வாழ்வியல் கேள்விகள்

உங்கள் துணைவர் போதைப் பொருட்களை எடுக்கும்போது என்ன செய்வது?

ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ்-ல் நடைபெற்ற ஒரு சத்சங்கத்தின்போது, ஒரு தியான அன்பர் அவரது உறவுச் சிக்கல்கள் பற்றியும், துறவு மேற்கொள்ள விரும்பும் அவரது எண்ணங்களைப் பற்றியும், ஒரு ஆழமான தனிப்பட்ட கேள்வியைக் கேட்கிறார்.

கேள்வியாளர்: கடந்த எட்டு வருடங்களாக நான் ஒரு பெண்ணுடன் உறவு நிலையில் இருந்து வருகிறேன். நான் அவள் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறேன். எனது பயிற்சிகளை நான் தவறாமல் செய்து அவற்றை ஆழப்படுத்தி வருகிறேன். அவள் அதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறாள், ஆனால் அவள் தனது குடும்பத்துடன் மரிஜூவானா புகைக்கிறாள். அவளை ஆன்மீக வளர்ச்சியின் பாதையில் என்னால் கொண்டுவர முடியவில்லை – இந்த விஷயத்தில் நான் என்ன செய்வது? நான் ஒரு துறவியாக வாழ்வதா அல்லது ஒரு குடும்ப சூழலில் வாழ்வதா என்பதைப் பற்றி முடிவெடுக்க இயலாமல் இருப்பதை எப்போதும் உணர்கிறேன்.

சத்குரு: இந்தியாவில், நான் சிறுவயதில் இருந்தபோது, சில பெண்கள் தங்களது மகள்களின் திருமணத்துக்கு வரன் தேடுவது பற்றி பேசுவதைக் கேட்டிருக்கிறேன். அவர்கள் கூறுவார்கள், "இல்லை இல்லை – அவர்கள் வீட்டின் சில ஆண்கள் மது அருந்துகின்றனர். அவர்கள் வீட்டுக்கு நமது பெண்ணை நாம் கொடுக்கமுடியாது.” அப்போதைய நிலைமை இப்படித்தான் இருந்தது. இன்றைக்கு நீங்கள் மது பரிமாறவில்லை என்றால், உங்கள் திருமணத்துக்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்பதைப் போன்ற ஒரு இடத்துக்கு நாம் வந்துள்ளோம்.

உங்களுக்கு எது வேலை செய்கிறதோ அதைச் செய்வது

நீங்கள் மரிஜூவானா பரிமாறவில்லை என்றால், உங்கள் திருமணத்துக்கு ஒருவரும் வரமாட்டார்கள் என்ற நிலை வெகு தொலைவில் இல்லை. இந்தியாவின் சில இடங்களில் ஏற்கனவே இது வழக்கத்தில் உள்ளது, அதாவது நீங்கள் இறைச்சிப்பண்டங்கள் பரிமாறவில்லை என்றால், எந்த நிகழ்வுக்கும் யாரும் வரமாட்டார்கள், ஏனெனில் அதுதான் பாரம்பரியமாக இருந்துவருகிறது. மக்களுக்கு யாரிடமிருந்தாவது ஒப்புதல் தேவைப்படுகிறது. அது சட்டப்பூர்வமானது என்று சட்டம் கூறினால், அனைவரும் தாங்கள் மது அருந்தலாம் என்று நினைக்கின்றனர். ஒரு விஷயம் சட்டப்பூர்வமானது என்ற காரணத்தினாலேயே, அது உங்களுக்கு ஏதாவது நன்மை செய்கிறதா? அமெரிக்காவில் துப்பாக்கிகள் கூட சட்டப்பூர்வமானதுதான் – அதற்காக உங்களை நீங்களே சுட்டுக்கொள்ள வேண்டும் என்பது அதன் அர்த்தமா? சட்டப்பூர்வமாக இருக்கும் ஒரு விஷயம் அதைச் சரியானதாக்குவது இல்லை. ஏதோ ஒன்று சட்டப்பூர்வமாக அல்லது சட்டத்துக்குப் புறம்பாக இருப்பது என்பது சமூகத்தைச் சார்ந்த விஷயம்.

உங்கள் உறவு நிலை பற்றி என்ன செய்வது என்று உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை. உங்களுடன் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்குத்தான் இங்கு நான் இருக்கிறேன்.

நான் வழக்கமாக இந்த விதமான உறவு நிலைகளின் மீதான ஆலோசனைகளை வழங்குவதில்லை. நீங்கள் உயர்நிலைப்பள்ளியில் இருக்கும்பொழுது, உங்களால் யார் மீதும் காதலில் வீழ்ந்துவிடமுடியும், ஏனெனில் உங்கள் புத்திசாலித்தனம் ஹார்மோன்களால் கடத்தப்பட்டுள்ளது. இப்போது அது நீங்கள் விரும்பிய வழியில் செல்லவில்லை என்றால், அது உங்களையும், உங்கள் துணையையும் சார்ந்தது. உங்கள் உறவு நிலை பற்றி என்ன செய்வது என்று உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை. உங்களுடன் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்று சொல்வதற்குத்தான் இங்கு நான் இருக்கிறேன்.

என் தோழமையை நான் தொடரவேண்டுமா அல்லது துறவியாக வேண்டுமா?

இப்போது நீங்கள் ஒரு உறவில் இருக்கிறீர்கள், ஆனால் துறவுநிலைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறீர்கள். அடுத்ததாக ஒரு உறவை நீங்கள் கண்டுபிடிப்பதற்கு முன், இடைப்பட்ட காலத்தில் நீங்கள் ஒரு துறவியாக விரும்புவதாகக் கூறவருகிறீர்களா? அது ஒரு கம்பியிலிருந்து அடுத்த கம்பிக்கு ஆடும் ட்ரபீஸ் ஊசலாட்டம். துறவுநிலை என்று நீங்கள் குறிப்பிடுவதை, நாம் வழக்கமாக பிரம்மச்சரியம் என்று அழைக்கிறோம். பிரம்மச்சரியம் என்றால் உண்மையின் பாதையில் இருப்பது; தெய்வீகத்தின் பாதையில் இருப்பது என்பது பொருள். உங்களது பெண் சினேகிதி போதைப்பொருள் எடுத்துக்கொண்டு இருக்கிறார் என்பதற்காக, நீங்கள் பிரம்மச்சாரியாக மாறுவது என்பதல்ல அது. அது முற்றிலும் வித்தியாசமான ஒரு பரிமாணம். அதற்கு நீங்கள் பொருத்தம்தானா, மற்றும் அப்படிப்பட்ட ஒரு விருப்பம் உங்களுக்கு இருக்கிறதா? இந்த விஷயத்தில், இதைத்தான் நாம் பார்க்கவேண்டியுள்ளது.

நீங்கள் ஒரு முடிவெடுக்க விரும்பினால், நாங்கள் இங்கே உங்களுக்கென்று ஒரு இடம் தருவோம். ஒரு மாதகாலம் இங்கேயே தங்கியிருங்கள். உங்களுக்கான சில சாதனாவை நாங்கள் வழங்குவோம். உங்கள் இயல்பினாலேயே நீங்கள் அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்போது, அது எப்படி இருக்கிறது என்பதைப்பற்றி தெளிவாக ஒரு முடிவெடுங்கள், அதன்பிறகு கடந்ததைத் திரும்பிப் பார்க்காதீர்கள். நீங்கள் உங்கள் சினேகிதியிடம் திரும்பிச் செல்வீர்களா அல்லது நீங்கள் வேறொரு வழியில் செல்வீர்களா என்பது எனக்குத் தெரியாது, ஆனால் அடுத்ததாக ஒருவரை இங்கே தேடாதீர்கள். இந்த இடத்தை நாங்கள் உருவாக்கியது, அந்தக் காரணத்துக்காக அல்ல. அதைத்தான் நான் செய்ய விரும்பினேன் என்றால், நான் ஒரு டேட்டிங் ஆப்-ஐ உருவாக்கியிருப்பேன்.

அதில் தவறேதும் இல்லை; வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு விஷயங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தக் குறிப்பிட்ட நோக்கத்துக்காக நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டும். நீங்கள் ஒரு டேட்டிங் ஆப்-ல் சென்று, ஒரு துறவியாக விரும்புகிறேன் என்று கூறுவதில்லை. இது அதைப்போன்ற ஒரு விஷயம்தான்.