், வெற்றிகரமாகவும் நிகழ்த்திக்கொள்வதற்கு அற்புதமாக செயல்பட்டுள்ளனர்.

நெருக்கடியான ஒரு தருணத்தில் மக்களுக்கு இந்த அளவுக்கான ஒழுங்குமுறை இருக்கும்பொழுது, தாங்களாகவே பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.  இந்தப் பெருந்தொற்றினை நாம் பயன்படுத்திக்கொண்டு, வலிமையான, மீண்டெழும் மக்களை நாம் கட்டமைக்க வேண்டும். அவர்கள் வலிமையான, மீண்டெழும் தேசத்தை உருவாக்க உறுதி கொள்வார்கள். மக்களைக் கட்டமைக்காமல், தேசக்கட்டமைப்பு என்பது இல்லை.

இந்தக் கலாச்சாரத்தில் செய்திருப்பதைப் போல், மனிதரின் ஆழங்களுக்குள் செல்வதை ஒரு அறிவியலாகப் பார்த்து, அளப்பரிய புரிதலை ஏற்படுத்தி, மனிதர்கள் அவர்களது உச்சபட்ச இயல்புக்கு பரிணமிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்குவதில் வேறு எந்தக் கலாச்சாரமும் முனைப்பு காட்டவில்லை. குறிப்பிட்ட விஷயங்களைச் செய்தால், அது ஒரு மனிதருக்குள் குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும். நேரடியாகக் கூறுவதென்றால், ஞானமடைந்த உயிர்களை உருவாக்குவதற்கு நம்மிடம் தொழில்நுட்பங்கள் உள்ளன.

பாரதம் உண்மையிலேயே உலக அரங்கில் எழுச்சி பெறுவதற்கு நாம் விரும்பினால், நமது ஞானத்தின் மூலமாக எழுச்சியடைவதே நமக்கான மிக எளிதான வழி.

பல தலைமுறைகளாக, ஒரு குறிப்பிட்ட அளவுக்கான நிபுணத்துவத்தினை உருவாக்கியுள்ள இந்தப் பரிமாணத்தில், இலட்சக்கணக்கான மக்கள் தங்களை முதலீடு செய்துள்ளனர். பாரதம் உண்மையிலேயே உலக அரங்கில் எழுச்சி பெறுவதற்கு நாம் விரும்பினால், நமது ஞானத்தின் மூலமாக எழுச்சியடைவதே நமக்கான மிக எளிதான வழி. எந்த விதத்திலும் நீங்கள் ஞானமடைந்தவராக இல்லையென்றாலும், நீங்கள் எதையும் புரிந்துகொள்ளவில்லை என்றாலும், உங்களுக்குள் சேகரிக்கப்பட்டுள்ள அறிவு மட்டுமே அதி அற்புதமானது. தற்போது, நீங்கள் அமெரிக்காவுக்கோ அல்லது ஜெர்மனிக்கோ செல்கிறீர்கள் என்றால், அங்கே ஒவ்வொரு கல்லூரி விரிவுரையாளரும் ஒரு விஞ்ஞானியாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அங்கே அளவற்ற சேகரிக்கப்பட்ட அறிவு இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அதனை முன்னிறுத்தியே அவர்கள் வல்லரசுகளாக உருவாகியுள்ளனர்.

இந்தியாவுக்கு பிரம்மாண்டமான வாய்ப்பு உள்ளது, ஆனால் அதைக் கைப்பற்றுவதற்கு நமக்கு சுறுசுறுப்பும், விருப்பமும் இருக்கவேண்டும். இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில், பலரும் தங்களது உறவுகளையும், நட்புகளையும் இழந்துள்ளனர். ஆனால் ஏதோ ஒன்றைக் கட்டமைக்க விரும்புபவர்களுக்கு, ஒரு தேசத்தைக் கட்டமைக்க விரும்புவோருக்கு, துக்கம் அனுஷ்டிப்பதற்கு நேரம் இல்லை. இந்தியாவில் ஒரு சொலவடை உண்டு – ஒரு அரசனுக்கு துக்கம் அனுஷ்டிக்க நேரம் இல்லை. அரசனைச் சுற்றிலும் மக்கள் இறந்து விழலாம், ஆனால் அவன் செய்யவேண்டியது என்னவோ, அதை அவன் செய்துகொண்டே செல்லவேண்டும்.

இந்தியாவுக்கு பிரம்மாண்டமான வாய்ப்பு உள்ளது, ஆனால் அதைக் கைப்பற்றுவதற்கு நமக்கு சுறுசுறுப்பும், விருப்பமும் இருக்கவேண்டும்.

தற்போது, நாம் ஒரு குடியரசாக இருக்கிறோம்; அதாவது நாம் ஒவ்வொருவருமே மன்னர் தான். குடியரசு என்பதற்கு தமிழில் மிக அழகான ஒரு வார்த்தை உண்டு - ஜனநாயகம் – அதாவது மக்களே தலைவர்களாக இருக்கின்றனர். இப்போது ஏதோ ஒரு வழியில் நாம் அனைவரும் மன்னர்கள்; அனைவருமே தலைவர்கள். ஆனால், இன்னமும் நாம் அதிகளவு ஊட்டச்சத்துக் குறைபாடு, அதிகமான சிசு இறப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட நிறைவேற்றப்படாத நிலையிலிருக்கும் பெருந்திரளான மக்களைக் கொண்ட ஒரு தேசமாகத்தான் இருக்கிறோம். இந்தத் தலைமுறையில் அதற்கு நாம் தீர்வு காணவேண்டும் என்றால், வருந்தி நிற்பதற்கு நேரமில்லை.

நாம் அனைவரும் பெருமிதம் கொள்ளும்படியான ஒரு தேசத்தை, இங்கு இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு மனிதருக்கும் சேவை செய்யும் திறனுடைய ஒரு தேசத்தை, தொலைநோக்குப் பார்வையில் கண்டு, அதை உருவாக்குவதில் நமது கவனம் செலுத்தப்பட வேண்டும்.