உயிருடன் இருப்பவர்களுக்கும், இறந்தவர்களுக்குமான சத்குருவின் தொலைநோக்குப் பார்வை
ஸ்வாமி அபிபாதா: ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள் கடந்த 10 வருடங்களாக கோயம்புத்தூர் மாநகராட்சியுடன் இணைந்து மாநகராட்சியின் எல்லைக்குட்பட்ட பல மயானங்களை நடத்தி வருகிறார்கள். சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களையும் சேர்த்து மொத்தம் 18 மயானங்களை நாம் நடத்தி வருகிறோம். கோவிட்-19ன் இரண்டாம் அலை இந்தியாவைத் தாக்கியபோது, நாங்கள் சத்குருவை சந்தித்து பேசினோம். அப்பொழுது அவர், கோவிட்-19ல் இறக்கும் மனிதர்களுக்கு, அவர்களது இறப்பில் ஒரு கண்ணியத்தை வழங்குவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். “இவர்கள் ஒரு நல்ல சூழ்நிலையில் வழியனுப்பப்படுவதே இறந்தவர்களுக்கும் அவர்களது அன்பிற்குரியவர்களுக்கும் நீங்கள் செய்யும் மிகப் பெரிய பங்களிப்பாகும்” என்று சத்குரு கூறினார்.”
சத்குருவின் தொலைநோக்குப் பார்வையை எங்களுக்கு வழிகாட்டும் ஒளியாக பாவித்து, நாங்கள் கோவிட்-19 தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கோயம்புத்தூரிலுள்ள 12 காயந்த ஸ்தானங்களில் (ஈஷாவால் நடத்தப்படும் மாநகராட்சி மயானங்கள்) ஈமச் சடங்குகளை செய்யத் துவங்கினோம். ‘காயா’ என்றால் உடல், ‘அந்தா’ என்றால் இறுதி, ‘ஸ்தானம்’ என்றால் இடம். ‘காயந்த ஸ்தானம்’ என்றால் உடல் இறுதியாக முடிவடையும் இடம். எங்களுக்கு இது வெறும் சமூக சேவை அல்ல. சத்குரு சொல்வது போல, மரணம் என்பது ஒரு மனிதருக்கு நடக்கும் இறுதியான ஒன்று, அதுவும் இது ஒரே ஒரு தடவை தான் ஒருவருக்கு நடக்கும், அதனால் இதனை நாம் சரியான வழியில் கையாள உறுதி கொண்டுள்ளோம்.