ஆன்மீக செயல்முறையில் சர்ப்பங்களின் மகத்தான முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் சத்குரு, அதே தருணத்தில் அவைகள் ஏன் சாமான்யர்களால் அஞ்சப்பட்டு, வெறுக்கப்படுகின்றன என்பதையும் தெளிவுபடுத்துகிறார். சத்குரு எக்ஸ்க்ளூசிவ் பகுதியில் மட்டும் வெளியாகியுள்ள மறையியல் உண்மைகள் என்ற புதிய தொடரின் சுருக்கம் இது.
கேள்வி: ஈஷா யோக மையத்தில் எல்லா இடங்களிலும் சர்ப்பங்கள் இடம் பெற்றிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் கிறிஸ்துவ கருத்தியலில், சர்ப்பம் என்பது சாத்தானின் பிரதிநிதி என்று கருதப்படுவதாக நான் நினைக்கிறேன். இது எதனால்?
சத்குரு: சொல்லப்படும் கதையின்படி பார்த்தாலே, முதல் ஆணும் முதல் பெண்ணுமாகிய ஆதாமும் ஏவாளும், ஏதுமறியா தம்பதியராகத்தான் சித்தரிக்கப்பட்டனர். ஒருவருக்கொருவர் என்ன செய்வது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு சர்ப்பம் வந்து, அறிவின் கனியை அவர்களை உண்ணச் செய்தது. அறிவின் கனியை சுவைக்கச் செய்யும் ஒருவரை நீங்கள் தீமையானவர் என்பீர்களா அல்லது தெய்வீகமானவர் என்று கூறுவீர்களா?
இந்த அறிவின் கனியை உண்டதால், இந்த பூமியில் உயிர் தழைக்கத் தொடங்கியது. அறிவின் கனியை உண்பதற்கும், அதை ஆதாமுடன் பகிர்ந்து கொள்ளவும் சர்ப்பம் ஏவாளைத் தூண்டிய காரணத்தினால்தான் வாழ்வின் முழு செயல்முறையும் சாத்தியமானது. வாழ்வின் அடிப்படையான செயல்முறைகளுக்கு எதிர்ப்பாக இருக்கும் ஒருவரால் மட்டுமே, சர்ப்பத்தை சாத்தானின் பிரதிநிதியாகக் கூறமுடியும், கூறுவார். உயிரின் செயல்முறையைத் தொடங்குபவர் எவரோ, அவர் தெய்வீகத்தின் பிரதிநிதியாகத்தான் இருக்கவேண்டும். ஆகவே, இங்கு, எப்பொழுதும் நாம் சர்ப்பத்தை தெய்வீகத்தின் பிரதிநிதியாகக் கண்டோம். இந்தியாவில் சர்ப்பத்தின் சிலை இல்லாத கோவிலே இல்லை, இது சர்ப்பம் தெய்வீகத்தின் பிரதிநிதி என்பதையே குறிப்பால் உணர்த்துகிறது.
ஆன்மீக செயல்முறையில் எங்கெல்லாம் சக்தியின் நகர்வு கையாளப்படுகிறதோ, அங்கு சர்ப்பம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மனித அமைப்பில், உருப்பெறாத சக்தியின் அடிப்படை வடிவம், ஒரு சர்ப்பமாக, குண்டலினியாக குறிக்கப்படுகிறது. ஒருவிதத்தில், யோகாவின் ஒட்டுமொத்த செயல்பாடும், இந்த சர்ப்பத்தை எழுச்சியூட்டுவதன் மூலம் உயர்த்தி நகர வைப்பதாகவே இருக்கிறது. பெருமளவுக்கு உருப்பெறாமல் இருக்கும் இந்த சக்தி, மனித அமைப்பில் முழு வெளிப்பாடு அடைந்து, அதன் உச்சத்தை எட்டுவதே யோக செயல்முறையின் சாரமாக இருக்கிறது. ஆகவே, நவீன யோக விஞ்ஞானத்தின் தந்தையாக அறியப்படும் பதஞ்சலி முனிவர், சர்ப்பத்தின் உடல் மற்றும் மனிதத் தலையைக் கொண்டவராகக் குறிக்கப்படுவதில் ஆச்சரியம் இல்லை.
இந்த குறியீடு மிகத் தெளிவாக இருக்கிறது - உங்களில் இருக்கும் அடிப்படையான இயல்பை விழிப்படையச் செய்து, அதன் உச்சத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்றாலும் அல்லது வேறு எங்கிருந்தாவது அந்த சக்தி அருவியாக உங்கள் மீது பொழிய வேண்டுமென்றாலும் – இரண்டு வழிகளிலும், சர்ப்பத்தின் இயல்பும், இந்த சக்தியும் மிக நெருக்கமான தொடர்பும் சம்பந்தமும் கொண்டுள்ளன. ஒரு மனிதருக்குள் செயல்படாமல் இருக்கும் ஒவ்வொரு அம்சத்துடனும், ஏறக்குறைய இது பொருந்துகிறது. மனிதர்கள் இன்னமும் முழுமையான உயிர்களாக இல்லை – அவர்கள் அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் அல்லது பின்னோக்கிச் செல்கிறார்கள்.
ஒரு மனிதன் உருவாகிக்கொண்டுதான் இருக்கிறானேயன்றி, இன்னமும் முழுமையான உயிராக உருப்பெற்றிருக்கவில்லை; அவர்கள் ஒரு உயிராக முழுமையடைய வேண்டியிருக்கிறது. மனிதர்கள் இன்னும் முழுமை பெறாத நிலையில் இருப்பதால்தான், அவர்கள் தங்களைத் தாங்களே வடிவமைத்துக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. நீங்கள் ஒரு “முழுமையடைந்த திட்டம்” என்ற நிலையில் இருந்திருந்தால், பிறகு செய்வதற்கென்று எதுவுமில்லை. ஆனால் நீங்கள் ஒரு முழுமையடையாத திட்டம். இந்த மனித உருவாக்கம் முழுமையாக கனிவதற்கு, ஒரு சர்ப்பத்தின் வடிவில் குறியீடு செய்யப்பட்டு வெளிப்படுத்தப்படும் இந்த சக்தியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்த சக்தியானது ஒரு சர்ப்பத்தைப் போல் வெளிப்பட, ஒன்று அதை விழிப்படையச் செய்யலாம் அல்லது அதன் பிரவாகத்தை பெறத் தக்கவாறு இருக்கலாம். இரண்டு வழிகளிலும், நீங்கள் அதைச் சரிவர கையாளவில்லை என்றால், ஒரு மனிதரின் உருவாக்கமாக நீங்கள் கருதக்கூடியது எதுவோ, அது சீர்குலைவு அடையக்கூடும். இந்த சக்தியை சரியான முறையில் கையாளாத காரணத்தால், இந்தப் பிறவியில் சரிசெய்ய முடியாத அளவுக்கு குண்டலினி மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களை நாம் பார்த்திருக்கிறோம்.
சர்ப்பத்தின் இயல்பைப் புரிந்துகொள்வதற்காக, யோக மரபின் குறிப்பிட்ட பிரிவில் இது எப்பொழுதும் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது. அதாவது, யோக வழியில் தீவிரம் கொண்ட ஒருவர், ஒரு நாக சர்ப்பத்துடன் அதன் முழு வீரியம், அதன் அழகு மற்றும் நேர்த்தியுடன் – விஷப்பல்லை நீக்காமலேயே – பரிச்சயம் செய்து கொள்கிறார். நாக சர்ப்பத்தின் வழிமுறைகளைக் கற்றுக்கொண்டு, உங்கள் சக்தியின் இயல்பை சரியான முறையில் கையாள கற்றுக்கொள்வதே இதன் நோக்கமாக இருக்கிறது. ஒரு சர்ப்பத்துடனேயே இருந்து, கூர்ந்து கவனித்து, அதன் இயல்பை உள்வாங்குவதன் மூலம், உங்கள் சக்திகளை எப்படிக் கையாள்வது என்ற ஆழமான ஒரு புரிதலுக்கு வருகிறீர்கள். சர்ப்பம் மற்றும் சக்தி - இவை இரண்டின் குணாதிசயமும், இயங்கும் விதமும் மிகுந்த ஒற்றுமையுடன் இருக்கிறது.
இந்தியாவின் சில குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து வருபவர்கள் இதுபோன்ற கதைகளைக் கேட்டிருக்கக்கூடும்: ஒரு நாக சர்ப்பத்துக்கு நீங்கள் ஏதேனும் தீங்கிழைத்தால், 12 வருடங்கள் ஆனாலும் அதை நினைவில் வைத்திருந்து, உங்களைத் தேடி வந்து அது தீண்டும் என்பார்கள். இது நாக சர்ப்பத்தைக் குறித்து் கூறப்படும் நியாயமில்லாத விஷயம், ஆனால் இந்த அசாதாரண விஷயம் அல்லது கதை எங்கிருந்து, ஏன் தோன்றியது என்றால் – நீங்கள் குறிப்பிட்ட விஷயங்களைச் செய்தால், ஒரு நாகத்துடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட நபருடைய சக்தியின் வாசனையை ஒரு நாக சர்ப்பத்துக்கு பரிச்சயப்படுத்திவிட்டு, பிறகு ஒரு குறிப்பிட்ட சூழலை உருவாக்கினால், அவர் எங்கிருந்தாலும், நாகம் அந்த நபரை, அவரை மட்டும் தேடிச்சென்று தீண்டும்.
இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு நம்பிக்கை முறை நிலவியது. ஒரு குறிப்பிட்ட நபரை, ஒரு சர்ப்பம் தீண்டவேண்டும் என்றால், அந்த நபரின் துவைக்கப்படாத உள்ளாடைகளை திருடுவார்கள். ஒரு துவைக்கப்படாத உள்ளாடை வீட்டிலிருந்து திருடப்பட்டதென்றால், அந்த வீட்டினர் உடனடியாக அவர்களது வீட்டின் ஒவ்வொரு சிறு துவாரத்தையும் அடைத்துவிட முயற்சி மேற்கொள்வார்கள் அல்லது எங்காவது பயணம் கிளம்பி விடுவார்கள். அவர்கள் தம் வசிப்பிடத்தின் சுற்றுப்புறத்தில் எங்கும் இருப்பதில்லை, ஏனென்றால் அவர்களது உடல்ரீதியான சக்தியுடன் நாகத்திற்கு பரிச்சயம் ஏற்படுத்தி அவர்களைத் தீண்டுவதற்கு அதை பழக்கப்படுத்தலாம். ஒரு நபர் எங்கிருந்தாலும் தேடிச் சென்று, அவரை தீண்டுவதற்கு ஒரு சர்ப்பம் வழிநடத்தப்பட முடியும். ஒரு குறிப்பிட்ட சடங்கு, செயல்முறையை செய்துவிட்டால், அது அந்த நபரைத் தேடிச் செல்லும்.
இந்த எதிர்மறையான பயன்பாடு எப்பொழுதும் அதிக சுவாரஸ்யமானது; அதனால்தான் அது அதிகமாக கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் இந்த சக்தியைப் பயன்படுத்துவதற்கான நேர்மறையான வழிகளும் இருக்கின்றன. ஒருவரது நல்வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும் அதை எண்ணற்ற நேர்த்தியான வழிகளில் பயன்படுத்த முடியும். சர்ப்பத்தை வழிபடுவது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தானது அல்ல – ஏறக்குறைய ஒவ்வொரு மனித நாகரிகமும் அதைச் செய்துள்ளது. கடந்த 2000 வருடங்களாகத்தான், மற்ற சமூகங்களில் இத்தகைய விஷயங்கள் நலிந்துள்ளன; அதற்கு முன்பு அது எல்லா இடங்களிலும் நிலவியிருந்தது. மோசஸ்கூட ஒரு சர்ப்ப ஆலயம் அமைத்ததாக கூறுகின்றனர். சர்ப்பமும், மனித வாழ்வும் நெருக்கமான தொடர்புடையவை.
உங்கள் தலைக்குள், ரெப்டிலியன் மூளைப்பகுதி என்ற ஒன்று இருப்பதை நீங்கள் அறிவீர்கள். உடல்ரீதியான வடிவத்தின் பரிணாம வளர்ச்சியில், உங்களுக்கு மிக நெருக்கமான இடத்தில் இருப்பது உராங்குடான் அல்லது சிம்பன்ஸி குரங்கு. உயிரின் பரிணாம செயல்முறையில், சர்ப்பமும், பசுவும் மிக முக்கியமானதொரு பங்காற்றுகின்றன. நாம் “சர்ப்பம்” என்ற சொல்லை உச்சரிக்கும்போதே, பெரும்பாலான மக்களும் ஒரு விஷம் பொருந்திய உயிரினத்தைத்தான் நினைவுகொள்கின்றனர், ஆகவே அவர்களது முதல் எதிர்வினையே அதைக் கொல்வதாகத்தான் இருக்கிறது. இந்தியாவில், சர்ப்பம் ஒன்றுதான் இறுதிச்சடங்கு செய்யப்பெறுகின்ற ஒரே விலங்கினமாக இருக்கிறது. ஒரு பசுவுக்குக்கூட இறுதிச்சடங்கு கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சர்ப்பம் இறந்தால், அதற்கு இறுதி மரியாதை கிடைக்கிறது, ஏனென்றால் உயிர்சக்திகளைப் பொறுத்தவரை, அவைகள் ஒரு மனிதருக்கு நெருக்கமாக இருக்கின்றன. அதனுடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்கள் உள்ளன, ஆனால் ஒரு சர்ப்பத்தை, அது ஒரு விஷ ஜந்து என்று நாம் கருதாததுதான் முக்கியமான விஷயம். சக்தி நிலையில் மிகவும் புத்திக் கூர்மையானதாகவும், உங்களால் கற்பனை செய்யமுடியாத விஷயங்களை அறிந்துகொள்ளும் அளவுக்கு மிகவும் கூர்மையான புரிதல் உடைய ஒரு உயிரினமாகவே நாம் சர்ப்பங்களைக் கருதுகிறோம்.