சிறப்புக் கட்டுரை

சிவன் எனும் புதிர்: ஒன்றுமற்றதிலிருந்து உருவெடுத்த
எண்ணிலடங்கா வடிவங்கள்

இந்தக் கட்டுரையில், யோகப் பாரம்பரியத்துடன் நவீன அறிவியலையும், தன் உணர்தலையும் தங்குதடையில்லாமல் இணைத்து, சிவன் குறித்த பல தளங்களிலான கண்ணோட்டத்தை சத்குரு வழங்குகிறார். ஒரு நிலையில், சிவன் பரந்த அண்ட வெற்றிடத்தை ஒத்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கும் ஒன்றுமற்ற தன்மையாக கருதப்படுகிறார். மற்றொரு நிலையில், யோகப் பாரம்பரியத்தில் எண்ணற்ற கதைகள் மூலமாக விவரிக்கப்படும் புதிரான இருப்பாகிய சிவன், ஆதியோகியாக இருக்கிறார். பழமையான குறியீட்டுக் கலாச்சாரத்துடன், தற்கால நிகழ்வுகளை இணைத்தவாறு, மானசரோவர், கைலாஷ், மற்றும் மனிதகுலத் தோன்றலுக்கு நடுவே மறைபொருளான தொடர்புகள் குறித்த சத்குருவின் அனுபவங்களும், ஆழ்ந்த புரிதல்களும், மேலும் நமது ஆர்வத்தை ஆழப்படுத்துவதாக உள்ளது.

கேள்வி: சத்குரு, யோக அறிவியல் மற்றும் உங்களது புரிதலின்படி, சிவனின் உண்மையான தன்மை என்ன?

சிவனுடைய இயல்பின் புதிரான தன்மை

சத்குரு: “ஷிவா” என்று நாம் கூறும்போது, அங்கே இரண்டு அம்சங்கள் உள்ளன, ஒரே நேரத்தில் ஒரு பாதையிலிருந்து மற்றொன்றுக்கு குதிப்பதை நாம் குறிப்பிடுகிறோம். முதலாவது, நாம் “ஷிவா” என்று கூறும்போது, “எது இல்லாததோ அது” அல்லது “பிரபஞ்சத்தின் பரந்த வெறுமை” என்று குறிப்பிடுகிறோம். இன்றைக்கு, அறிவியலானது அந்தத் திசையில் நகர்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் “ஷிவா” என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை, ஆனால் அவர்கள் இருண்ட வெளி, இருண்ட சக்தி, மற்றும் இருண்ட பொருள் என்பதைப் பற்றி பேசுகின்றனர். இந்த இருண்ட சக்தி அல்லது இருண்ட பொருள் ஒட்டுமொத்த படைப்புக்கும் அடித்தளமாக இருக்கக்கூடும் என்றும், அதுதான் தற்போதைய படைப்பு அல்லது அண்டத்தின் மிகப்பெரும் இருப்பாக உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த எல்லா அறிவியல்பூர்வமான கருத்துகளையும் ஒருபுறம் வைத்துவிடுங்கள், உங்களுடைய சொந்தப் புரிந்துணர்தலில் இருந்து, இரவு நேரத்தில் வானத்தை நீங்கள் அண்ணாந்து பார்த்தால், பால்வெளிகளாக நீங்கள் கருதுவது அனைத்தும் ஒரு சிறு இருப்பாக மட்டுமே உள்ளன. அங்கே வியாபித்திருக்கும் வெறுமை அல்லது இருள்தான் மிகப்பெரிய இருப்பாக உள்ளது. இந்த வெற்று வெளியாகிய, “இல்லாதது எதுவோ அது”, இதைத்தான் ஷிவா என்று நாம் குறிப்பிடுகிறோம். இந்த ஒன்றுமற்ற தன்மையின் மடியில்தான் படைப்பு நிகழ்கிறது. ஆகவே, அண்டம் முழுவதும் சிவனின் மடியில் இருப்பதாக நாம் கூறுகிறோம். அது சிவனின் ஒரு அம்சமாக உள்ளது: உச்சபட்சமானது எதுவோ அது ஷிவா. ஆனால் அதே மூச்சில், நாம் சிவனை ஆதியோகியாக, முதலாவது யோகியாகவும் பேசுகிறோம்.

நாம் “ஷிவா” என்று கூறும்போது, “எது இல்லாததோ அது” அல்லது “பிரபஞ்சத்தின் பரந்த வெறுமை” என்று குறிப்பிடுகிறோம்.

இரண்டுக்கும் இடையே நாம் அதிகம் வேறுபடுத்துவதில்லை, ஏனென்றால் அவைகள் மிகுந்த வித்தியாசமானவை அல்ல. அவர் ஆதியோகியானவர் என்று நாம் கூறும்போது – அனைத்தையும் அவரின் ஒரு பாகமாக இணைத்துக்கொண்டிருக்கும் ஒருவர் யோகியாக உள்ளார். அழிவில்லாத, நித்தியமான வெற்றுவெளி மட்டும்தான் அனைத்தையும் அதனுடைய பாகமாக இணைத்துக்கொள்ள முடியும். ஒன்றுமில்லாதது எதுவோ, அது மட்டும்தான் இதைச் செய்யமுடியும்.

இந்த பூமியில் சிவனாக வலம் வந்த ஒரு நபர் என்ற முறையில், அதிக வேறுபாடு இல்லாமல், நாம் ஒரு நேரம் யோகியைப் பற்றி பேசுகிறோம். அடுத்த கணம், உச்சபட்ச சாத்தியமாக இருக்கும் சிவனைப் பற்றி பேசுகிறோம். நவீன விஞ்ஞானமும் இதனுடன் ஒத்துப்போகிறது – காலமும், இடவெளியும் தொடர்புடையவை. எது சிறியது, பெரியது, அணுவியல் அல்லது அண்டவியல் என்பது மனித புரிந்துணர்தலின் கேள்விக்கு உட்பட்டது. ஆனால் உள்ளபடியே அது நிதர்சனம் இல்லை. ஆகவே, சிவன் ஒரு தனிமனிதர் மற்றும் சிவன் ஒரு உச்சபட்ச சாத்தியம் என்பதற்கு இடையிலான வேறுபாடு நிதர்சனத்தில் இல்லை, அது முக்கியமாக நமது புரிந்துணர்தலில் மட்டுமே உள்ளது. இந்த தர்க்கம் சார்ந்த கலாச்சாரம், இந்த யோக அறிவியல், சிவனின் இரண்டு அம்சங்களையும் ஒருசேரப் பேசுகின்றது.

சிவனின் வாழ்வும், தாக்கமும்

சிவனின் கதைகளை நீங்கள் பார்த்தால், அவர் ஒரு நல்லவராக விவரிக்கப்படவில்லை. அவரிடம் நல்லது கெட்டது என்ற கருத்தாக்கங்கள் இல்லை – அவர் வெறுமனே வாழ்ந்தார். அவர் செல்லுமிடம் எங்கும், மக்கள் ஆரம்பத்தில் அவரை எதிர்த்தனர். உலகத்தில் அவர் பெற்ற அனைத்தும், அவருக்கு விருப்பத்துடன் அல்ல, வெறுப்புடனே வழங்கப்பட்டது. மக்கள் எப்படி அவரை வெறுத்தனர், ஆனால் அவரது அழிவில்லா இயல்பின் காரணமாக இறுதியில் எப்படி அவரை ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கான அழகான கதைகள் உள்ளன. அவர் அனைத்தையும் உள்ளடக்கியவராக இருந்ததால், காலப்போக்கில் அவர்களால் அவரை எதிர்க்க முடியவில்லை.

சிவனைப் பற்றி எண்ணிலடங்கா கதைகள் உள்ளன, ஆனால் அவரது குழந்தைப்பருவத்தைப் பற்றி ஒரு கதைகூட இல்லை – ஏனென்றால் மக்கள் அவரை ஒரு வளர்ந்த நிலையில்தான் கண்டனர். மேலும் அவரது பெற்றோரைப் பற்றியும் ஒரு வார்த்தையும் இல்லை. பெற்றோர் இல்லை, குழந்தைப்பருவம் இல்லை, முதுமைப்பருவம் இல்லை, கல்லறை இல்லை – அதுதான் சிவனின் வாழ்க்கை.

அவர் இங்கு இருந்தார், அவர் ஒரு மனிதராக வலம் வந்தார், மற்றும் அவர் நீண்டகாலங்களுக்கு இங்கு இல்லாமல் போய்விட்டு, பிறகு மீண்டும் திரும்பி வருவார், மற்றும் மீண்டும் நீண்ட காலங்களுக்கு இல்லாமற்போய், மீண்டும் திரும்பி வருவார் என்று கதைகள் கூறுகின்றன. அவர் எங்கெங்கு சென்றாலும், அவருடன் ஒரு பெரும் நண்பர்கள் கூட்டம் – பேயுருவங்கள், கணங்கள், மற்றும் சிதைவுற்ற உயிர்கள் - அவரைச் சுற்றிலும் இருந்தனர்.

சிவனின் நண்பர்கள் குழாம், மனிதர்களைப்போலத் தோன்றாமலும், கொடூரமான சப்தங்களைச் செய்துகொண்டும், சாதாரண மனித சமூகம் எதிர்பார்த்ததைப் போல் நடந்துகொள்ளவில்லை. ஆனால் அவர்கள் அவரது நண்பர்களாக இருந்துகொண்டு, அவருடனே பயணித்தனர். அவர்கள் கணங்களாக அறியப்படுவதுடன், பல கோவில்களிலும் இந்த உயிரினங்களின் உருவங்களை நீங்கள் பார்க்கமுடியும்.

பெற்றோர் இல்லை, குழந்தைப்பருவம் இல்லை, முதுமைப்பருவம் இல்லை, கல்லறை இல்லை – அதுதான் சிவனின் வாழ்க்கை.

சிவனும் அவரது நண்பர்களும் மனிதர்கள் அல்ல. சிறிது காலம் அவர் இங்கே இருப்பதும், பிறகு மறைந்துவிட்டு, மீண்டும் தோன்றுவதுமாக இருப்பார். எங்கேயோ மனித விழிப்புணர்வின் உருவாக்கத்தில், மற்றும் மனித உடல் உருவாக்கப்பட்டிருக்கும் விதத்தில்கூட இருக்கலாம், அங்கே ஒரு வெளிப்புறத் தாக்கம் இருப்பதாகத் தோன்றுகிறது. மானசரோவரில் நிகழ்ந்தவாறு இருக்கும் இடைவிடாத பரிவர்த்தனையை நான் கண்டதிலிருந்து, எனக்குள் இது நிதர்சனமான ஒன்றாகிவிட்டது.

விண்ணுலக தொடர்புகளும், மனிதத் தோன்றல்களும்

மனித இனத்தின் தோன்றல் குறித்து நிறைய அறிவியல்பூர்வமான ஆய்வுகள் இருந்துகொண்டுள்ளன. பெரும்பாலான கோட்பாடுகள், நவீன மனிதர்கள் ஆப்பிரிக்காவில் பரிணமித்ததாக பரிந்துரைக்கின்றன, ஆனால் மத்திய ஆசியாவுக்கும், இந்தியத் துணைக்கண்டத்துக்கும் இடையில், துல்லியமாக கைலாயமும், மானசரோவரும் அமைந்துள்ள இடத்தில் மனிதர்களின் முக்கியமான மரபுசார்ந்த கண்டுபிடிப்புகள் இருந்துள்ளன. ஆனால் இது இன்னமும் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கிறது.

எப்படியிருப்பினும், சக்திரீதியாக, மானசரோவருக்கும், கைலாயத்துக்கும் இடையில் ஒரு ஆழமான தொடர்பு உள்ளது. கைலாயம், ஞானம் மற்றும் அருளின் மலையாகவும், மானசரோவர் முற்றிலும் வித்தியாசமான ஒரு ஏரியாகவும் இருந்தாலும், ஒருவரது சக்தி மண்டலம் எப்படி அவற்றுக்கு பதிலாற்றுகிறது என்பதில் ஒரு ஒற்றுமை இருக்கிறது. மானசரோவரில் உயிர்களின் புவியியல் அருகாமையும் மற்றும் இந்த ஞானத்தின் மலையும் தற்செயலானது அல்ல. சிவன் முதலாவதாக இருக்கலாம், ஆனால் மற்ற பல மனிதர்களும்கூட, கைலாயத்தில் அவர்களது ஞானத்தைப் பொதித்து வைத்துள்ளனர்.

மானசரோவரில் நாம் கண்ட உயிர்கள், நான் முன்னர் உணர்ந்திருந்த எதையும் ஒத்திருக்கவில்லை. என்னுடைய புரிந்துணர்வு எப்போதுமே மற்ற பரிமாணங்களையும், உயிர்களையும் அணுகுவதற்கு அனுமதித்திருந்தன, ஆனால் இங்கே எதிர்கொண்ட அளவுக்கு எண்ணிக்கையிலும், அடர்த்தியிலும், மற்றும் தடுக்க நிறுத்தமுடியாத அருகாமையிலும் ஒருபோதும் நிகழ்ந்ததில்லை.

தனித்தன்மையும், ஒருமைத்தன்மையும் சந்திக்கும் இடம்

மனிதகுலத்தின் இயல்பு மற்றும் மனித அமைப்பு இயங்கும் விதத்தை, அந்த உயிர்கள் அறிந்திருக்கின்றன. மிக உயர்ந்த புரிந்துணர்தலுடைய ஒரு மனிதர் என்ன அறிந்திருக்கிறாரோ, அதெல்லாமும் அவைகளுக்கு மிகச் சாதாரணமான அறிதலாகத் தோன்றுகிறது. மேலும், ஒரு தனித்துவமான தன்மை, அவைகளை பெரும்பாலான மற்ற உயிர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது.

ஒரு உயரிய நிலையிலிருக்கும் மனிதர், ஒரே நேரத்தில் தனிமனிதராக இருக்கவும், இணைந்திருக்கவும் கூடிய திறன் பெற்றிருக்கிறார். ஆனால் மானசரோவரில் இருக்கும் உயிர்களிடத்தில், கூட்டமாக, ஏறக்குறைய ஒரே சக்திபோல் இருப்பது அவைகளுக்கு வழக்கமானது என்பதை நான் கண்டேன். அதேநேரத்தில், அவைகள் தனித்தனியாகவும் இருக்கின்றன. இங்கே உயிர் எப்படி நிகழ்கிறது என்பது நமது புரிதலுக்குள் பொருந்தாத ஒன்றாக உள்ளது.

ஒரே நேரத்தில், ஒருவிதமான இணைதலும், தனித்தன்மையும் கொண்ட இந்த விதமான இருத்தல், மற்றும் இந்த விதங்களில் இருக்கும் உயிர் வடிவங்களுடன், இந்த பூமியில் இருக்கும் உயிர் குறித்து நாம் அறிந்திருக்கும் எதுவும் பொருந்துவதாக இல்லை. இல்லையென்றால், நமது விழிப்புணர்வு என்பது தனிப்பட்டதாக அல்லது ஒருமித்ததாக உள்ளது. ஆனால் இங்கே, அது இரண்டுமாக உள்ளது: அது தனிப்பட்டதாகவும், அதேநேரத்தில் ஒரே கூட்டமாக இணைந்ததாகவும் உள்ளது. இது மனித புரிந்துணர்தலின் எந்தவிதமான புரிதலுக்குள்ளும் அடங்காத ஒன்றாக உள்ளது.

சிவனின் வம்சம் மற்றும் அண்டவியல் பாரம்பரியம்

ஒரு மனிதப் பின்புலம் இல்லாத சிவனின் அம்சம், பல வெவ்வேறு வழிகளிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. ஒரு அழகான கதை உள்ளது. இமயமலைகளின் அரசன் இமவான் மற்றும் அவனது மனைவி மீனா, இவர்களின் மகளாகிய பார்வதியை, சிவன் திருமணம் புரிவதாக இருந்தது. சிவன் மீது காதலில் வீழ்ந்த பார்வதி, அவரை மணந்துகொள்ள விரும்பினாள். திருமண நாளன்று, விருந்தினர்கள் சிறந்த ஆடையணிகளுடன் வந்தடைந்தனர். சிவன் தனது பரிவாரங்கள் மற்றும் போதையின் நிலையில், விசித்திரமான சப்தங்களை எழுப்பிய அவரது நண்பர்களுடன் வந்து சேர்ந்தார்.

வெளியிலிருந்து பார்க்கும் எவரும், அவர்களை பேய்களாக, பேய் பிடித்தவர்களாக, அல்லது மது உண்டவர்களாகப் பார்த்திருக்கலாம். மற்றும் அவர்களுடன் இருந்த சிவன், தலை முதல் பாதம் வரை சாம்பல் பூசி, சடை முடியுடன், பித்தனைப்போல் தோன்றியவராக, அவரது கண்ணின் கருவிழிகள் போதையில் மேலே உருள நடந்து வந்தார்.

அண்டவியல் அதிர்விலிருந்து, சிவன் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டார்.

மீனா, இவரையும், நண்பர்களையும் பார்த்தவுடன், “என்ன? என் மென்மையான பெண்ணை இந்த ஆண்மகனிடம் நான் ஒப்படைக்க வேண்டுமா?!” என்று கூறியவாறு மயங்கி விழுந்துவிட்டாள். பிறகு அங்கிருந்தவர்கள் சிவனிடம் சென்று கூறினார்கள், “பார்வதியின் தாய்க்கு, தனது மகளை உங்களுக்குக் கொடுப்பதற்கு விருப்பமில்லை, மற்றும் இப்போது உணர்விழந்துவிட்டாள். இதற்கெல்லாம் காரணம் உங்கள் உருவம்தான்”, என்றனர். ஆனால் சிவனுக்கு, தன்னை வேறு எந்தவிதமாகவும் முன்னிறுத்துவதற்கு விருப்பமில்லாமல் இருந்தார். “நான் இப்படித்தான் இருக்கிறேன்”, என்று அவர் கூறினார். ஆனால் பிறகு பார்வதி வந்து, மன்றாடினாள், “எனது தாயாருக்கு நீங்கள் யார் என்பது தெரியாது. இப்படி உங்களைப் பார்த்ததில், அவள் உண்மையிலேயே கவலையாக இருக்கிறாள்.” அதன் பிறகு சிவன் கடுமை தணிந்தவராக, தன்னைத்தானே ஒரு சுந்தரமூர்த்தியாக மாற்றிக்கொண்டார். பூமியிலேயே அதிகம்பீர ஆடவராக மாறினார். ஒளிர்ந்து, மின்னியவராக அங்கே நின்ற சிவன், அவரது பரிவாரங்களை அமைதி காக்குமாறும் கூறினார்.

பின்னர் பார்வதியின் தாய் தன்னுணர்வு பெற்றவராக எழுந்து, இந்த ஆடவரைப் பார்த்துவிட்டு, “இந்த மாதிரி யாரோ ஒருவரைத்தான் என் மகள் மணம் செய்வதை நான் விரும்புகிறேன்”, என்றாள். சிவன் அந்த ஆண்மகனாக இருந்தார். அவர்கள் அவரை அமரச் செய்தனர். இந்து மரபுத் திருமணங்களின் சம்பிரதாயத்தின்படி, பார்வதியின் குலம், கோத்திரம் போன்றவை பெருமையுடன் அறிவிக்கப்பட்டது. பிறகு அவர்கள் அவரது வம்சாவளி பற்றி கேட்டனர். சிவன் மௌனமாக அமர்ந்தார். நாரதமுனிவர் தனது தம்புராவின் கம்பியைச் சுண்டிவிட்டு, ஒற்றை நாதத்தை எழுப்பியவாறு இருந்தார். இமவான் கோபம் கொண்டவராகி, ‘இது என்ன? இந்த ஆடவனின் வம்சம் என்ன? இவரது வம்சாவளியைத் தெரிந்துகொள்ளாமல் எப்படி எனது மகளை நான் திருமணம் செய்துகொடுப்பது? யார் இவர்?” என்று கேட்டார்.

சிவன் சுயம்புவாக இருப்பதால், அவரது வம்சம் உச்சபட்ச ஒலிதான் என்பதை இந்த ஒற்றை நாதத்தினால், நாரதமுனிவர் உணர்த்தினார். அவருக்கு தந்தை இல்லை, தாய் இல்லை – ஆகவே வம்சம் குறித்த கேள்வி எங்கே இருக்கிறது?

அவர் எங்கிருந்தோ வந்தார் என்பதை முன்னிறுத்தி, சிவனுக்கு மனித பாரம்பரியம் மற்றும் வம்சம் கிடையாது என்று தெளிவுபடுத்தும் சிவனின் வாழ்க்கை குறித்த பற்பல கதைகள் உண்டு. அண்டவியல் அதிர்விலிருந்து, சிவன் தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டார்.