கலாச்சாரம் & ஞானம்

துன்பத்தை விடுத்து விவேகத்தைத் தேர்வுசெய்தல்: ராமன் காலங்களைக் கடந்து ஊக்கமளிப்பது எப்படி

அயோத்தியின் ராமர் கோவில் பிரதிஷ்டை, எங்கெங்கிலுமிருந்தும் பக்தர்களின் இதயங்களில் தீபமேற்றும் இத்தருணத்தில், ராமனின் குறிப்பிடத்தக்க வாழ்வின் மீது சத்குரு நம் கவனத்தைத் திருப்புகிறார். இடைவிடாத துன்பங்கள் மற்றும் இருமை நிலைகளுக்கு மத்தியில் ராமனின் மாண்புமிகுந்த சமநிலை மற்றும் விவேகத்தை உணர்த்துகிறார். ஊக்கம் பெறுவதற்கு மேற்கொண்டு வாசியுங்கள். நமது உலகத்தை தெளிந்த நோக்கில் புரிந்துணரவும், பகிர்ந்து வாழும் நமது இருப்பை மேம்படுத்தவும் இந்தக் கதை நம்மை அழைக்கிறது.

சத்குரு: மரியாத புருஷோத்தமனான ராமன், இன்றைக்கு இந்தியாவில், பல வழிகளிலும் மிகப் பிரபலமானவராக இருக்கிறார். இங்கே எண்ணற்ற முனிவர்களும், துறவிகளும், மற்றும் யோகிகளும் இருந்துள்ளபோது, ராமன் மீது ஏன் அவ்வளவு அதிகமான கவனம் ஈர்க்கப்படுகிறது? மற்ற பலரும் ஏறக்குறைய தனித்து வாழ்ந்தனர், ஆனால் அவர்கள் முழுமையான தீர்மானத்தில் இருந்தனர். மாறாக, ராமனின் முக்கியத்துவம் இது: அவரது வாழ்க்கை ஒவ்வொரு விதமான பிரச்சனையையும், உள்ளிட்ட ஒரு தொடர் பேரழிவு. அதனால்தான் மக்கள் அவரை “மரியாதபுருஷோத்தமன்” - ஒரு மேம்பட்ட மனிதர் என்று குறிப்பிடுகின்றனர். இந்த நாகரிகம், சொர்க்கத்திலிருந்து கீழிறங்கி வந்த கடவுள்களைப் பற்றி இல்லை. மனிதர்கள் இறைநிலைக்கு உயரக்கூடிய ஒரு நாகரிகம் இது.

ராமனின் 19வது வயதில், அரசராக முடிசூட்டப்பட்டான். ஒரு வருடத்துக்குள்ளாகவே, அவன் ராஜாங்கம் பறிக்கப்பட்டதுடன், அவனது மனைவியுடன் காட்டுக்கு அனுப்பப்பட்டான். அவர்களுக்கு அது ஒரு மிகக் கடினமான காலகட்டமாக இருக்கப்போவதால், அவனது சகோதரனும் உடன் செல்வதற்கு தன்னார்வத்தில் முன்வந்தான். காட்டுக்கு அனுப்பப்பட்டது போதாது என்பதுபோல், அவனுடைய மனைவி கவர்ந்து செல்லப்பட்டாள். ஒரு அரசன் என்ற நிலையில், அவன் மற்றொரு மனைவியை வரித்திருக்கலாம், ஆனால் அவன் அப்படிப்பட்டவன் அல்ல. அவளைத் தேடிக்கொண்டு 3000 கிலோமீட்டர்கள் நடந்து செல்லுமளவுக்கு, அவன் தன் மனைவியை நேசித்தான்.

இந்த நாகரிகம், சொர்க்கத்திலிருந்து கீழிறங்கி வந்த கடவுள்களைப் பற்றி இல்லை. மனிதர்கள் இறைநிலைக்கு உயரக்கூடிய ஒரு நாகரிகம் இது.

அந்தக் காலங்களில், கூகுள் வரைபடங்கள் இல்லை – ஸ்ரீலங்கா எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. ஆகவே ராமன், அது எங்கே இருக்கிறது என்று மக்களிடம் விசாரித்தவாறு, தெற்குப் பக்கமாக நடந்தே செல்லவேண்டியிருந்தது. அதற்குப் பிறகு, மனைவியை மீட்டெடுக்க வேறு வழியே இல்லாமல், போரிடவேண்டியிருந்தது. அவனிடம் படைபலம் ஏதும் இல்லை, ஒரு சகோதரன் மட்டும்தான் இருந்தான். தெற்கில் அவன் ஒரு படை திரட்டிக்கொண்டு, போர் தொடுக்கச் சென்றான். ஒரு அழகான நகரத்தை எரித்து, மனைவியைக் கவர்ந்து சென்றவனைக் கொன்று, தனது கர்ப்பவதியான மனைவியைத் திரும்பப் பெற்றான்.

ஒரு அரசனுக்கு, அவனது மனைவி கருவுறுவது மிகவும் முக்கியமானது. அது தந்தைமையின் உணர்ச்சிகளை குறித்தது மட்டும் அல்ல; அது தேசத்துக்கான வழித்தோன்றல் குறித்தது. இருப்பினும், சில சமூக சூழ்நிலைகளினால், மீண்டும் அவனது மனைவியை அவன் காட்டுக்கு அனுப்பவேண்டியிருந்தது, மற்றும் அங்கே அவள் இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். அவர்கள் யாரென்பதை அறியாத நிலையில், ராமன் தனது சொந்த மகன்களை எதிர்த்துப் போர் புரிந்தான். ஏறக்குறைய அவன் தனது சொந்தக் குழந்தைகளையே கொன்றுவிடுவதற்கு இருந்தான். உங்கள் உடலியல் வாழ்க்கையில், அறிந்தோ அறியாமலோ உங்கள் சொந்தக் குழந்தையைக் கொல்லும் செயல் என்பது நீங்கள் செய்யக்கூடிய மிகப் பயங்கரமான விஷயங்களுள் ஒன்றாக உள்ளது. அனைத்துக்கும் மேலாக, ராமன், தான் நேசித்த மனைவியை மீண்டும் சந்திக்கவேயில்லை; அவள் காட்டிலேயே இறந்துபோனாள்.

இந்த சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்று நிகழ்ந்தாலே, பெரும்பாலான மனிதர்கள் நிலைகுலைந்து போய்விடுவார்கள். ஆனால் இந்தத் தொடர் பேரழிவுகளிலும், ராமன் ஒருபோதும் விரக்தியடையவில்லை. கோபம், படபடப்பு அல்லது வெறுப்பு கொள்ளவில்லை. அவர் எப்போதும் சமநிலையாக இருந்தார். ராமன் எதிர்கொண்ட தனிப்பட்ட வலிகள் என்னவாக இருந்தாலும், அவர் உலகத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தார்; அதிகமாகவும் ஏதும் இல்லை, குறைவாகவும் ஏதும் இல்லை.

ராமன் தன் மனைவியைக் கடத்திய எதிரியைக் கொன்றதற்குப் பிறகு, ஸ்ரீலங்காவில் இருந்து திரும்பி வந்து, பாபவிமோசனம் தேடி இமயமலையில் தவம் செய்தான். இதனால் வெகுண்ட அவனது சகோதரன், “என்ன? அந்த மனிதனைக் கொன்றதற்காக தவம் செய்வதா?” ராமன் கூறினான், “அவனிடத்தில் பல தீய குணங்கள் இருந்தன. ஆனால் என்னைப்போல், அவன் சிவனின் பெரும்பக்தனாக இருந்தான்.” மேலும் தொடர்ந்த ராமன், “அதுமட்டுமல்லாமல் – அவன் மிகுந்த அறிவாளியானவன், மாமேதை, மற்றும் மகத்தான ஆட்சியாளன். அந்த நாட்களின் மாபெரும் நகரங்களுள் ஒன்றை அவன் கட்டமைத்தான்.”

இந்தத் தொடர் பேரழிவுகளிலும், ராமன் ஒருபோதும் விரக்தியடையவில்லை. கோபம், படபடப்பு அல்லது வெறுப்பு கொள்ளவில்லை. அவர் எப்போதும் சமநிலையாக இருந்தார்.

ராவணன் கடுமையாகக் காயமடைந்திருந்தபோது, ராமன் தனது சகோதரனை அனுப்பி, ராவணனிடமிருந்து ஒரு நகரத்தின் ஆட்சியமைப்பையும், கட்டுமானத்தொழில் நுட்பத்தையும் பற்றி கற்றுக்கொண்டுவருமாறு கூறினான். ஏனென்றால் அவர்கள் அயோத்தியை மறுகட்டமைப்பு செய்ய விரும்பினர். அது ஒரு 6000ல் இருந்து 7000 ஆண்டுக்கால கனவு – இன்றைக்கு அது கட்டமைக்கப்படுகிறது. ராவணனிடம் சென்று, இந்த மாதிரி ஒரு நகரத்தை எப்படிக் கட்டமைத்து, ஆட்சி செய்வது என்று கற்றுவருவதற்கு லக்ஷ்மணனிடம் ராமன் கூறியபோது, “என்ன? அந்த இழிமகனிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டுமா?”

யார் நல்லவர் அல்லது தீயவர் என்பதைப் பற்றிய உங்களது தீர்ப்புகள் முக்கியமல்ல. யாரோ ஒருவர் மதிப்பு மிகுந்த விஷயத்தை அறிந்திருக்கிறார். இதுதான் இந்தக் கலாச்சாரத்தின் உருவகம். ஆகவே, லக்ஷ்மணன் யுத்தகளம் சென்று, அங்கே ராவணன் படுகாயமுற்று, கீழே விழுந்துகிடப்பதை, சற்று மகிழ்ச்சியுடன் பார்த்தவாறு நின்றான். லக்ஷ்மணன் ராவணனின் தலைமாட்டில் நின்றுகொண்டு, “ஏய், ஒரு நகரத்தின் ஆட்சியமைப்பு மற்றும் கட்டமைப்பு பற்றி என்னிடம் சிறிது கூறு”, என்று கேட்டான். ஆனால் ராவணன் தலையை வேறுபுறம் திருப்பிக்கொண்டான்.

லக்ஷ்மணன் ராமனிடம் சென்று, “அவன் என்னிடம் பேச மறுக்கிறான்”, என்று கூறினான். ராமன் அவனைப் பார்த்து, “நீ இங்கே இரு”, என்று கூறிவிட்டு, தானே ராவணனை சந்திக்கச் சென்றான். அங்கே சென்று ராவணனின் கால்மாட்டில் நின்று, அவனுக்குத் தலைவணங்கிவிட்டு, “நீ அறிந்திருக்கும் எல்லா கலைகளையும் நான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால் நீ இறந்துகொண்டிருக்கிறாய், நான் வாழ்ந்திருப்பேன் என்பதால், உன்னுடைய அறிவு அனைத்தும் மக்களுக்குக் கடத்தப்பட்டு, அதனால் அவர்கள் பலனடைய வேண்டும்”, என்று கூறினான். ஆகவே ராவணன், எப்படி நகரத்தைக் கட்டமைத்து நிர்வகிப்பது, எப்படி ஒரு ராஜாங்கத்தில் மக்கள் ஒருபோதும் பட்டினி கிடக்காமல் இருப்பதை உறுதிசெய்வது போன்ற மற்ற பல அம்சங்களையும் குறித்து ராமனிடம் எடுத்துரைத்தான்.

நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கே அற்புதமானதும் இருக்கும், அழுகிப்போனதும் இருக்கும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதுவே நீங்கள் யார் என்பதை நிர்ணயிக்கிறது.

ராவணனிடம் இருந்து கற்றுக்கொண்டவைகளுக்காக ராமன் நன்றியுடையவனாக இருந்ததுடன், அந்த மனிதனைக் கொன்றதற்காக ஒரு வருடம் தவம் மேற்கொண்டான். இதுதான் இன்றைய உலகத்தில் நமக்குத் தேவைப்படுகிறது. இது முழுமைவாதங்களாகிய “நீ தவறு – நான் சரி. நான் நல்லவன் – நீ தீயவன்” என்பதல்ல. இது முட்டாள்தனமான வாழ்க்கை முறை. அனைவரும் ஒரு கலவையான குணங்களைக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்குத் தெரிந்தால், நீங்கள் சிறந்த விஷயங்களைத் தேர்ந்தெடுக்கலாம். உங்களுக்குத் தெரியவில்லை என்றால், நீங்கள் எல்லா தீய விஷயங்களையும் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் ஒரு மாமரத்தை அணுகி, ஏதாவது ஒரு பழத்தை எதேச்சையாகப் பறித்து சாப்பிட்டாலும், நீங்கள் புழுக்களைச் சாப்பிடவும் நேரிடலாம்.

சிறந்த பழத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்று நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்; இல்லையென்றால், நீங்கள் எல்லா தவறான விஷயங்களையும் சாப்பிடுவீர்கள். இது வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்துக்கும் உண்மையானது. நீங்கள் எந்த இடத்திற்கு சென்றாலும், அங்கே அற்புதமானதும் இருக்கும், அழுகிப்போனதும் இருக்கும். நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ அதுவே நீங்கள் யார் என்பதை உருவாக்குகிறது. உங்களுடைய மற்றும் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரின் வாழ்வையும் மேம்படுத்துகிற எல்லா சரியான விஷயங்களையும் நீங்கள் தேர்ந்தெடுத்தால், அப்போது மக்கள் உங்களை “மரியாதபுருஷோத்தமன்” என்று அழைப்பார்கள்.

ஒரு மனிதரை, சரியான விஷயங்களைத் தேர்ந்தெடுக்க செய்வது எது? “சரியான” என்ற வார்த்தையைக்கூட நான் பயன்படுத்த விரும்பவில்லை. ஒரு மனிதரை, செயல்படாத விஷயங்களை விடுத்து செயல்படும் விஷயங்களைத் தேர்ந்தெடுக்க செய்வது எது? கண்ணோட்டத்தில் தெளிவு. எந்த ஒரு விஷயத்தையும், அதனை நீங்கள் பார்க்க விரும்புவதைப்போல் இல்லாமல், விஷயங்களை அவைகள் உள்ளபடியே உங்களால் பார்க்கமுடிய வேண்டும்.