கேள்வியாளர்: சத்குரு, தேவி லட்சுமி நம் வாழ்வில் எவ்வளவு முக்கியமாக இருக்கிறாள்?
சத்குரு: செல்வச்செழிப்பு மற்றும் வளம் சேர்ப்பதற்கான ஒரு வழியாக லட்சுமி உருக்கொண்டிருக்கிறாள். ஒரு மனிதர் நன்றாக இருந்தால், செல்வச்செழிப்புடன் இருப்பதும், அது இல்லாமல் இருப்பதும், அவருக்கான ஒரு விருப்பத்தேர்வாக இருக்கவேண்டும். ஆனால் தற்போது, நல்வாழ்வு மற்றும் செல்வச்செழிப்பை நாம் சற்றுக் கூடுதலாகவே தொடர்புபடுத்தியுள்ளோம். நமக்கு ஒரு குறிப்பிட்ட அளவு செல்வம் இருந்தால்தான் நம்மால் நன்றாக இருக்கமுடியும் என்று, அந்தத் தொடர்புதான் நம்மை நம்பச்செய்கிறது. அது அப்படி அல்ல, ஏனென்றால் இந்தியாவில் எது செல்வவளமாக இருக்கிறதோ, அது உலகின் வேறு ஒரு பகுதியில் செல்வமாகக் கருதப்படாமல் இருக்கலாம். செல்வவளம் என்பது, நம்மைவிடக் குறைவாக வைத்திருக்கும் ஒருவருடன் ஒப்பீடு செய்வதுதான்.
நம்மிடம் என்ன இருக்கிறது அல்லது உலகிலிருந்து நாம் எதை எடுத்துள்ளோம் என்ற ரீதியில் நமது வாழ்க்கையை நாம் அளவீடு செய்ய வேண்டாம். நல்வாழ்வு என்பது, நமது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தால் மட்டுமல்லாமல், நமக்குள் இருக்கும் அமைதி, சந்தோசம் மற்றும் பேரானந்த உணர்வினால் தீர்மானிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், நாம் வாழ்க்கையினையும், அதன் மதிப்பினையும் புரிந்துகொள்வோம்.
இந்த விஷயங்கள் அனைத்தும் இருந்துவிட்டால், நம்மிடம் எவ்வளவு இருக்கிறது, நாம் எவ்வளவு பயன்படுத்துகிறோம், மற்றும் நாம் என்ன செய்கிறோம் என்பது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தால் தீர்மானிக்கப்படும். இன்று நம்மிடம் இருப்பதெல்லாம் நாம் மட்டுமே செய்ததல்ல – நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தின் ஒரு விளைவாகவே அது இருக்கிறது. ஒரு ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நீங்கள் இங்கே இருந்திருந்தால், உங்களிடம் கார் இருக்குமா? நிச்சயமாக இருக்காது. ஆகவே, நாம் வைத்திருப்பது அனைத்தும் நமது செயல் என்று நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டாம். சிறிதளவுக்கு அது நமது செயல், ஆனால் பெருமளவுக்கு, அது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலகட்டத்தின் ஒரு விளைவாக இருக்கிறது.