ஆன்மீக ஞானமடைதலுக்கான தேடுதலில், அதற்கான பாதை கேள்விகள் மற்றும் நிச்சயமின்மைகள் நிறைந்ததாக, எப்போதும் சிக்கலும் குழப்பமுமான ஒரு தளமாக உணரப்படலாம். ஒரு குருவுக்கு எப்படி ஒருவர் சிறந்த சீடராக ஆகிறார்? உண்மையான புரிதல் இல்லாத, அதிகப்படியான அறிவு எப்படி கடும் தொந்தரவாக இருக்கமுடியும் என்பதை சத்குரு நகைச்சுவையாக விளக்குவதுடன், ஒருவரது ஆன்மீகப் பயணத்தை ஒரு சமூக மதிப்பீடாக செய்யாமல் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். உண்மையான அறிதல் மற்றும் உச்சபட்ச கரைதல் குறித்த உங்கள் புரிதலை இந்த உள்முகமான பயணம் மறுவரையறை செய்யக்கூடும். நீங்கள் ஒரு புலனாய்வாளரா, ஆர்வமான தேடுதல் கொண்டவரா, ஊக்கமுடன் கற்பவரா அல்லது தென்றலைப் போன்ற பக்தரா என்பதைக் கண்டுபிடிக்க இந்தப் பதிவை வாசியுங்கள்.
கேள்வி: நமஸ்காரம், சத்குரு. நான் ஆன்மீக செயல்முறைக்கு புதிது. இந்தச் செயல்முறையின்போது, வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் எங்களுக்கு ஒரு குரு தேவை என்பதனை நான் புரிந்துகொள்கிறேன். குருவுக்கான சிறந்த சீடராக இருப்பதற்கு நான் என்ன செய்யவேண்டும் மற்றும் எதைத் தவிர்க்கவேண்டும்?
சத்குரு: நீங்கள் என்ன செய்யவேண்டும்? மக்கள் வெவ்வேறு வழிகளில் ஆன்மீகப் பாதையைத் தொடங்குகின்றனர். சிலர் புலனாய்வாளர்களாக, மற்றும் சிலர் வெறும் ஆர்வத்தின் காரணமாகத் தொடங்குகின்றனர். மற்றவர்கள் தங்களது வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, புதிதாக ஏதோவொன்றைக் கற்றுக்கொள்வதற்கு தேடுகின்றனர்.
சிலர் தங்களது வாழ்க்கையை முன்னேறச் செய்யும் அறிவைப் பெற விரும்புவதால், கற்றுக்கொள்வதற்கு வருகின்றனர். ஒரு புலனாய்வாளராக, ஆர்வமிக்க ஒரு சாதகராக, கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு சீடராக, அல்லது கரைந்துபோக விரும்பும் ஒரு பக்தராக ஒருவர் ஆன்மீக செயல்முறையை அணுகமுடியும். அது ஒருவரது தனிப்பட்ட தேர்வு. நீங்கள் தற்போது என்னவாக இருக்கிறீர்களோ, அது அல்லாத வேறு ஏதோ ஒன்றாக இருப்பதற்கு உங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
நீங்கள் ஒரு புலனாய்வாளராக இருந்தால், உங்களுடன் ஈடுபடுவதில் நான் மகிழ்ச்சியடைவேன், ஆனால் நான் இருக்கும் விதம் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்காது. நீங்கள் ஒரு ஆர்வமிக்க சாதகராக இருந்தால், நான் உங்களை சந்தோஷப்படுத்துவேன். நீங்கள் கற்றுக்கொள்ள விரும்புபவர் என்றால், அதன் பொருள் நீங்கள் எதையோ சேகரிக்க விரும்புகிறீர்கள். இது ஒரு பழமையான உள்ளுணர்வு. வேட்டையாடிகள் மற்றும் சேகரிப்பாளர்களாக, மனிதர்கள் பொருட்களை சேகரித்துக்கொள்ள விரும்புகின்றனர். தங்களது பைகளை நிறைத்துக்கொள்வது அவர்களின் வாழ்வை மேம்படுத்தும் என்று நம்புகின்றனர். பைக்குள் என்ன இருக்கிறது என்பது பொருட்டல்ல. பை எந்த அளவுக்கு பெரிதாகவும், நிறைந்தும் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது மிகவும் சுமையானதாகிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் தவறுகின்றனர்.
உங்கள் ஒவ்வொருவருக்கும் நாம் இருபது கிலோகிராம் தங்கக்கட்டிகளைக் கொடுத்து, அதை எந்த வாகனமும் பயன்படுத்தாமல் நீங்கள் உங்கள் சொந்த ஊருக்கு நடந்தே சுமந்து எடுத்துச் செல்லவேண்டியிருந்தால், அதைச் சற்று கற்பனை செய்யுங்கள். அது தங்கமாக இருந்தாலும், அந்த பாரத்தின் சுமை மிக அதிகமாக இருக்கும். நீங்கள் எதைச் சேகரிக்கிறீர்கள் என்பது பொருட்டல்ல, நீங்கள் அதிகமாக சேகரித்தால், அது கூடுதல் சுமையாகிறது. அதுதான் ஒரு சீடரின் தலைவிதி.
மாறாக பக்தர், அவர்கள் எதுவுமற்றவராகும் வரை, குறைந்துகொண்டே செல்கின்றனர். எந்தப் பெருமுயற்சியும் இல்லாமல், அவர்கள் ஒரு தென்றலைப்போல் செல்கின்றனர்.
உங்களை நீங்கள் அறிவினால் நிறைத்துக்கொள்ள விரும்பினால், அது சுமை நிரம்பியதாகிவிடும். பெரும்பாலான மக்களும், அவர்களை வாழ்வின் சுமை அழுத்தி வீழ்த்தும்வரை, கரைதலுக்கான தூண்டல் கொள்வதில்லை; இல்லையென்றால், அவர்கள் நாளைக்கு செய்துகொள்வோம் என்றுதான் எப்போதும் எண்ணுகின்றனர்.
வாழ்க்கை தன்னளவில் ஒரு சுமையல்ல; நீங்கள் அதை வைத்திருக்கும் விதம்தான் அதைச் சுமையானதாக்குகிறது. நீங்கள் வாழ்க்கையை ஒரு மிதவைக் கருவியாக உபயோகித்து, அதனூடே சிரமமில்லாமல் மிதக்கலாம், அல்லது அதை உங்கள் தலை மீது சுமக்கலாம். பூமியுடன் அது திசை மாறும்போது நீங்கள் வெறுமனே மிதக்கலாம், அல்லது ஒட்டுமொத்த உலகத்தையும் உங்கள் தலை மீது சுமந்துகொண்டிருப்பதாக உணரும் வகையில் உங்கள் அனுபவத்தை நீங்கள் உருவாக்கிக்கொள்ளலாம்.
நீங்கள் அதனை உங்கள் தலை மீது சுமந்தால், நீங்கள் ஒரு சீடர் என்று நாம் அழைக்கிறோம். அது மிகவும் மரியாதைக்குரிய, விரும்பப்படுகின்ற ஒரு பதவி, ஏனென்றால் நீங்கள் “குரு பல்கலைக்கழகத்தில்” இருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஒரு பக்தராக இருந்தால், அங்கே சுமையில்லை. ஒரு தென்றலைப்போல், நீங்கள் மென்மையாகக் கடந்திடுவீர்கள்.
ஒரு சிறந்த சீடர் அனைத்தையும் வேகமாகப் படித்து, கூறப்பட்டுள்ள அனைத்தையும் கேட்டு, அதைக்கொண்டு தங்களது தலையை நிறைத்துக்கொண்டு, அதனுடன் போராடுகிறார். அவை அனைத்திலும் இருந்து தங்களை சுமையில்லாமல் செய்துகொள்ள விரும்புமளவுக்கு அவர்கள் அதிகமான துன்பத்துக்கு ஆளாகிறார்கள்.
ஒரு நல்ல குரு அல்லது ஜென் குருவைத் தேடிக்கொண்டிருந்த ஒரு ஜப்பானிய புத்தமதத் துறவியைப் பற்றிய கதை ஒன்று உண்டு. அவர் பன்னிரண்டு ஆண்டுகள் தன்னை ஒரு ஆசிரமத்துடன் இணைத்துக்கொண்டார். ஒருநாள் குரு கூறினார், “நீ உணர்ந்துவிட்டாய், இங்கே வெறுமனே இருந்துகொண்டிருப்பதில் பயனில்லை. நீ வெளியேறிச் சென்று, செய்தியைப் பரப்புவதற்கான நேரம் வந்துவிட்டது.” அவ்வாறே கிளம்பிய துறவி, வழியில் மற்றொரு மூத்த துறவியை, இன்னமும் அறிந்துகொள்ளும் விருப்பத்துடன், சுற்றியலைந்துகொண்டு இருந்தவரைச் சந்தித்தார்.
அந்தத் துறவி கேட்டார், “நீங்கள் அங்கே பன்னிரண்டு வருடங்கள் செலவழித்தீர்கள். அப்போது என்ன அறிந்துகொண்டீர்கள்?” முதல் துறவி கூறினார், “ஓ, நான் ஏற்கனவே அறிந்திராத எதுவும் அந்த ஆசிரமத்தில் இல்லை.” மற்றொரு துறவி வினவினார், “உண்மையாகவா? பிறகு நீங்கள் ஏன் அங்கே பன்னிரண்டு வருடங்கள் செலவழித்தீர்கள்?” அவர் கூறினார், “எனக்கு ஏற்கனவே தெரிந்திராத எதுவும் இங்கே இல்லை என்பதை உணர்வதற்கு எனக்கு அவ்வளவு காலம் தேவைப்பட்டது. நான் அதை உணர்ந்தவுடன், என் குரு கூறினார், “இப்போது நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள், நீங்கள் வெளியில் சென்று உலகத்தில் செய்தியைப் பரப்பலாம்.”
நான் கூறியுள்ள எல்லா விஷயங்களுடனும், உண்மையில் நான் கூறாத ஆனால் நான் கூறியுள்ளதாக மற்றவர்கள் வாதிடும் விஷயங்களுடனும் ஒரு சிறந்த சீடர், தன்னையே நிரப்பிக்கொண்டு காலத்தை வீணாக்கக்கூடாது. அவை எல்லாவற்றுடனும் உங்களையே நீங்கள் நிரப்பும்போது, நீங்கள் முழுமையாகக் குழப்பமடைவீர்கள். உண்மையிலேயே அறிந்துகொள்ளாமல், நீங்கள் அறிந்திருப்பதாக நினைத்துக்கொள்ளும் சுமையை உணரும்போதுதான், நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். உங்களுக்கு உண்மையில் எதுவும் தெரியாது, ஆனால் உங்களுக்குத் தெரிந்திருப்பதுபோல் நீங்கள் உணரும் வரை – இது சித்திரவதை. ஆனால் இந்த சித்திரவதை உங்களை முதிர்ச்சியடையச் செய்யவேண்டும். இல்லையென்றால், இங்குமங்கும் நீங்கள் எடுத்த சிறுசிறு துணுக்குகளுடன், உங்கள் உணர்தலை மற்றவர்களுடன் நீங்கள் பகிர்ந்துகொள்வதற்கு முயற்சிப்பீர்கள். இதனைச் செய்யக்கூடாது என்று எப்போதும் நாம் உங்களுக்கு கூறி வந்துள்ளோம்.
உங்களது ஆன்மீகத்தை மற்றவர்களுடன் நீங்கள் விவாதித்தால், நீங்கள் இங்குமங்கும் எடுத்த சிறுசிறு துணுக்குகள் அனைத்தும் பெருமிதமாகும். உதாரணமாக, ஒருவர் கூறலாம், “நான் இந்த மாதிரி அமரும்போது, எனக்கு என்ன நிகழ்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? என் குரு தனிப்பட்ட முறையில் தோன்றி, சிறப்பான ஒன்றில் எனக்கு தீட்சை அளிக்கிறார். அவர் மற்ற எவருக்கும் இதனைச் செய்ததில்லை, ஆனால் எனக்கு மட்டுமே இது கிடைக்கும், ஏனென்றால் நான் சிறந்த சீடன்.” உங்கள் ஆன்மீக செயல்முறையிலிருந்து நீங்கள் சமூக மதிப்பீடு அடைகிறீர்கள் என்றால் அவ்வளவுதான், நீங்கள் முடிந்துபோய்விட்டீர்கள்.
ஆன்மீகத்தைப் பேசிக்கொண்டிருக்கும் யாரைப் பார்த்தாலும் நாம் நிறுத்துவதன் காரணம் இதுதான். அதை நீங்கள் செய்யத்தொடங்கிவிட்டால், நீங்கள் முழுவதுமாக காணாமல் போகிறீர்கள். அது உங்களை சித்திரவதை செய்யும், ஏனென்றால் சில நேரங்களில் நான் கூறுவது முரண்பாடாகத் தோன்றலாம். நான் வெவ்வேறு மக்களுடன் பேசும் காரணத்தால், நான் ஒரே விஷயத்தைக் கூறமாட்டேன். ஒரு வேத நூலிலிருந்து வருகின்ற ஆன்மீக ஆசான்கள் மட்டும்தான், அனைவரிடமும் ஒரே விஷயத்தைக் கூறுவார்கள். அதுபோல நான் இல்லை. நான் ஒரு நபரிடம் பேசினால், ஒரு விஷயத்தைக் கூறுவேன். மற்றொரு நபரிடம் பேசினால், நான் வேறொன்றைக் கூறுவேன்.
ஒருவரிடம் அவருக்குப் பொருத்தமில்லாத விதத்தில் பேசுவதால் என்ன முக்கியத்துவம் இருக்கிறது? ஆனால் உங்கள் வாழ்க்கையில் உண்மையின் அதிகாரத்தை நீங்கள் கையிலெடுக்கும்போது அதுதான் நிகழ்கிறது. அது ஒரு நபராக, ஒரு குருவாக, ஒரு பண்டிதராக, ஒரு புத்தகமாக, அல்லது ஒரு வேதமாக இருந்தாலும் – நீங்கள் அதிகாரம் செலுத்தினால், அதை நீங்கள் தொலைத்துவிட்டீர்கள்.
உங்களுக்கு ஒரு கதை கூறுகிறேன். டென்னஸியில், பழமையான, வளம்மிகுந்த குடும்பங்களுக்கு மத்தியில், ஒரு வழக்கம் இருந்தது. அதாவது பொதுவாக அவர்கள், கனமான தோலினால் முகப்பு உறை செய்யப்பட்ட பைபிள் வைத்திருந்தனர். அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தில், அப்போதுதான் வாசிப்பதற்குக் கற்றிருந்த ஒரு சிறுவன், பள்ளியிலிருந்து வீடு திரும்பியிருந்தான். அவனது புதிய வாசிப்பு திறமை குறித்த ஆர்வத்தில், அவன் பார்த்த அனைத்தையும் வாசிக்க விரும்பினான்.
அவன் குடும்பத்தின் பெரிய பைபிளைத் திறந்தபோது, பக்கங்களுக்கு இடையில் அழுத்தப்பட்டிருந்த ஒரு காய்ந்த இலை வெளியில் வந்து விழுந்தது. அவனது உற்சாகமிகுதியில், அவன் தன் தாயை உரத்த குரலில் அழைத்தான், “மம்மா, நான் எதைக் கண்டுபிடித்திருக்கேன் என்று வந்து பாருங்கள்!’’ தாய் வந்ததும், அவன் ஆச்சரியத்தில் விழிகள் விரிய, “இதோ பாருங்கள், ஆதாமின் உள்ளாடை!’’ என்றான்.
புத்தகங்களில் இருந்து என்னவெல்லாம் வெளிப்படுகிறது என்பது நமக்குத் தெரியாது, ஆனால் சில பண்டிதர்கள் வெளிப்படுகின்றனர், மற்றும் அந்தக் காரணத்தினால், அவர்களது தலைகளின் மேலிருக்கும் அறிவின் பாரத்தினால் அவர்கள் ஆழமாக சுமையேற்றப்பட்டு உள்ளனர். பொதுவாகவே, எனக்கு ஒரு தலை இருக்கிறதா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது. உங்கள் தசை வலிமையையும் மூளையையும் ஒப்பிட்டால், உங்கள் மூளையே அதிகம் துளையுடன் இருக்கிறது; ஆனால் அதனுள் மென்காற்று செல்வது முக்கியம். மூளையானது எந்த அளவுக்குத் திறந்த தன்மையில் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அது சிறப்பாக செயல் செய்கிறது. ஒரு பல்கலைக்கழக நூலகத்திலிருந்தோ, மற்றவர்களிடம் இருந்தோ, அல்லது சத்குருவிடம் இருந்தோ நீங்கள் சேகரித்துள்ள மற்ற எல்லா விஷயங்களுடனோ அது அடைபட்டுவிடக்கூடாது.
இதன் கருத்து என்னவென்றால், அதை சுத்தப்படுத்துவதால் நீங்கள் இங்கே அமரும்போது, உங்கள் நாசித்துவாரங்கள் திறந்திருந்து, சுவாசிப்பதைப்போல், உங்களது மூளைகூட சுவாசிக்கவேண்டும். அப்போது நீங்கள் ஒரு சிறந்த சீடராகிறீர்கள். அறிவினால் உங்களை நீங்களே சுமையாக்கிக் கொள்வதில்லை, ஆனால் உங்களால் விலக முடியாது – அதுதான் ஒரு நல்ல சீடர் என்பது.