
உலக சுற்றுச்சூழல் தினமான கடந்த ஜூன் 5 அன்று, காவிரி கூக்குரல் இயக்கம் தமிழகம் முழுவதும் 2,00,000 மரக்கன்றுகளை நடும் பணியை முன்னெடுத்தது. இரண்டு வாரங்களில், 95 விவசாயிகளுக்கு சொந்தமான 610 ஏக்கர் நிலத்தில் 2,03,930 நாட்டு மர வகைகள் நடப்பட்டன. மதிப்புமிக்க தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர்களால் மரம் நடும் முன்னெடுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன. அனைவருக்கும் பசுமையான எதிர்காலத்தை உருவாக்கும் குறிக்கோளுடன், காவேரி ஆற்றுப் படுகையில் 242 கோடி மரங்களை நடுவதற்கான நீண்டகால செயல்திட்டத்தின் தொடக்கத்தை இது குறிக்கிறது.
காவேரி கூக்குரல் மூலம் இந்த ஆண்டு 1.21 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இயக்கத்தின் குழுவினர் விவசாயிகள் மூலம் மரம் நடும் முன்னெடுப்புகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெடுப்புகள் துவக்கப்பட்டன.
இந்த தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இந்த இயக்கத்திற்கு உறுதுணையாக இருந்த மாண்புமிகு தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்: நகராட்சி நிர்வாகம், நகர்ப்புற மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. கே.என்.நேரு; மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. எஸ்.முத்துசாமி; வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்; செய்தி மற்றும் விளம்பரத்துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. எம்.பி.சாமிநாதன்; வணிக வரிகள், பதிவு மற்றும் முத்திரை சட்டத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. பி.மூர்த்தி; பால் மற்றும் பால்வள அபிவிருத்தி துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திரு. T.மனோ தங்கராஜ்; சமூகநலம் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறைக்கான மாண்புமிகு அமைச்சர் திருமதி. P. கீதா ஜீவன்; நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K.சண்முகசுந்தரம்; மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தனுஷ் எம்.குமார்.
ஈஷா யோக மையத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் தன்னார்வலர்கள் கொண்டாடினர். அவர்களின் எல்லையற்ற உற்சாகம், உலகில் வேகமாக அழிந்துவரும் மண்வளத்திற்குப் புத்துயிர் அளிக்க வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டுசேர்ப்பதற்கான அறிவிப்பாக அமைந்தது.
பெங்களூரு சத்குரு சந்நிதியின் தன்னார்வலர்கள் குழு, யோக துவாராவில் இருந்து சத்குரு சந்நிதி வரையிலான 3 கிமீ தூரத்திற்கு மரக்கன்றுகளை நட்டனர். உலக சுற்றுச்சூழல் தினத்தன்று தொடங்கிய இந்த முன்னெடுப்பு, ஒவ்வொரு வார இறுதியிலும் தொடரும் என்பதால், படிப்படியாக இந்தப் பாதை பசுமையான நிலப்பரப்பாக மாறும்.
BAPS சுவாமிநாராயண் சன்ஸ்தாவைச் சேர்ந்த 30 துறவிகளுக்கு கோவை ஈஷா யோக மையத்தில் அன்பான வரவேற்பு வழங்கப்பட்டது. அவர்கள் 112 அடி ஆதியோகி திருமுகம், தியானலிங்கம் உட்பட ஈஷாவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பல்வேறு அம்சங்களை பார்வையிட்டனர். உலகளாவிய இந்து அமைப்பான BAPS, சமூக சேவை, ஆன்மீகம் மற்றும் கலாச்சார பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
ஈஷா யோக மையத்தில், சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியின் மூத்த மாணவர்களால் "மார்கம்" என்ற தலைப்பில், சமீபத்தில் அரங்கேறிய ஒரு நேர்த்தியான பரதநாட்டிய நிகழ்ச்சியை தன்னார்வலர்களும் பார்வையாளர்களும் கண்டுரசித்தனர். ஜூன் 29 அன்று மாலை சூரியகுண்டம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பாரம்பரிய நடன வடிவமான பரதநாட்டியத்தின் கலைநயமிக்க வெளிப்பாடு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. மா சண்முகப்ரியா மற்றும் ஸ்வாமி தனிஷ் ஆகியோர் நுட்பமான தாளங்களுக்கு கலைத்திறன் மிக்க அபிநயங்களை வெளிப்படுத்தி, தங்கள் நாட்டியத் தேர்ச்சியை வெளிப்படுத்தினர்.
இரு கலைஞர்களும் சத்குரு குருகுலம் சம்ஸ்கிருதியில் பரதநாட்டியக் கலையில் 12 ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மாறாத அர்ப்பணிப்பு, இந்த அறிமுக நிகழ்வில் அற்புதமாக வெளிப்பட்டதோடு, அவர்களின் கலைப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அந்நிகழ்ச்சி அமைந்தது. இருவரின் வளர்ச்சியையும் கலைத் தேர்ச்சியையும் எடுத்துரைக்கும் விதமாக, முதல்முறையாக அரங்கேறும் இருவரின் மாபெரும் நாட்டிய அர்ப்பணிப்பைக் கண்டு, ரசித்து, வாழ்த்திட பார்வையாளர்கள் பலரும் வருகைதந்திருந்தனர்.