யோகா & ஞானம்

கண்ணுக்குத் தெரியாத இருப்பு: உங்கள் குருவுடனான பொருள்தன்மை கடந்த தொடர்பு

சத்குரு உடலளவில் நம்முன் இல்லாதபோதும், அவரை கிரகிக்கும் சூட்சுமக் கலையினை அறிந்துகொள்ளுங்கள். ஒரு தன்னார்வலரின் உள்நிலைப் போராட்டங்கள் மற்றும் கட்டுப்பாடு போன்றவற்றை ஆராயும் சத்குரு, காலம், இடம் மற்றும் தரிசனம் கடந்த ஒரு உண்மையான ஆன்மீகப் பிணைப்பின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறார்.

கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. இப்போதெல்லாம் உங்களை ஈஷா யோக மையத்தில் அதிகமாக எங்களால் காணவும், உங்களுடன் பேசவும் இயலவில்லை. நான் மனதளவில் அதிகமான ஏற்ற இறக்கங்களை உணர்வதுடன், என் சாதனா மற்றும் உணர்ச்சிகளுடனும் போராடுகிறேன். நீங்கள் உடலளவில் இங்கே இல்லையென்றாலும், நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள் என்பதை நான் எப்படித் தெரிந்துகொள்வது?

சத்குரு: என்னுடன் இருப்பதற்கு உங்களுக்கு என்ன தேவைப்படுகிறது? நான் உங்களுடன் ஒரே அறையில் இருக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? இங்கே பலரும் மரங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கின்றனர். மரங்கள் பார்வையை மறைக்க, அவர்களால் என்னைப் பார்க்க முடியவில்லை, ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். உங்கள் குருவுடன் இருப்பதற்கு, அவர் உங்களைப் பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால் நீங்கள் என்னுடன் அமர்ந்தால், பெரும்பாலான நேரம், “தயவுசெய்து உங்கள் கண்களை மூடுங்கள்”, என்றுதான் நான் கூறுவேன். இது ஏனென்றால், உங்களது கண்கள் மூடியிருக்கும்போது, நீங்கள் சற்று அதிகமாக என்னுடன் இருக்கிறீர்கள்.

சாதனாவுடன் உங்களது போராட்டங்கள் குறித்து கூறவேண்டுமென்றால், இது 21வது நூற்றாண்டு, ஆகவே சில விஷயங்களை நம்மால் செய்யமுடியவில்லை. 20ஆம் நூற்றாண்டில், அவர்கள் எப்படி எங்களை சாதனா செய்யவைத்தார்கள் என்பதை பலமுறை நான் பகிர்ந்துள்ளேன். என்னுடைய 11 அல்லது 12 வயதில், மல்லாடிஹள்ளி சுவாமியிடம் நான் முதன்முதலாக யோகா செய்யத் தொடங்கினேன். அவர் என்னைப்போலவே, மிக நல்ல, “கொடூர” மனிதர். ஆகவே, அதிகாலை 3:45, 4:00 மணிக்கு சாதனா தொடங்கி, நான்கிலிருந்து நான்கரை மணி நேரம் நீடிக்கும் – மிகத் தீவிரமான யோகா. நாங்கள் அதற்கு முந்தைய நாள் இரவு 7 மணிக்கு சாப்பிட்டிருப்போம்.

நான் என்ன சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும், இரண்டு மணி நேரத்திற்குள், எனக்கு எப்போதும் பசித்துவிடும் அளவுக்குத்தான் நான் உருவாக்கப்பட்டிருந்தேன். ஆகவே, ஒவ்வொரு இரவும், இன்றைக்கும்கூட, நான் பசியோடு உறங்குவேன். அதனால்தான் நான் மிக விரைவில் உறங்கி விழித்துவிடுவேன் என்று கருதுகிறேன். ஆகவே நான் எப்போதும் பசியுடன் இருப்பேன், மற்றும் காலையில் தண்ணீர் மட்டும்தான் எங்களுக்கு அருந்துவதற்குக் கிடைத்த ஒரே விஷயம். அதனால், நான் நிறைய தண்ணீர் அருந்திவிட்டு, பிறகு யோகப் பயிற்சிகளைத் தொடங்குவது வழக்கமானது. நாங்கள் சிறுவர்கள் மட்டுமே இருந்தோம். நாங்கள் ஒரு சிறிய இடைக்கச்சையை மட்டுமே இறுக்கமாக அணிந்துகொள்ள அனுமதிக்கப்பட்டோம், வேறு எந்த உடையும் இல்லை, மற்றும் தலையிலிருந்து கால் விரல் வரை நாங்கள் விளக்கெண்ணெய் தேய்த்திருப்பது வழக்கமாக இருந்தது.

உங்கள் குருவுடன் இருப்பதற்கு, அவர் உங்களைப் பார்க்கத் தேவையில்லை

மூன்று அல்லது நான்கு மணி நேரம் யோகா செய்த பிறகு, உடல் மீது எண்ணெய் இருந்த சுவடு இருக்கக்கூடாது, எல்லாமே உடலால் உறிஞ்சப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஆவியாகியிருக்க வேண்டும். அது முற்றிலுமாக காணாமல் போகுமளவுக்கு அவ்வளவு அதிகமாக வியர்த்துவிடும். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் யோகா செய்திருந்ததால், சிறுவர்கள் சிறிதளவு ஓய்வெடுக்க விரும்புவார்கள். அவர்கள் உட்கார்ந்த கணமே, வயதில் மூத்த சிறுவர்கள் மூங்கில் பிரம்புடன் வந்து, பின்பக்கத்தில் நன்றாக விளாசிவிடுவார்கள். பிறகு, “உங்களுக்கு பின்புறத்தில் வீக்கம் வந்துவிட்டால், எப்படியும் உங்களால் உட்காரமுடியாது,” என்று கூறுவார்கள்.

உங்களில் சிலருக்கு ஒரு உந்துதல் தேவைப்படலாம், ஏனென்றால் உங்களுக்கு நீங்களே செய்துகொள்வதற்கான அறிவு உங்களுக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால் இது 21ஆம் நூற்றாண்டு; தயவுசெய்து அறிவார்த்தமாக செயல்படுங்கள். இந்த பூமி மீது பல ஆயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்திருந்த அனுபவத்துக்குப் பிறகு, நாம் கட்டாயத்தினால் எதையும் செய்யத் தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும். மேலும் நீங்கள் இங்கே கட்டாயத்தினால் இல்லை – நீங்கள் இங்கே விருப்பத்தின் காரணமாக இருக்கிறீர்கள்.

நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பதைவிட, பிரபஞ்சவியல்ரீதியான உண்மை என்ன என்பது அதிக முக்கியமானது. ஏனென்றால் நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பது உங்களுக்கே உரியது நீங்கள் விரும்பும் எந்தக் கணத்திலும் அதை உங்களால் மாற்றமுடியும். இந்த கணத்தில் நீங்கள் ஒரு புலியைப் பற்றி சிந்திக்கலாம்; அடுத்த கணமே நீங்கள் ஒரு மலரைப் பற்றி சிந்திக்க முடியும்.

பிறகு, நீங்கள் விரும்பும் விதமாக ஏன் நீங்கள் சிந்திக்கவும், உணரவும் கூடாது? “இல்லை, என் உணர்ச்சிகள் அதன்போக்கில் செல்கிறது.” அது ஏன் அதன்போக்கில் செல்கிறது? அது உங்கள் உணர்ச்சி. எனது கைகள் அதன்போக்கில் அசைந்துகொண்டிருந்தால், அது பைத்தியக்காரத்தனமாக இருக்காதா? அது என் கை; நான் விரும்பும்படி அது செல்லவேண்டும்.

நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பதைவிட, பிரபஞ்சவியல்ரீதியான உண்மை என்ன என்பது அதிக முக்கியமானது.

அதைப்போன்றே, உங்கள் எண்ணமும், உணர்ச்சியும் நீங்கள் விரும்பும் வழியில் செல்லவேண்டும். இதனால்தான் யோக வழிமுறையை நீங்கள் பயிற்சி செய்யவேண்டும். உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், நீங்கள் யாரிடமாவது பேசலாம். இங்கே மூங்கில் குச்சிகள் இல்லை; நமக்கு மற்ற வழிமுறைகள் உள்ளன. விஷயங்கள் தானாகவே சரியாகிவிடும் என்று எதிர்பார்க்காதீர்கள்.

ஒரு மனிதராக, நீங்கள் விரும்பும்படி இருப்பதற்கு, உங்களை நீங்களே உருவாக்கிக்கொள்வது உங்கள் பொறுப்பு. மற்றவர்களை நீங்கள் விரும்பும்படி உருவாக்கமுடியாமல் போகலாம், ஆனால் நீங்கள் விரும்பியவாறு நீங்கள் இருக்கவேண்டும். “என் உணர்ச்சிகள் ஏன் இந்தமாதிரி நிகழ்கின்றன?” என்று காரணங்கள் கூறுவதை நிறுத்துங்கள். நீங்கள் கட்டுப்பாட்டில் இல்லை – அதுதான் நீங்கள் இங்கே இருப்பதன் காரணம். “ஆனால் சத்குரு, 5:30 மணிதான், ஆனால் நான் அதுபோல் உணரவில்லை.” இதை என்னிடம் அல்ல, சூரியனிடம் கூறுங்கள். 5:30 க்கு நான் நேரத்தை அமைக்கவில்லை. குருபூஜை 5:30 க்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதன் காரணத்தால், சூரியனின் முதல் கதிரை உள்வாங்கும் முதல் நபராக நீங்கள் இருக்கிறீர்கள்.

சூரியோதய நேரத்தை நீங்கள் மாற்றினால், நானும் எல்லாவற்றையும் மாற்றுவேன். படைப்பின் நிதர்சனத்தை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள் என்பதைவிட, படைப்பின் உண்மை அதிக முக்கியமானது. ஏனென்றால் எண்ணமும், உணர்வும் உங்களது உருவாக்கம்; இந்த கணத்தில் அதை நீங்கள் மாற்றமுடியும். படைப்பின் உண்மையை உங்களால் மாற்றமுடியாது. அது உங்கள் உருவாக்கம் அல்ல – வாழ்க்கை அப்படித்தான் இருக்கிறது. வாழ்வின் உண்மைக்கும், உங்கள் தலையில் நீங்கள் உருவாக்குவதற்கும் இடையில் நீங்கள் வேறுபாடு காணவில்லை என்றால், அதுதான் பைத்தியக்காரத்தனம். ஆனால் இப்போதெல்லாம் உங்களுக்கு நிறைய கூட்டாளி இருப்பதால், அது சாதாரணமாகிக்கொண்டு இருக்கிறது.

மிக அதிகமான மக்கள் பைத்தியமாக இருந்தால், அதுவே புதிய வழக்கமாகிறது. உலகத்தில் எல்லா இடங்களிலும் இதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. பலரும், “இப்படித்தான் நான் உணர்கிறேன்”, என்று கூறுகின்றனர். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை நான் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் விரும்பும்படி நீங்கள் உணரவேண்டும்.