நடப்புகள்

யோகாவில் ஒருமைப்பாடு:
21-நாள் சேலஞ்ச் மற்றும் 10வது சர்வதேச யோகா தினத்தின் உலகளாவிய கொண்டாட்டங்கள்

உள்நிலை ஆனந்தம் மற்றும் மன ஆரோக்கியத்திற்கான 21-நாள் யோகா சேலஞ்ச்

ஜூன் 21 அன்று 10வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக, சத்குரு வடிவமைத்த 21 நாள் யோகா சேலஞ்ச், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுக்கு ஆனந்தத்தையும் மனநலனையும் கொண்டுவந்துள்ளது. Sadhguru Appல் ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, ரஷியன் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் இலவசமாக வழங்கப்படும் இந்த வாய்ப்பு, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதோடு, பங்கேற்பாளர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சேலஞ்சில் பங்கேற்பதற்காக ஜூன் 30 வரை நடைபெற்ற பதிவுகள் நடைபெற்றன. இந்த தனித்துவமான வாய்ப்பு, தனிநபர்கள் ஒரு கட்டமைக்கப்பட்ட நிகழ்ச்சியின் மூலம் தங்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை உறுதிசெய்ய வாய்ப்பளித்தது. பயிற்சிபெற்ற ஈஷா பயிற்றுவிப்பாளர்கள் மூலம் தினசரி குறிப்புகளுடன் கூடிய வகுப்புகளில் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டு, சத்குருவிடம் இருந்து விலைமதிப்பற்ற ஞானத்தைப் பெற்றனர். மேலும், மனநலனையும் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்று எளிய, சக்திவாய்ந்த யோகக் கருவிகளை அவர்கள் பயிற்சி செய்தனர்.

உள்நிலையை மேம்படுத்தும் யோகப் பயிற்சிகளுடன், 21 நாட்கள் முழுவதும் பங்கேற்பாளர்களை உத்வேகத்துடனும் ஈடுபாட்டுடனும் வைத்திருக்கும் விதமாக, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கான உதவிக் குறிப்புகளையும் இந்த சேலஞ்ச் வழங்கியது. மேலும் சுவாரஸ்யம் கூட்டும் விதமாகவும், பங்கேற்பாளர்கள் ஈடுபாட்டை மேலும் அதிகரிக்கும் விதமாகவும், பலவிதமான வெகுமதிகளும் (arange of rewards) அளிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இந்த முன்னெடுப்பின் வெற்றியானது, யோகாவின் சக்தியை அறிந்துகொள்ளும் உலகளாவிய ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது. இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினமானது, ஆயிரக்கணக்கானோர் அனுபவித்த நேர்மறையான மாற்றங்கள், ஆனந்தம், ஆரோக்கியம் மற்றும் மனநலன் ஆகியவற்றுடன், யோகாவின் ஆழமான தாக்கத்திற்கு ஒரு சான்றாக அமைகிறது.

ஆதியோகியில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடிய இந்திய ராணுவம்

சர்வதேச யோகா தினத்தன்று ஆதியோகி முன்னிலையில், யோகப் பயிற்சி மற்றும் இராணுவ கட்டுப்பாடுகளின் ஒருங்கிணைந்த ஒரு நிகழ்வாக, இந்திய இராணுவத்தின் 35வது படைப்பிரிவைச் சேர்ந்த 170 வீரர்கள் யோகப் பயிற்சியை மேற்கொண்டனர். உள்நிலை மாற்றத்திற்கும் நல்வாழ்வுக்குமான கருவிகளை வழங்குவதன் மூலம், நமது இராணுவ வீரர்களுக்கு ஈஷா பெருமையுடன் துணைநிற்கிறது.

கோவை TNAUல் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடிய ஆளுநர் R.N. ரவி அவர்கள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் R.N. ரவி அவர்கள் சர்வதேச யோகா தின விழாவில் கலந்துகொண்டார். இதில், வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பயிற்சிபெற்ற ஈஷா பயிற்றுனர்கள் ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களுக்கு பல்வேறு யோகப் பயிற்சிகளை வழங்கி, அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.

பெங்களூரு சத்குரு சந்நிதியில் நல்வாழ்வை முன்னெடுத்த ஸ்ரீநிதி ஷெட்டி

பிரபல நடிகையும், மாடல் அழகியும், ஆரோக்கிய வாழ்வுக்கான ஆலோசகருமான ஸ்ரீநிதி ஷெட்டி, பெங்களூருவில் உள்ள சத்குரு சந்நிதியில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடினார். ஆரோக்கியத்திற்கான தனது ஆலோசனைகளுக்கு பெயர்பெற்ற ஸ்ரீநிதி ஷெட்டி, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் சத்குரு சந்நிதி தன்னார்வலர்கள் மத்தியில் உரையாற்றினார்.

இந்நிகழ்வு குறித்த தனது அனுபவத்தைப் பிரதிபலிக்கும் விதமாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

“சர்வதேச யோகா தினத்தை பெங்களூரு சத்குரு சந்நிதியில் கொண்டாடினேன். ஆயுதப்படை வீரர்கள் மற்றும் சத்குரு சந்நிதி தன்னார்வலர்கள் மத்தியில் உரையாற்றியது பெருமையாக இருந்தது. நீங்கள் ஆரம்பநிலையில் உள்ளவர்களாகவோ அல்லது யோகாவைத் தொடர்ந்து பயிற்சி செய்பவராகவோ இருந்தாலும், Sadhguru appல் உள்ள 21 நாள் யோகா சேலஞ்ச் என்னைப் போலவே உங்கள் வாழ்க்கையையும் சிறப்பாக மாற்றும்! #21daychallengeaccepted”

ஸ்ரீநிதி ஷெட்டியின் இந்த ஈடுபாடு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும், வாழ்வை மாற்றும் யோகாவின் சக்தியையும் மக்கள் மத்தியில் முன்மொழிவதில் உள்ள அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

ஈஷா தன்னார்வலர்கள் வழங்கிய ISRO குழுவிற்கான யோகா நிகழ்ச்சி

ஈஷா தன்னார்வலர்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் (ISRO) 70 குழு உறுப்பினர்களுக்கு பெங்களூருவில் உள்ள அவர்களின் தலைமையகமான அந்தரிக்ஷா பவனில் யோகப் பயிற்சிகளை நடத்தினர். இந்தியாவின் விண்வெளி ஆய்வு முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, அயராது உழைக்கும் அர்ப்பணிப்புள்ள விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சி அமைந்தது.

டெல்லி மக்களின் நல்வாழ்வுக்கான தேடலுக்கு யோகா

டெல்லியில் நடைபெற்ற 10வது சர்வதேச யோகா தினத்தின் உயிரோட்டமிக்க கொண்டாட்டத்தில், ஈஷா தன்னார்வலர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு யோகா நிகழ்ச்சியில் 300 பங்கேற்பாளர்கள் தங்கள் நல்வாழ்வை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்கப் படியை எடுத்து வைத்தனர். டெல்லியின் காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தின் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், உள்நிலை மாற்றத்திற்கான யோகாவின் பலன்களை அனுபவிக்க பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்தனர்.

சிறைக் கைதிகளுக்கு நம்பிக்கையளிக்கும் உள்நிலை மாற்றத்திற்கான யோகா வகுப்புகள்

சர்வதேச யோகா தினத்தையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள 170 கைதிகளுக்கும், 60 ஊழியர்களுக்கும் யோகப் பயிற்சிகளை ஈஷா தன்னார்வலர்கள் நடத்தி, அவர்களிடையே ஆழ்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர். மேலும் விஜயபுரா, உடுப்பி மற்றும் கர்நாடகா முழுவதும் உள்ள பல சிறைகளில் உள்ள கைதிகள் மற்றும் ஊழியர்களுக்கும் மற்றும் இந்தோனேசியாவின் பாலியில் 250 பெண் கைதிகளுக்கும் யோகா வகுப்புகளை வழங்கிய அவர்களின் முன்னெடுப்புகள் உலகளவில் விரிவடைந்தன.

இந்த வகுப்புகள் பங்கேற்பாளர்களின் உடல் மற்றும் மன நலனை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்கப் படியாக அமைந்ததோடு, நம்பிக்கையையும் மறுவாழ்வுக்கான உணர்வையும் அவர்களிடையே வளர்த்தது.

துபாய் உலக வர்த்தக மையத்தில் யோக நமஸ்காரம் வகுப்பிற்கு கிடைத்த பலத்த வரவேற்பு

துபாயில் உள்ள உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சியில், சத்குரு வடிவமைத்து வழங்கிய யோக நமஸ்காரம் பயிற்சியை 4,000க்கும் மேற்பட்டோர் கற்றுக்கொண்டனர். இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து இந்திய தூதரகத்தால் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சர்வதேச யோகா தினத்தின் 10 ஆண்டுகளைக் கொண்டாடிய UNESCO

UNESCO தலைமையகத்தில், யோகா Yoga4unity மற்றும் ஹார்ட்ஃபுல்னஸ் இன்ஸ்டிட்யூட் இணைந்து ஏற்பாடு செய்த, “Master Yoga” கண்காட்சியுடன் சர்வதேச யோகா தினத்தின் 10வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் ஈஷா அறக்கட்டளையின் தலைமையில் "நல்வாழ்வுக்கான யோகா" என்ற சிறப்பு வகுப்பு இடம்பெற்றது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள எளிய மற்றும் சக்திவாய்ந்த யோகப் பயிற்சிகள் இதில் பங்கேற்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

ஐரோப்பிய நகரங்கள் ஈஷா வழங்கிய வகுப்புகளுடன் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடின

ஐரோப்பா முழுவதும் உள்ள நகரங்களில், உள்நிலை நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்புடன் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் தலைமையில் நடைபெற்ற, சிறப்பு வகுப்புகளுடன் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வுகள், பண்டைய யோக அறிவியலின் ஞானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்தன. இந்நிகழ்ச்சியில் அமைதியையும் ஒருமை உணர்வையும் பங்கேற்பாளர்கள் அனுபவித்ததோடு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் உலகளாவிய கொண்டாட்டத்தின் நோக்கத்தையும் இந்நிகழ்ச்சி பிரதிபலிப்பதாக அமைந்தது.

லண்டனின் புகழ்பெற்ற டிராஃபல்கர் சதுக்கத்திலும், இங்கிலாந்தில் உள்ள இந்திய உயர்மட்ட கலாச்சாரப் பிரிவான நேரு மையத்திலும் யோகா வகுப்புகளை ஈஷா தன்னார்வலர்கள் நடத்தினர்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உற்சாகமிக்க ஒரு சர்வதேச யோகா தினம்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள அஷ்டா மாவட்டம் 8ல் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம் 150க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் யோகா வகுப்புகளுடன் உற்சாகமூட்டும் இசை நிகழ்ச்சியும் இணைந்து, அமைதியும் உற்சாகமும் மிக்க ஒரு சூழலை உருவாக்கியது.

கடற்கரையில் யோகா: மொரிஷியஸில் யோகா தினம்

சர்வதேச யோகா தினத்தை மொரிஷியஸில் உள்ள Flic En Flac கடற்கரையில் ஒரு உயிரோட்டமிக்க வகுப்புடன் ஈஷா தன்னார்வலர்கள் கொண்டாடினர். அமைதியான கடற்கரை சூழலில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக இந்நிகழ்வு பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.