விழிப்புணர்வுடன் வாழ்தல்

நிச்சயமற்ற ஒரு உலகில் உங்களுக்கான வழியைக் காண்பது

எதிலும் கவனம் செலுத்தாமல், அன்றைய நிகழ்வில் சுய பங்களிப்பாற்றும் ஆர்வமில்லாத ஒரு ஆட்டோ பைலட் வாழ்க்கைக்காக, ஒவ்வொரு காலைப்பொழுதிலும் கண் விழிப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இது சிறைவாசிகளின் யதார்த்த வாழ்க்கையில் மட்டுமல்ல; வெளிப்பார்வைக்கு சுதந்திரமாக, ஆனால் கண்ணுக்குத் தெரியாத, நமது சொந்த உருவாக்கத்தின் கூண்டுகளில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நம்மில் பலருக்கும்கூட இது பொருந்துகிறது. ஒரு புதிய இடமோ அல்லது வாழ்க்கைமுறையோ எல்லாவற்றையும் மாற்றும் என்று நாம் எப்போதும் நம்புகிறோம், ஆனால் மாற்றத்துக்கான உண்மையான திறவுகோல் நமக்குள் இருந்தால் என்ன நிகழும்?

மேலோட்டமான சிறு திருத்தங்களைத் தாண்டி, ஒரு ஆழமான உள்நிலை மாற்றத்துக்காக, தன்னியல்பான மாற்றத்தின் மையத்தை சென்றடையுங்கள். நமது சுற்றுப்புறங்களை மாற்றுவதனால் அல்லாமல், நமது இருத்தலின் முறையையே மாற்றுவதன் மூலம், அனைத்தினின்றும் விடுதலையடைந்த கண்களின் வழியாக, சுய–மறுவரையறைக்கான ஒரு பாதையைக் கண்டு தெளியுங்கள்.

கேள்வியாளர்: நான் இந்தியாவுக்குச் சென்று என் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றிக்கொள்ளும் கருத்தில் பல வருடங்களாக சிக்கியுள்ளேன். இந்த என் விருப்பத்துக்கு எனது குடும்பமும் தொழிலும் ஆதரவு அளித்தாலும் நான் துணிந்து செயல்படாததை உணர்கிறேன். உங்கள் பணிகளை நான் பெரிதும் பாராட்டுவதால், கிராமப்புற சமூகத்துக்கு பங்களிப்பு செய்ய விரும்புகிறேன். ஆனால் இந்தியாவுக்கு மாற்றலாகும் என் ஆசை உண்மையானதா அல்லது கனவு மட்டும்தானா என்று எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும்?

உங்கள் வசிப்பிடத்தை அல்ல, உங்களையே
மறு-வரையறை செய்துகொள்வது

சத்குரு: நீங்கள் இந்தியாவுக்கு அல்லது அன்டார்ட்டிகாவுக்குச் சென்றாலும், அப்போதும் அதே நபராகத்தான் இருக்கிறீர்கள், அதில் என்ன முக்கியத்துவம் உள்ளது? நீங்கள் மாற்றமடைய விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் வாழ்க்கையின் வெளிச்சூழல்களை மாற்றுவதால், உண்மையில் எதுவும் மாறுவதில்லை. நீங்கள் லண்டனில் இருக்கிறீர்களோ அல்லது கிராமப்புற இந்தியாவில் இருக்கிறீர்களோ, உங்களுக்குள் ஏதாவது மாற்றமடைந்தால்தான் உண்மையான மாற்றம் நிகழும். இந்த மாற்றத்துக்கு ஆதரவாக, நீங்கள் இந்தியாவுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் அல்லது உலகின் வேறெந்த இடத்துக்கும் இடம்பெயர விரும்பினால், அது ஒரு சிறிய மாற்று ஏற்பாடுதான், ஆனால் அதுவே இலக்காக இருக்கக்கூடாது.

இந்தியாவுக்குச் செல்வதும் அல்லது ஒரு கிராமத்துக்கு மாறிச் செல்வதும் உங்களது இலக்காக இருக்கக்கூடாது. உங்களுக்குள் நிகழ்ந்துள்ள ஏதோ ஒன்று நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும்படியான ஒரு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தியிருந்தால், அந்த அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்குத் தகுதியான எந்த இடத்திற்கும் நீங்கள் செல்லுங்கள். அது உங்கள் குடும்ப சூழலாக, உங்கள் வியாபாரமாக, லண்டனின் வீதிகளாக அல்லது கிராமப்புற இந்தியாவாக மற்றும் எந்த இடமாகவும் இருக்கலாம்.

உங்கள் வாழ்க்கையின் வெளிச்சூழல்களை மாற்றுவதால், உண்மையில் எதுவும் மாறுவதில்லை.

நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்பதும், என்ன செய்கிறீர்கள் என்பதும் முக்கியம் அல்ல. முன்னுரிமைகள் என்பது, இருத்தல், செயல்படுதல், பெறுதல் என்ற வரிசைக்கிரமத்தில் இருக்கவேண்டும். முதலில், உங்களது இருத்தலின் வழியை நிலைநிறுத்துங்கள். உங்களது இருத்தல் முறை மாற்றம் அடைந்துவிட்டால், அதற்கான வெளிப்பாடு காண்பதற்கு நீங்கள் எங்கே இருப்பது அவசியம் என்பதும், உங்களுக்கு மிகவும் தகுதியானது என்ன என்பதற்குமான உங்களது வழியை நீங்கள் இயற்கையாகவே கண்டுகொள்வீர்கள். இடமாற்றம் என்பது நீங்கள் செய்யவேண்டிய ஒரு பெரிய முடிவல்ல.

உங்கள் இருத்தலின் வழி மாறிவிட்டதென்றால், நீங்கள் எங்கே அதிகமாகப் பயன்படமுடியும் மற்றும் அதிகபட்ச வெளிப்பாடு காணமுடியும் என்பதை நோக்கி நீங்கள் இயற்கையாகவே நகர்ந்து செல்வீர்கள். இல்லையென்றால், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதில் என்ன முக்கியத்துவம் உள்ளது? நீங்கள் உண்மையில் எப்படி இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கும், உங்களைச் சுற்றிலுமிருக்கும் இரண்டு சாராருக்கும் முக்கியமானது. நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பது உங்களுக்கும், உங்களைச் சுற்றிலுமுள்ள எவருக்கும் முக்கியமில்லை.

நீங்கள் இன்னர் இஞ்ஜினியரிங் வகுப்பில் முன்னரே பங்கேற்றிருந்தால், பாவஸ்பந்தனா மற்றும் சம்யமாவிலும் பங்கேற்பது நலமாக இருக்கும். ஒரு வகுப்பிலிருந்து மற்றொன்றுக்கு உங்களை எடுத்துச் செல்வதற்கான ஏதோ ஒரு வியாபார உத்தி அல்ல இது. ஏற்கனவே மக்கள் மேலான தயார்நிலையில் இருந்தால், அல்லது சமூகம் உங்களை போதுமான அளவுக்குத் தயார்ப்படுத்தி இருந்தால், பல வகுப்புகளுக்கான தேவை இருந்திருக்காது; ஒரே முறையில் நாம் எல்லாவற்றையும் செய்துவிடுவோம்.

சிறைக்கம்பிகளுக்குப் பின்னே வேகமெடுத்த மாற்றம்

ஒரு சிறைச்சாலைக்குச் சென்று, அங்கிருந்த சிறைவாசிகளுடன் பேசுவதற்கு முதன்முதலாக நாங்கள் அனுமதி பெற்றபோது, இது நிகழ்ந்தது. முதல் நாளன்று நான் ஒரு அறிமுகவுரை வழங்குவதற்குத் திட்டமிட்டிருந்தேன், ஆனால் அவர்கள் எட்டிலிருந்து பதினைந்து வருடங்களாக சிறைவைக்கப்பட்டும், மேலும் பலர் அவர்களது எஞ்சிய வாழ்நாட்களையும் சிறையில் கழிக்க வேண்டியவர்களாகவும் இருந்தனர். ஒரே நாளில் இன்னர் இஞ்ஜினியரிங் வகுப்பை நாங்கள் நிறைவு செய்யுமளவுக்கு அவர்கள் அவ்வளவு பேராவலுடன் இருந்தனர். ஆகவே நாங்கள் அதனைத் தொடர்ந்து பாவஸ்பந்தனா மற்றும் சம்யமா நிகழ்த்தினோம். வகுப்பு முடிவடைவதற்குள் அவர்கள் ஒட்டுமொத்தமாக வித்தியாசமான நிலையில் இருந்தனர்.

பென்சில்வேனியா சிறைச்சாலையில், நான் ஒரு வகுப்பு நடத்தியபோது இதைப்போன்ற ஒரு விஷயம் நிகழ்ந்தது. இங்கே ஆயுள் தண்டனைகளுக்கு, பரோல் கிடைக்கும் சாத்தியம் கிடையாது. ஒரு சிறந்த வாய்ப்புக்கு சாத்தியமில்லாத காரணத்தால், ஒரு மனிதர் பொறுப்பான வழியில் நடந்துகொள்வதற்கான தூண்டுதல் இல்லாமல் இருந்தது.

தனிமைச் சிறையில் விடுதலை காண்பது

தனது பதினெட்டாவது வயதில், ஒரு வழிப்பறி செய்தபோது மூன்று பேரைச் சுட்டுக்கொன்றதற்காக, முப்பது ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவந்த, ஓங்கி வளர்ந்த ஒரு கருப்பின மனிதர் இருந்தார். தீவிர அபாயகரமான, வன்முறையாளனாகக் கருதப்பட்ட அந்த சிறைவாசி, இத்தனை வருடங்களாக தனிமைச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவரது சிறையில், அவருடன் சற்று நேரம் செலவழிப்பதற்கு எனக்கு சிறப்பு அனுமதி கிடைத்தது.

முன்னுரிமைகள் என்பது, இருத்தல், செயல்படுதல், பெறுதல் என்ற வரிசைக்கிரமத்தில் இருக்கவேண்டும். முதலில், உங்களது இருத்தலின் வழியை நிலைநிறுத்துங்கள்.

ஒரு சிறைச்சாலை என்பது மிகவும் தனித்துவமான சூழல் கொண்டது. எல்லாமே ஒருங்கமைக்கப்படுகிறது; நீங்கள் மாதக்கட்டணங்கள் செலுத்தவேண்டியது கிடையாது; உணவு உரிய நேரத்துக்கு வழங்கப்படுகிறது; நீங்கள் சரியான நேரத்துக்கு எழுப்பப்படுகிறீர்கள்; மேலும் உங்களுக்காக கதவுகள் திறக்கப்படுகின்றன மற்றும் மூடப்படுகின்றன. எப்போதும் நீங்கள் சரியான நேரத்துக்கு படுக்கைக்குச் செல்லமுடியும் என்பதுடன் நீங்கள் ஒருபோதும் கூடுதலாக வேலை செய்யவேண்டியதில்லை. உங்களுக்காக யாரோ ஒருவர் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என்ற ஒரே பிரச்சனையைத் தவிர, அது மிகக் கச்சிதமானதாகத் தோன்றுகிறது, ஆனால், மனிதர்கள் பூட்டிவைக்கப்பட்ட காரணத்தினாலேயே, நீங்கள் சற்றே உணர்திறனுடன் இருந்தால், அந்தச் சூழலின் காற்றில் விவரிக்க இயலாத வலி படர்ந்திருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள்

இந்தக் குறிப்பிட்ட மூர்க்கமான சிறைவாசி, வகுப்பில் இணைவதற்கு முடிவெடுத்தபோது, அனைவரும் வியந்துபோனதுடன், வகுப்பறைக்கு உள்ளே ஒரு ஆயுதமேந்திய காவலர் நிறுத்திவைக்கப்பட்டார். காவலரை வெளியில் நிற்குமாறு நான் வேண்டுகோள் விடுத்த நிலையிலும், சிறைச்சாலை ஒழுங்குமுறை காவலர் உள்ளே இருப்பதை அவசியமாக்கியது. எல்லா நேரமும் காவலர் தயார்நிலையில் தன் துப்பாக்கியுடன் அங்கே நின்றார்.

நான்காம் நாளில், இந்த சிறைவாசி உடைந்துபோய், ஒரு குழந்தையைப்போல் அழுதார். முப்பது வருடங்களாக எப்போதும் அவரது சிறையில் நடந்துகொண்டே இருந்த அவரால் அசைவற்று உட்காரமுடியாமல் இருந்ததை அவர் பகிர்ந்துகொண்டார். இப்போது அவர் முதல்முறையாக ஒரு இடத்தில் அமர்ந்து தியானம் செய்யத் தொடங்கியிருந்த இந்த உணர்தல் அவரை கட்டுக்கடங்காமல் உணர்ச்சிவசப்படச் செய்துவிட்டது.

அசைவின்மையின் தளர்வை மீண்டும் கண்டுபிடித்தல்

தளர்வுநிலையில் அமர்வதற்கான திறன் எளிமையான ஒன்று என்றாலும், சிறைவாசிகளுக்கு மட்டுமல்லாமல், பெரும்பாலான மக்களுக்கும் வசப்படாத ஆழமான விஷயமாக உள்ளது. அனைவராலும் முழுமையான தளர்வுநிலையில் அமர முடிந்தால், மக்களுக்கு தியானத்திற்கான தீட்சை அளிப்பதற்கு அவசியமிருக்காது. பல தனிமனிதர்களும் சிறைவாசிகளைவிட மிக மோசமான நிலையில் இருக்கின்றனர். இந்த சிறைவாசிக்கு, அங்கிருந்த அமைப்பு அதற்குக் காரணமாக இருந்தது, ஆனால் பூமியின் பெரும்பான்மையான மக்கள், அதனைத் தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்கின்றனர். எதுவும் செய்வதற்கு இல்லையென்றாலும், அவர்களால் ஒரு இடத்தில் அமரமுடியாதவாறு தங்களைத் தாங்களே மிகவும் அமைதி இழந்தவர்களாக்கிக் கொண்டுள்ளனர்.

உங்கள் இருத்தலின் வழி மாறிவிட்டதென்றால், நீங்கள் எங்கே அதிகமாகப் பயன்படமுடியும் மற்றும் அதிகபட்ச வெளிப்பாடு காணமுடியும் என்பதை நோக்கி நீங்கள் இயற்கையாகவே நகர்ந்து செல்வீர்கள்.

பெரும்பாலான மனிதர்களுக்கு “அவர்களது விஷயம்” ஒன்றை எப்போதும் செய்யவேண்டும். மக்கள் அவர்களது விஷயத்தைச் செய்வதுதான் பூமியை அழித்துக்கொண்டிருக்கிறது. அவர்களால் ஒரு இடத்தில் முற்றிலும் அமைதியாக அமரமுடியாததுதான் இதற்கான காரணமாக உள்ளது; அமைதியாக அமர்வது அவர்களுக்கு அர்த்தம் நிறைந்ததாக இல்லை. எல்லா நேரமும் அவர்கள் எதையாவது செய்துகொண்டே இருக்கவேண்டும். இது சிறையிலிருக்கும் அந்த ஒரு மனிதனின் பிரச்சனை மட்டுமல்ல – இது ஒட்டுமொத்த உலகத்தின் பிரச்சனையாக உள்ளது.