சத்குரு அவர் ஞானமடைந்த கணத்தையும், அவரது பேரானந்தத்தை ஒட்டுமொத்த உலகத்துடனும் பகிர்ந்துகொள்வதற்கான அவரது திட்டங்களையும் நினைவுகூரும் அதே தருணத்தில், எதிர்மறை உணர்ச்சிகளான கோபம் மற்றும் ஆத்திரத்தைக் கையாள்வது குறித்த ஒரு தனித்துவமிகுந்த கண்ணோட்டத்தை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.
சத்குரு: பெருவாரியான மக்கள் என்னிடம், கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது அல்லது நிர்வகிப்பது என்பதைப் பற்றி கேட்கின்றனர். கோபம் என்றால், நீங்கள் கட்டுப்பாடு இழந்துவிடுவது. “கட்டுப்பாடு இழந்த என்னை எப்படி நிர்வகிப்பது?” இது பைத்தியக்காரத்தனமான ஒரு கேள்வி.
ஏன் அவ்வளவு கோபம்?
மதவாத மக்கள் கோபமாக இருப்பது ஏனென்றால் யாரோ ஒருவர் அவர்களது கடவுளை அவமதிக்கின்றனர். உண்மையாகவே அவர்களது கடவுள் அல்லது கடவுள்களால் அந்த மக்களது கோபம் ஆதரிக்கப்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். யாரையோ நேசிப்பதாக எண்ணும் மக்கள், அந்த யாரோ ஒருவருக்கான அவர்களது அக்கறையின் காரணமாகவே, எப்போதும் கோபம் கொள்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் மீது கோபப்படுவது ஏனெனில் குழந்தைகள் பெருமைக்குரியவர்களாக வளரவில்லை. ஆசிரியர்கள் குழந்தைகளுடன் கோபம் கொள்வதன் காரணம், 35 ஆண்டுகளாக ஆசிரியர்கள் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும், குழந்தைகளால் 12 மாதங்களில் கற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒவ்வொருவரும் யாரோ ஒருவருடன் கோபமாக இருப்பதாகத் தோன்றுகிறது. உண்மையில் நீங்கள் யாருடனும் கோபமாக இல்லை – உங்கள் கோபத்துக்காக யாரையாவது ஒரு காரணமாக பயன்படுத்துகிறீர்கள். அதை நீங்கள் கோபம், துயரம் அல்லது பதட்டம் என்று அழைத்துக்கொள்ள முடியும் – முக்கியமாக, உங்களது புத்திசாலித்தனம் உங்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது. உங்கள் கை, கட்டுப்பாட்டை இழந்து, உங்கள் முகத்தில் அறைவதைப் போன்றதுதான் இது.
நீங்கள் கோபம் குறித்து எதையும் செய்யத் தேவையில்லை. உங்களைக் குறித்த ஏதோ ஒன்றைத்தான் நீங்கள் செய்துகொள்வது அவசியம்.
உங்கள் கையே உங்களை அறைந்துகொள்ளத் தொடங்கினால், நீங்கள் பைத்தியமாகிவிட்டீர்கள் என்பதை அனைவரும் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அதையே உங்களுக்குள் எழும் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் செய்துகொண்டால், நீங்கள் அதை கோபம், துன்பம், ஆத்திரம் மற்றும் வெறுப்பு என்று அழைக்கிறீர்கள். இந்த விஷங்களை எல்லாம் நீங்கள் அருந்திவிட்டு, யாரோ ஒருவர் இறக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள். அதிர்ஷ்டவசமாக, இது அந்த மாதிரி நிகழ்வதில்லை. நீங்கள் விஷம் அருந்தினால், நீங்கள்தான் இறக்கிறீர்கள். படைப்பு மிகவும் நியாயமானது.
நீங்கள் கோபம் கொள்ளும்போது உண்மையில் என்ன நிகழ்கிறது?
கோபம் குறித்து நீங்கள் என்ன செய்யமுடியும்? நீங்கள் அதுகுறித்து எதையும் செய்யத் தேவையில்லை. உங்களைக் குறித்த ஏதோ ஒன்றைத்தான் நீங்கள் செய்துகொள்வது அவசியம். நீங்கள் உண்மையில் கோபப்படும்போது, பெரும்பாலான நேரங்களில், உங்கள் கோபத்துக்கு இலக்கானவர்களை விட அதிகமாக நீங்கள் துன்பப்படுகிறீர்கள். உங்களுக்கே நீங்கள் ஏன் துன்பம் ஏற்படுத்துகிறீர்கள்? இது ஏன் நிகழ்கிறது என்றால், உங்கள் எண்ணங்களும், உணர்ச்சிகளும் உங்களிடமிருந்து உத்தரவுகளை எடுத்துக்கொள்வதில்லை. அவை தாமாக ஏதேதோ செய்துகொள்கின்றன.
வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமென்றால், நீங்கள் ஒரு தற்செயலான உயிராக இருக்கிறீர்கள். நீங்கள் ஒரு தற்செயலான உயிராக இருக்கும்பொழுது, கோபம், துன்பம், பதற்றம் மற்றும் பைத்தியக்காரத்தனம் மிகவும் வழக்கமாக இருக்கிறது. கோபப்படும்போது மக்கள் பயன்படுத்தும் ஆங்கில வெளிப்பாடு என்னவென்றால், “I am mad at you.” நீங்கள் எதன் மீதும் பைத்தியமாக இருக்கலாம், ஆனால் இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நீங்களே பைத்தியமாக இருப்பதைதான்.
கோபத்தின் மூலகாரணம்
பெரும்பாலான மக்கள், அவர்களது பணியிடத்தில், வீதியில் அல்லது வீட்டில் இருக்கும் யாரோ ஒருவரால்தான் தாங்கள் கோபப்படுவதாக நினைக்கின்றனர். உண்மையில் அது அப்படி அல்ல. நீங்கள் தனிமையில் இருந்தாலும்கூட, நீங்கள் ஏதோ ஒரு விஷயத்துக்காக கோபப்படுவீர்கள் – ஏதோ ஒன்று இருக்கிறது என்பதற்காக அல்லது ஏதோ ஒன்று இல்லாததற்காக; உங்களிடம் ஏதோ ஒன்று இருப்பதற்காக அல்லது ஏதோ ஒன்று உங்களிடம் இல்லை என்பதற்காக கோபப்படுவீர்கள்.
உங்கள் கோபம் வேறு யாரோ ஒருவரைப் பற்றி அல்ல. அது, நீங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததைப் பற்றியது. நினைவுத்திறன், கற்பனைத்திறன் மற்றும் உணர்ச்சிவயப்படும் திறன் ஆகியவை உங்களுக்கு இருக்கக்கூடிய மாபெரும் மனத்திறன்கள் என்பதுதான் மிக முக்கியம். உலகத்தில் இருக்கும் அனைத்தையும் அவை எப்படி இருக்கிறதோ அப்படியே உள்வாங்கி, புரிந்துகொள்வதற்கு, உங்களுக்கு ஒரு கோடி வருடங்கள் தேவைப்படும். ஒரு இலையை அல்லது ஒரு எறும்பை முழுவதுமாக நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அதற்கு ஒரு வாழ்நாள் காலம் தேவைப்படும். ஆனால் உணர்ச்சி எனப்படும் புத்திசாலித்தனத்தின் மற்றொரு பரிமாணத்தினால், வெறுமனே இணைத்துக்கொள்வதால் வாழ்வையே உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
உங்கள் கோபம் வேறு யாரோ ஒருவரைப் பற்றி அல்ல. அது, நீங்கள் கட்டுப்பாட்டில் இல்லாததைப் பற்றியது.
யாரோ ஒருவரை நீங்கள் இணைத்துக்கொண்டு, அவர்களை அறிந்துகொள்ள முடியும் – அவர்களை நீங்கள் கூறுபோடவேண்டியதில்லை. கூறுபோடுவதால், எதையும் அதன் உண்மைத்தன்மையில் நீங்கள் அறிந்துகொள்ளமாட்டீர்கள்; சாதாரண விஷயங்களை நீங்கள் அறிவீர்கள், ஆனால் அது உண்மையான அறிதல் அல்ல. புத்திசாலித்தனத்தின் மற்றொரு பரிமாணமாகிய உணர்ச்சியின் வாயிலாக, உயிரை மிகவும் நெருக்கமாகவும், தீவிரமாகவும், எல்லாவற்றுக்கும் மேல், மிகவும் இனிமையாகவும் மற்றும் அற்புதமான வழியிலும் நீங்கள் அறியமுடியும். இனிமையாகவும் அற்புதமாகவும் இருந்திருக்கவேண்டிய இந்த உணர்ச்சி, உங்களிடமிருந்து அன்பு மற்றும் பேரானந்த பரவசத்தின் வடிவில் பிரவாகமாக பாய்ந்திருக்க வேண்டிய இந்த உணர்ச்சி, துரதிருஷ்டவசமாக உங்களுக்குள் சிறிது அழுகிப்போயுள்ளது.
உங்களது உணர்ச்சியின் அழுகல், கோபம், பதற்றம் மற்றும் ஆத்திரமாக வெளிப்படுகிறது. இந்த அழுகல் ஏற்பட்டிருப்பது ஏனென்றால், உங்கள் புத்திசாலித்தனத்தின் எல்லைக்குட்பட்ட புரிதலுடன், உங்களது உணர்ச்சியின் மீது தாக்கம் ஏற்படுத்துவதற்கு நீங்கள் முயற்சிக்கிறீர்கள். உங்கள் புத்திசாலித்தனத்தை, நீங்கள் எவ்வளவுதான் மகத்தானது என்று நினைத்தாலும், அது மிகவும் எல்லைக்குட்பட்ட ஒரு கருவியாகத்தான் இருக்கிறது. படைப்பின் பிரம்மாண்டத்தையும், உங்கள் புத்திசாலித்தனத்தின் திறனையும் நீங்கள் ஒப்பிட்டுப்பார்த்தால், வாழ்வில் ஒன்றைக்கூட அறிந்துகொள்ள முடியாத அளவுக்கு, உங்கள் புத்திசாலித்தனம் மிகச் சிறியதாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.
சத்குரு எப்படி பேரானந்தத்தை அடைந்தார்
இது எனக்கு நிகழ்ந்தது. அப்போது நான் மிகுந்த புத்திசாலித்தனமான இளைஞனாக இருந்தேன், அல்லது நான் அவ்வாறு நினைத்தேன். மேலும் எனது நண்பர்களால், சமூக வட்டத்தினர் மற்றும் எனது ஆசிரியர்களாலும் அவ்விதமே அங்கீகரிக்கப்பட்டு இருந்தேன். படிப்பு தொடர்பான அம்சங்களில் நான் ஒருபோதும் கவனம் செலுத்தாமல் இருந்தபோதிலும், எனது ஆசிரியர்களும் என்னை மிகவும் புத்திசாலித்தனமான நபராக நினைத்தனர். நான் தன்னம்பிக்கையான ஒரு இளைஞனாக, நன்றாக செயல்பட்டுக்கொண்டு, மிகவும் வெற்றிகரமாக இருந்தேன். நான் விரும்பியவாறு என் வாழ்க்கை நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதுடன் எனக்கு வாழ்க்கை குறித்த எந்த புகார்களும் இல்லாமல் இருந்தது.
ஒருநாள், நான் ஒரு மலை மீது ஏறிச்சென்றேன், அங்கே அமர்ந்திருந்தபோது, எனக்குள் ஏதோ ஒன்று வெடித்தெழுந்தது. திடீரென்று, வாழ்க்கையை முற்றிலும் வித்தியாசமான ஒரு விதத்தில் நான் அறிந்தேன் – அது ஒட்டுமொத்தமாக வாழ்வின் புதியதொரு பரிமாணமாக இருந்தது. பேரானந்தத்தில் நான் நனைந்துவிட்டேன். என் வாழ்க்கையிலேயே முதல்முறையாக, நான் ஒரு அடிமுட்டாளைப் போல உணர்ந்தேன், ஏனென்றால் நான் அறிந்திருந்ததாக, நான் அனுமானித்திருந்த அனைத்தும் முழுமையாக பயனற்றுப்போயின. அதற்கு முன்பு ஒருபோதும் இல்லாத வகையில், நான் வாழ்க்கையை அறியவும், உணரவும் தொடங்கினேன். அப்போதிருந்து, எப்படியாவது இந்த அனுபவத்தை இயன்றவரை அதிகமான மக்களுக்கு பரிமாறவேண்டும் என்ற நோக்கத்தில், அந்த ஒன்றைத்தான் நான் செய்துவருகிறேன்.
என் எண்ணம் அல்லது உணர்ச்சியுடன் தொடர்பில்லாமல், வெறுமனே அமர்ந்தால், நான் பேரானந்தத்தில் இருப்பதையும், எல்லையில்லாமல் வாழ்வை உணரும் திறனையும் என்னால் நீட்டிக்கமுடியும் என்பதையும் நான் உணர்ந்தேன். ஆகவே நான் உட்கார்ந்து ஒரு திட்டம் வரைந்தேன். அப்போது, உலக மக்கள்தொகை 560 கோடியாக இருந்தது. சுமார் இரண்டரை ஆண்டுகளில், ஒவ்வொரு மனிதரையும் ஆனந்தமாகவும், பரவசமாகவும் செய்துவிடமுடியும் என்று நான் நினைத்தேன்.
இதோ இங்கு நான் இருக்கிறேன், 39 வருடங்கள் கழித்து, வாரத்தின் ஏழு நாட்களும், வருடங்கள் தோறும் 365 நாட்களும் செயல்பட்டிருக்கிறேன். தற்போது வரை, 100 கோடிக்கும் அதிகமான மக்களை நாம் தொட்டிருப்பதாகக் கூறுகின்றனர், ஆனால் உலக மக்கள்தொகை சுமார் 800 கோடியாக வளர்ந்துள்ளது. ஒரு தோல்வியடைந்த நபராகவே நான் இறந்துவிடுவேன் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அதுகூட ஒரு ஆனந்தமான தோல்விதான். அனைவரும் ஆனந்தத்துடன் இருப்பீர்களாக. அதுதான் உங்கள் வாழ்வின் மாபெரும் வெற்றி.