வாழ்க்கையின் சூட்சுமங்கள்

கர்மச் சுமையை இறக்கிவைத்தல்: குருவின் கருணையும், பக்தியும் எப்படி உங்களை விடுவிக்கிறது

உங்களது தோல் மீது பூசிய ஒரு பசையுடன் வாழ்க்கையை நகர்த்திச் செல்வதாக கற்பனை செய்யுங்கள். ஒவ்வொரு தொடுதலும், ஒவ்வொரு தொடர்பும், கடக்கும் ஒவ்வொரு கணமும், நெருக்கமும் இறுக்கமுமாக ஒட்டிக்கொண்டு, உங்களை அறியாமலேயே நீங்கள் தூக்கிச் சுமக்கும் ஒரு கனமான சுமையை உருவாக்குகிறது. இந்த ஒட்டுகின்ற சக்தி வெறுமனே ஒரு உருவகம் அல்ல; என்றென்றும் நிறைந்திருக்கும் அருளை மறைத்துக்கொண்டு, உங்களைப் பிணைத்திருக்கும் கர்மப்பசை அது. ஆற்றல் வாய்ந்த நான்கு கரைப்பான்களுள் ஒன்றைக்கொண்டு, இந்த கண்ணுக்குத் தெரியாத பசையைக் கரைப்பதற்கான பாதையை சத்குரு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். கர்மா உதிர்ந்துபோய், ஒரு சுமையற்ற வாழ்வின் முழுமையான ஆனந்தத்துக்கு வழிகாட்டும், விடுதலையின் அசாதாரணமான செயல்முறைக்குள் அடியெடுத்து வைத்திடுங்கள்.

கேள்வி: சத்குரு, குருவின் அருள் எங்களுக்கு இருப்பதை எப்படி நாங்கள் அறிவது?

கண்களுக்குப் புலப்படாத தெய்வீகத்தின் கரங்கள்

சத்குரு: அது ஒரு சிறு கேள்வியல்ல. பல உணவகங்களின் வரவேற்பறைகளில், பின்னணியில் மெல்லிய இசை தொடர்ந்து ஒலிப்பதை நீங்கள் கவனித்ததுண்டா? சிறிது நேரத்திற்குப் பிறகு, அது உங்களது உரையாடலில் குறுக்கீடு செய்தால் தவிர, நீங்கள் அதைக் கவனிப்பதில்லை. அதைப்போலவே, மாறாமல் இருந்துகொண்டிருக்கும் எதையும் நீங்கள் தவறவே முற்படுகிறீர்கள். தெய்வீகத்தின் கரம் உங்கள் மீது இடையறாமல் படிந்திருப்பதுதான் நீங்கள் அதனை அறியாதிருப்பதற்கான காரணம். பொதுவாகவே, உங்களது சுவாசம் நிகழ்ந்துகொண்டிருப்பதுகூட உங்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அது ஒரு நிமிடம் நிறுத்தப்பட்டால், நீங்கள் நிச்சயமாக கவனிப்பீர்கள். அது எப்போதும் நிகழ்ந்துகொண்டே இருப்பதால், அது குறித்து நீங்கள் விழிப்புணர்வில்லாமல் இருக்கிறீர்கள்.

அருள் என்பது இருப்பதும், பிறகு இல்லாதிருப்பதும் அல்ல - அது எப்போதுமே இருப்பதுதான்.

எல்லா நேரமும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஒன்றைப்பற்றி விழிப்புணர்வில்லாமல் இருப்பதில் என்ன பிரச்சனை? நீங்கள் உயிரோட்டத்துடன் இருப்பதே உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் வாழ்க்கையையே தவறவிட்டுவிடுவீர்கள். அருளில் திளைத்திருக்கும் ஆனந்தத்தை நீங்கள் முற்றிலுமாகத் தவறவிடுவீர்கள். அருள் என்பது இருப்பதும், பிறகு இல்லாதிருப்பதும் அல்ல - அது எப்போதுமே இருப்பதுதான். அருளில் வாழ்ந்திருக்கும் ஆனந்தத்தை அறிந்துகொள்வதற்கு, முதலில் நீங்கள் அதைக்குறித்து விழிப்புணர்வு அடையவேண்டும்.

என்றென்றும் நிறைந்திருக்கும் அருள்

நான் இதனைப் பல வழிகளிலும் கூறியுள்ளேன், ஆனால் உங்களில் பெரும்பாலோர் அதனை அலட்சியம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளீர்கள்: “ஒரு கணமேனும் நீங்கள் என்னுடன் அமர்ந்துவிட்டீர்கள் என்றால், அதன்பிறகு உங்கள் வாழ்க்கையில் தனியுரிமை (privacy) என்ற ஒரு விஷயமே இருப்பதில்லை.” என்னுடன் நீங்கள் அமர்ந்துவிட்டீர்கள் என்றால், குறிப்பாக உங்களுக்கு என்னால் தீட்சை வழங்கப்பட்டால், உங்களுக்கான அருள் எல்லா நேரமும் முழு அளவில் இருக்கிறது. அது என்னவென்றால், அருள் என்றால் அவர்களது திட்டங்களை நிறைவேற்றுவதற்கானது மட்டும்தான் என்று பெரும்பாலான மக்களும் எதிர்பார்க்கின்றனர். இந்த எதிர்பார்ப்பு கோவில்கள், தேவாலயங்கள் அல்லது மசூதிகளுக்குச் சென்று, கடவுள் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கூறுகின்ற, அந்தப் பழைய பழக்கத்திலிருந்து வருகிறது.

அருள் என்பது உங்களது திட்டத்தை நிறைவேற்றுவதைக் குறித்ததல்ல. அது உங்களுக்கான வாழ்வின் அல்லது உயிரின் திட்டத்தை நிறைவு செய்வதைக் குறித்தது. உங்களது திட்டங்கள் அடிக்கடி மாறுகின்றது, ஆனால் ஒரு குருவின் அருள் என்பது, உயிர் அதன் முழுமையை அடைய உதவுவதற்காக வடிவமைக்கப்பட்டது, உங்களது உடனடி ஆசைகளைத் திருப்திசெய்வதற்காக அல்ல. அருள் உங்களுடன் இருக்கிறதா, இல்லையா என்று எப்போதும் கேள்வி கேட்காதீர்கள். நீடித்த உறுதுணையுடன், அதை என்னால் நிகழச்செய்ய முடியாதென்றால், உங்களுடன் இருந்துகொண்டு என் வாழ்வை வீணடிக்கமாட்டேன்.

அருள் என்பது உங்களது திட்டத்தை நிறைவேற்றுவதைக் குறித்ததல்ல. அது உங்களுக்கான வாழ்வின் அல்லது உயிரின் திட்டத்தை நிறைவு செய்வதைக் குறித்தது.

ஒரு சத்குருவுக்கு, நீங்கள் ஒரு செயல்திட்டம் (புராஜெக்ட்) போன்று இருக்கிறீர்கள். என்னைச் சுற்றிலும் என்ன நிகழ்ந்தாலும் நான் அமைதியாக இருக்கிறேன், ஏனென்றால் நான் மேற்கொண்டுள்ள எல்லா செயல்திட்டங்களிலும் நான் வெற்றிகரமாக இருக்கிறேன். தோல்வி எவரையும் வருந்தச்செய்யும். நான் அடிப்படையில் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதில் வெற்றிகரமாக இருப்பதால், நான் அமைதியாக இருக்கிறேன். நீங்கள் உங்களையே ஒரு அர்ப்பணிப்பாக்கும்போது, நீங்கள் அருள் குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருப்பீர்கள்.

விடுதலையின் நான்கு சக்திகள்

கேள்வி: குருவின் அருளும், சிவன் மீதான தீவிர பக்தியும் கர்மவினையைக் கரைக்கமுடியுமா?

சத்குரு: நீங்கள் பயன்படுத்தும் சொற்களைப் புரிந்துகொள்வோம்: குரு, அருள், பக்தி, மற்றும் சிவன். இவைகள் நான்கு “டைனமைட்கள்” – உங்களை வெடிக்கச் செய்வதற்கு அவைகளுள் ஒன்று மட்டும் போதுமானது. உங்களுக்கு பக்தி இருந்தால் அல்லது சிவன், குரு அல்லது அருளினால் தொடப்பட்டால் – இவற்றுள் ஏதோ ஒன்று போதும். ஆனால் அவற்றுக்கு இடையில் நீங்கள் மாறிக்கொண்டே இருப்பது பிரச்சனையாக இருக்கலாம்.

நான் இதை செய்தால், என்ன விளைவு இருக்கும்? இந்த விதமான கேள்விகள் ஒரு குறிப்பிட்ட மனோபாவத்தில் இருந்து வருகிறது. சிவனிடத்தில் பக்தி செலுத்துவது உங்களை விடுதலை செய்யுமா என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் ஆமாம் என்று கூறிவிட்டால், இன்றைக்கு வீட்டிற்குச் சென்று நீங்கள் ஒரு பக்தராக முயற்சி செய்யலாம். ஆனால், அதைச் செய்வது உண்மையில் சாத்தியம்தானா? பக்தி என்பது ஒரு பயிற்சியல்ல. உங்களைவிட ஏதோ ஒன்று மிகமிகப் பெரிது என்று அனுபவத்தின் வாயிலாக நீங்கள் தெளிவாக அங்கீகரிக்கும்போது, இயற்கையாகவே, நீங்கள் ஒரு பக்தராகிறீர்கள்.

உங்களுக்கு பக்தி இருந்தால் அல்லது சிவன், குரு அல்லது அருளினால் தொடப்பட்டால் – இவற்றுள் ஏதோ ஒன்று போதும்.

நான் மக்களிடம், குறிப்பாக ஈஷா யோக மையத்தில் இருப்பவர்களிடம், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு பக்தியுணர்வுடன் இருப்பதைப் பற்றி எப்போதும் நினைவூட்டுவதற்கு முயற்சி செய்து வந்துள்ளேன். நான் அவர்களுக்கு மிக நெருக்கமாக வண்டி ஓட்டிக்கொண்டிருந்தாலும், கார் நெருங்கி வருவதை அவர்கள் கேட்டாலும், சிலர் தொடர்ந்து நடப்பதுண்டு. பிறகு, யாராவது அவர்களுக்கு, “ஹே, சத்குரு இருக்கிறார்,” என்று கவனம் ஈர்த்தால், பிறகு சட்டென்று அவர்கள் பக்கவாட்டில் தாவி ஒதுங்கிநின்று, தலை வணங்கி நமஸ்கரிக்கின்றனர். இந்த மனப்பான்மை செயல்படப்போவதில்லை.

பக்தியின் ஒருமித்த பார்வை

இதனால்தான் நான் கூறினேன் – நீங்கள் சத்குரு, அல்லது சிவன், அல்லது வேறு யாரிடத்தில் பக்தியுடன் இருப்பதாக நினைத்தாலும் அது ஒரு பொருட்டில்லை – அதை எல்லாவற்றிலும் நீங்கள் காணவேண்டும். ஒவ்வொருவரையும் – ஆண், பெண், குழந்தை, பசு, மற்றும் உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் - சத்குருவாக நீங்கள் பார்க்கவேண்டும். ஒவ்வொன்றையும் நீங்கள் அதே பக்தியுடன் பார்த்தால், அப்போது நீங்கள் ஒரு உண்மையான பக்தர். இது செயல்படுமா? நிச்சயமாக செயல்படும்.

ஒரு மனிதர் கண் வைத்தியரிடம் சென்றார். அவரது கண்களைப் பரிசோதித்த மருத்துவர் ஒரு பரிந்துரை எழுதினார். அந்த மனிதர் கேட்டார், “டாக்டர், எனக்குக் கண்ணாடி கிடைத்துவிட்டால், என்னால் படிக்கமுடியுமா?” மருத்துவர் பதிலளித்தார், “நிச்சயமாக, உங்களால் படிக்கமுடியும்.” “அது உண்மையிலேயே மகத்தானது. என் வாழ்க்கை முழுவதும் என்னால் படிக்கவே முடியவில்லை”, என்றார் அந்த மனிதர்.

ஒவ்வொன்றையும் நீங்கள் ஒரே பக்தியுடன் பார்த்தால், அப்போது நீங்கள் ஒரு உண்மையான பக்தர்.

இதைப்போன்றுதான் உங்கள் பக்தி இருக்கிறது. மிகப் பெருவாரியான மக்கள் தங்களது கடவுளின் பெயரை முழுமையான பக்தியுடன் உச்சரிப்பதில்லை. சில நேரங்களில் எரிச்சலில், கோபத்தில், வெறுப்பில், அல்லது மனக்கசப்பில் அவர்கள் உச்சரிக்கலாம்; அது ஒரு போர் முழக்கமாக அல்லது ஏதோ ஒன்றைப் பெறுவதற்கான ஒரு மந்திரமாகக்கூட பயன்படுத்தப்படுகிறது,

கர்மவினையின் குறும்புத்தனமான வளையம்

நீங்கள் இங்கு அமர்ந்து, சுவாசிக்கையில், இதுவே ஒரு கர்மாதான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இங்கு வாழும்போது, எல்லா நேரமும் கர்மவினையைக் கரைக்கிறீர்கள் மற்றும் புதிய கர்மவினையைச் சேகரிக்கிறீர்கள். உங்களுடைய எல்லா கர்மாவிலிருந்தும் விடுபட விரும்பும் நிலைக்கு வருவதேகூட ஒரு பெரிய கர்மாதான். நீங்கள் ஏதோ ஒருவிதமான கைவிடப்பட்ட உணர்வுக்கு வரவேண்டும், ஏனென்றால் மறுபடி மறுபடி உங்கள் கர்மாவிலிருந்து நீங்கள் விடுபடப்போவதில்லை. அது சுவாசத்தைப் போன்றது – நீங்கள் உள்மூச்சு எடுத்தால், வெளிமூச்சு விடவேண்டும்; நீங்கள் வெளிமூச்சு விட்டால், உள்மூச்சு எடுக்கவேண்டும்.

நீங்கள் இங்கு வாழும்போது, எல்லா நேரமும் கர்மவினையைக் கரைக்கிறீர்கள் மற்றும் புதிய கர்மவினையைச் சேகரிக்கிறீர்கள்.

ஒருமுறை இது நிகழ்ந்தது. சங்கரன்பிள்ளை முதல்முறையாக கப்பலில் சென்றார். அது ஒரு பெரிய கப்பலாக இருந்தாலும், கடலில் இருப்பது குறித்து அவர் சற்று பதற்றமாக இருந்தார். அவர் கேப்டனிடம் சென்று கேட்டார், “இந்த அளவுக்குப் பெரிய கப்பல், எத்தனை முறை மூழ்கும்?” கேப்டன் அவரைப் பார்த்துவிட்டு, பதிலளித்தார், “இதுவா? ஒருமுறைதான்.”

உங்கள் உடலும், மனரீதியான செயல்முறையும்தான் கர்மவினையை உருவாக்கும் “இயந்திரம்”. அதனுடன் உங்களையே நீங்கள் விலக்கிவைத்துவிட்டால், அது முடிவடைகிறது. அப்போதும் அது எல்லாவற்றையும் உங்கள் மீது வீசும், ஆனால் அவைகள் உங்களுடன் ஒட்டாது. எதையும் தொடாமல் நீங்கள் வாழமுடியாது. நீங்கள் ஈடுபாட்டுடன் அதை நாடவில்லை என்றாலும், அப்போதும் உலகம் உங்களது உணர்தல்கள் வழியாக உங்களைத் தொடுகிறது.

அருள், குரு, மற்றும் மாபெரும் கரைத்தல்

தினமும் ஒரு பத்து லட்சம் விஷயங்களைத் தொடாமல் வாழ்க்கை நிகழமுடியாது. தலை முதல் பாதம் வரை நீங்கள் பசைகொண்டு போர்த்தப்படுவதாக கற்பனை செய்துகொண்டால், ஒரு நாளைக்குள், நீங்கள் ஒரு பெரிய குளறுபடியாக மாறிவிடுவீர்கள், ஏனென்றால் உங்களுடன் ஒவ்வொரு விஷயமும் ஒட்டிக்கொள்ளும். இதுதான் கர்மா: உலகத்தில் நீங்கள் தொடும் மற்றும் தொடர்புகொள்ளும் அனைத்தும் உங்களுடன் ஒட்டிக்கொள்ளும். சிறிது காலத்துக்குப் பிறகு, மிக அதிகமான விஷயங்கள் உங்களுடன் ஒட்டிக்கொள்ளும்போது, மெல்ல உங்கள் முகம் நீண்டு தொங்கிவிடும். உங்களை அறியாமலேயே, நீங்கள் மரணத்துக்கான இணக்க நிலையில் இருப்பீர்கள். நீங்கள் அடையாளப்படும் அனைத்தும் உங்களுடன் ஒட்டிக்கொள்கிறது, ஆகவே நீங்கள் இந்தப் பெரும் பாரத்தைச் சுமந்துகொண்டே வாழ்கிறீர்கள்.

உங்களிடமிருந்து கர்மவினையை இறக்கிவைப்பதில் நமக்கு ஆர்வமில்லை. பசையை நாம் கரைத்துவிட்டாலே, கர்மா வீழ்ந்துபோகும்.

நீங்கள் வேலைக்குச் சென்று, உங்களது வேலை குறித்து மிகவும் பெருமைகொள்வதாக வைத்துக்கொள்வோம். அப்போது நீங்கள் அங்கே அமர்ந்திருக்கையில், அந்த நாற்காலி, மேசை, கணினி – ஒவ்வொன்றும் உங்களுடன் ஒட்டிக்கொள்கிறது. சிறிது காலத்திற்குள் நீங்கள் ஒரு பெரும் மலையாகியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் உங்களுக்குத் தற்போது நிகழ்ந்துள்ளது. கர்மவினையின் மலையை விலக்குவது அல்ல, ஆனால் பக்தி, அருள், குரு, மற்றும் சிவனை கர்மவினைக்காக அல்லாமல், பசைக்கான கரைப்பான்களாகப் பயன்படுத்துவது நமது அணுகுமுறை.

உங்களிடமிருந்து கர்மவினையை இறக்கிவைப்பதில் நமக்கு ஆர்வமில்லை. பசையை நாம் கரைத்துவிட்டாலே, கர்மா வீழ்ந்துபோகும். ஆனால் குறிப்பிட்ட விஷயங்கள் ஒட்டியிருக்கவும், மற்ற விஷயங்கள் விலகவும் நீங்கள் விரும்பினால், பசை மீண்டும் ஒட்டிக்கொள்ளும். அது பாகுபாடற்றது – எல்லாமே ஒட்டிக்கொள்கிறது. ஆகவே, நாம் பசையை மட்டும் கரைக்கவேண்டியுள்ளது. கர்மவினையை நாம் கரைக்கவேண்டியது கிடையாது. நீங்கள் பசையைக் கரைத்துவிட்டால், கர்மவினை முடிவடையும். அடுத்த முறை நீங்கள் அலுவலகத்தில் அமரும்போது, நாற்காலி மீண்டும் அதன் இடத்தில் நின்றிருக்கும்.

உங்கள் அலுவலக நாற்காலி மற்றும் கணினி உங்களுடன் ஒட்டியிருக்க, அதனுடன் நீங்கள் நடப்பதை கற்பனை செய்துபாருங்கள். அதுதான் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது – மக்கள் தங்களது வேலை, தங்களது குடும்பம், தங்களது உலகம், மற்றும் தங்களது வளங்களை அவர்களது தலைகள் மீது சுமந்துகொண்டுள்ளனர். அது அசிங்கம், ஆனால் சமூகத்தில், தங்களது தலைகள் மீது பலவற்றையும் சுமந்து கொண்டிருப்பவர்கள்தான் வெற்றியாளர்களாகக் கருதப்படுகின்றனர். உங்கள் தலை மீது ஒரு தங்க மலையை நீங்கள் சுமந்தால், “என்ன ஒரு வளம் கொழிக்கும் மனிதர் இவர்!” என்று மக்கள் கூறலாம், ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, அது எப்படிப்பட்ட ஒரு சுமை என்பதை நீங்களே உணர்ந்துகொள்வீர்கள்.

தூய்மையான இருப்பின் ஆற்றல்

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், இப்போதுதான் நீங்கள் பிறந்ததைப்போல கண்களை மூடியவாறு, பெரியவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் உடலுடன் வெறுமனே அமர்வது, ஆனால் எதனுடனும் ஒட்டாமல் இருப்பது. உங்களால் வெறுமனே அமர்ந்திருக்க முடிந்தால், அதுதான் தேவை.

சமீபத்தில் இதற்காகத்தான் மக்கள் என்னைப் பிடித்துக்கொண்டனர்: “சத்குரு, ஒரு கணம் உங்களுடன் நாங்கள் அமர்ந்தால், எங்களை நீங்கள் விடுவித்துவிடுவதாக நீங்கள் கூறினீர்கள். நாங்கள் உங்களுடன் அமர்ந்தோம். ஆனால் இப்போது உங்கள் வார்த்தையிலிருந்து நீங்கள் பின்வாங்குகிறீர்கள்.” நான் அவர்களிடம் கூறினேன், “‘என்னுடன் உங்களால் வெறுமனே அமரமுடிந்தால்…’ என்று நான் கூறினேன் – ‘வெறுமனே’ என்ற வார்த்தையை நீங்கள் மறந்துவிட்டீர்கள். என்னுடன் அமர்ந்திருப்பது மட்டும் போதாது.”

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், இப்போதுதான் நீங்கள் பிறந்ததைப்போல கண்களை மூடியவாறு, பெரியவர்களின் புத்திசாலித்தனம் மற்றும் உடலுடன் வெறுமனே அமர்வது, ஆனால் எதனுடனும் ஒட்டாமல் இருப்பது.

ஒன்று, நீங்கள் அதிக விழிப்பானவராக ஆகவேண்டும் அல்லது முற்றிலும் கைவிட்ட நிலையில் இருக்கவேண்டும். விழிப்புடன் இருப்பதை சிறிது சிறிதாக அணுகமுடியும். இதனால் நீங்கள் அதிக விழிப்புணர்வு அடைகிறீர்கள் என்பது இல்லை; மாறாக, நீங்கள் அதிக விழிப்புடன் இருக்கிறீர்கள், உங்களது இருப்பின் இயல்பே விழிப்புணர்வு கொள்வது என்பதை ஒருநாள் உணர்வதற்கான போதிய விழிப்புடன் இருக்கிறீர்கள். மற்றொரு வழி, முற்றிலும் கைவிட்ட நிலைக்கு வந்துவிடுவது.

பக்தியும், சிவனும் முழுமையான கைவிட்ட நிலை குறித்தது. இதனை சிறிது சிறிதாக செய்யமுடியாது – இது ஒரேயடியான பாய்ச்சல்தான். அப்படிப்பட்ட ஒரு பாய்ச்சலை மேற்கொள்வதற்கு, ஒன்று நீங்கள் பித்துக்கொண்டவராக இருக்கவேண்டும் அல்லது முற்றிலும் பயமில்லாதவராக இருக்கவேண்டும். யாருமே முற்றிலும் பயமில்லாதவர் இல்லை என்பதால், நீங்கள் பித்துக்கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால், நீங்கள் கர்ம சுழற்சியிலிருந்து வெளியில் வரமாட்டீர்கள்.

எவ்வளவு காலம்தான் நீங்கள் கடந்துபோனதையே மறுசுழற்சி செய்துகொண்டிருப்பீர்கள்? இது நிகழ்வதற்கு, உங்களது செயல்பாடோ அல்லது மற்றவர்களோ அல்லது உலகமோ காரணம் அல்ல; இது நிகழ்வது ஏனென்றால் நீங்கள் கர்மவினைப் பசையால் போர்த்தப்பட்டிருக்கிறீர்கள் – நீங்கள் தொடுவது அனைத்தும் உங்களுடன் ஒட்டிக்கொள்கிறது.

இந்த நான்கு கரைப்பான்கள் – பக்தி, அருள், குரு அல்லது சிவன் – இவற்றுள் ஏதோ ஒன்றில் உங்களையே மூழ்கடித்துக்கொண்டால் – அது பசையைக் கரைத்துவிடும். அதற்குப் பிறகு, கர்மா என்ற ஒரு விஷயமே இல்லை.