
நல்வாழ்வு குறித்த ஆழமான ஒரு கண்ணோட்டத்தை சத்குருவிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள். இந்தக் கட்டுரை ஆரோக்கியத்தை மட்டும் குறித்ததல்ல – வெற்றிக்கான சக்திவாய்ந்த கருவிகளாக உங்கள் உடலையும், மனதையும் பயன்படுத்துவதைக் குறித்தது. இடையறாத சுய முன்னேற்றம், சிரமமில்லாத சாதனைக்கும், நீடித்த தாக்கத்துக்கும் எப்படி வழி நடத்துகிறது என்பதை சுவாரஸ்யமான கதைகள் மற்றும் அறிவார்த்தமான எடுத்துக்காட்டுகள் மூலம் சத்குரு வெளிப்படுத்துகிறார். வாழ்க்கைக்கான உங்கள் அணுகுமுறையை மேம்படுத்திக்கொள்ள தயாரா? மாற்றம் ஏற்படுத்தும் இந்த வழிகாட்டலுக்குள் பயணித்து, உலகத்துக்கு மிகவும் அவசியமான தீர்வாக வெளிப்படுங்கள்.
சத்குரு: வாழ்க்கையில் நீங்கள் நன்றாக இருப்பதுதான் மிக முக்கியமான விஷயம். நீங்கள் நன்றாக இல்லையென்றால், நன்றாக செயல்படுவது என்ற கேள்விக்கே இடமில்லை. “நன்றாக” என்றால் என்ன? உடலளவில் ஆரோக்கியமாக இருப்பது முக்கியமானது. ஏனென்றால், நீங்கள் ஆரோக்கியத்துடன் இருக்கும்போது மட்டும்தான் உடல் கடந்த வாழ்க்கை குறித்தும், மற்றும் உலகத்திலும், உங்களுக்கு உள்ளேயும் நீங்கள் என்ன செய்யமுடியும் என்று நீங்கள் யோசிக்கமுடியும். உங்களது ஆரோக்கியம் சீர்கெட்டால், பிறகு உங்களது ஒட்டுமொத்த கவனமும் உடலின் மீதுதான் இருக்கும். உங்களது சுண்டுவிரல் நசுங்கிவிட்டால், ஞானமடைதல் பற்றி உங்களால் பேசமுடியுமா? சுண்டுவிரல் மட்டும்தான் உங்கள் மனதில் இருக்கும் ஒரே விஷயமாக இருக்கும்.
உடல்ரீதியான துன்பம் உருவாகத் தொடங்கிவிட்டால், அது உங்களை வேறு எதிலும் கவனம் செலுத்த அனுமதிக்காது; உங்களை அது எப்போதும் துன்பத்திலேயே வைத்திருக்கும். பிறகு உடல், உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய நாட்களை பரபரப்பிலேயே வைத்திருக்கும். உங்கள் உடலும், மனமும்தான் நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் மேடைகளாக உள்ளன. அவைகள் உங்களுடைய வாழ்க்கையின் அடித்தளமாக இருந்தால், அது பரவாயில்லை; ஆனால் அவைகள் உங்களுடைய வாழ்க்கையின் சூழலை மாற்றும் காரணிகளாக ஆகிவிட்டால், நீங்கள் தொலைந்துபோகிறீர்கள்.
நீங்கள் அதன்மீது உட்காரவும், ஏறி விளையாடவும், கால்பதித்து நடனமாடவும் ஒரு மேடையாக உள்ளது; ஆனால் இந்த மேடைக்குள் நீங்கள் மூழ்கிவிட்டால், அது உங்கள் கல்லறையாக, உயிருள்ள ஒரு சவப்பெட்டி ஆகிவிடுகிறது. ஆகவே, எப்போதும் உடலும் மனமும் உங்களை ஒருபோதும் கீழே விழச்செய்யாமல், உங்களுக்கான ஒரு உறுதியான மேடையாக செயல்படுமளவுக்கு அவற்றை வைத்திருப்பது முக்கியம்.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய விரும்பும் அனைத்துக்கும், உங்களை உடலளவிலும், மனதளவிலும் சிறந்த நிலையில் வைத்திருப்பது மிகவும் அவசியம். என் கவனம், ஒருவர் என்ன செய்கிறார் என்பதல்ல, அவர் நன்றாக செய்கின்றாரா என்பதுதான். இல்லையென்றால், அதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது?
யாரோ ஒருவர் ஒரு பந்தை அடிப்பது, குழந்தையின் விளையாட்டு போலத் தோன்றலாம். ஆனால் அவர்கள் மிக நன்றாக அடிக்கும் நிலையில், மக்கள், “வாவ், அவர்கள் கிரிக்கெட் கடவுள்,” என்று கூறுகின்றனர். அவர்கள் பாரத ரத்னாவாகக்கூட ஆகிவிடலாம். ஒரு பந்தை நன்றாக அடிப்பது உங்களை தேசத்திலேயே அல்லது உலகத்திலேயே மிக முக்கியமான நபராக உருவாகச் செய்யக்கூடும் என்று ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கமாட்டார்கள். அது எல்லாமே, அதை நீங்கள் எவ்வளவு நன்றாக செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு உட்பட்டது.
நீங்கள் எதைச் செய்வதற்கு தேர்வு செய்கிறீர்கள் என்பதைப் பற்றிய கேள்வி அல்ல, ஆனால் நீங்கள் என்ன செய்தாலும் உங்கள் உடல், மனம் மற்றும் உணர்ச்சிகள் தடையாக இல்லாமல் இருக்கும் வகையில் உங்களையே நீங்கள் தயார்ப்படுத்தி இருக்கிறீர்களா? இதுதான் கேள்விக்குரியது. உங்களது உடல் ஒரு தடையாக இருந்தால், நீங்கள் எங்கு செல்வீர்கள்? உங்களது எண்ணங்களும், உணர்ச்சிகளுமே தடையாக இருந்தால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு வேறு எந்தத் தொந்தரவும் தேவையில்லை, ஏனென்றால் உங்களுக்கு நீங்களே போதுமான தொந்தரவாக இருக்கிறீர்கள்.
பெரும்பாலான மனிதர்களிடத்தில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளனர். இதனால்தான் உலகத்தில் இருக்கும் உண்மையான பிரச்சனைகள் அணுகப்படாமல் உள்ளன – எப்போதும் புதிய பிரச்சனைகளுடன் வெளிப்படும் ஒவ்வொரு தனிமனிதரும் பிரச்சனைகளின் தொழிற்சாலையாகவே இருக்கின்றனர். ஒரு சிறிதளவு மக்கள் சதவிகிதத்தினர் மட்டும்தான் எப்போதும், எல்லாவற்றுக்கும் தீர்வுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றனர். அவர்களாலேயே உலகம் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
எங்கெங்கு சென்றாலும், எப்போதும் ஒரு தீர்வாக இருக்கும் மக்கள் சதவிகிதத்தை நாம் அதிகரிப்பது முக்கியமானது. பிரச்சனை என்னவாக இருந்தாலும், அவர்கள் அதை சரிசெய்வதுடன், தாங்களே ஒரு பிரச்சனையாக ஆவதில்லை. எந்தச் சூழலிலும், நீங்கள் ஒரு பிரச்சனையாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்துகொள்வதுதான் உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் உங்களால் செய்யமுடிகின்ற சிறந்த விஷயமாக உள்ளது. துன்பத்தில் இருப்பதுதான் அவர்களை முக்கியத்துவம் பெறச்செய்யும் என்று ஒரு பெருந்திரளான மக்கள் கூட்டம் நினைக்கிறது. அவர்கள் வெறுமனே தங்களைத் தாங்களே துன்பப்படுத்திக் கொள்வதால், அனைவரும் அவர்கள் மீது கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.
நீங்கள் உண்மையிலேயே ஒரு நல்ல காரை ஓட்டிக்கொண்டிருந்தால், நீங்கள் காரைப்பற்றி யோசனை செய்யவேண்டியது கிடையாது. ஏனென்றால் அது நன்றாக ஓடிக்கொண்டிருப்பதுடன், கார் ஓட்டுவதையும் நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் பழுதடைந்து நிற்கும் ஒரு தொந்தரவான கார் என்றால், நீங்கள் கார் மீது அதிகமான கவனம் செலுத்தவேண்டும். நீங்கள் எப்போதும் பழுதடையும் காரணத்தால், அந்தவிதமாக கவனம் செலுத்துவதைத்தான் நீங்கள் விரும்புகிறீர்களா?
ஒருமுறை பத்திரிக்கையாளர் ஒருவர் என்னிடம் கேட்டார், “சத்குரு, நீங்கள் மறைந்தபிறகு, எப்படி நினைவுகொள்ளப்படுவதை விரும்புவீர்கள்?” என் புறப்படலுக்காக அவர்கள் திட்டமிடுகிறார்கள் போலத் தோன்றுகிறது. நான் அவர்களுக்கு சிறிது ஏமாற்றத்தை அளிக்கிறேன். நான் பதிலளித்தேன், “நான் நினைவுகொள்ளப்படுவதை விரும்பவில்லை.” நான் செய்துகொண்டிருப்பதில் வெற்றியடைந்திருந்தால், என்னைப்பற்றி மக்கள் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும். அதுதான் நான் நன்றாக செயல்பட்டுள்ளேன் என்பதற்கான அர்த்தமாக இருக்கும். “ஓ இல்லை, சத்குரு இங்கு இல்லையே, நான் என்ன செய்வது?” என்றால், அப்போது நாம் நன்றாக செயல்பட்டிருக்கவில்லை என்பது தெளிவு.
உங்களது இருப்பு எப்படி இருக்கவேண்டும் என்றால், அனைவரும் அதிலிருந்து பலனடைய வேண்டும், ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ஒருவரும் கவனிக்கக்கூட செய்யக்கூடாது. அப்போதுதான் நீங்கள் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறீர்கள்.
இந்த நிலையை அடைவதற்கு, ஒவ்வொருவரும் சிறிதளவு செயல்படவேண்டும். பலரும் தங்களது கல்வியை முடித்துவிட்டால், கற்றல் செயல்முறை முடிந்துபோனதாக நினைப்பது துரதிருஷ்டவசமானது. அதற்குப் பிறகு அவர்கள் நாளுக்கு நாள் ஊமையாகிக்கொண்டே செல்கின்றனர். அது வாழ்வின் இயல்பு அல்ல. உங்களையே நீங்கள் மேன்மேலும் உயர்த்திக்கொள்ளவில்லை என்றால், வாழ்க்கைக்கு ஒரு மேம்பட்ட செயல்நிலை தேவைப்படும்போது, நீங்கள் போராடுவீர்கள்.
ஒரு அலுவலகத்தில் ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் நிர்வகித்துக்கொண்டிருந்த ஒரு எழுத்தரை, கற்பனை செய்துகொள்ளுங்கள். அவருக்கு ஒரு மேலாளராக வேண்டும் என்று எப்போதும் விருப்பம். ஒருநாள் அவர் பதவி உயர்வு அடைந்துவிட்டார். ஒரு மேலாளராக இருப்பது என்றால், பத்து மடங்கு பொறுப்பேற்றல் என்பது அர்த்தம். ஆரம்பத்தில், அவர் தன்மீதான நம்பிக்கையில் இறுமாந்திருக்கலாம், ஆனால் விரைவில் அவர் அழுத்தம், பதற்றம், மற்றும் இறுக்கம் நிரம்பியவராக இருக்கிறார், ஏன்? ஏனென்றால், அவர் தன்னையே மேம்படுத்திக்கொள்ளாமல், அவரது செயல்பாடுகளை அதிகரித்தார் – இப்போது அவர் துன்பப்படுகிறார்.
உங்களை நீங்களே இடைவிடாமல் உயர்த்திக்கொண்டால், உலகம் பல வாய்ப்புகளை உங்களுக்கு வழங்கும். திறனுடன் இருக்கும் நீங்கள் செயல்படுவதற்கு தேடிச்செல்லவேண்டிய தேவையில்லை; மக்கள் உங்களிடம் வருவார்கள். உங்கள் செயல்பாடுகளையும், சுற்றுப்புறங்களையும் உயர்த்த முயற்சிப்பதற்கு பதில், உங்களையே உயர்த்திக்கொள்ளுங்கள். நீங்கள் கணிசமாக உங்களை உயர்த்திக்கொண்டால், நீங்கள் செய்யும் அனைத்தும் இயற்கையாகவே மேம்படுத்தப்படும்.
ஒருமுறை நான் சிங்கப்பூர் F1 கார் பந்தயங்களுக்கு சென்றிருந்தேன். பந்தயங்கள் முடிவுற்றதும், நான் ஃபெராரி நிறுத்துமிடத்தில் இருந்தபோது, ஒருவர் அவரது ஸ்போர்ட்ஸ் செடான் ஐ கார் பந்தயப் பாதையில் ஓட்டுவதற்கு எனக்கு வழங்கினார். நான் அவர் வழங்கியதை ஏற்றுக்கொண்டேன், ஆனால் ஒன்றரை லேப் வரை அதை சிரமப்பட்டு ஓட்டியபிறகு, கார் மிகவும் சூடாகியதால், நாங்கள் நிறுத்தவேண்டி வந்தது.
ஃபெராரி குழுவினர், நான் ஓட்டுவதைப் பார்த்துவிட்டு, இத்தாலியில் நடைபெற்ற ஃபெராரி கேவல்கேட் ஒன்றில் பங்கேற்க அழைத்தனர். ஒரு கார் தொழிற்சாலையின் ஃபெராரி காரை எனக்கு அவர்கள் ஐந்து நாட்களுக்கு வழங்கினர். நெடுஞ்சாலையில், சராசரியாக 300 கிமீ வேகத்தில், கார் அதிகபட்சமாக மணிக்கு 345 கிமீ வேகத்தை எட்டியது. மலைப் பாதைகளில், மணிக்கு 200 முதல் 220 கிமீ வேகத்தை எட்டிய நிலையில், கார் முழுமையான கட்டுப்பாட்டில், ஆச்சரியகரமான ஆற்றலுடன் இருந்தது.
இது, பல பத்தாண்டுகளுக்கு முந்தைய சில சம்பவங்களை எனக்கு நினைவூட்டியது. அப்போதெல்லாம் மலைகளில் என் மோட்டார் சைக்கிளை ஓட்டிய தருணங்களில், அதிக வேகங்களில் நான் கியர் மாற்றியபோது, கியர்பெட்டி முற்றிலுமாக உடைந்துபோனது. மாறாக, இந்த ஃபெராரியில், இறக்கங்களில் மணிக்கு 200கிமீ வேகத்துக்கும் அதிகமாக என்னால் ஓட்டமுடிந்ததுடன், இரண்டாவது கியருக்கு சுமூகமாக மாற்ற முடிந்தது.
இந்த அனுபவத்துக்குப் பிறகு, ஃபெராரி தொழில்நுட்ப நிர்வாகிகளிடம் நான் கூறினேன், "இது முற்றிலும் அற்புதமானது. என் வாழ்க்கையில் நான் இந்த மாதிரி ஒரு காரை ஒருபோதும் ஓட்டியதில்லை." இதுபோலத்தான், இயந்திரத்தை மேம்படுத்தாமல், உங்கள் செயல்பாட்டை நீங்கள் உயர்த்த முயற்சித்தால், ஏதோ ஒன்று உடைந்துவிடும். இதைத்தான் உலகத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள் – பலரும் அழுத்தமாக அல்லது சோர்வுற்றதாக உணர்கின்றனர். ஏனென்றால் அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ளாமல், அவர்களது செயல்பாடுகளை அதிகரித்துள்ளனர். உங்கள் அலுவலகம் செல்வதற்கு மட்டும் உகந்த காரான மாருதியை, எடுத்துக்கொண்டு Formula 1 பாதையில் ஓட்டுவதற்கு முற்சிப்பதைப் போன்றது இது. அதற்காக இது உருவாக்கப்படவில்லை.
எப்போதும் முடிந்த அளவுக்கு விரைவாக உங்களையே மேம்படுத்திக்கொள்வது மிக முக்கியமான விஷயம். ஏனென்றால், அது இல்லாவிட்டால் உங்களை வெற்றி வந்தடைந்தாலும் நீங்கள் துன்பப்படுவீர்கள். இதன் காரணமாகவே பெரும்பாலான வெற்றிகரமான மக்கள் துன்பம் கொள்கின்றனர். இதனால்தான், உங்களை மேம்படுத்திக்கொண்டே இருப்பது மிக முக்கியமானது.